SOPCA-10th 6-2019யூலை மாதம் 13 ஆம் திகதி பீல் பிரதேச சொப்கா குடும்ப மன்றத்தினர் தங்கள் மன்றத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். மிசசாகா, 4300 கௌத்ரா வீதியில் உள்ள ஜோன் போல் 11 போலிஷ் கலாச்சார மண்டபத்தில் மாலை 6:00 மணியளவில் இந்த நிகழ்வு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவின் பிரதம அதிதிகளாக வைத்திய கலாநிதி இரத்தினசிங்கம் மோகன், திருமதி கௌரி மோகன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மாலை 6:00 மணியளவில் மங்கள விளக்கேற்றலுடன் சொப்காவின் 10வது ஆண்டு நிறைவு நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்த நிகழ்வில் சொப்கா மன்றத் தலைவர் குரு அரவிந்தன் மற்றும் திருமதி மாலின் அரவிந்தன் ஆகியோருடன் சொப்காவின் மூத்த உறுப்பினர்கள் சிலரும் கலந்து மங்கள விளக்கேற்றிச் சிறப்பித்தனர். கனடா தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து, சொப்கா கீதம் ஆகியவற்றைத் தொடர்ந்து அகவணக்கம் இடம் பெற்றது. அடுத்து வரவேற்பு நடனமும், வரவேற்புரையும் இடம் பெற்றன. சிறுவர் நடனத்தைத் தொடர்ந்து சொப்கா உபதலைவர்களில் ஒருவரான யாழினி விஜயகுமாரின் உரை இடம் பெற்றது. அடுத்து இளம் தலைமுறையினர் நடித்த நாடகம் ஒன்று இடம் பெற்றது. 

SOPCA-10th 10-2019அடுத்து சொப்கா மன்றத்தின் 10வது ஆண்டு மலரான சொப்கா மஞ்சரி வெளியிடப் பெற்றது. மலராசிரியர் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்கள் மலரை வெளியிட்டு வைத்தார். அறுபது பக்கங்களைக் கொண்ட இந்த சொப்காமஞ்சரி வாழ்த்துச் செய்திகளுடன் சொப்காவின் கடந்த பத்தாண்டின் முக்கிய நிகழ்வுகளை வண்ணப் படங்களுடன் பதிவு செய்திருந்தது. மஞ்சரியின் முதற் பிரதியைப் பிரதம விருந்தினர் வைத்திய கலாநிதி இரத்தினசிங்கம் மோகன் அவர்களும், சிறப்புப் பிரதிகளைக் கீதா ஜெயரட்ணம் மற்றும் சில பிரமுகர்களும் பெற்றுக் கொண்டனர். தொடர்ந்து கவுன்சிலர் றொன் ஸ்ராராவின் வாழத்துரை இடம் பெற்றது. இதைத்தெடர்ந்து பெரியவர்கள், சிறியவர்கள் பங்கு பற்றிய நாடகம் இடம் பெற்றது. அடுத்து செல்போன் பாவனையால் ஏற்படும் தீங்குகள் பற்றிய நடனம் இடம் பெற்றது. அடுத்து சொப்கா மன்றத் தொடர்பாளர் திரு. சி. குலசேகரம் அவர்களின் சொப்காவின் செயற்பாடுகள் பற்றிய உரை இடம் பெற்றது.

SOPCA-10th-3-2019அடுத்து மாணவ, மாணவிகளின் நடனம் இடம் பெற்றது. நடனத்தைத் தொடர்ந்து மன்றத் தலைவர் குரு அரவிந்தனின் தலைமை உரை இடம் பெற்றது. அவர் தனது தலைமை உரையில் ‘இன்றைய தலைமுறையினருக்காகத் தற்போது சொப்கா மன்றத்தால் ஆரோக்கியமான பல திட்டங்கள் முன்னெடுக்கப் பட்டிருக்கின்றன. இதனால் பல பிள்ளைகள் புலம் பெயர்ந்த இந்த மண்ணில் தமிழர் என்ற உணர்வோடு தமிழ் மொழியையும், இசை, நடனம் போன்ற கலைகளைக் கற்பதிலும் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள். தன்னார்வத் தொண்டர்களாக உணவு வங்கிக்கு உணவு தானம், பூங்கா துப்பரவு செய்தல், இரத்த தானம், முதியவர்களுக்கான இலவச சேவைகள், நடைபவனி மூலம் வைத்தியசாலைக்கு நன்கொடை தருதல், தலைமைத்துவபண்பு பற்றிய பயிற்சிப் பட்டறைகளை நடத்துதல் போன்ற துறைகளிலும் எமது அங்கத்தவர்கள் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார்கள்.’ என்று குறிப்பிட்டார். 

SOPCA-10th 11-2019அடுத்து சொப்கா மாணவர்களுக்கான புலமைப்பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மன்றத்திற்கு நிதி உதவி செய்தோரும், ஊடக நண்பர்களும், நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கியவர்களும் கௌரவிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து பிரதம விருந்தினரின் உரை இடம் பெற்றது. நிகழ்ச்சிகளில் பங்கு பற்றிய பிள்ளைகள் தமிழில் உரையாடியதை பிரதம விருந்தினர் பாராட்டி இருந்தார். அடுத்து பெண்களின் குழு நடனம் நடைபெற்றது.  அபிராம், வெங்கடேஸ், ஹரணி, திரிஷா ஆகியோரின் திரையிசைப் பாடல்களும் ரசிகர்களின் கரவோசைகளுடன் அவ்வப்போது இடம் பெற்றன. செல்வி. ஷிவானி சிவசெல்வசந்திரன், பிரியா குலசேகரம் ஆகியோர் நிகழ்ச்சிகளைச் சிறப்பாகக் கொண்டு நடத்தினர். அடுத்து மன்றச் செயலாளர் திவானி நாராயணமூர்த்தி அவர்களின் நன்றி உரையும், தொடர்ந்து விருந்து உபசாரமும் நடைபெற்று, மன்றத்தின் 10வது ஆண்டு நிறைவு விழா இனிதே முடிவுற்றது. சொப்பா மன்ற அங்கத்தவர்களும், அவர்களின் குடும்பத்தினருமே நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி சிறப்பித்திருந்தனர்.

SOPCA-10th 8-2019SOPCA-10th 7-2019SOPCA-10th 14-2019_

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: July 26, 2019