உலகம் முழுவதுமே பனித்திவலை நீங்காத பால்நிற மல்லிகைப் பூக்களால் கட்டிய பூ மண்டபம் போல் புனிதமானதொரு குளிர் பரவியிருந்தது. மலரின் மென்மையிலே கலந்து இழையோடும் மணம் போல அந்த குளிரோடு கலந்து வீசும் இதமான மென்காற்று. புலர்ந்தும் புலராமல் இருக்கின்ற பேரரும்பு போல விடிந்தும் விடியாத பேதைப் பருவத்து இளங்காலை நேரம். அந்தப் புலராத காலை நேரத்திலும் கன்னக் கனிகள் கனிய முறுவல் பூத்தவாறே கல்யாணி வானத்தின் வர்ண ஜால்களை இரசித்துக் கொண்டிருந்தாள்.

அவளுக்கு இயற்கையை இரசிப்பதில் சில நாட்களாக ஒரு ஆர்வம். அவள் கரங்களில் ஒரு பேனா, சிறிய பேப்பர் இவை சகிதம் தினமும் இயற்கையை இரசிப்பாள். தன் சிந்தையில் உதித்த சில வரிகளுக்கு கவிதை வடிவம் கொடுத்து விடுவாள். இன்றும் அப்படித்தான், அவள் கவிதை எழுதும் நோக்குடன்தான் வந்தாள்.  ஆனால், கவிதை இயற்கையைப் பற்றியல்ல. தன் இதயத்தை கொள்ளை கொண்டவனுக்கு பிறந்தநாள் காணிக்கைக்காக ஒரு கவிதை. மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் அவளுக்கு அதிகாலையில் தான் கவிதை ஊற்றெடுக்கும். ''இன்று எப்படியாவது ஒரு கவிதை எழுதிவிட வேண்டும் அதுவும் அவரே வியக்கும் வண்ணம்" என்று எண்ணியவளாய் பேப்பரில் பேனையை விளையாட விட்டாள்.

என் உள்ளக் குளத்தினிலே
காதல் கல்லெறிந்து
கலக்கியவன் நீதான்!

 உன் வெல்லக் குரலாலே
 என் மனதைக் கொள்ளை
 அடித்தவனும் நீதான்!

  உடல் விட்டு உயிர் செல்லத்
 துடிக்கின்ற போதும் என் இதழோரம்
 சொல்கின்ற ஒரு வார்த்தை நீதான்!

  கள்ளமில்லா மனத்தோனே
  வெள்ளை மன மன்மதனே
  பல்லாண்டு நீ வாழ்க்!
  பாவை யான் வாழ்த்துகிறேன்……
 
பாய்ந்து வந்த கவிவெள்ளத்தை கடந்த காலநினைவெனும் பேரலை அடித்துச் சென்றது போல் கவிதையை மறந்து கடந்து போன அந்த நிகழ்வுகளால் அலைக்கழிந்தாள் கல்யாணி. பழைய நினைவுகள் பசுமையாய் அவள் இதயத்தில் படமாய் விரிந்தது.

அப்போது அவளுக்கு 20 வயதிருக்கும் இசைக் கல்லூரியில் இசை பயின்று கொண்டிருந்தாள். இசை என்றால் சிறுவயதிலிருந்தே அவளுக்கு உயிர். யாராவது பாடத் தொடங்கி விட்டால் வாயைப் பிளந்து வண்ணம் அவர்கள் முன்னால் இருந்து விடுவாள் அப்படி ஒரு வெறியை இசைமீது கொண்டிருந்தாள் அவள். அவள் வளர வளர அந்த வெறியும் வளர்ந்து கொண்டேயிருந்தது. இதையுணர்ந்த அவள் பெற்றோர் அவளை சிறந்த இசைக் கல்லூரியில் சேர்ந்து விட்டார்கள்.  அவளும் இசையுடன் இரண்டறக் கலந்தவளாய் இனிதே இசையைப் பயின்று வந்தாள். தேனும் தெவிட்டலாம். ஆனால் அவள் தேனினுமினிய குரலை எத்தனை தினங்களானாலும் கேட்டுக் கொண்டேயிருக்கலாம். அப்படியொரு குரல். அது அவளுக்கு இவள் தத்தெடுத்திருந்தாள் என்றே கூறலாம். இசையிற்கே அரசியாக இலங்கினாள் அவள். இசைக்கு இசையாதார் இவ்வுலகில் யாh? அவள் இசையில் யாவரும் தம்மை மறந்து இசை வெள்ளத்தில் திளைத்தனர்.

