யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் கலை மரபுரிமைக் கழகம் நடாத்திய தமிழ்மரபுத் தைத்திங்கள் பொங்கல் நிகழ்வு, கடந்த தைமாதம் 25ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில், ரொறன்ரோ செல்வ சந்நதி முருகன் ஆலய கலைமண்டபத்தில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்றது. சங்கத் தலைவர் கனகரத்தினம் இரவீந்திரன்; தமைமையில் நடைபெற்ற இந்தச் சிறப்பு விழா ஒரு கலை விழாபோல், தமிழ்மரபுத் திங்கள் அடையாளங்களை உள்ளடக்கியதாக, மிளிர்ந்தது என்றால் அது மிகையில்லை.
தேவாரம், கனடிய வாழ்த்து, தமிழ்தாய் வாழ்த்து, யாழ் இந்துக் கல்லூரிக் கீதம் என்ற நிகழ்வுகளோடு விழா ஆரம்பமாகியது. கதிரவனுக்கு நன்றிக்கடன் சொல்லும் அழகான விழாவுக்கு வருகைதந்த அனைவரையும் வரவேற்று நிகழ்வை தொகுத்து மதியழகன் வழங்க தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி மற்றும் செல்வ சந்நதி முருகன் ஆலய ஸ்தாபகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
தொடர்ந்து முன்னாள் யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு. மு.ஆறுமுகசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி பொங்கல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கலை நிகழ்வுகள் ஆரம்பமாகின. முதலில் பொங்கல் மெல்லிசைப் பாடல்களை ஜெயகாந்தினி சம்பந்தனின் மாணவர்கள் வழங்கினார்கள். தொடர்ந்து திருமதி. வனிதா குகேந்திரனின் மாணவர்களின் அழகிய நடன நிகழ்வுகள் அனைவரையும் கவரும் படியாக மிளிர்ந்தது.
தொடந்து பொங்கல் விழா பற்றிய சிறப்புச் சொற்பொழிவை முன்னாள் யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆசிரியை திருமதி நீலா நகுலேசபிள்ளை அவர்கள் நிகழ்த்தியிருந்தார் அப்போது அவர் அடுத்து வரும் ஆண்டுகளில் யாழ் இந்து மகளிர் கல்லூரியையும் இணைத்து பொங்கல் விழாவினை நடாத்துமாறு தனது விருப்பத்தினை தெரிவித்திருந்தார்.
நிறைவாக சங்கத் தலைவர் கனகரத்தினம் இரவீந்திரன்; அவர்கள் விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார். இரவு ஒன்பது மணியளவில் பொங்கல் பிரசாதமும், இரவு உணவுப் பரிமாறலும் சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும். மிகவும் கோலாகலமாக நடந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சங்கம் கனடாவின் கலை மரபுரிமைக் கழகம் நடாத்திய பொங்கல் விழா சிறப்புற அமைந்தது என்றால் மிகையில்லை.