xmas1கிறிஸ்மஸ் (Christmas) அல்லது கிறிஸ்த்து பிறப்புப் பெருவிழா (நத்தார் ) ஆண்டு தோறும் இயேசு கிறிஸ்த்துவின் பிறப்பைக் குறிக்க கொண்டாடப்படும் விழாவாகும். இவ்விழாவானது கிறித்தவத் திருவழிபாட்டு ஆண்டில்திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறிஸ்த்து பிறப்புக் காலத்தின் தொடக்க நாளாகும்.

இவ்விழாவின் கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறிஸ்மஸ் தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறிஸ்மஸ் மரத்தை அழகூட்டல், கிறிஸ்த்துமசு மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக அடங்கும். கிறித்தவக் கருத்துகளோடு, கிறித்தவத்துக்கு முந்திய காலப்பகுதியின் குளிர்காலக் கொண்டாட்டங்களின் சில பகுதிகளையும் கிறிஸ்த்துமசு தன்னகத்தே கொண்டுள்ளது.[2]இக்கொண்டாட்டத்தின் மதம் சாராப் பகுதிகளாக குடும்ப உறுப்பினர்கள் ஒன்று கூடல், நல்லெண்ணங்களை வளர்த்தல் என்பன பின்பற்றப்படுகின்றன.

கிறிஸ்த்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும். இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் நாள் கொண்டாடப்படுகிறது எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான சனவரி 7ஆம் நாள் கொண்டாடுகின்றன. கிறிஸ்த்துமசு கொண்டாடப்படும் நாளானது மரபு வழி வருவதேயன்றி இது இயேசு பிறந்த நாளன்று.

கிறிஸ்மஸ் இன்று உலகின் பெரும்பாலான நாடுகளில் கிறித்தவத்தினது பரவல் காரணமாகவும் அக்கொண்டாட்டங்களில் காணப்படும் மேற்குலக நாகரிகங்களின் கவர்ச்சி காரணமாகவும் கொண்டாடப்படுகிறது. அவுஸ்ரேலியா,கனடா, அமெரிக்க, பிரித்தானிய வழமைகளுக்கு மேலதிகமாக அவ்வப்பகுதிகளில் கிறிஸ்த்துமசுக் கொண்டாட்டங்கள் வேறுபடுகின்றன.

கிறிஸ்மஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்" என்ற 2 வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 7க்கும் கிமு 2க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.

அதேபோலவே யூதர்களின் பருவகாலம், நாள் காட்டிகள் மூலம் கணக்கிட்டு, ஒரு யூக அடிப்படையில் தான் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக சில வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முதன் முதலில் 4வது நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக சில வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் வேறு சில பிரிவுகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து, ஜனவரி 6ம் தேதி இயேசு பிறந்ததாகவும் கொண்டாடினர்.

எப்படி இருப்பினும் கிறிஸ்மஸ் பண்டிகை என்பதை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் மிகச் சிறப்பான நாளாக கொண்டாடி மகிழ்கின்றனர். இந்தத் தினத்தை கிறிஸ்துவர்கள் விசேஷமாக கருதுவதால் அன்றைய தினம் பல புதிய பணிகளைத் தொடங்குவதையும் அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கிபி 800ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகை அன்று, சார்லிமேனி என்ற பேரரசன் மன்னராக பதவியேற்றான். அதன்பிறகு கிபி 855ம் ஆண்டு இட்முண்ட் என்ற தியாகி மன்னராக மூடி சூட்டப்பட்டான். கடந்த 1066ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் வில்லியம் 1 மன்னராக முடிசூட்டப்பட்டார். மேலும் 1377ம் ஆண்டு இங்கிலாந்து மன்னன் ரிச்சார்ட் 2 கிறிஸ்மஸ் பண்டிக்கையை மிக விமர்சியாக கொண்டாடினார். கடந்த 1643ம் ஆண்டு இந்தோனேஷியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய தீவுக்கு "கிறிஸ்மஸ் தீவு" என்று பெயரிடப்பட்டது.

இப்படி கிறிஸ்மஸ் பண்டிகை நாட்டு மக்களிடையே பிரபலமடைந்து, பின்னர் உலகமெங்கும் விமரிசையாக கொண்டாடும் வழக்கம் உருவானது. கிறிஸ்மஸ் பண்டிகை அன்று மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள பரிசுப் பொருட்களை பரிமாறி கொள்வதும், போட்டிகளை நடத்துவது என்று பல கோணங்களில் கொண்டாட்டம் விரிவடைந்தது.