இசைக்கு அரசியாக விளங்கிய அவள் சில நாட்களில் இசைக்கு ஒரு அரசனும் உள்ளான் என்பதை நேரில் கண்டாள். ''ஆகா எவ்வளவு இனிய குரல், இந்த மதுரக் குரலோன் யார்?" இசையினால் ஈர்க்கப்பட்டாள் கல்யாணி. இசை வந்த திசை நோக்கி விழி அசைத்துப் பார்த்தாள். சந்திர விம்பமோ எனத் தோன்றும் ஒளி முகத்துடன் பாலஷண்முகன் போன்ற பளிங்குச் சிலையழகாய் ஒருவன். ''முன் பின் தெரியாதவன். எப்படி அணுகுவது? கதைப்பது?" குழப்பத்துடன் சென்று விட்டாள். 'அந்த இசை தேவகானமேதான்" என்று எண்ணி எண்ணி வெதும்பினாள். 'ஒரு இசைக் கலைஞனை அணுகிக் கதைக்க எண்ண இந்தப் பெண்மை என்ற பெருநாணம் தடுத்துவிட்டதே" என்று மனதில் புழுங்கினாள். அவனது உருவம் அவள் இதயத்தில்  அவளுக்கு இரவு பகல் முழுவதும் அந்த இசையாளனின் நினைவே. அப்படியே சில நாட்கள் கழிந்தன. ஒரு நாள், என்ன அதிசயம்! அந்த மதுரக் குரலோன் இவளது இசைக்கல்லூரியில் நின்றிருந்தான். அதுவும் அவளது வகுப்பறையில் ''ஆகா என்ன அதிசயம்" மனதினில் வியந்தாள் கல்யாணி. எப்படியாவது அவனுடன் கதைக்க வேண்டுமென்று துடித்தாள் ஆனால் மீண்டும் பெண்மை குறுக்கே நின்றது. ஆனாலும் அவள் அந்த நாளுக்காகக் காத்திருந்தாள். அவனும் அந்த வகுப்பிற்கு வந்து ஒரு மாதமாகி விட்ட போதிலும் அந்த வாய்ப்பு அவளுக்குக் கிட்டவில்லை.

அன்றொரு நல்லநாள், அந்தக் கல்லூரியில் இசைவிழா ஒன்று நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் இருவருக்கும் ஒரே மேடையில் ஒரே பாட்டை இணைந்து பாடும் சந்தர்ப்பமேற்பட்டது. பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போலிருந்தது அவளுக்கு. ஒரு மாதிரியாக அவனைப் பற்றிய விபரங்களை அவனும் அறிந்து கொண்டனர். அவனின் பெயர் மதன், இசைப்பிரியன் இரண்டு வயதிலிருந்தே இசையோடு இணைந்து விட்டவன். இடமாற்றலாகி இக்கல்லூரிக்கு வந்துள்ளான். இவ்வளவும் அறிந்ததே அவளுக்கு போதும். அவள் நேசித்தாள் அவனைவிட அவன் இசையத்தான். அவளுடைய இசை கேட்ட ஆயிரம் பேர் தவம் கிடக்க அவள் அவனுடைய இசைதான் தேனென அதைக் கேட்கத் துடித்தாள். இப்படியே காலதேவதையும் நாட்களைப் புரட்டி மாதங்களை உருட்டி ஆண்டுகளை விரட்டி நின்றது. அவர்களும் பல இடங்களில் இருவரும் இணைந்து பல இசைக்கச்சேரிகளை வழங்கினார்கள். ''இசையின் அரசனும் அரசியும் இணைந்து வந்தால் நிகழ்ச்சியைப் பற்றி பேசவும் வேண்டுமா?" என்று பேசிக்கொண்டனர் ஊர்மக்கள். அந்தளவுக்கு ஊரே அவர்கள் இசையை இரசித்துக் கொண்டிருந்தது. நாளடைவில் இருவரும் காதல் வசப்பட்ட கதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா? அவர்கள் காதலும் தடையற்று தழைத்தோங்கி வளர்ந்து வந்தது. இன்று அவர்கள் காதலுக்கு ஆறு வயதாகிவிட்டது. அவளும் ஆறாவது தடவையாக அவனுக்கு பிறந்த நாள் கவிதை எழுதி அனுப்பியிருக்கிறாள். இன்றும் அப்படியே.

 வெடவெடத்த குளிரும், ''கல்யாணி குளிருக்கு இருந்து என்னம்மா செய்யிறா? உள்ளுக்க எழும்பி வாம்மா." என்ற தாயின் கனிந்த குரலையும் கேட்டபின் தான் கல்யாணி இவ்வுலகுக்கு வந்தாள். ''ஐயையோ இவ்வளவு நேரமும் கவிதையை எழுதி முடிக்காம நேரத்தை வேஸ்ட் பண்ணிற்றன்"  என்று எண்ணியவளாய் வீட்டுக்குள் நுழைந்தாள். ''நாளைக்குப் பிறந்தநாள் இண்டைக்கு எப்பிடியாவது எழுதி முடிக்கோணும்" என்று எண்ணியவளாய் இருந்த கல்யாணியை தொலைபேசி அழைத்தது. எடுத்தாள். ''ஹலோ, கல்யாணி எப்படி, கனநாளா ஒரு இடமும் போகேல்லை அதுதான் இண்டைக்கு ஒரு புறோகிராம் போட்டிருக்கிறன். அதாவது பாக் ஒன்றுக்குப் போகப் போறன் 4:30க்கு வந்து பிக்கப் பண்ணுறன் றெடியா நில்லுங்க என்ன". அவளுக்கு ஏக்கம் அத்துடன் போன் கட்டாகி விட்டது. ''இங்க பாரன் நான் ஓமெண்டுறனோ எண்டு கூடக் கேட்காம வச்சிற்றார். ஒரு கொஞ்ச நேரம் கூடக் கதைக்க ஏலாதா அவருக்கு" என்று  செல்லமாக கடிந்து கொண்டாள். அந்த 4:30 எப்ப வரும் என்றிருந்தது அவளுக்கு ஆனால் கடிகாரம் நகரமறுப்பதாக உணர்ந்தாள். அப்போது அவள் நினைவில் கண்ணதாசன் வந்து நின்றார். ஆகா அவரே தனது செப்பு மொழியில் சொல்லியிருக்கிறாரே ''கடிகாரம் எப்போது மெதுவாகப் போகிறது? காதலிக்காக அல்லது காதலனுக்காகக் காத்திருக்கும் போது! எவ்வளவு பெரிய உண்மை என மனதில் எண்ணிக் கொண்டாள். ஒருவாறு எப்படியோ சொன்ன நேரம் வந்து விட்டது. றெடியாகி அவனுக்காகக் காத்திருந்தாள் கல்யாணி.

