Ezil Popkal-1aகாரைநகர் தந்த கவிஞர் தம்பிப்பிள்ளை நந்திவர்மன் அவர்களின் மரபுக் கவிதைகள் அடங்கிய ‘எழில் பூக்கள்’ என்ற நூல் மற்றும் அந்தக் கவிதைகளை பிரபல தென்னிந்தியத் திரை இசைப் பாடகர்களின் குரலில் வடிவமைத்த இசைப்பாடல் இறுவெட்டு அறிமுக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை1120 Tapscott Road, Unit- 3 Scarborough (McNicoll & Tapscott) ல் அமைந்துள்ள தமிழிசைக் கலா மன்றத்தின் அழகிய அரங்கத்தில் நடைபெற்றது. அறிமுக விழாவில் தமிழ் ஆர்வலர்களும் ரொறன்ரோ வாழ் காரைநகர் மக்களும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்வை கவிஞர் கந்தவனம் அவர்கள் தலைமைதாங்கி நடாத்த எழில் பூக்கள்’ கவிதை நூலின் அறிமுகவுரையை கவிஞர் கோதை அமுதன் அவர்களும், ஆய்வுரையை கலாநிதி சுப்பிமணியம் அவர்களும் வழங்க நிகழ்வுகளை C.M.R வானொலி அறிவிப்பாளர் தர்ஷினி உதயராஜா சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

Ezil Pookal-3aகாரைநகர், இடைப்பிட்டியைப் பூர்வீகமாகக் கொண்ட கவிஞர் திரு.தம்பிப்பிள்ளை நந்திவர்மன், கொழும்பில் பிறந்து வளர்ந்து தற்போது சிட்னி, அவுஸ்திரேலியாவில் வசித்து வருகின்றார். கணக்கியல் துறையில் தலைமை நிதி அலுவலராகப் பணியாற்றிக் கொண்டிருந்தாலும் தமிழிலும், சைவத்திலும் தணியாத பற்றுடையவர். புலவர் சிவங்கருணாலய பாண்டியனாரிடமும் அறிஞர் இ. இரத்தினம் அவர்களிடமும் இளமையிலே தமிழ் கற்றவர். பின்னர் பேராசிரியர் இராசு வடிவேலு அவர்களிடம் முறையாக யாப்பிலக்கணம் கற்றவர். மரபுக் கவிதைகளை இன்றைய சந்ததிக்கு உணரவைப்பதுடன் அடுத்த சந்ததிக்கும் எடுத்துச்செல்லவேண்டும் என்கின்ற பெரு நோக்குடன் உழைத்து வருகின்ற நந்திவர்மன் தம்மால் படைக்கப்பட்ட மரபுரீதியான கவிதைகளைத் தொகுத்து ‘எழில் பூக்கள்’ என்கின்ற அழகிய பெயரிலான நூலினை அவுஸ்திரேலியாவில் அழகுற வெளியிட்டிருந்தவர்.

அதேவேளை கவிதைகளிலுள்ள சுவையையும் வீச்சையும் உணரவைக்கக்கூடியதாக அவற்றிற்கு இசையமைத்து தமிழகத்தைச் சேர்ந்த பிரபல்யம் மிக்க கர்நாடக மற்றும் திரையிசைப் பாடகர்களான வாணிஜெயராம், எஸ்.பி.சைலஜா, நித்யஸ்ரீ மகாதேவன், மதுபாலகிருஷ்ணன் ஆகியோர் மூலமாகப் பாடிப் பதிவுசெய்யப்பட்ட இறுவெட்டினையும் வெளியிட்டு சாதனை புரிந்தவர்.Ezil Pookal-4b

இவரது “எழில் பூக்கள்’ கவிதைகள் நூலும் இறுவெட்டும் யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை ஆகிய நகரங்களில் சிறப்பாக அறிமுகம் செய்யப்பட்டிருந்தவேளை அற்புதமான கவிதைகள் என்கின்ற விமர்சனத்தினைப் பெற்றிருந்தது என்பதுடன் நந்திவர்மன் தமிழ் இலக்கிய உலகின் சிறந்த மரபுக் கவிஞர் என்ற பாராட்டும் கிடைத்திருந்தது. இவ் அறிமுக விழாக்களை ஏனைய நூல் வெளியீடுகள் போலல்லாது வித்தியாசமான முறையில் தமிழ் ஆர்வலர்களையும் அறிஞர்களையும் கவரும் வகையில் அமைத்திருந்து மிகுந்த வரவேற்பினைப் பெற்றுக்கொண்டவர் கவிஞர் நந்திவர்மன்.

Ezil Pookal-1காரை மண்ணில் தோன்றிய இலக்கியகர்த்தாக்களின் சாதனையினால் அந்த மண் ஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றில் தனது பெயரை அவ்வப்போது பதித்து வருகின்றது. கவிதை இலக்கியப் படைப்பாளிகளின் பங்கு வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கின்றது. தமது தமிழ்ப் பணியினாலும் மரபுக் கவிதை படைக்கும் ஆற்றலினாலும் கவிஞர் தம்பிப்பிள்ளை நந்நதிவர்மன் காரை மண்ணுக்கு பெருமை சேர்த்து வருவதையிட்டு காரை மண்ணின் மக்கள் அனைவரும் பேருவகையடைகின்றனர்.Ezil Pookal-2

சைவசமயத்திலும் நந்திவர்மனுக்கு இருக்கின்ற ஈடுபாடும் பற்றுதலும் போற்றுதற்குரியதாகும். அது மட்டுமல்லாது தனது தந்தை வழியில் காந்தீயக் கொள்கைகளில் கவரப்பட்டவராய் அவற்றின் வழி ஒழுகி தனது வாழ்க்கையினை அமைத்துக்கொண்டு அனைத்திலும் எளிமையைக் கடைப்பிடிப்பவர்.