கிறிஸ்மஸ் பண்டிகைக்காக முதன்முதலில் கிறிஸ்மஸ் மரம் வைக்கும் வழக்கம், 1510ம் ஆண்டும் ரிகா என்ற இடத்தில் துவங்கியது. கடந்த 1836ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்கு அலபாமா என்ற பகுதியில் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டது. 1840ம் ஆண்டு இங்கிலாந்தில் முதன் முதலாக கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் வழக்கம் துவங்கியது.

கிறிஸ்மஸ் பண்டிகையின் போது கிறிஸ்துவர்கள் குழுக்களாக சேர்ந்து கேரல் சர்வீஸ் என்ற நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த கேரல் நிகழ்ச்சியில் குழந்தை இயேசுவை வாழ்த்தியும், அவரது பிறப்பு, அவர் உலகில் வந்த நோக்கம் உள்ளிட்ட கருத்துகளை கொண்ட பாடல்கள் பாடப்படுவது வழக்கம்.

கடந்த 1847ம் ஆண்டு பிரான்சில் தான் முதல் முதலாக கிறிஸ்மஸ் கேரல் சர்வீஸ் நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த கேரலில் "ஓ ஹோலி நைட்" என்ற பிரபல கிறிஸ்மஸ் பாடல் பாடப்பட்டதாக கூறப்படுகிறது.

கிறிஸ்மஸ் பண்டிகையை ஓட்டி வரலாற்றில் சில ருசிகரமான சம்பவங்கள் நடைபெற்று உள்ளன.

பண்டைய காலத்தில் வாழ்ந்த பாரசீகர்களும், பாபிலோனியர்களும் கிறிஸ்மஸ் பண்டிகையை வருடத்தின் நல்ல நாளாக கொண்டாடி வந்தனர். கிறிஸ்மஸ் பண்டிகை அன்று, பாரசீக நாட்டில் உள்ள எல்லா அடிமைகளுக்கும் ஒருநாள் விடுதலை அளிக்கப்படும்.

மேலும் சிலர் தங்கள் அடிமைகளை பரிசாக பரிமாறி கொண்டனர். சில எஜமான்கள் கிறிஸ்மஸ் பண்டிகை அன்று மட்டும், அடிமைகளுக்கு வீ்ட்டில் முழு சுதந்திரம் கொடுத்ததாகவும் வரலாற்றில் குறிப்புகள் உள்ளது. பண்டைய காலத்தில் வாழ்ந்த ஐரோப்பியர்களுக்கு பேய், பிசாசு, அசுத்த ஆவிகள் உள்ளிட்டவைகளுக்கு அதிகமாக பயந்தனர். வருடத்தில் நீண்ட இரவு கொண்ட நாட்களில் அவை மக்களுக்கு தீமை விளைவிக்கும் என்று நம்பினர். இதனால் நீண்ட இரவுகளுக்கு பிறகு சூரியன் உதிக்க வேண்டும் என்பதற்காக கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர்.

மொத்தத்தில் நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் இந்த நன்னாளை உலக மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இயேசு பெருமானை இறைஞ்சி, துதி பாடி மகிழ்கின்றனர்.

கிறிஸ்துமஸ் குறித்த பல சுவையான தகவல்கள்:

வழிகாட்டிய நட்சத்திரம்

இயேசு கிறிஸ்து அவதரித்ததும் உலகிற்கு அதை உணர்த்த ஒரு பிரகாசமான நட்சத்திரம் தோன்றியது. அப்படியோரு நட்சத்திரம் உண்மையிலேயே தோன்றியதா இல்லை கற்பனை கதையா என்று மாறுபட்ட கருத்துகள் நிலவி வந்தன. அதற்கு ஆராய்ச்சியாளர்கள் முற்று புள்ளி வைத்துள்ளனர். இயேசு பிறந்ததும் அதிசியதக்க வகையில் நட்சத்திரம் தோன்றியது உண்மைதான். அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியும் என்று அறிவித்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் தாத்தா

கிறிஸ்துமஸ் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தா எனப்படும் சாண்டா கிளாஸ்தான். குழந்தைகளுக்கு குதூகுலம் தருபவர் இந்த கிறித்துமஸ் தாத்தா. இனிப்புகளை குழந்தைகளுக்கு அள்ளி தந்து அவர்களை உற்சாகப்படுத்துவார். எந்த குழந்தையும் அவரிடம் ஏமாந்ததில்லை. இந்த தாத்தா எப்படி உருவானார் என்பது உங்களுக்கு தெரியுமா.

