covid-19- 1bஅழையாவிருந்தாளிகள் என்பது இன்று உலகம் முழுவதும் எல்லோருக்கும் தெரிந்திருக்கின்றது. கொரோனா என்ற வைரசுதான் இன்று இன, மத வேறுபாடின்றி எல்லோரையும் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றது. கண்ணுக்குத் தெரியாத இந்த வைரஸை எப்படித் தடுக்கலாம் என்று தொடக்கத்தில் ஆலோசனை கேட்டேன். பலவிதமான ஆலோசனைகள் கிடைத்தன. முகநூலில் சில ஆலோசனைகள் கிடைத்திருக்கின்றது பாருங்கள் என்றாள் மனைவி. இலவச ஆலோசனைகள் என்பதால், எது சரி, எது பிழை என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டியிருந்தது.

நாட்டுக்குள் நுழைந்து விட்டதை அரசு அறிவித்திருந்ததால், அலட்சியமாய் இருந்தால் வீட்டிற்குள் நுழைய அதிக நாட்கள் எடுக்காது என்பது தெரியும். மருத்துவ நண்பர் ஒருவர் முகநூலில் எழுதியிருந்ததில் அர்த்தம் இருந்தது, காலையில் எழுந்ததும் மூச்சை உள்ளே இழுத்து இரண்டு வினாடிகளுக்கு அப்படியே வைத்திருங்கள், உங்களுக்கு இருமவில்லை என்றால் உங்களுடைய நுரையீரல் பாதிக்கப் படவில்லை என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்றிருந்தது. மறுப்பதற்கு எம்மவர்கள் என்றுமே பின்நிற்பதில்லை என்பதால், சிலர் அது தவறான செய்தி என்றார்கள். தொலைபேசியில் அழைத்த நண்பரிடம் அதைச் சொன்னேன். ‘என்ன நீங்கள் சொல்லுறீங்க, ஒவ்வொருநாளும் காலையில் எழுந்ததும் அதைத்தானே யோகா என்று நாங்கள் செய்கிறோம்’ என்றார். ரொயிலட் பேப்பருக்கு இரண்டு பெண்கள் பேரங்காடி ஒன்றில் இழுபறிப்படும் வீடியோவைப் போட்டிருந்தார்கள். பாலுக்காக, உணவுக்காக சண்டை போட்டால் அதில் நியாயமுண்டு, கேவலம் ரொயிலட் பேப்பருக்காக நன்றாக முன்னேறிய நாட்டில் சண்டையா? அவர் பெரிதாகச் சிரித்தார், அப்புறம் சொன்னார் ‘தனக்கு இது பிரச்சனை இல்லை, வாஷ்றூம் குழாயில் தண்ணீர் வரும் வரைக்கும் தனக்குக் கவலையில்லை’ என்றார்.

தொடக்கத்தில் ஒரு நிகழ்வுக்குப் போயிருந்தேன். எமது பண்பாட்டின்படி வாசலில் நிறைகுடம் குத்துவிளக்கு வைத்து வரவேற்பது வழக்கம். அதற்குப் பதிலாக ஒரு மேசையில் கிருமி தொற்றைத் தடுக்கும் கையில் பூசும் மருந்து இருந்தது. இதைக்கூட நடுவிலே வைத்து அழகாக இரண்டு பக்கமும் ஒரோ மாதிரி நிறத்தில் ரிசுபெட்டிகளை வைத்து அழகு படுத்தியிருந்தார்கள். இரண்டு சிறுமிகள் ஒரே மாதிரி உடையணிந்து பன்னீர் தெளிப்பதுபோல, ஒவ்வொருவரும் கையை நீட்ட அதில் சிறிது தெளித்துவிட்டார்கள். அழையா விருந்தாளிகள் அங்கு வந்து விடுவார்களோ என்ற முன் எச்சரிக்கைதான் காரணமாக இருந்தது. இதைத்தான் நாங்கள் மஞ்சள், கோமயம், வேப்பிலை என்ற பெயரில் செய்து கொண்டிருந்தோம். தொடக்கத்தில் எல்லோரும் வேடிக்கையாகத்தான் எடுத்தார்கள். இதற்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, தடுப்பூசியும் இல்லை என்று தெரிந்தபின்தான் ஒவ்வொருவரும் தங்களைப் பாதுகாக்கத் தொடங்கினார்கள்.