 மதன் மன்மதனாய் வந்திறங்கினான் காரில். தாவியோடி காருக்குள் ஏறியமர்ந்தாள் கல்யாணி. ''பாருமன் சின்னப்பிள்ளை மாதிரி எங்கையாலும் உலாத்தெண்டால் துள்ளிக் குதிச்சுக் கொண்டு வந்திருவா. சரிசரி புளுகில சீற் பெல்ற்றை போட மறந்திராதையும்" என்று செல்லமாகக் கடிந்து கொண்டான் மதன். கைகள் றேடியோவை ஓன் பண்ண ''நிலாக் காயும் நேரம் சரணம் உலாப் போக நீயும் வரணும்……." பாடல் வரிகள் தவழ்ந்து வந்தது. அவன் மனமோ ''இந்தக் கல்யாணிக்கு கணவனாய் அமைய நான் என்ன புண்ணியம் செய்தனோ, இவ்வளவு அழகாய் சிலை மாதிரி இருக்கிறாளே. எவ்வளவு பெரிய பாடகியாயிருந்தும் பெருமையில்லாம குழந்தை மாதிரி இருக்கிறாளே இவள நான் ஒரு குறையுமில்லாம வச்சு காப்பாற்றோணும். என்னில எவ்வளவு அன்பு வச்சிருக்கிறாள். எவ்வளவு பெரிய பணக்காரங்களெல்லாம் அவளுக்காய் தவமிருக்க அவள் எனக்காக என் அன்பொன்றிற்தாக காத்திருக்கிறாளே" என்று பலவாறு எண்ணியவனாய் காரை ஓட்டிக் கொண்டிருந்தான் மதன். கல்யாணிக்கு கோபம் கோபமாக வந்தது ''என்ன இவர் என்னோட கதைக்க விருப்பமில்லாத மாதிரி 'உம்" எண்டு முகத்தை வச்சுக் கொண்டு வாறார்." எவ்வளவு நேரம்தான் பொறுக்கிறது. கடைசியாக வாய் திறந்து கேட்டு விட்டாள். ''என்னக் கூட்டிக் கொண்டு போக விருப்பமில்லாட்டி விடுறது, அதுகுமில்ல கூட்டிக் கொண்டு சந்திற்று மௌனவிரதம் வேற, என்னதான் கோபமிருந்தாலும் இப்படிச் செய்யானதங்க"" என்று கூறி விட்டு ஓடிக்கொண்டிருப்பது போல் தோற்றமளித்த வீதியை வெறித்துக் கொண்டிருந்தாள். ''அட நான் அவளைப்பற்றி நினைச்ச உடன இருக்கிற இடத்தையே மறக்கிறன்" தன்னைத் தானே கடிந்து கொண்டான். ''ஐ ஆம் சொறி கணி, ஐ ஆம் றியலி சொறி". ''ஓ வெள்ளைக்காரன் 'சொறி" எண்டு ஒரு சொல்லை சொல்லி விட்டான். உடன எங்கட சனம் செய்யிறதையும் செய்திற்று 'சொறி" சொல்லிருவனிம். அதுக்குள்ள அவருக்கு 'கணி" வேற. ''கல்யாணி சரி சொறி சொல்லிற்றன். அதுக்குப் பிறகும் கோவிக்கிறியே. பார் உன்னுடைய பெயரைக் முழுசாக் கூப்பிட மூண்டு நிமிஷம தேவை. அதுதான் முதலெழுத்தையும் கடைசியெழுத்தையும் சேர்த்துக் கூப்பிட்டன். நீர் அதுக்கு ஆங்கிலத்தில அர்த்த மெடுத்தா அதுக்கு நான் என்ன செய்யிறது?" அப்போதான் அவள் அந்த அர்த்தத்தை உணர்ந்தாள். முகம் நாணிச் சிவக்கப் புன்னகைத்தாள். அவள் முகத்தில் மலர்ந்த சிரிப்பைப் பார்த்த பின்தான் மதனுக்கு நிம்மதி வந்தது." அப்பாடா தேவி முகத்தில் புன்னகை ப+த்துவிட்டது" என்றான் கிண்டலாக.