முதன்முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டவர் செயிண்ட் நிக்கோலஸ். இவர் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில். 4ம் நூற்றாண்டை சேர்ந்த நிக்கோலஸ் பிஷப் பதவியில் இருந்தவர். குழந்தைகளிடம் அதிக பிரியம் கொண்டவர். இப்போது வருவது போல் கிறிஸ்துமஸ்க்கு முதல் நாளன்று பின்னிரவில் கிறிஸ்துமஸ் தாத்தா வருவதில்லை. டிசம்பர் 6ம் தேதி இரவே வந்து கிறிஸ்துமஸ் பரிசுகளை கொடுப்பார். பழங்கள் சாக்லெட்கள், சிறு பொம்மைகள், சிறு பொருட்களை பரிசாக கொடுப்பார்.

16ம் நூற்றாண்டில் சிலுவை போர் நடந்த போது செயின்ட் நிக்கோலஸ் ஐரோப்பாவிலிருந்து வெளியேற்றப்பட்டார். டச்சுக்காரர்கள் மட்டும் செயிண்ட் நிக்கோலஸ் பழக்கங்களை பின்பற்றினர். அமெரிக்காதான் சாண்டா கிளாஸை பிரபலப்படுத்தியது. சாண்டா கிளாஸ் குண்டானவராக, வெள்ளை தாடியுடன், தொந்தி விழுந்த வயிறுடன், பல வண்ண உடையணிந்து வேடிக்கையானவராக சித்தரிக்கப்பட்டார். உண்மையில் ஏழைகள், இல்லாதவர்களுக்கு உதவும் பொருட்டே கிறிஸ்துமஸ் தாத்தா அவதரித்தார்.

கிறிஸ்துமஸ் தாத்தா வாகனம்

விநாயகருக்கு வாகனமாக எலியும், முருகனுக்கு வாகனமாக மயிலும் இருப்பது போல் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கும் வாகனம் உள்ளது. இது பறக்கும் மான். கிறிஸ்துமஸ் தாத்தா பறக்கும் மான் மூலம் பறந்து சென்றதாக கதைகள் இருக்கின்றன. மான் எப்படி பறக்கும், என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. கடும் குளிர் நிறைந்த .துருவ பிரதேசங்களில் பறக்கும் மான் வகைகள் உள்ளன. விண்ணில் அவை பறந்து செல்வதை பார்க்கும் போது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். இந்த அபூர்வ மான்களை கிறிஸ்துமஸ் தாத்தாவின் வாகனமாக கருதி வழிபடுகின்றனர்.

முதல் வாழ்த்து அட்டை

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஹென்றி என்ற தொழில் அதிபர் இந்த அட்டையை உருவாக்கிய பெருமை பெறுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வசித்த இவர், கிறிஸ்துமஸ் சமயத்தில் உறவினர்களுக்கு கடிதம் எழுத இயலாததால் அட்டையில் படத்தை அச்சிட்டு வாழ்த்தாக அனுப்பினர். ஆயிரம் பேருக்கு அவர் வாழ்த்து அட்டை அனுப்பினார்.

அதன்பிறகு கிறிஸ்துமஸ் சமயத்தில் வாழ்த்து அட்டைகள் அனுப்பும் பழக்கம் ஏற்பட்டது. ஹென்றி அனுப்பிய ஆயிரம் வாழ்த்து அட்டைகளை இப்போதும் ஒருவர் லண்டனில் தன் வசம் வைத்துள்ளார்.

விசேஷ கிருஸ்துமஸ்

இயேசு பிரான் பவுர்ணமி தினத்தன்று அவதரித்தார். எனவே எந்த ஆண்டுகளில் எல்லாம் பவுர்ணமி வருகிறதோ அந்த கிருஸ்துமசை விஷேச கிருஸ்துமஸ் ஆக கொண்டாடுகின்றனர்.

இயேசுநாதர் பிறந்த பிறகு இதுவரை 72 தடவை கிருஸ்துமஸ் தினத்தன்று பவுர்ணமி வந்துள்ளது. இந்த நூற்றாண்டில் 1901, 1920, 1931, 1970, 1996 ஆகிய ஆண்டுகளில் 5 தடவை விஷேச கிருஸ்துமஸ் வந்துள்ளது. இனி கிறிஸ்துமஸ் தினமும், பவுர்ணமியும் ஒரே நாளில் வரும் அபூர்வம் 2015-ம் ஆண்டில் தான் வரும்.

