செப்டம்பர் மாதம் 1ம் திகதியன்று Markham Theatre performing Arts  விழா மண்டபத்தில் இடம்பெற்ற சரண்யா, தீபிகா வரதராஜன் சகோதரிகளின் அரங்கேற்றத்தினைக் காணக்கிடைத்தது எமக்கு பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. தெளிந்த நீரோடையில் குளித்தது போன்று மனதிற்குள் ஓர் ஆனந்தம். இந்த அனுபவம் கனடாவில் கிடைப்பது எமக்கு அரிதே.
இந்நிகழ்வு திருமதி. ரஜனி குலேந்திரனின் இண்டாவது அரங்கேற்றம். தாளத்தில் ஒரு பிடிப்பு, கம்பீரம், ஒரு பிசகல் வேண்டுமே, கிடையாது. பட்டு கத்தரித்தாற் போல அனைத்து தீர்மானங்களும், தீர்மானங்களாகவே இருந்தன. வழுவல், தழுவல் இல்லாமல் கடுமையான உழைப்பின் பலன் அன்று நாம் கண்டது.

இந்நிகழ்வுபற்றிய கட்டுரையையும் நிழற்படங்களையும் இங்கே காணலாம்.

செப்டம்பர் மாதம் 1ம் திகதியன்று Markham Theatre performing Arts  விழா மண்டபத்தில் இடம்பெற்ற சரண்யா, தீபிகா வரதராஜன் சகோதரிகளின் அரங்கேற்றத்தினைக் காணக்கிடைத்தது எமக்கு பெரு மகிழ்ச்சியைக் கொடுத்தது. தெளிந்த நீரோடையில் குளித்தது போன்று மனதிற்குள் ஓர் ஆனந்தம். இந்த அனுபவம் கனடாவில் கிடைப்பது எமக்கு அரிதே.
இந்நிகழ்வு திருமதி. ரஜனி குலேந்திரனின் இண்டாவது அரங்கேற்றம். தாளத்தில் ஒரு பிடிப்பு, கம்பீரம், ஒரு பிசகல் வேண்டுமே, கிடையாது. பட்டு கத்தரித்தாற் போல அனைத்து தீர்மானங்களும், தீர்மானங்களாகவே இருந்தன. வழுவல், தழுவல் இல்லாமல் கடுமையான உழைப்பின் பலன் அன்று நாம் கண்டது.

வழக்கமான புஷ்பாஞ்சலியுடன் ஆரம்பமானது இந் நிகழ்ச்சி. இரு சகோதரிகளும் சிரித்த முகத்துடன் தேவையான அளவு அங்க அசைவுகளுடன் அரங்கினுள் இருந்தவர்களை மெல்ல வசீகரித்தார்கள். பின் அலாரிப்பு திஸ்ர தாளத்தில். பார்வையாளர்கள் கட்டுண்டார்கள். தொடர்ந்து ஜதீஸ்வரம், வப்தம் இரண்டுமே கடினமான மிஸ்ர தாளத்தில். வெகு வித்தியாசமாகவும், மனதை கொள்ளை கொள்ளும்படியாகவும் இருந்தன.

நிகழ்வின் உச்சமாக வர்ணம். ராகம், பந்துவராளி. பத்ம பூஷன் மதுரை N. கிருஷ்ணன் அவர்கள் 1994ம் ஆண்டில் திருமதி. சித்ரா விஸ்வேஸ்வரனுக்காக எழுதியது. அதை முதன் முதலில் அரங்கேற்றியபோது நாமும் உடனிருந்தோம். வர்ணம் திருமலையில் எழுந்தருளும் ஸ்ரீநிவாசனைப் பற்றியது. சுற்று நீளமான வர்ணம். அதையும் இரு சகோதரிகளும் அனாயசமாகத் தங்கள் தீர்மானமான அபிநயத்தாலும், அங்க சுத்தமான அடவுகளாலும் ஒரு பிடி பிடித்தார்கள். தசாவதாரங்களை வேறுபடுத்தி தங்கள் திறமைகளை நிரூபித்தார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இவர்கள் முழுப்பானையையும் பதம் பார்த்தார்கள். வாழ்க! வளர்க!

இந் நிகழ்ச்சியில் குறிப்பிடவேண்டிய விடயம் பதம். என்ன தவம் செய்தனை யசோதா என்கிற காபி ராக பதம். செல்வி. தீபிகா வரதராஜன் முகத்தில் என்ன அபிநயம். அதிலும் கண்ணனை யசோதை உருவில் காட்டியபோது கண்ணன் படும் வேதனைகளையும், இந்திரனும், பிரம்மனும் மனதில் பொறாமை கொள்ளும் தன்மையும் எம் கண்முன் என்றும் நிழலாட போதுமானவை. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் கனடாவில் நல்லதொரு நடனமணியை.

பக்கவாத்தியக் கலைஞர்களில் மோகன் சிறப்பாகத் தம் கடமையைச் செய்தார். முழு நிகழ்ச்சியையும் ஒரு வரி கூட மறக்காமல் தன் சங்கதிகளால் நடனத்திற்கு உயிரூட்டினார். மிருதங்கம் திரு.கௌரிசங்கர் அவர்கள். பதறாது சிதறாது அத்தனை தெளிவு. அட்சர சுத்தம், அனுசரணை. வயலின் வாசித்த திரு.ஜெயதேவன் நாயர் குழல் ஊதி இதயங்களைக் கொள்ளை கொண்டவர். செல்வி. கமலா சதாசிவம் கஞ்சிரா, மோர்சிங் வாசித்தவர் செல்வன். கஜஜெயன். அனைவருமே தங்கள் திறமைகளை நிகழ்வின் பக்க பலமாக உதவினார்கள்.

தமிழில் வர்ணனை செய்த CTBC  திரு இளையபாரதி அவர்களின் குரல் ஒரு கந்தருவன் பேசியது போல. எங்கோ இருக்க வேண்டியவர். மொத்தத்தில் நிகழ்ச்சியின் மணித்துளிகளை மறந்துவிட்டால், இது சென்னை மியூசிக் அகடமியில் பரிமாறப்பட்ட அறுசுவை நடராஜனின் விருந்து. ஒருநாளும் மறவோம். வாழ்க!

விமர்சனம் – சுப்புடுதாசன்

வகைப்படுத்தப்பட்ட பகுதி: நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 3, 2014