அவனுக்குத் தெரியும் அவள் எவ்வளவு தான் அன்பானவளாக இருந்தாலும் சிலவேளைகளில் முக்கோபியாகி விடுவாள். நியாயமான கோபம்தான். ஆனால் எப்படியாவது சமாளிக்க வேண்டுமே அந்தக் கலையையும் விரல் நுனியில் வைத்திருந்தான். மதன். ''கல்யாணி வாறமாதம் நல்ல நாளிருக்காம் அம்மா சொன்னா உங்கட வீட்டில கதைக்க வேணும் எண்டு, என்ன மாதரியோ தெரியாது. உங்களுக்கு பிரச்சனையில்லத்தானே?" கூறிவிட்டு கல்யாணியை நோக்கினான் மதன். அவன் பார்வையில் தெரிந்த கேலி தாங்கமுடியாமல் பாவையவள் நிலம் நோக்கினாள். ''என்ன எதாவது கேட்ட உடன கீழ பாhக்கிறது. பதில் என்ன நிலத்திலயோ எழுதிக் கிடக்குது? சரி அத விடும் உனக்கு ஒரு சிரிப்பு தெரியுமோ? உன்னையும் என்னையும் அண்ணனும் தங்கச்சியுமோ எண்டல்லோ சனம் கேக்குது. அண்டைக்கு ஒராள் இப்பிடித்தான் கேட்டா, நான் சொன்னன், 'அவா என்ர வருங்கால மனைவி" எண்டு உடன அவா ''என்ன தம்பி அப்பிடியே ஒரே அச்சில வார்த்தெடுத்த சிலை மாதரி. எங்க தம்பி இவ்வளவு பொருத்தமா தேடிப்பிடிச்சிருக்கிறா" எண்டு. எனக்கு எப்பிடியிருந்திருக்கும் சொல்லு. உன்ர போட்டோவையும் என்ர போட்டோவையும் எடுத்து வைச்சுப் பார்த்தன் அப்பதான் விளங்கிற்று. அவா சொன்னது சரியென்டு. சரி அவவை விடு இப்ப நான் கேட்டத்துக்கு என்ன பதில்?" ''என்னங்க கொஞ்சம் ஆறுதலா அடுத்த வருஷம் மட்டில…." என்று இழுத்தாள் கல்யாணி. அவளுக்கே தெரியும் தான் சொல்லுவது உண்மை கலக்காத சுத்தப் பொய் என்று. இல்லாவிடில் எந்நேரமும் தன்னருகில் அவன் இருக்கவேணும் எண்டு நினைப்பவள் இப்படிச் சொல்லுவாளா? சொல்லி விட்டு அவள் சொர்க்கத்தில் மிதந்து கொண்டிருந்தாள். கற்பனைப் படகு வேகமாகப் போய்க் கொண்டிருந்தது அவள் மனதில. கார் நின்றதும் தெரியாமல் கற்பனையில் இருந்துவிட்டாள். பின்பு மதன்தான் ''என்ன கல்யாணி அப்போத உங்களோட கதைக்காம வந்ததற்கும் இதே காரணம் தான். நீங்க இருந்த இடத்தையே மறந்திற்றீங்க. நான் உங்களை விடப் பறவாயில்லைத்தானே….." என்று கூறிமுடிக்க முன்னர் திடுக்கிட்டுப் பார்த்தாள். ''பாக்" வந்து விட்டது தெரியாமல் ''சீ" என்று வெட்கப்பட்டாள். கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள். பாக் மிகவும் அழகாக அமைதியாக இருந்தது. அவளுக்கு அமைதிதான் அதிகம் பிடிக்குமென்று அறிந்துதான் மதன் இந்த பாக்கிற்கு அழைத்து வந்தான்.

இருவரும் இறங்கி பாக்கிற்குள் நுழைய ''ஆகா எவ்வளவு அழகான ஜோடி" பார்த்தவர்கள் வியந்து நின்றனர். ''என்னங்க எல்லோரும் ஒரு மாதிரிப் பாக்கினம், எனக்கு வெக்கமாயிருக்கு" ''உங்களுக்கு எப்ப பார்த்தாலும் வெட்கம்தானே" என்று சொல்லி முடிக்கவும் ''ஹலோ! நீங்க கல்யாணி, மதன் தானே? நாங்க உங்கட புறோகிறாமுக்கு வந்தனாங்க. உண்மையிலேயே உங்கட இசையில எங்களையே மறந்திற்றம். அப்பிடியொரு தேவகானம். எங்கட வாழ்க்கையில இசையால எங்களை மறந்ததெண்டா அண்டைக்குத்தான். சரி நீங்க அமைதி தேடி பாக்கிற்கு வர நாங்க அதைக் குழப்பேல்ல…." என்றபடி அப்பால் விலகினர். ''கூட்டம் நிக்கிற பாக்கிற்குப் போனா இப்படி அன்புத் தொல்லைகள் வருமென்றறிந்து தான் இங்கு வந்தம் இங்கயும் நாலைஞ்சு சனம் கண்டு பிடிச்சிற்றுது" என்று கூறியபடி மதன் ஒதுக்குப் புறமாயிருந்த மரமொன்றின் கீழ் அமர்ந்தான். கல்யாணியும் அவனுக்கு எதிர்த்தாற் போல் அமர்ந்தாள். ''கல்யாணி உங்களுக்கொரு மச்சான் இருந்தவரல்லோ? இப்ப அவர் எங்க? ''யாரு கண்ணனோ? அவர் இப்ப கொஞ்ச நாளைக்கு முந்தி வீடு மாறிவிட்டார். முந்தி எங்கட வீட்டில வந்து ஒரே ஆக்கினை ''நான் மச்சான் இருக்க ஏன் நீங்க வேறொராளுக்கு செய்து கொடுக்கிறீங்க? என்னட்ட காசு, படிப்பு, வடிவு இதொண்டுமில்லையோ" எண்டு கேட்பார். அவர் வடிவுதான் நல்லவர்தான். என்னில நான் சின்னப்பிள்ளையா இருக்கேக்கையே நல்ல அன்பு, எனக்கு ஏதாவது வருத்தமெண்டா அழுஅழண்டு அழுவாராம். நானும் அவரோட மச்சான் எண்டு நினைச்சு பழகியது கிடையாது. அண்ணன் மாதிரித்தான் பழகினான். அதாலதான் நான் அவரைத் திருமணம் செய்யச் சம்மதிக்கேல்ல.

