covid-19-உலகரீதியாக எடுத்துப் பார்ப்போமேயானால் 215 நாடுகளில் கொரோனா வைரஸ் இதுவரை பாதிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. உலகநாடுகளைச் சேர்ந்த 15,550,133 பேர் இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸின் பாதிப்பால் இதுவரை 633,372 மரணமடைந்திருக்கிறார்கள். 9,457,782 பேர் நோயில் இருந்து குணமடைந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஏதோ ஒரு வடிவத்தில் புதிய வைரஸ்சுகள் உருவாகிக் கொண்டே இருப்பதால் கொரோனா வைரஸை அடையாளம் காண்பதற்காக, 2019 ஆம் ஆண்டு முதன் முதலாக அடையாளம் காணப்பட்டதால் கோவிட்-19 என்று பெயரிட்டிருக்கிறார்கள்.

மனிதரிடம் இருந்து மனிதருக்குத் தொற்றக்கூடியது என்பதால் இந்த கொரோனா வைரஸ் வேகமாகப் பரவியது. நவீன போக்குவரத்து சாதனங்களும் இந்த வைரஸ் விரைவாகப் பரவுவதற்கு உதவியாக இருந்தன. குறிப்பாக விமானங்கள், கப்பல்கள், தொடர்வண்டிகள், பேருந்துக்கள் போன்றவற்றின் பயணிகளால் உலகின் பல பாகங்களுக்கும் விரைவாகக் காவப்பட்டது. தனக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறது என்பது தெரியாமலே, நோயாளி பலருடன் பழகுவதால் அவர்களுக்கும் தொற்றிக் கொள்கிறது. ஒருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்றினாலும் அதை வெளிக்காட்ட இரண்டு வாரங்களும் எடுக்கலாம்.

சீனா நாட்டில் தான் கொரோனா வைரஸ் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 8 ஆம் திகதி சீனாவில் உள்ள வூஹான் என்ற நகரத்தில் நியூமோனியா போன்ற சளிக்காய்ச்சலால்; ஒருவர் பீடிக்கப்பட்டிருப்பதாக வைத்தியரிடம் முறையிட்டார். டிசெம்பர் 29 ஆம் திகதி ஹ_பே நகர் வைத்திய சாலையில் நால்வவர் அப்படியான சளிக்காச்சலுக்கு உள்ளாகி இருந்தனர். 31 ஆம் திகதி பலர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருப்பது தெரியவந்தது.

ஜனவரி 1 ஆம் திகதி அங்குள்ள கடல் உணவு அங்காடியில் இருந்து கொரோனா வைரஸின் தொற்று ஆரம்பித்திருக்கலாம் என நம்பப்பட்டது. இந்த வைரஸ் பற்றி ஜனவரி 3 ஆம் திகதி அதிகாரபூர்வமாக உலக சுகாதார நிறுவனத்திற்குச் (WHO)  சீனாவால் அறிவிக்கப்பட்டது. ஜனவரி 3ஆம் திகதி தாய்லாந்தில் 61 வயதான பெண் ஒருவர் இதனால் மரணித்தாக அறிவிக்கப்பட்டது. மனிதரிடம் இருந்தும் தொற்றும் வைரஸ் என்பதால், ஐனவரி 14 ஆம் திகதி வூஹான் நகரில் இருந்து மக்கள் வெளியேறுவது தடுக்கப்பட்டது. ஜனவரி 16 ஆம் திகதி ஜப்பானில் 30 வயதான ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார். ஜனவரி 17 ஆம் திகதி வூஹான் நகரில் இரண்டாவது மரணம் சம்பவித்தது. ஜனவரி 18 ஆம் திகதி 3வது நபர் மரணமானார். ஜனவரி 20 தென்கொரியாவில் ஒருவர் பாதிக்கப்பட்டார். சீனாவில் 4வது மரணம் நடந்தது. தைவான், ஹொங்கொங், அமெரிக்கா ஆகிய நாடுகளில் 21 ஆம் திகதி முதலாவது வைரஸ் தொற்று கண்டு பிடிக்கப்பட்டது. ஜனவரி 22 சீனாவில் 440 பேர் தொற்றுக்கு உள்ளாகியும், 9 பேர் மரணித்தும் இருந்தனர். வடகொரியா நோய்த்தொற்றுப் பாதுகாப்புக்காகத் தனது சீனா எல்லைகளை மூடியது. ஜனவரி 23 ஆம் திகதி சீனாவில் 571 பேர் தொற்றுக்குள்ளாகினர், 17 பேர் மரணித்தனர். சிங்கப்பூரில் ஒருவர் தொற்றுக்கு உள்ளானார். ஜனவரி 24 ஆம் திகதி சீனாவில் 830 பேர் தொற்றுக்கு உள்ளாகியும், 26 பேர் மரணமாகியும் இருந்தனர். நேப்பாளம், பிரான்ஸ், மலேசியா, வியட்னாம் ஆகிய நாடுகளுக்குப் பயணிகளால் பரவியது. ஜனவரி 25 ஆம் திகதி கொரோனா வைரஸ் அவுஸ்ரேலியா, கனடா ஆகிய நாடுகளுக்குப் பரவியது. ஜனவரி 27 ஆம் திகதி கம்போடியா, ஸ்ரீலங்கா, ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குப் பரவியது. ஜனவரி 28 ஆம் திகதி ஹொங்கொங், சீனாவுடனான எல்லையை மூடியது. சீனாவுடனான விமாப்போக்குவரத்தை அமெரிக்கா நிறுத்தியது. ஜனவரி 29 ஆம் திகதி பின்லாந்து, சவூதி அரேபியா ஆகிய நாடுகள் தொற்றுக்கு உள்ளாகின. 30 ஆம் திகதி இந்தியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தொற்றுக்கு உள்ளாகின. சீனாவுடனான எல்லையை ரஸ்யா மூடியது. உலகசுகாதார நிறுவனம் இந்த தொற்று நோய் பற்றி பகிரங்கமாக அறிவித்தது. 31 ஆம் திகதி ரஸ்யா, இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்குப் பரவியது. சீனாவுடனான எல்லையை மங்கோலியா மூடியது.

