abi-1ஆடற் செல்வி அபிஷா செல்வமோகனின் முழுமையான கலையாற்றலைக் காண்போம் வாரீர்! -ஆர்.என். லோகேந்திரலிங்கம்

வடமொழியானது தனது செல்வாக்கை இந்த அற்புதக் கலை வடிவத்தின் மீது செலுத்திய வண்ணம் இருக்க, தமிழ்நாட்டிற்குரிய ஒருகலை வடிவமாகத் திகழ்ந்த பரதநாட்டியம் தற்போது உலகெங்கும் பரந்து விரிந்து தன் பாதங்களைப் பதித்தவண்ணம் அழகுமங்கையர்க்கு மேலும் அழகூட்டிவருகின்றது. ஆற்றல்  நிறைந்தவரை அணைத்து தொடர்ந்து அழைத்துச் செல்லுகின்றது.இவ்வாறான அற்புதக் கலையை பயிலும் ஒரு நடனமங்கை அல்லது ஒரு ஆடவன் தனது பாதங்களை அடித்தளமாகக் கொண்டு ஒரு நடனத்தை பார்வையாளர்களுக்கு சமர்ப்பித்தாலும், தனது உடல் உறுப்புக்கள் மற்றும் உணர்வுகள்  போன்ற அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆடுதலே இந்த பரதநாட்டியத்தின் சிறப்பு என்று சொல்லலாம்.இவ்வாறான ஒருதெய்வீகக் கலையை தனது பெற்றோரின் வழிநடத்தலில் ஆற்றலுள்ள ஒரு குருவிடம் கற்றுத் தேர்ந்து, இன்று தனது அரங்கேற்றத்தை சபையோர் முன்னிலையில் சமர்ப்பிக்கும் ஆடற்செல்விஅபிஷா செல்வமோகனின் நடனங்களின் அழகையும், அற்புதத்தையும் காண்பதற்காக நாம் கூடியுள்ளோம். அபிஷாவின் குருவும் அபிநயாலயா நாட்டியாலயாவின் அதிபரும், ஸ்தாபகருமான ஸ்ரீமதி றஜனி சக்திரூபன் அவர்கள் கனடாவில் தனது கலைப் பயணத்தை தக்க வைத்துக்கொள்ளும் ஆர்வத்தோடு நடனப் பள்ளி ஒன்றை நடத்தி வந்தாலும்,புலம் பெயர்ந்த நாடுகளில் பரதநாட்டியத்தைக் கற்பிக்கும் ஆசிரியைகளில், பாராட்டுகளையும் வெற்றிகளையும் தொட்டு நிற்கும் ஒருசிறந்த குரு என்பதை அவரது கடந்த கால கலைப்பயணத்தின் சுவடுகள் நன்கு புலப்படுத்துகின்றன. அவர்; வருடாவருடம் நடத்தி வருகின்ற நடனவிழாக்களில் இளம் சிட்டுக்கள் தொடக்கம் வளர்ந்த செல்விகள் வரை மேடையில் அளிக்கும் கண்கவர் நடனங்கள் மேற்படி பாராட்டுகளுக்குச் சான்றாக விளங்குகின்றன.

ரதநாட்டியத்தை கற்பதற்காக ஒரு குருவிடம் சேர்க்கப்படும் ஒரு சாதாரண சிறுமியை ஒரு நடனச் செல்வியாக உருவாக்குவதற்கு அந்த குரு பல சவால்களை எதிர் கொள்ளவேண்டும். ஒரு பெண்ணிடம் இயல்பாக இல்லாத அல்லது வெளிப்படுத்த முடியாத கலை சார்ந்த அம்சங்களை கற்றுக்கொடுப்பது என்பது ஒரு இலகுவான காரியமல்ல. அதற்கு மேலாக ஒருநடனச் செல்வியை அரங்கேற்றம் வரையும் அழைத்துச் சென்றுமேடையில் பாதம் பதித்து சபையோருக்கு முன்பாக சமர்ப்பணம் செய்வது ஒரு நீண்டபயணம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறான ஒருகடினமான கலைப்பயணத்தில், இன்றைய இளம் நாயகி அபிஷாவை ஒரு அரங்கேற்றச் செல்வியாக எம் முன்பாக நிறுத்தியுள்ள ஸ்ரீமதி றஜனிசக்திரூபன் அவர்களை நாம் பாராட்டவேண்டும்.
abissha4a

அத்துடன் அபிஷாவின்  அன்புத் தந்தை செல்வமோகன் அவர்களதும்  அவரது பாரியாரினதும் பங்களிப்பையும் நாம் கௌரவிக்கவேண்டும். அபிஷா போன்ற அரங்கேற்றம் காணும் நடன மங்கையை உருவாக்க பெற்றோரும் அவரது குருவும் பலசிரமங்களை அனுபவித்திருந்தாலும் இன்றையநாள் அனைத்தையும் மறந்த வண்ணம் அரங்கேற்றச் செல்வியின் அழகிய நடனங்களாலும் குவியும் பாராட்டுகளாலும் மனங்குளிர்ந்து நிற்கும் ஒருநன்னாள் என்று கூறலாம். அவ்வாறான ஒரு இனிய ஒருமாலையில் அபிஷாவின் நடனஅரங்கேற்றம் அவரது ஆற்றலை வெளிப்படுத்தும் ஒரு ஊடகமாகவும் அவரது எதிர்கால கலைப் பயணத்திற்குரிய ஒரு புனிதம் நிறைந்த ஆரம்பமாகவும் அமையவேண்டும் என்று வாழ்த்துகின்றேன்.

இங்ஙனம்
ஆர்.என். லோகேந்திரலிங்கம்
பிரதமஆசிரியர் -கனடா உதயன்
துணைத் தலைவர்-பல்லின பத்திரிகையாளர் கழகம்,கனடா

 

 

ab6a

abi1