அவருக்கு சரியான ஏமாற்றம் அப்பிடியிருந்தாலும் நானும் அவரில வச்ச பாசத்தை மறக்கேல்ல அவரும் அப்பிடித்தான். இப்ப கொஞ்ச நாளா வீட்டில ஒன்றும் கதைக்கமாட்டார். என்னோட சொல்லுவார். ''கல்யாணி, மதனோட நான் பழகிப் பார்த்த பிறகுதான் தெரிஞ்சுது அவன் உண்மையிலயே நல்லவனும் உங்களுக்கேற்றவனும் கூட" எண்டு. எனக்கு என்ன சொல்றேண்டு தெரியாம இருந்திருவன்." ''அப்ப இப்ப அவர் உங்களுக்குப் பின்னால திரிஞ்சு பிரயோசனமில்லை எண்டு விட்டிற்றார்." ''அவர் ஒண்டும் பின்னால திரியேல்ல வீட்டில அதுகும் என்னோட இல்லை அம்மாவோடதான், வந்துதானே கேட்டவர்" ''ஓகோ மச்சானைக் குறை சொன்ன உடன வந்த கோபத்தைப் பாருங்கவன்." ''அப்பிடியெண்டில்ல ஏன் ஒராள்ள வீண் பழியைச் சுமத்துவான் எண்டுதான்." ''அதுசரிதான் நான் பகிடிக்குத்தான் சொன்னான், அவன் யாரை யாவது பார்த்து திருமணம் செய்யலாம் தானே?" ''நானும் அப்பிடித்தான் கேட்டன் அதுக்கு அவர் சொன்னார் தான் முதல்ல ஆசைப்பட்டதே என்னிலதானாம் அந்த ஆசைதான் தன்ர வாழ்க்கையில கடைசியும் முதலுமா இருக்கோணும் என்று அவர் ஆசைப்படுறாராம் நான் நல்ல பேச்சுப்பேசி அனுப்பி போட்டன், நான் என்ன செய்யிறது? ''எண்டாலும் உங்கள்ள பிழைதானே? எப்ப தொடக்கம் இருந்தவனை விட்டிற்று இடையில வந்த என்ன லவ் பண்ணினது" ''திருப்பித் திருப்பி இதைக் கதைச்சீங்க எண்டா இனி நான் கதைக்க மாட்டன். ஏதோ என்னில சந்தேகப்படுற மாதிரியல்லோ உங்கட கதை"" ''இல்ல கல்யாணி நான் பகிடிக்குச் சொன்னன் நீங்க அதைச் சீரியஸா எடுங்கிறீங்க, சரி சரி அதை விடுங்க, அது சரி என்ன கொஞ்சநாளா மெலிஞ்சு போறீங்க? என்ன யோசனை?" ''என்னண்டு தெரியேல்ல, இருந்திற்று தலைசுத்திறமாதிரி இருக்கும், சாப்பிட மனம் வராது. டொக்டரிட்ட போவம் எண்டா நேரம் எங்க கிடக்குது?" ''நான் கூட்டிக் கொண்டு போறன், நாளைக்கு அல்லது நாளையிண்டைக்கு கட்டாயம் டொக்டரிட்டைப் போக வேணும் சரியா?" ''எனக்கு ஒரு வருத்தமுமில்லை சும்மா பலவீனம்தான் இதுக்கெல்லாம் டொக்டரிட்ட ஓடுறது சரியல்லை, எண்டாலும் உங்கட திருப்திக்காண்டி ஒருக்கா மெடிக்கல் செக்கப் செய்யிறன். உங்களுக்கும் நேரமிருக்காது அதைவிட பிறகு தரப்போற ஆக்கினை பத்தாதெண்டு இப்பயே அங்க வாங்க இங்க வாங்க எண்டுறதும் சரியில்லத்தானே." ''ஏதோ இது பெரிய ஆக்கினை மாதிரி, ஏதோ உங்கட விருப்பம்….. ம்….. மறந்து போனன் அம்மா சொன்னவா வீட்ட யாரோ விசிற்றேஸ் 7மணிக்கு வாறேண்டவையாம் எண்டு கெதியா வரச்சொன்னவா அதுதான்…… போவமோ…. அல்லது….." ''என்ன அல்லது…. 7 மணிக்குப் பிறகு ஆரும் பாக்கில நிப்பினமோ? போவம் வாங்க" என்றபடி காரை நோக்கி நடந்தாள் கல்யாணி மதனுடன். காரில் ஏறி ஸ்ராட் செய்ய கார் விரைந்தது. ''கல்யாணி மறந்து போனன் நாளைக்கு என்ர பேர்த்டே மாமிக்கும் சொன்னான், உங்களுக்கும் பிறிம்பாச் சொல்லோணுமா? மற்றது முந்திய மாதிரி இந்த நகை  செய்து கொண்டு வாற சேட்டையெல்லாம் வேணாம். என்ன வந்து வாழ்த்தினாலே போதும், இந்த உலகத்தில உங்கட வாழ்த்தும், என்னைப் பெற்றுவளத்த தாயின் வாழ்த்தும் தான் எனக்குத் தேவை. இந்த ரெண்டுமே போதும் எனக்கு. சரி கல்யாணி வீடு வந்திற்றுது நான் உள்ளுக்க வரோணுமா? ஏனெண்டா எனக்கு நேரம்……" ''பரவாயில்லைங்ங உங்கட அம்மா பாத்துத் கொண்டிருப்பா போயிற்று வாங்க கவனமாப் போங்க"" என்றபடி வீட்டுக்குள் நுழைந்தாள். தலைக்குள் என்னவோ செய்வது போலிருந்தது. எல்லாம் சுற்றுவது போலிருந்தது. தலை சுற்றி விழப் போனவள் சுதாகரித்துக் கொண்டு மெதுவாக நடந்துபோய் அப்படியே மெத்தையில் சாய்ந்தாள்.

