japaniya24-01-2015 அன்று பெரிய சிவன் கோயில் மண்டபத்தில் ஒரு மாலைப்பொழுது நிகழ்வு நடைபெற்றது. இரண்டு ஊர்கள் ஒன்றாய்க் கூடி நின்றன. திருமலையம், தும்பளையும் சங்கமமாகிய ஒரு தம்பதியர் அந்த நிகழ்வின் பங்காளராக இருந்தனர். முனைவர் மனோன்மனி சண்முகதாஸ் ஜப்பானிய மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த ஜப்பானியக் காதல் பாடல்கள் என்னும் நூலை வெளியிட்டு அதனைத் தனது கணவர் பேராசிரியர் அருணாசலம் சண்முகதாசின் அகவை 75ன் இனிய பரிசாக வழங்கினார்.புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் புதிய பண்பாட்டின் தொடக்கமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.

பேராசிரியர் முனைவர் வண.ஏ.ஜே.வி.சந்திரகாந்தன் நிறைகுடமாக அமர்ந்து விழாவுக்கு தலைமை தாங்கி நடத்தியது அரங்கைப் பெருமைப்படுத்தியது. குறித்த நேரத்தில் மங்கல மகளிர் மூவர் மங்கல விளக்கேற்றி வைக்க அகவணக்கத்துடன் விழா தொடக்கம் பெற்றது. தமிழ்மொழி வாழ்த்தையும் கனடா நாட்டுப் பண்ணையும் வர்ணம் இசைக்கல்லூரி மாணவர்கள் இனிய இளங்குரலில் இசைக்க மண்டபம் விழாப் பொலிவுபெற வந்தவர்களின் மனமும் செவியும் நிறைந்தது.

வரவேற்புரையை வழங்கிய மனோன்மணி சண்முகதாஸ் தங்கள் அழைப்பை ஏற்று வந்த உறவினர்க்கும், ஊரவர்க்கும், நண்பர்களுக்கும் வரவேற்புடனான நன்றியினைக் கூறத் தலைவர் உரை தொடர்ந்தது. அவருரையில் நூல் மொழிபெயர்ப்பும் தமிழ்மொழி ஜப்பானிய மொழி உறவும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டன. பன்மொழியறிவு படைத்த தலைவரது உரை வெளியிடப்படும் நூலின் தேவையையும் விளக்கமாக்கியது.

நூலாசிரியரை திரு.வி.என்.மதியழகன் அறிமுகம் செய்து வைத்தபாங்கு அவரது ஊடகப் புலமையூடாகச் சிறப்பாக வெளிப்பட்டது. நூலாசிரியர் இன்னாருடைய மகள், இன்னாருடைய மனைவி, இன்னாருடைய தாய் என்பவற்றுக்கு அப்பால் ஒரு தனியாளாக தன்னை இனங்காட்டும் இயல்புடையவர் என்பதை அவர் சுட்டிக்காட்டியது ஒரு புதுமையான அறிமுகமாக இருந்தது.

japagroupநூல் வெளியீட்டுரையை மூத்த சான்றோர் கவிநாயகர் திரு.வி.கந்தவனம் நிகழ்த்தினார். காலம் வேண்டிநிற்கும் பணிகளில் இத்தகைய நூலாக்கமும் இன்றியமையாதது எனக் கூறினார். தமிழிலக்கிய அகப்பொருள் மரபும் ஜப்பானியக் காதல் பாடல் மரபும் ஒற்றுமையுடையதாயிருப்பதை நூல் தெளிவாகக் காட்டுவதையும் எடுத்துக் கூறினார். மேலும் மொழிபெயர்த்துள்ள கவிதைகள் நூலாசிரியரின் கவிதைப் புனைவு ஆற்றலையும் காட்டி நிற்பதாகப் பாராட்டினர்.
நயப்புரை வழங்கிய திரு.பொ.அருந்தவநாதன் சங்க அகப்பாடல்களுக்கும் அடிப்படையாக அமைந்த பொருளிலக்கண மரபை விளக்கி நூலை நயந்தார்.
நூற் பிரதிகளை பேராசிரியரிடம் கற்ற மாணவர்களும் உடன் கற்பித்தோரும் அவரிடம் பெற்றபோது அவர்களைப் பொண்னாடை போர்த்திச் சிறப்பித்தபோது கல்வியால் வரும் உறவும் களிப்பும் அரங்கிலே பரவிப் படர்ந்து நின்றன.

jamohanசிறப்பு நிகழ்வாக மரபுரிமைத் திங்கள் நினைவுப் பரிசு மூவருக்கு வழங்கப்பட்டது. தமிழ்ப் பணி செய்யும் இளைய தலைமுறையினரான தாய்வீடு ஆசிரியர் திலீப்குமார், எழுத்தாளர் சாம்பசிவம் அகில், ஊடக இயக்குனர் அனந்தராஜ் நவஜீவன் ஆகிய மூவரும் பரிசு பெற்றனர். புரிசாக முனைவர் மனோன்மணி எழுதிய 21 நூல்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வும் கனடா நாட்டின் மரபுரிமைத் திங்களின் தனித்துவமான பெருமையை எல்லோருக்கும் உணர்த்தியது.
பேராசிரியரின் 75வது அகவை வாழ்த்துக்களை ஒன்ராறியோ இந்துசமயப் பேரவை, திருகோணமலை நலன்புரிச் சங்கத் தலைவர் கே.எஸ்.குகதாசன், தும்பளை நலன்புரிச் சங்கத் தலைவர் திரு.பா.ரவீந்திரன், தமிழ்ப்பூங்கா இயக்குனர் திரு.சபா அருள்சுப்பிரமணியம், ஆசிரியர் த.சிவபாலு, ஸ்ரீசண்முகநாத ஆலய நிர்வாகி திரு.க.பொன்னம்பலம் ஆகியோர் வழங்கினர்.
நிறைவாக திரு.ச.இரமணீகரன் குழுவினரது இசைநாடகப் பாடல்கள் இசைக்கப்பட்டு மண்வாசனையோடு விழா இனிதே நிறைவுபெற்றது. மகிழ்வாக ஒரு மாலைப்பொழுதைக் கழித்த மன நிறைவோடு எல்லோரும் சென்றது விழாவை நம் நினைவில் ஆழப் பதிய வைத்தது.
நன்றி-இகுருவி

நிகழ்வின் ஒளிப்படங்களில் சில...