diwaliஅனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். எல்லோர் வாழ்விலும் அன்பு, ஒற்றுமை, அமைதி, ஒழுக்கம், தூய்மை ஆகிய பஞ்ச குணங்களும் ஒளிரட்டும். இந்த தீபத்திருநாளில் திருமகள் அனைத்து விதமான செல்வங்களையும் வளங்களையும் அளிப்பாள். பண்டிகைகள் எதற்காக என்றால் மக்கள் அனைவரும் இன்பமாக கொண்டாட வேண்டும் என்ற காரணத்தினால் தான்.ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும் தீபாவளிக்கு என்று தனிச்சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் நீராடி, புத்தாடை அணிந்து, தீபம் ஏற்றிக் கொண்டாடுவது அவசியம் என்று புராணமே கூறுவதுதான் அந்தச் சிறப்பு. 

நரக சதுர்தசி எனும் தீபாவளி:

ஐப்பசி மாதம் தன்னுள்ளே பல விஷேட தினங்களைக் கொண்டிருக்கின்றது. அவற்றுள் பண்டிகையென்ற ரீதியில் கொண்டாடப்படுவது தீபாவளியாகும். இப்பண்டிகை ஐப்பசித் திங்களில் கிருஷ்ணபட்ச சதூர்த்தசியன்று கொண்டாடப்படுகிறது. இதை நரக சதுர்த்தசி என்று கூறப்படுகிறது.. நரக சதுர்த்தசி அன்று, நரகத்திற்கு செல்லாமல் இருக்கவும், ஏற்கனவே நரகத்தில் துன்பப்படுபவர்கள் அங்கிருந்து விடுபடவும் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.எண்ணெய், அரப்புத்தூள், சந்தனம், குங்குமம், மலர்கள், தண்ணீர், புத்தாடை, இனிப்புப்பண்டங்கள், தீபம், இனிப்பு மருந்து, நெருப்புப்பொறி ஆகியவற்றிற்கு பூஜை செய்ய வேண்டும்.

நரகாசுரனின் என்பவன் யார்?

நரகாசுரனின் உண்மைப் பெயர் பௌமன். திருமால் வராக அவதாரம் எடுத்து பூமியை துளைத்து அசுரர்களை அழிக்கச்சென்ற போது, அவரின் ஸ்பரிசத்தால் பூமாதேவிக்குப் பிறந்தவன். அசுர வதத்தின் போது பிறந்தவன் என்பதால் அசுர சுபாவம் இவனுக்கு இயல்பாக அமைந்து விட்டது. நரன் என்றால் மனிதன். மனிதனாக இருந்தாலும், துர்க்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததால் நர:ூஅசுரன் எனப்பட்டான். அப்பெயரே நரகாசுரன் என்றானது.

தீபாவளி கொண்டாட காரணம்:

இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான். அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான். இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான்.

அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. நரகாசுரன் இறக்கும் தருணத்தில் தனது தவறுகளை உணர்ந்தான் கிருஷ்ணபரமாத்மாவிடம் நான் மரணத்தைத் தழுவும் இந்நாள் ஆண்டு தோறும் மக்களால் கொண்டாடப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். அவனது வேண்டுகோள் ஏற்கப்பட்டு ஆண்டு தோறும் ஜப்பசி மாத சதுர்த்தசி தினம் நரக சதுர்த்தசி என்று அழைக்கப்பட்டு அவன் நினைவில் நிறுத்தப்படுகின்றான்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: October 22, 2017