''கல்யாணி என்னம்மா செய்யுது?" எனக்கு ஒண்டுமில்லையம்மா, சாதுவாத் தலைவலிக்குது அதுதான்." இல்லக் கல்யாணி எனக்கென்னவோ பயமாயிருக்கு எதுக்கும் ஒருக்கா டொக்டரிட்ட போயிற்றுவா" ''எனக்கொண்டும் இல்லையம்மா, நீங்க சும்மா மனசைக் குழப்பாதைங்க" ''இல்லக் கல்யாணி எனக்காண்டியாவது கட்டாயம் ஒருக்காப் போய் மெடிக்கல் செக்கப் செய்திற்று வா அப்பதான் எனக்கு நிம்மதி" ''என்ன தாயும் மகளுமா சண்டையா பிடிக்கிறீங்க"" எண்டபடி உள்ளே வந்தான் கண்ணன்". ''இல்லக் கண்ணன், கல்யாணி தலைக்குள்ள என்னவோ செய்யிதெண்டு படுத்துக் கிடக்கிறாள் எனக்கென்னமோ பயமாயிருக்கு இப்பிடி அடிக்கடி வாறது, இடைக்கிடை மயக்கம் கூடி வந்திருக்குது. அதுதான் அவளை டொக்டரிட்ட போகச் சொல்லி சொல்லுறன் அவள் மாட்டன் என்றாள்" ''அத்தை நானொருக்கா கல்யாணியோட கதைச்சுப் பார்க்கிறன்." என்றபடி கல்யாணியின் அறைக்குள் நுழைந்தான் கண்ணன். ''கல்யாணி எனக்காண்டியாவது பிளீஸ் வாங்க கல்யாணி, குழந்தை மாதிரி அடம்பிடிக்கானதங்க, எழும்பி வெளிக்கிடுங்க." "வேண்டாம் கண்ணன் சொன்னாக் கேளுங்கள் எனக்கெண்டுமில்லை" ''கல்யாணி சரி உங்களுக்க ஒண்டுமில்லையென்றாலும் உங்கட அம்மாவுக்காகவாகிலும் அவவின்ர திருப்திக்காக வாங்க" ''உங்கள் எல்லாரோடையும் பெரிய தொல்லையாப் போச்சு அம்மாதான் சும்மா கத்திறா எண்டா நீங்களுமா?"" என்றபடி போக ஆயத்தமானாள். ''நான் வரோணுமா கல்யாணி?." ''நீங்க எதுக்கம்மா இந்த குளிருக்கு நில்லுங்க நாங்க போய்ற்று வாறம்" என்றாள் கல்யாணி.

அவர்கள் இறங்கும் போது இரவு 8 மணியாகி விட்டிருந்தது அவர்களின் பமிலி டொக்டரிடம் சென்று ரெஸ்ற் பண்ணிவிட்டு இருவரும் வந்தனர்.
முன்பிருந்த களை முற்றாக அகன்று இருவர் முகமும் வெளிறி போயிருந்தது. அவலத்துடன் தாய் கேட்டாள். ''என்னம்மா கல்யாணி உடம்புக் கொண்டுமில்லையே?" ''என்னம்மா நீங்க சும்ம பயந்து கொண்டு கடைசி மட்டும் உங்களோட தான் நான் இருப்பன். கொஞ்சம் றெஸ்ற் எடுத்தா எல்லாம் சரியாயிரும் என்று  டொக்டர் சொன்னார். ஒரு பேணி பால் தாங்க குடிச்சிற்று நான் படுக்கப் போறன். நித்திரை வருது" என்று கூறிவிட்டு அப்பால் செல்ல, கண்ணனும் ''அத்தை நான் வாறன் கல்யாணியக் கவனமாப் பாருங்க" என்றான். ''கண்ணன் நில்லுங்கவன் சாப்பிட்டிற்று போகலாம்." ''இல்லை அத்தை எனக்கு முதல் சரியான பசியாத்தான் இருந்தது. பிறகு கொஸ்பிற்றலுக்குப் போய்ற்று வந்ததால பசியே போய்ற்றுது நான் வாறன்." என்றபடி காரை எடுத்தக் கொண்டு கிளம்பினான். கல்யாணி பாலைக் குடித்து விட்டு படுக்கையில் சாய்ந்தாள். அவள் தூங்கி விட்டாள். ஆனால் அவள் இதயம் மட்டும் லப், டப் ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தது.