covid-19- 2இந்த நோய் மனிதரிடம் இருந்து மனிதருக்குப் பரவக்கூடியது. முதியவர்களை ஏன் அதிகமாகப் பாதிக்கிறது என்பதற்குக் காரணம் அவர்களிடம் எதிர்ப்பாற்றல் குறைவாக இருப்பதும், ஏற்கனவே வேறு பாதிப்புகள் அவர்களுக்கு இருப்பதுவுமேயாகும். இருமல், தும்மலால் காற்றில் பரவுகின்றது. நோயாளி தொட்ட இடங்களைத் தொட்டாலும் பரவுகின்றது. இந்த வைரஸ் உள்ளே சென்றதும் சுவாசக் கால்வாயில் தடித்த சளியை உருவாக்குவதன் மூலம் சுவாசப்பையுடனான தொடர்பை அடைத்து விடுகின்றது. தொடர்ந்து நுரையீரலைத் தாக்குகின்றது. இதனால் நியுமோனியா காய்சல் ஏற்படுகின்றது. அதனால்தான் Acute Respiratory Distress Syndrome ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் போகிறது. விமான, கப்பல் பயணங்களும் இந்த நோய் பல நாடுகளுக்கும் விரைவாகப் பரவியதற்கு ஒரு காரணமாகும். இது நெருங்கிய உறவினர்களின் மரணச்சடங்குகளில் கூடக் கலந்து கொள்ள முடியாத நிலையை இந்த நோய் ஏற்படுத்தி இருக்கின்றது.

சீனா நாட்டில் வுகான் மாகாணத்தில் ஆரம்பித்த இந்த தொற்று நோய் அங்கிருந்து வந்த சிலரால் காவப்பட்டது. இதன் காரணமாகக் கனடாவில் ஏப்ரல் 1ஆம் திகதி எண்ணிக்கைபடி 9,613 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதில் கியூபெக் மாகாணத்தில் 4611 பேரும், ஒன்ராறியோ மாகாணத்தில் 2392 பேரும், வான்கூவர் மாகாணத்தில் 1066 பேரும் அடங்குவர். ஏப்ரல் 2 ஆம் திகதி 10,132 ஆக கனடாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது. ஒன்ராறியோவில் 2793 ஆக அதிகரித்திருக்கின்றது. கனடாவில் முதலாவது மரணம் மார்ச்மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இதுவரை 131 பேர் மரணமாகியிருக்கின்றனர்.

covid-19- 3உலக ரீதியாகப் பார்க்கும் போது இதுவரை 180 நாடுகளில் பரவி இருக்கின்றது. 962,977 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர், இவர்களில் 49,180 பேர் மரணமாகி இருக்கிறார்கள். ஜேர்மனி, யப்பான், வியட்நாம், அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகள்தான் சீனாவிற்கு வெளியே முதலில் பாதிக்கப்பட்டன. இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளே இதுவரை மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

பல்லின் மக்கள் வாழும் கனடாவில் கவனமாக செயற்படுகின்றார்கள். காலம் தாழ்த்தினாலும் முதலில் நாட்டின் எல்லைகளை மூடியது மிகவும் புத்திசாலித்தனம். அடுத்து விமான, கப்பல் பயணங்களை நிறுத்தி, பாடசாலைகளை மூடி எல்லோரையும் வீட்டிற்குள் இருக்கும்படி செய்ததன் மூலம் நோய் அதிகம் பரவுவதை தடுக்க முடிந்தது. இப்போதைக்கு எட்ட நிற்பதும், கைகளைச் சோப்போட்டு கவனமாகக் கழுவுவதும் முக்கியம். தொண்டை வரட்சி அடையாமல் தண்ணீர் அடிக்கடி குடிப்பது நல்லது. ஆனாலும் பொருளாதார ரீதியாகக் கனடா மட்டுமல்ல உலகெல்லாம் பெரிய பின்னடைவு ஏற்படப் போகின்றது.

கூடாததிலும் நல்லது நடக்கும் என்பது போல, இயற்கையின் சிரிப்பை மீண்டும் காணமுடிகிறது. விமானங்களின் ஓசை நின்று போனதால் புள்ளினங்களின் கீச்சுக் குரலைக் காலையில் கேட்க முடிகிறது. அணிலாடும் முன்றில்களை மீண்டும் காணமுடிகின்றது. அதிகாரப் போட்டியால் இயற்கை தந்த கொடையை இழந்துவிட்டு இன்று தவிக்கிறோம். இயற்கைக்கும் மனிதனுக்குமான பனிப்போர் ஆரம்பமாகிவிட்டது, ஆனாலும் மனிதன் இதற்கெல்லாம் அடங்கமாட்டான்.

