Enkea Antha Vennila-2014 Book cover

புனைகதை வித்தகன் குரு அரவிந்தன் அவர்கள் எழுதி சென்னை மணிமேகலை பிரசுரமாக வெளிவந்த “எங்கே அந்த வெண்ணிலா?” என் கையில் கிடைத்ததும் ஆவலுடன் படிக்கத் தொடங்கினேன். வானத்தில் தோன்றும் நட்சத்திரங்கள்….. முகில் கூட்டங்கள் ….. கூடவே அழகிய பெண் முகம் வானத்தில் தோன்றிய வெண்ணிலாவாகக் கண்ணைப் பறித்தது.
எங்கே அந்த வெண்ணிலா? …………. படிக்க முன்பே யார்தான் அந்த வெண்ணிலாவாக இருக்கும் என்ற ஆவல் நெஞ்சத்தைத் தொட்டது. மிகவும் பொருத்தமான அட்டைப் படமாக இருந்தது. 

அட்டைப் படத்தைத் தாண்டி உள்ளே சென்றதும் அந்த வெண்ணிலாவின் முழுத்தோற்றம் கொண்ட சித்திரம் மேலும் வாசகர்களின் ஆவலைத் தூண்டவே செய்யும். 

புலம்பெயர்ந்து தமிழர் வாழும் மண்ணில் உள்ள யதார்த்தங்களுடன் கற்பனை சேரப் பிறந்ததுவே இந்த நாவல் என்னும் கருத்தைக் கூறும் நூலாசிரியரின் சில வாசகங்கள் அவரின் “என்னுரை” பகுதியில் இருந்தன.

இந்த நாவல் கனடா, மொன்றியலில் இருந்து வெளிவரும் “இருசு” பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்ததாகவும் அறிந்து கொண்டேன். இந்த நாவல் தொடராக வெளிவந்து கொண்டிருந்த சமகாலத்தில் வாசகர்களால் எழுதப்பட்ட குறிப்புக்களும் என் கவனத்தை ஈர்ந்து சிந்திக்க வைத்தன. அப்பொழுது என் மனதில் ஒரு வினா எழும்பியது. இந்த நாவலை முற்றாக எழுதி முடித்ததன் பின்னால் தொடர்கட்டுரையாக பிரசுரமாகியிருக்குமா அல்லது பகுதி பகுதியாக பிரசுரமாகிக்கொண்டிருக்க நாவல் எழுதி முடிக்கப்பட்டீருக்குமா என்பதே என் மனதில் எழுந்த கேள்வி. இந்த கேள்விக்கான காரணம் எனது தேடல் மட்டும்தான். இந்த கேள்விக்கான விடை எதுவாக இருந்தாலும் இந்த நாவலைப் பற்றி எனது மனதில் எழுந்த அபிப்பிராயம் மாறாது என்பதையும் உணர்ந்து கொண்டேன்.
வாழ்த்துரையில் தேவிபாலா அவர்கள் குறிப்பிட்டது போலாக “எங்கே அந்த வெண்ணிலா? தலைப்பிற்கு படிக்கத் தூண்டும் ஈர்ப்புச்சக்தி நிறையவே உள்ளது என்பதை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். 

மனித வாழ்வில் ஏற்படும் சிறு சம்பவங்கள் கூட பாரிய திருப்பங்களை ஏற்படுத்தி விடுகின்றன. இந்த யதார்த்தத்தைக் காட்டும் வகையில் விக்ரமினது தொலைபேசியில் அவரது காதலி மதுமிதா பதிவு செய்திருந்த தகவலுடன் நாவல் ஆரம்பமாகின்றது. ரொறன்ரோவிற்கும் நியுயோர்க்கிற்குமிடையில் ஓடித்திரியும் விக்ரம் தனது கைத்தொலைபேசியை எப்படி மறந்து நியுயோர்க் சென்றிருப்பார் என நினைக்கத் தோன்றினாலும் நடைமுறை இயல்பானதாகவே கருத வேண்டியுள்ளது. 

பதற்றத்துடன் மதுமிதா தொலைபேசியில் பதிவுசெய்த செய்தியால் கலக்கத்துடன் மதுமிதாவைத் தேடி ஓடி அறிந்த செய்தியால் குழப்பமடைந்து விரக்தியுடன் சுபாவிடம் தனது மனச்சுமையை இறக்கிவைப்பதில் இருந்து மேலும் பல கதாபாத்திரங்கள் நாவலில் புகுந்து கொள்கின்றன. இதனையடுத்து நாவலில் விறுவிறுப்புத் தன்மை மெல்ல மெல்லக் கூடுகின்றது. இனி வாசகர்கள் நாவலை வாசித்து முடிக்காமல் விடமாட்டார்கள் என்ற நிலைக்கு மிகவும் சாதுர்யமாக நூலாசிரியர் வாசகர்களை தனக்கே உரித்தான பாணியில் கட்டிப் போடுகிறார் எனலாம். 
இந்தக் கட்டத்தில் ஒரு திருப்பு முனையாக விக்ரம் நினைவில் மதுமிதா வந்து அவர்களின் கடந்த காலக்கதையை நகர்த்திச் செல்லும் விதம் மிகவும் நன்றாக உள்ளது. படங்களில் வரும் பாடல் கட்டங்கள் போல நினைவலைகள் காதல் செய்யும் பலரின் கவனத்தைக் கட்டாயம் ஈர்க்கத்தான் செய்யும். இவர்கள் காதல் விவகாரம் மதுமிதாவின் தந்தையார் புண்ணியமூர்த்தி காதில் விழுகிறது. கதையின் திசை மாறுகிறது. 

பொதுவான அம்சம் என்றாலும் நாவல் தொடர்ந்து விறுவிறுப்பாகத்தான் செல்கிறது. நாவலில் சேர்ந்து பயணிக்கும் ஏனைய பாத்திரங்களும் அவர்கள் கதைகளும் மிகவும் நன்றாகப் புனையப்பட்டுள்ளன. 
நாவலை நகர்த்திச் செல்லுவதற்குக் கையாளும் யுக்திகள் பிரமாதம். போராட்டம் நிறைந்த காதலினைச் சித்தரிப்பதாகவும் பணத்தின் மேலுள்ள ஆசை பாசத்தை மறைக்கும் இயல்பான நிலையையும் நன்கு எடுத்துக் கூறுவதாக உள்ளது இந்த நாவல். மொத்தத்தில் ஓர் அருமையான நாவல். அனைவரும் விரும்பிப் படிக்கத்தக்க ஒரு நாவல். குரு அரவிந்தன் மேலும் பல படைப்புக்களைத் தந்து சாதனை படைக்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தி மனதார வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

- அகணி சுரேஸ்-

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 1, 2015