இரவு ஓடிக்கழிந்து பகல் நங்கை பவனி வர ஆரம்பித்தாள் கல்யாணி எழும்பி நேரத்தைப் பார்த்தாள். ''ஐயையோ விடிந்து 7 மணியுமாயிற்று இவ்வளவு நேரமும் தூங்கிற்றன் 9 மணிக்கு கண்ணன் வருவாரே" என்றபடி அவசரமாக வோஸ்றூமினுள் நுழைந்து வெளி வந்தாள். தலை மேலும் வலித்தக் கொண்டேயிருந்தது. தாய் ரீ கப்புடன் நின்றபடி ''கல்யாணி மதன் போன் பண்ணினார். இண்டைக்கு அவற்ற போர்த்டேயல்லோ அதுதான் உங்களையும் கூட்டிக் கொண்டு வரட்டாம்."  ''ம்" ஒற்றைச் சொல்லே வந்தது கல்யாணியின் வாயிலிரந்து. ''எங்கயம்மா போக வெளிக்கிடுறாய்?" ''எனக்கு ஒரு அப்பொயின்மென்ற் இருக்கு அதுதான் கண்ணனோட போறன். மதன் அடிச்சா சொல்லங்க இப்பிடி அவசரமா வெளியில கண்ணனோட போய்றா என்று கொஞ்சம் வரச் சுணங்கும் என்று சொல்லங்க என்ன?"' என்றாள். அப்படியே தாயை நோக்கினாள் இளமையில் எவ்வளவு அழகாக இருந்திருப்பாள். இப்போ கணவனை இழந்து கைம்பெண்ணாக எனக்காக தன் மகள் ஒருத்திக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். தன் மீது பாசமழை பொழிந்து இவ்வளவு காலமும் ஒரு கஸ்ரமும் அறியாது வளர்த்து வருகிறாள். அவளை விட ஆறு வருடமாக தன்மேல் உயிரையே வைத்திருக்கும் மதன். அவனுக்கு மனைவியாக கோடி தவம் செய்திருக்க வேண்டும். அன்று அவன் திருமணத்திற்கு நாள் வைக்கக் கேட்கும் போது ஒரு மாதம்தான் இன்னும் உள்ளது என்று உள்ளுக்குள் மகிழ்ந்தவள். இப்போ அந்த ஒரு மாதம் கழியாமல் இருக்கக் கூடாதா என்று ஏங்கினாள். தன் அருமைத் தாயை விட்டுக் கணப்பொழுதும் பிரிய அவளால் முடியாதே. இரத்தத்தோடு ஊறிவிட்ட அந்த உறவை அந்தப் பிணைப்பை எப்படி அறுக்க முடியும். ''நாட்களே நகராதீர்கள்" என்று கூவியழவேண்டும் போலிருந்தது அவளுக்கு. ''என்னம்மா கல்யாணி பிரம்மை பிடிச்ச மாதிரி நிக்கிறாயம்மா என்ன யோசிக்கிறாயம்மா?" ''ஒன்றுமில்லையம்மா…… ஆ இந்தா கண்ணன் வந்திற்றார் நான் போய்ற்று வாறனம்மா" என்றபடி தன் தாயைக் கட்டி அணைத்து முத்தமிட்டாள். மெதுவாக நடந்து போய் காரில் ஏறினாள். கையசைத்து விடை கூறவும் கார் விரைந்தது.

 ''கண்ணன் எனக்காக நீங்க இதைச் செய்யத்தான் வேணும் பிளீஸ் இதைப் பற்றி அம்மாவோட எதுவும் கதைக்கக் கூடாது உங்களையும் என்னையும் தவிர இது வேறயாருக்கும் தெரியக் கூடாது மதனையும் சேர்த்துத்தான். என்ர முதல் வேலை மதனை மெதுவாகக் கழட்டி விடோணும். நான் செய்த மாதிரி இல்லாம அவரா வெறுத்த மாதிரி இருக்கோணும் பிளீஸ் கண்ணன் நான் ங்களை நம்பித்தான் இருக்கிறன். நீங்க துணிஞ்சா இத கச்சிதமா முடிக்கலாம். எனக்கு என்ன் நடந்தாலும் பரவாயில்லை. மற்றவைய இது தாக்கக் கூடாது மதன் என்னை ஒரு நிமிஷம் கூட நினைக்கக் கூடாது பிளீஸ் கண்ணன்" ''என்ன் கல்யாணி விசர்க்கதை கதைக்கிறிங்க. சும்மா என்ன மணலால கட்டின வீடா வேண்டாம் என்று காலால தட்டிவிட மணிணோட மண்ணாகிறதுக்கு ஆறு வருஷமா ஆழமா அத்திவாரம் போட்டு அன்புக் கற்களை வைச்சு அடுக்கி நேசப்பூ
ச்சுப் பூசி கட்டின காதல் மாளிகை கல்யாணி காதல் மாளிகை. வெறும் கட்டிடத்தை உடைக்கலாம். ஆனா மனதில கட்டின காதல் கட்டிடத்தை ஒரக்காயுமு; உடைக்க ஏலாது. உடைக்க முயலவும் கூடாது. கல்யாணி நான் ஒரு புனிதமான காதலுக்கு காலனா வர விருப்பேல்லை. காதலில வென்றவனுக்கு அதன் அருமை தெரியாது. தோற்றவனுக்குத்தான் அதப்பற்றி விளங்கும் ''காதல் புனிதமானதென்று முதல் முதல் சொன்னசனே அதில் தோற்றவனாகத்தான் இருக்க வேண்டும்" இது நான் சொல்லேல்ல கவிஞர் கண்ணதாசனின் செப்பு மொழி கல்யாணி. நான் உங்களை காதலித்தது மெய்தான் ஆனா மதனுக்கும் உங்களுக்கும் இடையில புனிதமானதொரு காதல் வேர் விட்டு வளர்ந்ததை புடுங்கி எறிய முடியாமத்தான் நானா உணர்ந்து மறந்திற்றன். ஆனா இப்ப நீங்களா வந்து அதே காரியத்தை இப்ப் செய்யச் சொன்னா என்ன கல்யாணி நான் ஒரு சராசரி மனிதன் கல்யாணி மனிதன் பிளீஸ் கல்யாணி என்ன விட்டிருங்க."