பெப்ரவரி 4 ஆம் திகதி பெல்ஜியம் தொற்றுக்கு உள்ளானது. பெப்ரவரி 7 ஆம் திகதி கொரோனா நோய்க்கு மருத்துவம் பார்த்த சீனவைத்தியர் னுச. டுநை றுநடெயைபெ மரணமானார். 25 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியிருந்தது. தரவுகளின்படி 31,484 பேர் இத்தினத்தில் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். சீனாவில் 636 பேர் மரணமாகி இருந்தனர். பெப்ரவரி 9 ஆம் திகதி 2002- 2003 சார்ஸ் தொற்றில் மரணமானவர்களைவிட, கொரோனா மரணத்தின் எண்ணிக்கை அதிகமானது. பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி கொரோனா வைரஸ்ஸால் மரணமானவர்களின் எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்தது. உலக சுகாதார நிறுவனம் இந்த வைரசுக்கு கோவிட்-19 (உழசழயெஎசைரள னளைநயளந 2019) என்று பெயரிட்டது. பெப்ரவரி 14 ஆம் திகதி வைரஸ் எகிப்து நாட்டுக்குப் பரவி இருந்தது. 25 நாடுகளுக்குத் தொற்றிய கொரோனா வைரஸ்ஸால் 60,387 பேர் பாதிக்கப்பட்டு, 1370 பேர் மரணமாகி இருந்தனர். பெப்ரவரி 19 ஆம் திகதி சுற்றுலாப் பயணக் கப்பலான டயமென்ட் பிறின்ஸஸ் கப்பலில் பயணித்த 621 பேர் கொரோனா வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவித்தல் வந்தது. ஈரான் நாட்டிற்கும் நோய் தொற்றியது. பெப்ரவரி 20 ஆம் திகதி மரணமடைந்தவர்கள் தொகை 2129 ஆகவும், பாதிக்கப்பட்டவர்கள் தொகை 75,386 ஆகவும் இருந்தது. பெப்ரவரி 21 ஆம் திகதி வைரஸ் நோய் தொற்றியது பற்றி இத்தாலி, லெபனான், இஸ்ரேல் ஆகிய நாடுகள் அறிவித்தன. பெப்ரவரி 24 ஆம் திகதி ஆப்கானிஸ்தான், பாரெயின், ஈராக், குவைத், ஓமன் ஆகிய நாடுகளக்கு வைரஸ் பரவியிருந்தது. பெப்ரவரி 25 ஆம் திகதி அல்ஜீரியா, ஆஸ்திரியா, குரோஷியா, சுவிச்சலாந்து ஆகிய நாடுகளுக்குப் பரவியிருந்தது. சான்பிரான்ஸிஸ்கோ அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது. பெப்ரவரி 26 ஆம் திகதி பிரேஸில், ஜேர்ஜியா, கிரேக்கம், வடமசிடோனியா, நோர்வே, பாகிஸ்தான், ரொமேனியா ஆகிய நாடுகளுக்கு வைரஸ் பரவியது. பெப்ரவரி 27 ஆம் திகதி டென்மார்க், எஸ்ரோனியா, நெதர்லாந்து, நைஜீரியா, சான்மரினோ ஆகிய நாடுகள் வைரஸ் தொற்று இருப்பதாக அறிவித்தன. பெப்ரவரி 28 ஆம் திகதி ஐஸ்லாந்து, பெலாரஸ், ஆஸபஜான், லித்தூனியா, மொனாகோ, நியூசிலாந்து, மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்கு வைரஸ் பரவியது. இத்திகதியில் 56 நாடுகளில் 84,090 பேர் வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 2,874 பேர் மரணமடைந்திருந்தனர். பெப்ரவரி 29 ஆம் திகதி அயர்லாந்து, ஈக்குவடோர், லக்ஸம்பேர்க், கட்டார், ஆகிய நாடுகளுக்குப் பரவியது. அவுஸ்ரேலியா முதலாவது மரணத்தை அறிவித்தது.

