Biztha2 “ஈ குருவி”விழாவில் இன்பத் தேன் வந்து பாய்ந்தது காதினிலே!                                   

“ஆங்கில மொழி பேசப்படும் கனடா நாட்டில் எமது தமிழ் சிறுமிகள் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடியதைக் கேட்டதும் “செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே…” என பாரதியார் பாடியது போன்று என் செவிகளிலும் தேன் வந்து பாய்ந்தது. எமது மூதாதையர்களின் தியாகத்தால் நான் இன்று இங்கே உங்கள் முன் நிற்கின்றேன். எமது தாய் மொழியான தமிழ் எங்க ளுக்கும் உங்களுக்கும் இடையே உறவினை ஏற்படுத்துகின்றது.

கனடாவில் வாழும் தமிழர்கள் நடாத்தும் விழாவிலே கலந்து கொள்வதற்காக நான் அங்கு செல்கின்றேன் எனக் கூறிய போது உங்களை அறியாதவர்கள் கூட நாங்கள் கேட்டதாக சொல்லுங்கள் எனக் கூறினார்கள். அந்தளவுக்கு எம்மிடையே இணைப்பினை ஏற்படுத்துவது இன்பத் தமிழ். மொழியானது கலாச்சாரத்தின் வெளிப்பாடாகும். கனடா மண்ணிலே விதைக்கப்பட்ட விதைகள் விருடசங்களாக வளர்ந்து இன்று விருதுகள் வழங்கி கௌரவிப்பதைக் கண்டு களிப்படைகின்றேன். நீங்கள் உங்கள் ஆர்வத்தினாலும், விடா முயற்சியினாலும் பெரும் சாதனை வீரர்களாக மாறியுள்ளீர்கள்”.

கனடாவிலுள்ள தமிழ் வர்த்தகர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் இடையே தொடர்பினை ஏற்படுத்தும் வகையில் Biztha.com என்ற இணையத்தளத்தையும், Ekuruvi.com  என்ற தமிழ் செய்தி இணையத்தளத் தையும் நடாத்தி வரும் திரு.நவஜீவன் ஆனந்தராஜா நடாத்திய“ஈகுருவி சந்தைப்படுத்தும் திறமைக்கான விருது” வழங்கும் விழாவில் பிரதம பேச்சாளராக கோயம்புத்தூரில் இருந்து வந்து கலந்து கொண்ட கலாநிதி திருமதி ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார்.

“மகா வீரர்கள் ஆவதற்கு முன் மகோன்னதமான தோல்விகளை சந்தித்தாக வேண்டும். வெற்றி போதை தரும். முயலுடன் போராடி வெற்றி பெறுவதை விட யானையுடன் போராடி தோல்வி அடைவது சிறப்பா கும். தமிழ் மன்னனான இராவணன் மிகச் சிறந்த மகா வீரன். அதனால் தான் அவனைக் கொல்வதற்கு அவனைப் படைத்த இறைவனே இறங்கி வந்தார். புகழும், பட்டங்களும் வாங்கினாலும் அமைதியும், சாந்தமும் இருக்க வேண்டும். நாங்கள் பின்னால் பேசும் பழக்கத்தை கை விட்டு முன்னால் பேச வேண் டும். முன்னால் பேசினால் பிரச்சினைகள் வரும். இருந்தாலும் அவற்றை எதிர்த்துப் போராட வேண்டும். ஆனால் பெற்றோர்கள் முன்னிலையிலும், பெற்றவர்கள் முன்னிலையிலும் போராடத்தை நிகழ்த்தாதீர்கள்.  நீங்கள் பெற்ற பிள்ளைகளுக்கு முன் சண்டை இட்டால் அது அவர்களுக்கு மனப் பயத்தையும், தாக்க த்தையும் ஏற்படுத்தி விடும். மனித நேயம் பாதுகாக்கப்பட வேண்டும். அன்பு வேறு, செல்லம் வேறு என்  பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அன்பு கண்டிக்கும்,சுடும்,அரவணைக்கும். கண்டிப்பு ஆரோக் கியமானதாக இருக்க வேண்டும். அப்பா பிள்ளையைக் கண்டிக்கும் போது அம்மா அதில் தலையிடக் கூடாது”

