பிரபல இந்திய நடனவித்தகர்களின் நட்டுவாங்கத்தில் திவியா, நர்மிதா ஜெகமோகன் சகோதரிகளின் நடன அரங்கேற்றம் ஆடலுடன் பாடலைக் கேட்பதிலே ஒரு சுகம்.
4.08.2007 அன்று ஸ்காபுரோவில் உள்ள சீன கலாச்சார மண்டபத்தில் திருமதி நிர்மலா சுரேஷின் சலங்கோதய நாட்டியக் கலாமன்றத்தின் மாணவியரும் கரம்பனைச் சேர்ந்த திரு, திருமதி ஜெகமோகன் சாந்தினி தம்பதியினரின் புதல்வியருமான செல்விகள் திவியா, நர்மிதா சகோதரிகளின் அரங்கேற்றம் இடம்பெற்றது.

பிரபல இந்திய நடனவித்தகர்களின் நட்டுவாங்கத்தில் திவியா, நர்மிதா ஜெகமோகன் சகோதரிகளின் நடன அரங்கேற்றம் ஆடலுடன் பாடலைக் கேட்பதிலே ஒரு சுகம். பரதநாட்டிய அரங்கேற்றம் கோடை காலத்தில் மிக அதிக அளவில் பல இடங்களிலும் இடம்பெறுவது வழக்கம். பரதம் பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வரும் தமிழரின் பண்பாடுசார்ந்த நடனமாகும். இந்த அடிப்படையில் கடந்த 4.08.2007 ஞாயிறு மாலை ஸ்காபுரோவில் உள்ள சீன கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது திருமதி நிர்மலா சுரேஷின் சலங்கோதய நாட்டியக் கலாமன்றத்தின் மாணவியரும் கரம்பனைச் சேர்ந்த திரு, திருமதி ஜெகமோகன் சாந்தினி தம்பதியினரின் புதல்வியருமான செல்விகள் திவியா, நர்மிதா சகோதரிகளின் அரங்கேற்றம் இடம்பெற்றது.

மண்டபம் நிறைந்த பார்வையாளர்களின் மத்தியில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது நடன நிகழ்வு. இந்திய மண்ணில் இருந்து வந்த நடன ஆசிரியர் திருவாளர் ஸ்ரீகாந் ஸ்ரீமதி ஸ்ரீகாந் இருவரும் நட்டுவாங்கம் செய்ததோடு மட்டுமன்றி மிருதங்கம், பாடல்களுக்கான கலைஞர்களும் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். நடன ஆசிரியை நிர்மலா சுரேஷின் அழைப்பில் வந்திருந்த நடன ஆசிரியரத் தம்பதியினர் இம்மாணவியருக்கு மேலதிக பயிற்சியைக்கொடுத்து அரங்கேற்றம் காணவைத்துள்ளனர். தனது மாணவர்கள் சிறந்த முறையில் நடனப்பயிற்சி பெறவேண்டும் என்னும் நோக்கோடு இந்தியாவிலிருந்து பிரபல நடன ஆசிரியத் தம்பதியினரை வரவழைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல பரத நடன அரங்கங்களில் காணமுடியாத நட்டுவாங்கம் இங்கு இருவரால் மேற்கொள்ளப் பட்டதைக் காணமுடிந்தது. விசேடமாக பாடலுக்காக இந்தியாவில் இருந்து வருகைதந்திருந்த பாடகர் சங்கீத பூஷணம் அருண் கோபிநாத், அவரோடு மிருதங்க இசைக்கு வந்திருந்தவர் மிருதங்க வித்துவான் அமிர்தநாத் இவர்களை விட உள்ளூர்க் கலைஞர்களான வயலின் வித்துவான் அளவையூர் கேசவமூர்த்தி, வேணுகான இசைக் கலைஞர் செல்வி அஜந்தி மதனாகரன், வீணை வித்துவாட்டி திருமதி ஜெயந்தி இரத்தினேஸ்வரன் ஆகியோரோடு தில்லானாவுக்காக தவில் வித்துவான் அ.மனோகரன், நாதஸ்வர வித்துவான் பாலகிருஷ்ணன் சேகர் ஆகியோரும் இசைக் கலைஞர்களாக மேடையில் தோன்றினர். நடனம் குறித்தநேரத்தில் ஆரம்பித்தமை சிறப்பாகும்.