மார்ச் மாதம் 1 ஆம் திகதி ஆர்மேனியாவிற்கும், செக்கோசெலோவிகாவிற்கும் வைரஸ் பரவியிருந்தது. மொத்தமாக உலகெங்கும் 3000 பேருக்கு மேல் மரணமடைந்திருந்தனர். மார்ச் மாதம் 2 ஆம் திகதி இந்தோனேசியா, ஜோடான், அன்டோரா, மொரக்கோ, போர்த்துக்கல், சவூதிஅரேபியா, செனிகல், ரியூனிஸியா ஆகிய நாடுகளுக்குப் பரவியது. மார்ச் மாதம் 3 ஆம் திகதி உக்ரேனுக்குப் பரவியது. ஈரான், சிறைச்சாலையில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக தற்காலிகமாக 54,000 கைதிகளை விடுதலை செய்தது. மார்ச் மாதம் 4 ஆம் திகதி ஆஜென்ரைனா, சில்லி, போலாந்து ஆகிய நாடுகளுக்குப் பரவியிருந்தது. மார்ச் மாதம் 6 ஆம் திகதி கோஸ்ராறிக்கா, கொலம்பியா ஆகிய நாடுகள் பாதிக்கப்பட்டன. இத்திகதியில் 90 நாடுகளுக்கு வைரஸ் பரவி இருந்தது. 100,481 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 3,408 பேர் மரணமாகியிருந்தனர். மார்ச் மாதம் 7 ஆம் திகதி மாலைதீவு, பரகுவே ஆகியன நாடுகள் பாதிக்கப்பட்டன. மார்ச் மாதம் 9 ஆம் திகதி கனடாவில் கொரோனா வைரஸ் முதலாவது மரணம் நிகழ்ந்தது. அனேகமான நாடுகள் விமானப் போக்குவரத்தை தடை செய்தன. மார்ச் மாதம் 13 ஆம் திகதி 121 நாடுகளுக்குப் பரவியிருந்தது. 142,095 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். 5,373 பேர் மரணமடைந்திருந்தனர். மார்ச் மாதம் 18 ஆம் திகதி கனடாவும், அமெரிக்காவும் போக்குவரத்திற்கான எல்லைகளை மூடின. மார்ச் மாதம் 19 ஆம் திகதி இந்தியா விமானப் போக்குவரத்தைத் தடைசெய்தது. மார்ச் 28 ஆம் திகதி ஸ்ரீலங்கா முதலாவது மரணத்தை அறிவித்தது. மொத்தமாக 30,000 மேல் இதுவரை மரணமடைந்திருந்தனர்.