இவ்விழாவிற்காக இலங்கையில் இருந்து வந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட “ஈகுருவி” நவஜீவனின் தந்தையாரும் ஓய்வு பெற்ற வடமாகாண கல்வித்துறை பிரதி இயக்குநரும், ஊடகவியல் பட்ட தாரியுமான திரு.நடராஜா ஆனந்தரா உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார்:
“எமது தாய் நாட்டிலிருந்து புலம் பெய்ர்ந்த உறவுகள் செயற்படும் விதம் எங்களை ஒன்றிணைய வைத்துள்ளது.  ஆனால் நீங்கள் வெளிநாட்டு அரசாங்கங்களுடன் இணைந்து மேற்கொண்ட முயற்சிகள், நிதி திரட்டி அனுப்பியமை ஆகியன பாராட்டுக்குரியவை. கடந்த முப்பதாண்டு கால யுத்தத்தினால் ஏற்பட்ட கோர வடுக்கள் இன்னும் ஆறவில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், மலையகத்திலும் உள்ள மக்கள் உங்கள் உதவியை எதிர்பார்த்து இருக்கின்றார்கள். அவர்களது நம்பிக்கை வீண் போகாது என்பதை நானறிவேன். உதவி செய்வது சம்பந்தமான ஒரு சீனப் பழமொழியை கூற விரும்புகின்றேன். “மீனைக் கொடுப்பதை விட மீனைப் பிடிக்க கற்றுக் கொடு” என்பது தான் அந்தப் பழமொழி. அதே போன்று அங்குள்ள மக்களுக்கு நிதியுதவியை செய்வதை விட அவர்கள் ஏதாவது தொழிலை செய்து உழைப்பதற்கான உதவிகளை செய்வது மேலாகும்.

செல்வி றாதிகா சிற்சபைஈசன் எம்.பி.உரையாற்றிய போது “இங்குள்ள தமிழ் வர்த்தகப் பிரமுகர்களை ஒன்றிணைத்து செயற்பட வைப்பதற்கான முயற்சியினை ஈகுருவி வெற்றிகரமாக மேற்கொண்டு வந்துள் ளது. அத்தோடு நின்று விடாது அவர்களது திறமையை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கும் நடவடி க்கையையும் தற்போது ஆரம்பித்துள்ளமை வரவேற்கத் தக்க விடயமாகும் “ எனப் பாராட்டினார்.

இவ்விழாவில் சிறந்த வரைபட, அச்சகத்துறை சாதனையாளரான திரு.மயூரன் ராமச்சந்திரன், டெலிவிச னில் 15 விநாடிகள் முதல் ஒரு நிமிடம் வரை ஒளிபரப்பக் கூடிய வகையில் விளம்பரங்களை தயாரித்து வரும் Atrium Pictures  உரிமையாளரான திரு.ஜேசன் சிவகுமார்,புகைப் படக் கலையில் வியத்தகு காட்சிகளை படம் பிடித்து சாதனை நிலைநாட்டி வரும் திரு.பிரசாத் கந்தசாமி, கனடா காப்புறுதி துறையில் சிறந்த சாதனை படைத்து வரும் Inforce Life Financial Services Inc.  உரிமையாளர் திரு.சந்திரன் இராசலிங்கம், Ideal Development நிறுவனத்தினர் ஆகிய ஐவரும் சாதனையாளர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விருதுகளை வழங்க ஆதரவளித்தவர்கள் முறையே Dove Square Property Management Inc  நிறுவனத்தினர், Gary Anandasangaree & Associate நிறுவனம்,   Century 21 Innovative  பிரதிநிதி ஜனாப் சமீம் மொஹமத், TD Canada Trust    பிரதிநிதி திரு.மூண் மகாலிங்கம், Medcentre Connect வைத்திய நிறுவன டாக்டர் செந்தில் மோகன் ஆகியோராவர். இவர்களுடன் மேலும் பலரும் இவ்விருது வழங்கும் விழாவினை சிறப்பிக்க நிதியுதவி செய்துள்ளனர்.

 இவ்விழாவில் பல்வேறு தமிழ் பத்திரிகைகள், வானொலிகள், தொலைக் காட்சிகள், eet tv மனிதன், Karampon.net  இணையத்தளங்கள் ஆகியவற்றினைச் சேர்ந்தோரும், தளிர் சஞ்சிகை ஆசிரியர் திரு. மோகன்,கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினர் மற்றும் பொது மக்களும் பெருமளவில் கலந்து கொண்டிருந்தனர். 

ஸ்காபுறோ ஏஜின்கோட் லிபரல் எம்.பி.திரு.ஆர்னோல்ட் சான் இவ்வைபவத்தில் கலந்து கொண்டு சாதனையாளர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். இராப்போசன விருந்துபசாரத்துடன் விழா இனிதே நிறைவெய்தியது.
(வீரகேசரி மூர்த்தி)

அந்நிகழ்வின் நிழற்படங்கள் (நன்றி-நினைவுகள்)

« 1 of 4 »