Maha- Mahajana-Nov 2019-1aமகாஜனக்கல்லூரி பழையமாணவர் சங்கத்தின் முத்தமிழ் விழா ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் மாதம் 10 ஆம் திகதி 2019 அன்று ரொறன்ரோவில் உள்ள ‘ஆர்மேனியன் யுத் சென்ரர்’ மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்தச் சங்கத்தின்  30வது ஆண்டு நிறைவு விழாவில் மகாஜனக் கல்லூரி பழைய மாணவனும் எழுத்தாளருமான குரு அரவிந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து விழாவைச் சிறப்பித்தார்.

Maha-3-Nov 2019-4

சிறப்பு விருந்தினர்களாக திரு,திருமதி நன்னி பிரதீபன், திரு.திருமதி கலாஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். சரியாக குறிப்பிட நேரம் மாலை 5:01 க்கு விழா ஆரம்பமானது. ஆச்சரியப்பட்டவர்களுக்கு ‘இதுதான் மகாஜனா’ என்று ஏற்பாட்டாளர்களின் புன்சிரிப்பே அவர்களுக்குப் பதில் சொல்லிற்று. முதலில் மங்கள விளக்கேற்றலும் அதைத் தொடர்ந்து கி. பாலஸ்கந்தனின் வரவேற்புரையும் இடம் பெற்றன. அதிபர் ஜெயரட்ணம் அதைத் தொடர்ந்து அதிபர் பொ. கனகசபாபதி அவர்களின் ‘நேரம் தவறாமை’ என்ற நடைமுறை அனுபவத்தை நாங்களும் ஆரம்பத்தில் இருந்தே புலம்பெயர்ந்த கனடாவில் பின்பற்றுகின்றோம் என்று அவர் தனது வரவேற்புரையில் குறிப்பிட்டார்.

வழமைபோல முத்தமிழ் விழா நிகழ்ச்சிகள் யாவும் சிறப்பாக இடம் பெற்றன. முதலில் வாத்தியக்கலை இளவரசி ஹரிணி ஸ்கந்தராஜாவின் தயாரிப்பில் மகாஜனாவின் வழித்தோன்றல்கள் வழங்கிய ‘இசையின் சங்கமம்’ என்ற இசை நிகழ்ச்சி இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து ஆடலரசி செந்தில்செல்வி சுரேஸ்வரனின் தயாரிப்பில் ‘நர்த்தனக் கோலங்கள்’, மற்றும் ‘சிவஸ்துதி’ ஆகிய குழுநடனங்கள் இடம் பெற்றன.

Maha- Mahajana-Nov 2019-2மகாஜனக் கல்லூரி நாடகங்களை மேடை ஏற்றுவதில் எப்பொழுதும் முன்னிற்பதால், இம்முறையும் மூன்று நாடகங்களை மேடையேற்றியிருந்தனர். முதலில் ரமணிகரன் சண்முகநாதனின் நெறியாள்கையில் ‘வேரைத்தாங்கும் விழுதுகள்’ என்ற நாடகம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து நாகமுத்து சாந்திநாதனின் நெறியாள்கையில் ‘புரியாத நிஜம்’ என்ற நாடகம் இடம் பெற்றது. அடுத்து கந்தப்பு சிவதாசனின் நெறியாள்கையில் ‘அசட்டுமாப்பிள்ளை’ என்ற நாடகம் இடம் பெற்றது. மகாஜனக்கல்லூரி நாடகப்பட்டறையில் பயிற்சி பெற்ற இவர்களின் நெறியாள்கையில் பங்கு பற்றிய நடிக, நடிகைகளும் சிறப்பாக தங்கள் பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தனர்.

கனடாவில் பிறந்து வளர்ந்த இளந்தலைமுறையினர் பலர் இந்த விழாவுக்குத் தொடர்ந்தும் வருகை தருவதால் அவர்களையும் மகிழ்விக்கத்தக்க வகையில் நிகழ்ச்சிகள் அமைந்திருந்தன. மாலதி யோகராசாவின் தயாரிப்பில் இளம் வயதினர்  பங்குபற்றிய குழுநடனம் இடம் பெற்றது. அதைத் தொடர்ந்து கீர்த்திகா பிரேம் கோபாலின் தயாரிப்பில் சிறுவர் சிறுமியர் பங்குபற்றிய ‘கிப்ஹொப்’ நடனம் இடம் பெற்றது. இளம் வயதினரும், சிறுவர் சிறுமியரும் பங்கு பற்றிய இந்த விரைவு நடனங்களைப் பார்வையாளர்கள் நீண்ட கரவோலியோடு ரசித்துப் பார்த்தார்கள்.