covid-19- 4கனடா நாட்டிற்கு வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. கனடாவில் பலர் தங்கள் வேலைகளை இழக்கலாம், உணவகங்களில் வேலை செய்த சுமார் மூன்று லட்சம் பேர் இதுவரை வேலை இழந்திருக்கிறார்கள். இந்த நிலையில் தற்செயலாக மின்சாரம் தடைப்பட்டால் பெரிய பாதிப்பு எற்படலாம். பனிக்குளிருக்குள் வீட்டில் இருக்க முடியாமல் புதிய நோய்கள் பீடிக்கலாம், குளிர்சாதனப்பெட்டி வேலை செய்யாவிட்டால் உணவு பழுதாகி தட்டுப்பாடு ஏற்படலாம், சமைப்பதற்கு அடுப்பு எரிக்க முடியாமல் போகலாம், இதுவே வேறு பிரச்சனைகளைக் கிளப்பிவிடலாம். மே மாதம்வரை பாடசாலைப் பிள்ளகைள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கப் போவதால் மனரீதியாகப் பாதிக்கப்படலாம். இந்த வைரஸ், கண்கடை தெரியாமல் ஆட்டம் போட்டவர்களை வீட்டுக்குள் முடக்கி வைத்தாலும், ஒன்பது மாதத்தால் மகப்பேறு மருத்துவ மனைகள் நிறைவதற்கும் இது ஒருவகையில் வழிவகுக்கின்றது என்றே சொல்லலாம். மருந்து வகைகள் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதை நம்பி இருப்பவர்களும் பாதிக்கப்படலாம்.

கனடா பிரதமரின் மனைவியே இந்த நோயால் பாதிக்கப்பட்டார். அவரவருக்கு வந்தால்தான் வலியின் தன்மை புரியும் என்பதுபோல, அதன்பின்தான் வேகமாக நடவடிக்கைகள் ஆரம்பமாகின. சில தமிழ் குடும்பங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஜெர்மனியில் இருந்து வந்த பெண் ஒருவர் தனக்கு நோய் இருப்பது தெரியாமல் உறவிர் வீடுகளுக்குச் சென்று வந்திருந்தார். அவர்களைத் தனிமைப்படுத்தி இருக்கிறார்கள். பிராம்டனில் முதுதமிழர் ஒருவர் இந்த நோயினால் இறந்துவிட்டார். நோய் அறிகுறி உள்ளவர்கள் அல்லது அவர்களுடன் பழகியவர்கள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் 14 நாட்களுக்குக் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஏனையவர்களை கூடியவரை வீட்டுக்குள் இருக்கும்படியும், வளர்ப்பு பிராணிகளை வெளியே கொண்டு செல்லும் போது குறைந்தது 2 மீட்டர் இடைவெளி விட்டுச் செல்லும்படியும், வாரத்தில் ஒருநாள் மட்டும் பொருட்களை வாங்கச் செல்லும்படியும் கேட்கப்பட்டிருக்கின்றனர். மாநகருக்குச் சொந்தமான இடங்களில் சமூக இடைவெளியை கவனிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடியதாக புதிய சட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு மனிதரும் வெளியே திரியாமல், தம்மைச் சுயதனிமைப்படுத்தி, கைகளைச் சுத்தமாகக் கழுவிக் கொள்வதே தற்போதைக்கு தேவையான தடுப்பு முறையாக இருக்கின்றது. கைகளைச் சுத்தப்படுத்தாமல் கண், வாய், மூக்கு, உங்கள் உணவு போன்றவற்றைத் தொடாதீர்கள்!

அரசு சிலசலுகைகளை அறிவித்திருக்கின்றது. ஒன்ராறியோ மாகாண அரசு 17 பில்லியன் டொலர் உதவித்திட்டத்தை அறிவித்திருக்கின்றது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஒருவர் தனது வருமானத்தை இழந்திருந்தால் அவருக்கு தற்காலிக இழப்பீடாக வாரம் ஒன்றிற்கு டொலர் 500 வரை 16 வாரங்களுக்கு வழங்கப்படும் எனத் தெரியவருகின்றது. வங்கிக்கடன் சலுகை, வாடகை, மோட்கேஜ் சலுகை, சொத்துவரிச் சலுகை, மின்சாரக் கட்டணச் சலுகை, வணிகத்துறை சலுகை போன்றவையும் இதுவரை அறிவிக்கப் பட்டிருக்கின்றன. வருமானவரி தாக்கலாகும் திகதி பின்போடப்பட்டுள்ளது.

இச்சந்தர்ப்பத்தில் தங்கள் குடும்பங்களை மறந்து இரவுபகலாக உழைக்கும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள், தாதிகள், மற்று ஊழியர்கள், இதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் கனடா தமிழ் மக்கள் சார்பாக எமது சிரம்தாழ்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். மீண்டும் பழைய நிலைக்கு நாடு திரும்பும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கின்றோம்.

நன்றி: தினக்குரல்

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 24, 2021