Velayi mavan-2-1bகடந்த  சனிக்கிழமை  மாலை கனடா ஸ்காபுறோவில் நகரில் அமைந்துள்ள  "Armenian Youth Centre"  மண்டபத்தில் வேலாயிமவன்-2" இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. மங்கல விளக்கேற்றல், தேசியகீதம், தமிழ்தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம் ஆகியவற்றோடு ஆரம்பமான நிகழ்வுகளை ஜெய்அரவிந் அவர்கள் நெறிப்படுத்தினார். இறுவெட்டில் உள்ள பாடல்களோடு வேறும் பல பாடல்கள் மேடையில் அரங்கேறியது. இளம் பாடகர்களோடு இணைந்து பிரபல பாடகர் வி.எம். மகாலிங்கம் அவர்களின் இசை நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. 

Velayi mavan-2-2

இசையின்மேல் பற்றுக் கொண்ட தமிழ் உணர்வாளர்கள் சிலரின் முன் முயற்சியால் "வேலாயிமவன்" என்ற இசைவடிவத்தின் இரண்டாவது இறுவெட்டு வெளிவந்திருக்கிறது. புலம்பெயர் தமிழ் மக்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் உரித்தானவர் பாடகர் வி.எம். மகாலிங்கம் அவர்கள். தனது உணர்வு மிக்க பாடல்கள் மூலம் உலகுக்கு வெளிப்படுத்திய பெருமைக்குரிய கலைஞன். எத்தகைய பாடலென்றாலும், கணீரென்ற குரலில் பாடக்கூடிய குரல்வளம் அவருக்கு. நாட்டுப்புறப் பாடல்கள் என்றாலே அந்த இசையோடு அவர் குரல் கலந்துவிடும். கேட்பவர் உள்ளம் அதனோடு ஒன்றிவிடும்.

பாடகர் மகாலிங்கம் அவர்களின் அனுசரணையைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் கனடா தமிழ் இளம் தலைமுறையினரை ஒன்றிணைத்து, ஒரு பாடல் இறுவெட்டைப் படைத்து, அதை வெற்றிகரமாக வெளியிடுவதென்பது இலகுவான விடயமல்ல. நமது எதிர்காலம் கருதிய இந்த அரும் பணியை மூன்று நண்பர்கள் இணைந்து சாதித்துள்ளார்கள் என்பது பெருமைக்குரியது.

நமது சமூகத்தின் கலை, கலாச்சாரம் என்பவற்றில் அக்கறையுள்ள இவர்களின் இனம் சார்ந்த கரிசனைக்கு முன்னோடியாக இருப்பவர் திரு.சங்கர் நல்லதம்பி அவர்கள்(Vibrant Hospitality Group)  நிறுவனத்தின் அதிபர். ரொறன்ரோவில் இடம்பெறும் பெரும்பாலான தமிழ் நிகழ்வுகளுக்கு அவரது அனுசரணை  என்றும் துணை இருக்கும் என்பதே அவருக்குரிய தனிச்சிறப்பு. "வேலாயிமவன் -2" இறுவெட்டின் அனைத்து விடயங்களிலும் சங்கர் நல்லதம்பி அவர்களுக்கு பக்க பலமாக இருந்தவர்கள் இரு நண்பர்கள். ஒருவர் திரு.சாருதி ரமேஸ் (WYN Entertainment Ltd) நிறுவன அதிபர். மற்றையவர் ரூபன் ராம் (Universal Vocals)  நிறுவன அதிபர். இறுவெட்டு ஒருவாக்கத்தில் இவர்கள் துணை நினறது மட்டுமல்லாமல் நிதிப் பங்களிப்பையும் சமமாக வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இறுவெட்டின் மூலம் நம்மிடையே வாழும் இளம் சந்ததியின் இசை மற்றும் பாடல் திறமைகள் வெளிப்பட்டிருப்பதைக் காண்கிறோம். உள்ளுர் பாடலாசிரியர்கள், இளம் இசைக் கலைஞர்கள், பாடகர்கள் போன்றவர்களை ஒன்றிணைத்து பல சிரமங்களுக்கு மத்தியில் வெளியிட்டிருப்பது சிறந்த முயற்சி. இறுவெட்டில் பாடிய பிள்ளைகளின் பெற்றோரும் தாமாகவே முன்வந்து நிதிப் பஙகளிப்பை வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து  இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது. நம்மிடையே வாழும் இன்னிசை வேந்தர் பொன் சுந்தரலிங்கம் அவர்கள் பிரம விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். மூத்த ஒரு கலைஞருக்கு கொடுக்கப்பட்ட உயர் கௌரவமாக அது அமைக்கப்பட்டுத் துணியால் மூடப்பட்டிருந்த இறுவெட்டு வடிவிலான வேலாயிமவன்-2 இன் பதிவை பொன் சுந்தரலிங்கம் அவர்கள் திறந்து வைத்தார். இறுவெட்டின் முதல் பிரதியை இளைப்பாறிய அதிபர் திருமதி. பார்வதிப்பிள்ளை இராமநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. 

இடைவேளையைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இறுவெட்டிலும், வெளியீட்டு நிகழ்விலும் பங்கு கொண்ட பாடகர்கள், கலைஞர்கள் மேடையில் கௌரவிக்கப்பட்டார்கள். அன்றைய நிகழ்வில் இறுவெட்டைப் பெற்றுக் கொண்டவர்கள் உவந்தளித்த மொத்தப் பணம் பத்தாயிரத்து அறுபத்தி ஐந்து டொலர்கள் மூன்று வெவ்வேறு அமைப்புக்களுக்கு சமமாக பகிர்ந்து அளிக்க்கப்பட்டது.

Velayi mavan-2-1

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: February 29, 2020