Amman1aகாவலூரில் உள்ள கரம்பொன் கிராமத்தில்; கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் கண்ணகி அம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி தினமான இன்று 26-04-2021 திங்கட்கிழமை விசேஷ பூஜைகளுடன் வெகு விமரிசையாக அன்னதான நிகழ்வும், சித்திரைக் கஞ்சி நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

நம்மைப் பெற்று, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவு கூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தூய்மையின் பெருமையை மனதிலிருத்தி அவரது ஆன்மா இறைவன் திருவடியில் அமைதி பெற இறைவனைத் தொழும் நாளாகவும் சித்ரா பவுர்ணமி தினம் அமைகின்றது.

சித்ரா பவுர்ணமி என்பது சித்திரை மாதம் பவுர்ணமி திதியில் சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் சித்ரா பவுர்ணமி என அழைக்கப் பெறுகின்றது. மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி (சந்திரன் சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கையில்), சூரியன் உச்ச பலம் பெறும் மேஷ ராசியில் (சித்திரை மாதத்தில்) வரும் பவுர்ணமி தினம் சிறப்புப் பெறுகின்றது.

இத் திதியும், நட்சத்திரமும், மாதமும் அம்மனுக்குரியனவாக இருப்பதனால்; இத் தினம் அம்பாளை பூசிக்க மிகவும் சிறப்புப் பொருந்திய நாளாக அமைகின்றது. அத்துடன் தாயாரை இழந்தவர்களுக்கு பிதிர் தர்பணம் செய்ய மிகவும் உகந்த நாள். பிரம்மஹத்தி தோஷம் பிடித்தவர்கள் தோஷம் நீங்கும் விரதம் கடைபிடிக்கலாம்.

பவுர்ணமி தினம் அன்று அம்பாளை வழிபட்டால் குடும்பத்தில் ஒளி உண்டாகும். துன்பங்களாகிய இருள் நீங்கி நன்மை கிட்டும். பௌர்ணமி அன்று உபவாசம் இருந்து வழிபட்டால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது நம்பிக்கை.

பவுர்ணமி பூஜை பொதுவாக அனைவருக்கும் நன்மை செய்யக்கூடிய பூஜை என்றாலும் பெண்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்கக் கூடியது. திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், திருமணமாகாத பெண்கள் திருமணப் பேறு கிட்டவும் இந்த பூஜை செய்து அம்பிகையின் அருள் பெறலாம்.

சித்திரை மாத பவுர்ணமியன்று அம்பாளுக்கு பூப்போட்ட வஸ்திரம் சார்த்தி, பத்மராகம் என்ற நவரத்தினக்கல் பதித்த ஆபரணம் அணிவிக்க வேண்டும். மஞ்சள் கலந்த சாதம், பானகம், ஏலம், கிராம்பு, பச்சைக் கற்பூரம் சேர்ந்த தாம்பூலம் நைவேத்தியம் செய்ய வேண்டும்.

அன்னதானம் செய்யுங்கள்

சித்ரா பவுர்ணமியில் அன்னதானம் செய்து சிவனையும் அம்மனையும் பிரார்த்தனை செய்து கொண்டால் கேட்டது கிடைக்கும். கேட்க மறந்ததும் கிடைக்கும். காரணம் சிவன் கருணை வள்ளல், தியாகராஜன், தன்னிடம் பிரார்த்தனை செய்து கொண்டால் கையேந்தி தன் அடியார்களை அவன் வெறுங்கையுடன் அனுப்பியது இல்லை. ஆகவே நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்தால் மனதில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் வறுமை அகலும். நோய்கள் நீங்கும். கடன் தொல்லைகள் தீரும். திருமணம் நிறைவேறும். மகப்பேறும் கிடைக்கும். மனக்குழப்பங்கள் ஒழியும். புண்ணியங்கள் சேரும், வீடு பேற்றை அடையவும் முடியும்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: July 18, 2021