Maha- Nov 2019அடுத்து சங்கத்தின் தலைவர் சி. புவனச்சந்திராவின் உரை இடம் பெற்றது. 30வது ஆண்டு நிறைவைச் சிறப்பாகக் கொண்டாடுவதையிட்டு மகாஜனன்கள் பெருமையடைவதாகக் குறிப்பிட்டு, முத்தமிழ் விழா சிறப்பாக அமைய உதவியாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அடுத்துப் பிரதம விருந்தினரான  கணக்காளரும், எழுத்தாளருமான ‘சிறுகதைவித்தகன்’ குரு அரவிந்தனின் உரை இடம் பெற்றது. அவர் தனது உரையில்,

‘இன்றைய இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்வதற்காக என்னை அழைத்த மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவருக்கும், மற்றும் நிர்வாக சபையினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கற்றது கைமண்ணளவு என்பது போல, இதுவரை காலமும் சங்கத்தின் நிர்வாக சபையில் இருந்ததால் மகாஜனன் இதழ் ஆசிரியர், ‘மனசுக்குள் ஒரு மனசு’ நாடக வசனகர்த்தா, பரீட்சை வினாத்தாள் தயாரிப்பாளர், பரீட்சை மேற்பார்வையாளர், மேடைப்பேச்சாளர், நடுவர், பொருளாளர், செயலாளர் என்று பல பாத்திரங்களை அவ்வப்போது ஏற்றுச் செயலாற்ற எனக்குச் சந்தர்ப்பம் கொடுத்த எங்கள் பழைய மாணவர் சங்கத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். சுவாமி விவேகானந்தர் ஒருமுறை ‘மனித மனம் நல்ல உரத்தைத் தரக்கூடியது. அதில் எதை விதைத்தாலும் நன்றாக வளர்ந்து பலன் தரக்கூடியது. நாங்கள் எதை விதைக்கிறோம் என்பதில்தான் எங்கள் அறுவடை தங்கி இருக்கிறது.’ என்று குறிப்பிட்டார். கல்விச் செல்வம் அப்படியானது தான் அதனால்தான் ஒளவையார் சொன்னார், ‘நீரளவே யாகுமாம் நீராம்பல் தான் கற்ற நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு’ நாங்கள் எல்லாவற்றையும் இழந்து புலம் பெயர்ந்து வந்தாலும், எங்களிடம் இருந்து யாருமே பறிக்க முடியாத சொத்து ஒன்றையும் கையோடு கொண்டு வந்தோம், அதுதான் எங்கள் அன்னை ஊட்டிய கல்விச் செல்வம். இன்று நாங்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்கு இந்தக் கல்விச் செல்வம்தான் எங்களுக்குத் துணைபோகின்றது. சுமார் 19 வருடங்களுக்கு முன், மகாஜனன் – 2000 ஆண்டு இதழில் ஆசிரியர் தலைMaha- Muthtamil Vila-Chifguest 10 Nov 2019-3யங்கத்தில் நான் குறிப்பிட்டிருந்த சில வரிகளை மீண்டும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.