Ezil Pookal-5காரைநகர் இடைப்பிட்டியைச் சேர்ந்த பிரபல்யம் மிக்க சோமர் கந்தையா மற்றும் மலாயன் பென்சனர் தம்பிப்பிள்ளை ஆகியோரின் பேரனும் இலங்கை நாடாளுமன்றத்தில் மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்று பெயர்பெற்ற மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள திரு.சோ.க.தம்பிப்பிள்ளை மற்றும் கொழும்பு திருக்குடும்ப கன்னியர் மட பாடசாலையின் முன்னைநாள் ஆசிரியையுமாகிய திருமதி.சரஸ்வதி தம்பிப்பிள்ளை ஆகியோரின் மூத்த புதல்வனே கவிஞர் நந்திவர்மன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Ezil Pookal-4aதமிழுக்காக தனது உயிரைத் துறந்த வரலாற்றினைக் கொண்ட மன்னன் நந்திவர்மனின் பெயரினை தனக்கு இட்டதன் மூலம் தனது தமிழ்மொழி மீதான பற்றுதலுக்கும் ஈடுபாட்டிற்கும் அடித்தளமிட்டவர் தனது தாயார் சரஸ்வதியேயாகும் என பெருமிதத்தோடு கூறும் கவிஞர் நந்திவர்மன் தனது தந்தையார் வீட்டில் சேகரித்து வைத்திருந்த அரிய பல தமிழ் நூல்களை வாசிப்பதற்கு ஏற்பட்ட வாய்ப்பு தனது தமிழ் அறிவினை மேம்படுத்த உதவியதாக மேலும் குறிப்பிடுகிறார்.Ezil Pookal-4

தமிழ்மொழி சார்ந்து மிகுந்த தேடுதல் உடையவராக உள்ள கவிஞர் நந்திவர்மன் இளவயதிலேயே புலவர் சிவங்கருணாலய பாண்டியனாரிடமும் அறிஞர் இ.இரத்தினம் அவர்களிடமும் தமிழைக் கற்றுக்கொண்டதுடன் பேராசிரியர் இராசு வடிவேலு என்பவரிடம் கவிதை யாப்பிலக்கணத்தினையும் முறையாகக் கற்று இயல்பாகவே காணப்பட்ட கவிதை படைக்கும் ஆற்றலையும் தமிழறிவினையும் வளர்த்துக்கொண்டவர். தமிழர்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டாகப் போற்றிவந்த மரபுரீதியான கவிதைகள் என்னும் அற்புதமான கலை ஓரு தங்கச் சுரங்கமாகும் என்பதுடன் அவை தற்போது மெல்ல மறைந்து வருவதாக கவலை தெரிவிக்கின்றார். இலக்கணவழி நின்று கவிதைகளைப் படைப்பவர்கள் அருகி வருவதுடன் கவிதைகளின் அமைப்பையும் சந்தங்களையும் கூட மறந்து விட்டமை குறித்து தமது ஆதங்கத்தினயும் வெளிப்படுத்தினார்.

Ezil Pookal-2aதற்போது உள்ளது போன்று இலகுவில் விரைவாக செய்திகளும் தகவல்களும் மக்களை இணையங்கள் வழியாக சென்றடையக்கூடிய வசதி வாய்ப்பக்கள் எதுவும் 1990களில் இருக்கவில்லை. அக்காலகட்டத்தில் நியூசிலாந்து நாட்டிலுள்ள ஓர்க்லண்ட் நகரில் செயற்பட்ட சமூக வானொலியின் ‘தமிழ்த் தென்றல்’ நிகழ்ச்சியில் ‘கதம்பம்’ என்கின்ற தலைப்பிலான நிகழ்ச்சியைத் தயாரித்து வழங்கியதன் மூலம் தமிழ் மற்றும் தமிழ்ப் பிரதேசங்கள் சார்ந்த செய்திகளும் அறிவு சார் தகவல்களும் தமிழ் மக்களை சென்றடையும் வண்ணம் தமிழ்ப் பணியாற்றியவர் என்பதும் இவ்வேளையில் குறிப்பிடத்தக்கதாகும்.

கவிஞர் நந்திவர்மனின் தமிழ்மொழி மீதான ஆர்வத்திற்கும் கவிதை இலக்கியத் துறையில் சாதனை படைப்பதற்கும் வித்திட்டவர் சைவத் தமிழ்ப் பாராம்பரியத்தின் ஊட்டி வளர்த்து வருகின்ற காரை மண்ணின் முதன்மைப் பாடசாலையான காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியான இவரது தாயார் திருமதி சரஸ்வதி தம்பிப்பிள்ளை ஆவார்

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 25, 2017