கிறிஸ்துமஸ் மரம்

கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்படுவதற்கு ஒரு சுவையான காரணமும் கதையும் உண்டு. 17ம் நூற்றாண்டின் குளிர்கால இரவில் மார்டின் லூதர் காட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது சர்ச்சில் கூற வேண்டிய போதனைகளை நினைத்துக் கொண்டே சென்று கொண்டிருந்தார். வானில் இருள் சூழ்ந்து கொண்டது.

அந்த காலத்தில் ஜெர்மன் காடுகளில் கொடிய மிருகங்கள் இருக்கும். இருள் சூழ்ந்ததும் மார்ட்டினுக்கு பயம் பிடித்துக் கொண்டது. மனதிற்குள் இறைவனை வேண்டியவாறே காட்டை கடந்து கொண்டிருந்தார். காட்டிலிருந்து ஒரு மரத்தை பார்க்கும் போது நீல நிறத்திலும், வெள்ளி நிறத்திலும் விளக்குகள் போல நட்சத்திரங்கள் மின்னுவதை பார்த்தார். அப்போது வியப்பில் ஆழ்ந்தார். இயேசு பிரான் இறந்த இடத்திற்கு சாஸ்திரிகளை அழைத்து சென்ற நட்சத்திரம் போல தான் இவையும் என உணர்ந்தார். பின்னர் அந்த சிறிய மரத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வந்தார்.

பின்னர் தன் குடும்பத்தினரை அழைத்து சுற்றி நிற்க வைத்து தனக்கு நேர்ந்த அனுபவங்களை தெரிவித்தார். தான் மிகவும் பயந்ததாக சொன்ன அவர் நட்சத்திரங்களின் ஒளி இறைவன்தான். நான் உன்னை கைவிட மாட்டேன் என நம்பிக்கை அளிக்கும விதமாக அமைந்தது உடல் சிலிர்த்தாக தெரிவித்தார். இறைவன் அருட்பார்வை துன்பப்படுபவர் மீது பட்டு அவர்களை காப்பாற்றும் என கூறினார்.

அன்று முதல்தான் கிறிஸ்துமஸ் மரத்துக்கு மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கும் வழக்கம் தோன்றியது. இன்றும் அது பின்பற்றப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் மரத்தில் ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் விளக்கின் ஒளி மார்ட்டின் லூதர்கிங் கூறியது போல் இறைவன் தம்மை காப்பாற்ற காத்திருக்கிறார் என்பதை உணர்த்தும் நம்பிக்கை ஒளியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது.

பசிலிக்கா ஆலயம்

பசிலிக்கா என்பது கிரேக்க சொல். இதற்கு பெரிய கிறிஸ்துவ ஆலயம் என்று பொருள். கிறிஸ்தவ ஆலயங்களில் பேராலயம் என்ற பெருமைக்குரியதை பசிலிக்கா என்று அழைப்பார்கள்.

இந்தியாவில் 5 பசிலிக்காக்கள் உள்ளன. மும்பை பாந்திராவில் உள்ள மலை மாதா ஆலயம், கோவா போம் ஜேசு ஆலயம், சென்னை மயிலாப்பூர் புனித தோமையர் ஆலயம், வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயம், பெங்களுரு ஆரோக்கியமாதா ஆலயம் ஆகியவை பசிலிக்காக்கள் என்றழைக்கப்படுகின்றன.

இயேசு வரலாறு

இயேசு நாதரின் வாழ்க்கை வரலாறை அவரது சீடர்கள் லூக்காஸ், மத்தேயு, மாற்கு, அருளப்பர் ஆகிய நான்கு பேர் எழுதியுள்ளனர்.

இயேசு சுமந்த சிலுவையின் மரத்துண்டு

இயேசுநாதர் தனது தோளில் சுமந்து சென்று, ஆணியில் அறையப்பட்டு உயிர் தியாகம் செய்த புனித சிலுவை மரத்தின் புனித துண்டு ஒன்று தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆலயத்தில் இன்றும் ஆசி வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த ஆலயத்துக்கு புனித சிலுவை மரத்தின் துண்டு வந்து சேர காரணமாக இருந்தவர் பங்கு தந்தை ஜான் சேதலனோவா அடிகளார்.

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 26, 2020