அக்கால கட்டத்தில்தான் மகாஜனக் கல்லூரி திரும்பவும் பழைய இடத்திற்குத் திரும்பி வந்திருந்தது. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், அவர்கள் உடைந்து சிதைந்த நிலையில் இருந்த கட்டிடங்களின் புகைப்படங்களை அங்கிருந்து எங்களுக்கு அனுப்பி இருந்தார்கள். நாங்கள் உடைந்து போகவில்லை, திரும்பவும் எங்கள் கல்லூரியைக் கட்டி எழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எங்கள் சங்கத்திற்கு இருந்தது. அவர்கள் அனுப்பிய அந்தப் படங்களையும் போட்டு, ஆசிரியர் தலையங்கத்தில் நான் இப்படி எழுதியிருந்தேன். ‘எந்த மகாஜனத்தாய் எங்களுக்கு நல்லறிவையும், நற்பண்பையும் ஊட்டி வளர்த்து எங்களை நல்லதொரு நிலைக்குக் கொண்டு வந்தாளோ, அந்தத் தாய்க்கு நன்றிக் கடனாக ஏதாவது கைமாறு செய்ய எம்மனைவருக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. தரைமட்டமாக்கப்பட்ட பாடசாலைக் கட்டிடங்கள் திரும்பவும் வானுயர்ந்து நிற்கவும், அங்கு கல்வி கற்கும் எங்கள் உடன்பிறப்புகளுக்கு குறைந்தபட்ச வசதிகளாவது கிடைக்க வழி செய்து கொடுக்கவும் எம்மால் முடிந்தளவு உதவ வேண்டும் என்பதே எங்கள் எல்லோரின் விருப்பமாகும். அந்த வகையில் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் நாங்கள்தான் எமது பங்களிப்பைச் செலுத்திக் கல்லூரியைப் பழைய நிலைக்குக் கொண்டு வர முடிந்தளவு உதவ வேண்டும், மனமிருந்தால் இடமுண்டு!’ என்று அந்த மலரில் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன். அதை வாசித்து விட்டுப் பலரும் உதவி செய்ய முன்வந்தார்கள். எங்கள் விருப்பம் ஓரளவு நிறைவேறி இருப்பதை இம்முறை அங்கே சென்றபோது என்னால் அவதானிக்க முடிந்தது. அவர்களுடன் உரையாடியபோது, எங்கள் கனடா பழைய மாணவர் சங்கத்தின் மீது அவர்கள் நிறையவே மதிப்பு வைத்திருக்கிறார்கள், அதை நாங்கள் தொடர்ந்தும் காப்பாற்றுவோம் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது. கடந்த 30 வருடங்களாகச் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்று, கல்லூரியின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு சங்கத்தைச் சிறப்பாக நடத்தியவர்களுக்கு எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Maha-Dance-2019 Nov 10th-5இம்முறை கல்லூரிக்குச் சென்ற போது, கல்வித்துறையிலும், விளையாட்டுத் துறையிலும் கல்லூரி முன்னேறும் அதே நேரத்தில் இசை, நடனம், நாடகம் போன்ற துறைகளிலும் அவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதை அவதானித்தேன். அன்று நிகழ்ச்சியின் போது, நல்லதொரு சரித்திர நாடகத்தைப் பார்ப்பதற்கு எனக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஏற்கனவே என்னால் முடிந்தளவு கல்லூரிக்குப் பல உதவிகளைச் செய்திருக்கின்றேன். சிறுகதைப் போட்டிகள் வைத்துப் பரிசுகளும் கொடுத்திருக்கின்றேன். கல்லூரி இசை ஆசிரியரின் விருப்பப்படி இசைக் கருவி வாங்குவதற்காகச் சிறிய அன்பளிப்பு ஒன்றைச் சங்கத்தின் மூலம் செய்ய விரும்புவதால் அதற்கான தொகையை சங்கத் தலைவரிடம் கையளிக்க விரும்புகின்றேன். வெல்லுக மகாஜன மாதா!’ என்று தனது உரையில் குரு அரவிந்தன் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமவிருந்தினரான எழுத்தாளர் குரு அரவிந்தன் தெல்லிப்பழை மகாஜனக்கல்லூரியில் இம்முறை நடந்த நிறுவுனர் பாவலர் துரையப்பாபிள்ளையின் நினைவு தினத்திலன்று ‘நிறுவுனர் நினைவுப்பேருரை – 2019’ நிகழ்த்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. பிரதமவிருந்தினர் உரையைத் தொடர்ந்து மகாஜனன் – 2019, சங்கத்தின் 30வது ஆண்டு விசேட மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. சங்கத்தின் செயலாளர் ந. தனபால் அவர்களின் நன்றியுரையுடன் முத்தமிழ் விழா சிறப்பாக முடிவுற்றது.

மணிமாலா, கனடா.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 8, 2019