ஏப்ரல் 2 ஆம் திகதி ஸ்பெயின் நாட்டில் நோய் தொற்றாளர்கள் ஒரு லட்சத்தைக் கடந்திருந்தனர். உலகத்தில் நோய்த் தொற்றாளர் ஒரு கோடியைக்கடந்திருந்தனர். மரணங்கள் 50,000 கடந்திருந்தது. ஏப்ரல் 3 ஆம் திகதி அமெரிக்காவில் மட்டும் ஒரு நாளில் 32,000 பேர் தொற்றுக்கு உள்ளாகினர். ஏப்ரல் 5 ஆம் திகதி அமெரிக்காவில் மட்டும் ஒரு நாளில் 1,300 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமாகினர். ஏப்ரல் 6 ஆம் திகதி அமெரிக்காவின் மரணத்தொகை 10,000 கடந்தது. ஏப்ரல் 8 ஆம் திகதி உலகத் தொற்றாளர் தொகை 1.5 மில்லியனைக் கடந்தது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவை மூடப்பட்டதால் பலர் வேலை இழந்தனர். ஏப்ரல் 9 ஆம் திகதி அமெரிக்காவில் 17 மில்லியன் மக்கள் வேலை இழப்பு காப்புறுதிக்கு விண்ணப்பித்திருந்தனர். ஏப்ரல் 10 ஆம் திகதி வரை, கொரோனா வைரஸின் பாதிப்பால் உலகத்தில் ஒரு லட்சம் மக்கள் மரணமாகி இருந்தனர். ஏப்ரல் 14 ஆம் திகதி வரையும், நியூயோரக்கில் மட்டும் 10,000 மேற்பட்டவர்கள் மரணமாகியிருந்தனர். கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்படப் போவதை சர்வதேச நாணயநிதியம் சுட்டிக் காட்டியிருந்தது. ஏப்ரல் 24 ஆம் திகதி வரை அமெரிக்காவில் 50,000 மேற்பட்டோர் கொரோனாவால் மரணமாகியிருந்தனர். ஏப்ரல் 28 ஆம் திகதி வரை அமெரிக்காவில் ஒரு கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.

மே மாதம் 3 ஆம் திகதி வரை அமெரிக்காவில் 65,464 பேர் மரணமாகி இருந்தனர். மே மாதம் 5 ஆம் திகதி வரை உலகில் பாதிக்கப்பட்டவர்கள் தொகை 3.5 மில்லியனாக மாறியது. மே மாதம் 10 ஆம் திகதி உலகில் பாதிக்கப்பட்டவர்கள் தொகை 4 மில்லியனாக மாறியது. மே மாதம் 27 ஆம் திகதி அமெரிக்காவில் தொற்றுக் காரணமாக மரணம் ஒரு லட்சத்தைக் கடந்தது. மே மாதம் 28 ஆம் திகதி கொரோனா வைரஸின் பாதிப்புக் காரணமாக 24 ஐரோப்பிய நாடுகளில் இதுவரை 159,000 மக்களுக்கு மேல் மார்ச் மாதத்தில் இறந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது. பாதிக்கப்பட்ட நாடுகள் எல்லாம் பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்தன. எல்லைகள் மூடப்பட்டு, போக்குவரத்து தடைப்பட்டதால் கொரோனா வைரஸ் பரவும் வேகம் தணிக்கப்பட்டது. இதைவிட கைகளைச் சுத்தமாகக் கழுவுவதாலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதாலும், பொது இடங்கள் மூடப்பட்டதாலும் மேலும் பரவாமல் தடுக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 500 மில்லியன் மக்களின் உயிர் பாதுகாக்கப்பட்டதாகக் கணிப்பீடு தெரிவிக்கின்றது.

யூன் மாதம் 5 ஆம் திகதி எடுத்த கணிப்பீட்டின் படி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்திலும் 1,913,663 பிறேசில் இரண்டாவது இடத்திலும் 595,112 ரஸ்யா மூன்றாவது இடத்திலும் 441,108 ஸ்பெயின் நான்காவது இடத்திலும் 287,740 இங்கிலாந்து ஐந்தாவது இடத்திலும் 281,661 இத்தாலி ஆறாவது இடத்திலும் 234,013, இந்தியா ஏழாவது இடத்திலும் 226,634 இருந்தன. ஒரு லட்சத்தைத் தாண்டிய நாடுகளில் ஜெர்மனி, பெரு, துருக்கி, ஈரான், பிரான்ஸ், சில்லி மெக்ஸிகோ ஆகிய நாடுகள் இடம் பெற்றிருந்தன. கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 390,578 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டவர்களில் இதுவரை 3,209,013 பேர் குணமடைந்து இருக்கிறார்கள்.