வரசித்தி விநாயகர் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ விஜயகுமாரக்குருக்களும் ஆகம கலாநிதி சோமாஸ்கந்தக் குருக்களும் சதங்கைப் பூஜையைச் சிறப்பாகச் செய்து வைத்தனர். அதன் பின்னர் 6:15க்கு நடன நிகழ்வுகள் தொடங்கின. ஆரம்பத்தில் திவ்வியா தோன்றி வரவேற்புரையையும் தொடக்க உரையையும் நிகழ்த்தி அறிவிப்பாளர்களான திரு. பொன்னையா விவேகானந்தன், செல்வி. வைதேகி வசந்தகுமார் இருவரையும் அறிமுகம் செய்துவைத்து ஒலிவாங்கியைக் கையளித்ததைத் தொடர்ந்து பொ.விவேகானந்தனின் அழகிய தமிழிலும் செல்வி வைதேகியின் இனிய ஆங்கிலத்திலும் அறிவுப்புக்களோடு நடன அரங்கேற்ற நிகழ்வுகள் இடம் பெறத்தொடங்கின.
நாட்டையில் அமைந்து புஸ்பாஞ்சலியோடு ஆரம்பமான நடனம் தொடர்ந்து வசந்தா ராகத்திலமைந்த பாடலுக்கான ஜதீஸ்வரம் இடம்பெற்றது. தொடர்ந்து சண்முகப்பிரியாவில் அமைந்த விநாயகர்வணக்கம், தொடர்ந்து கீர்த்தனம் மீனாட்சியின் உருவகமாக அமைந்தது. இதில் நவரசங்களும் காதல், வீரம், கருணை, அற்புதம், நகைச்சுவை, பயம், கோபம், வெறுப்பு, சாந்தம் அனைத்தையும் திவ்வியா தனியாகச் செய்து காட்டி சபையினரின் வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்றது வர்ணம். அடுத்ததாக கேரளப்பிரதேசத்துக்கான சிறப்பு நடனமான மோகினியாட்டம் இடம்பெற்றது. மோகினியாட்டத்தில் ஜதீஸ்வரமாக அமைக்கப்பட்ட இந்த நடனம் செஞ்சுரதி ராகத்தில் இசைக்கப்பட நடனம் இடம்பெற்றது. தொடர்ந்து இராகமாளிகாவில் அமைந்த பதம் இடம்பெற்றது. தொடர்ந்து தசாவாதாரம் தொடர்ந்தது. தசாவதாரம் விஷ்ணுவின் பத்து அவதாரச் சிறப்புக்களையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்தது அதுவும் நவரசத்தை ஒட்டியதாகவே அமைந்தது எனலாம். கண்ணனின் அவதாரத் தன்மைகளை முகபாவனையாலும் முத்திரைகளாலும் விளக்கமளித்து ஆடினார் திவியா. குயிலே என்ற பாடலுக்கான பத நடனம் பிம்பிளாஸ் இராகத்திலமைந்ததாக அமைந்தது. இறுதி நிகழ்வாக தில்லானா இடம்பெற்றது. யுவல்பந்தியாக தில்லானா தவில், நாதஸ்வர இசையோடு இடம்பெற்றது. மங்களத்தோடு நிறைவு பெற்றது நடன அரங்கேற்றம்.

இதற்கிடையயே பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய கரம்பனைச் சேர்ந்தவரும் கனடாவில் பிரபலமான வைத்தியக் கலாநிதியுமான சிவாஜி பரத நாட்டியம் தமிழரின் பாரம்பரியக் கலை. அதனைக் கற்பித்து அரங்கேற்றம் காணவைத்த ஆசிரியை ஸ்ரீமதி நிர்மலா சுரேஷ் பாராட்டுகின்றேன் என்ற அவர் புலம்பெயர்ந்து வாழும் எம்மவர் தம்மோடு கொண்டுவந்த கலைவடிவங்களை மறந்துவிடாது எமது எதிர்காலச் சந்ததியினருக்கு கற்றுத்தருவது நாம் எமது பாரம்பரியக் கலை கண்பாட்டு வடிவங்களை மறந்துவிடாது பாதுகாத்துவருவதற்கு காரணமாகும். பரதநாட்டியம், கர்நதாட இசை மிருதங்கம் போன்றன எமது பண்பாட்டின் கருவவூலங்கள், அவற்றைப் பிள்ளைகள் கற்றுக்கொள்ள வைக்கும் பெற்றோர் மிகப் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியிலேயே செய்து வருகின்றனர். பெற்றோரின் ஊக்கமும் விடாமுயற்சியுமே இந்தக் கலைகள் வளரக் காரணமாகின்றன. நடனச் செல்விகள் நர்மிதா, திவ்வியா இருவரும் தொடர்ந்தும் இக்கலையில் ஈடுபாடுகொண்டு வளர்க்கவேண்டும் என்றும் வேண்டிக்கொண்டதோடு பெற்றோரின் அளப்பரிய பங்களிப்பையும் பாராட்டினார்.

நிகழ்வில் கலந்துகொண்ட முன்னணிக்கலைஞர்களை எல்லாம் அவர் பாரராட்டினார். அவரது பேச்சு தமிழிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றது. ஈற்றில் பின்னணிக் கலைஞர்களுக்கு நடனச் செல்விகள் பரிசில்களை வழங்கிக் கௌரவித்ததோடு, ஆசிரியையும் கௌரவிக்கப்பட்டார். மாணவியருக்கு தனது நடனப்பள்ளியின் சான்றிதழை வழங்கிக் கௌரவித்தார் ஆசிரியை நிர்மலா சுரேஷ்

நன்றி: த.சிவபாலு எம்.ஏ.