யூலை மாதம் 9 ஆம் திகதி எடுத்த கணக்கெடுப்பின் படி உலகத்தில் மொத்தமாக 12,389,559 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தார்கள். அமெரிக்கா 3,219,999 பிறேசில் 1,759,103 இந்தியா 794,842 ரஸ்யா 707,301 பெரு 316,448 சில்லி 306,216 ஸ்பெயின் 300,136 இங்கிலாந்து 287,621 மெக்ஸிகோ 282,283 ஈரான் 250,458 இத்தாலி 242,363 பாகிஸ்தான் 240,848 தென்னாபிரிக்கா 238,339 சவூதி அரேபியா 223,327 துருக்கி 209,962 ஆகிய பதினைந்து நாடுகளில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். ஜெர்மனி,  பிரான்ஸ், பங்களாதேஷ், கனடா, கொலம்பியா, கட்டார் ஆகிய ஆறு நாடுகள் ஒரு லட்சத்தைத் தாண்டி இருந்தன. சீனா நாட்டில், இதுவரை 83,585 பேர் நோய்வாய்ப் பட்டிருக்கிறார்கள். உலகில் மொத்தமாக 557,405 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். 7,187,447 பேர் குணமடைந்து இருக்கிறார்கள்.

2020 ஆண்டு யூலை மாதம் 23 ஆம் திகதி எடுத்த கணக்கெடுப்பின் படி உலகத்தில் மொத்தமாக 15,550,133  பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். அமெரிக்கா 4,151,161 பிறேசில் 2,242,394 இந்தியா 1,288,130 ரஸ்யா 795,038 தென்னாபிரிக்கா 408,052 பெரு 366,550 மெக்ஸிகோ 362,274 சில்லி 338,759 ஸ்பெயின் 317,246 இங்கிலாந்து 297,146 ஈரான் 284,034 பாகிஸ்தான் 269,191 சவூதி அரேபியா 260,394 இத்தாலி 245,338 துருக்கி 223,315 கொலம்பியா 218,428 பங்களாதேஷ் 216,110 ஜெர்மனி 205,142 ஆகிய பதினெட்டு நாடுகளில் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பிரான்ஸ், ஆஜென்ரைனா, கனடா, கட்டார், ஈராக் ஆகிய ஐந்து நாடுகள் ஒரு லட்சத்தைத் தாண்டி இருந்தன. சீனா நாட்டில், இதுவரை 83,729 பேர் நோய்வாய்ப் பட்டிருக்கிறார்கள்.

உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று யாராவது இறந்தால் அவர்களின் மரணச்சடங்குகளில்கூடப் பங்குபற்ற முடியாத நிலையை இந்தக் கொரோனா வைரஸ் எற்படுத்தி இருக்கின்றது. அமெரிக்கா, இந்தியா, பிரேஸில் ஆகிய நாடுகளில் வைரஸின் பாதிப்பு கட்டுக்கடங்காமல் இப்பொழுதும் இருக்கின்றது. தொழிற்சாலைகள், போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டதால் மாசடைதல் வெகுவாகக் குறைந்து வானம் வெளித்திருக்கின்றது. இயற்கை திரும்பி இருப்பதற்குச் சாட்சியாகப் பறவைகள், மிருகங்கள் மற்றும் உயிரினங்கள் தன்னிச்சையாக உலா வருவதைக் காணமுடிகின்றது. என்னதான் தொழில் நுட்பத்தில் முன்னேறினாலும், விண்ணைத்தாண்டிச் சென்றாலும், இது போன்ற இடர்களையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலையும் உருவாக்கப் பட்டிருக்கின்றது.

முதற்கட்டத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் இரண்டாம் கட்டமாகவும் பரவலாம் என சுகாதார நிறுவனங்கள் சில எச்சரிக்கை செய்திருக்கின்றன. ஆனால் அதற்கான முன்னேற்பாடுகள் எதுவும் பல நாடுகளில் எடுக்கப்படவில்லை. ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இன்றுவரை இதற்கான தடுப்பு மருந்து இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. தற்போது உள்ள நிலையில் இருந்து வெளிவந்தாலே போதுமென்ற நிலையில் அனேக நாடுகள் இருக்கின்றன. கடந்த சில மாதங்களாக வீழ்ச்சி அடைந்த பொருளாதார நிலையை மீண்டும் கட்டி எழுப்புவதில்தான் எல்லா நாடுகளும் கவனத்தைத் திருப்பி இருக்கின்றன. இதற்கான மருந்து கண்டு பிடிக்கும் வரை கைகளைச் சுத்தமாகக் கழுவி, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, பொது இடங்களில் ஒன்று கூடவதைத் தவிர்ப்பதே பாதுகாப்பானதாகும். முகக்கவசம் தேவையா இல்லையா என்ன விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத பொது இடங்களில் முகக்கவசம் அணிவதில் தவறில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. பொருளாதார குறைகளை நிவர்த்தி செய்யச் சிறிது  காலமெடுக்கலாம், வருவதை எதிர்கொள்வோம், விழுந்தாலும் எழுந்து நிற்க முயற்சி செய்வோம்!