 ''நோ, நோ கண்ணன் கட்டாயம் நீங்க இதைச் செய்யத்தான் போறீங்க நான் அதை என் கண்ணால பார்க்கத்தான் போறன். இந்தாங்க இதில மதன்ர மாமாவின்ர கடை இருக்கு. காரைப் பாக் பண்ணிற்று வாங்க உடுப்பு கொஞ்சம் எடுக்க வேணும் என்றபடி கடைக்குள் நுழைந்தாள்."" ''என்னம்மா கல்யாணி எப்படியம்மா இருக்கிறாய்? மதன் எங்க?" ''இல்ல அங்கிள் நான் என்னுடைய மச்சான் கண்ணனோட வந்தனான்" என்று கூறவும் அவருடைய முகம் போன போக்கை பார்த்தாள் கல்யாணி. அவர் முகத்தில் கோபத்தைக் கொப்புளிக்க வைக்க வேண்டும் போலிருந்தது அவளுக்கு. ''இல்ல அங்கிள் கண்ணன் கொஞ்ச உடுப்பு தான் எடுத்துத் தாறேண்டு சொல்லிக் கூட்டிக் கொண்டு வந்தார். அப்பிடியே றெஸ்ரோறண்ற் ஒண்டில சாப்பிட்டிற்று இங்கால வாறம்" என்று கூறிவிட்டு முகத்தைப் பார்த்தாள். அவரின் முகம் சிவந்த நிறம் கொண்மு செந்தணலாய்க் கொதித்து. ''சீ இவளும் ஒரு பெண்ணா வாறமாதம் திருமணம் செய்யப் போறவன விட்டிற்று மச்சான்காரனோட எல்லா இடமும் சுத்திறாள். அதுகும் ஆறு வருஷமா தேரிஞ்ச, அவனைத் தெரியாம இப்பதான் பேசிச் செய்யப் போகின் என்றாலும் பரவாயில்லை இவள் இப்பதானே இப்படி மனம் மாறியிருக்கிறாள். முந்தியெல்லாம் எவ்வளவு அடக்கமாக பொம்மை மாதிரி வந்து ஒரு வார்த்தை கூடக் கதைக்காமப் போறவன். நான் வீணா இவள் ஒரு அடக்கமான அமைதியான பெண் என்ர அக்காவுக்கு ஏற்ற மருமகள், மதனுக்கு பொருத்தமான மனைவி என்று தப்புக் கணக்குப் போட்டிற்றன்." என்றபடி மனதுள் கொதித்த வண்ணம் நின்றார் அங்கிள். ''கண்ணன் இங்க வாங்க" என்று குழந்தையைப் போல கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனாள் கல்யாணி. ''சீ இவளென்ன ஒரு பெண் மாதிரி நடக்கிறாள் மதனோட வரும் போது தெரியாமல் கூட தன் விரல் அவன் மேல் பட்டுவிடுமே என்று ஒரு அடிதள்ளி நிற்பவள். இப்ப அவன் கூட இப்படி நெருங்கிப் பழகிறாளே? அவள் தன்னை இந்தச் சூழலுக்கு ஏற்ப மாற்றி விட்டாளா? அல்லது இந்தச் சூழல் அவளை மாற்றி விட்டதா என்று தெரியாமல் திண்டாடினார் அங்கிள். ''அங்கிள் இந்தாங்க பில் போடுங்க என்றபடி நாலைந்து ஸ்கேட் அன்ட் பிளவுஸ்களை மேசை மேல் போட்டாள். வேண்டா வெறுப்பாக பில்லை போட்டுக் கொடுத்தார். காசைக் கொடுத்து விட்டு காரை நோக்கி நடந்தனர் இருவரும். கண்ணனின் முகம் கடுகடுத்து கோபம் பொங்கிக் கொண்டிருந்தது. கல்யாணி கண்டும் காணாதது போலிருந்தாள்.

 அவர்களின் கார் விரையவும் விறைத்த முகத்துடன் அங்கிள் மதனுக்கு போன் பண்ணினார். ''ஹலோ" என்றபடி மறுமுனையில் மதனின் குரல் ஒலித்தது. ''மதன் நான் அங்கிள் கதைக்கிறன்" ''என்ன அங்கிள் பேர்த் டேக்கு வரேல்லையா கெதியா வாங்க" ''மதன் நான் வாறதிரகட்டும் எல்லா ஆயத்தமும் செய்தாச்சா கல்யாணி வராம கேக் வெட்டுறதில்லையல்லவா? கல்யாணி வந்திற்றாளா?" ''இல்ல அங்கிள் கல்யாணிக்கு ஏதோ அவசரமா அப்பொயின்மென்ற் என்று போய்ற்றாவாம். இப்ப வந்திருவா நீங்களும் கெதியா வாங்க" என்று றி முடிக்கவும் ''அவளுக்கு அப்பொயின்மென்ற ஒன்றுமில்லை. அவள் இப்ப கண்ணனோட இங்க வந்திற்றுப் போறாள். நான் முதல்ல நினைச்சன் உன்னோட தான் வாறாள் எண்டு பிறகு பார்த்தா கண்ணன். சரி எண்டிற்று நான் நினைச்சன் உனக்குத்தான் உடுப்பு எடுக்க வாறாளாக்கும். செப்பிறைசாக இருக்கட்டும் என்று உன்னைக் கூட்டிக் கொண்டு வரேல்லையாக்கும் என்று நினைச்சன். பிறகு பார்த்தா உடுப்பு அவளுக்கு மச்சான் எடுத்துக் கொடுக்க வந்திருக்கிறார். இவளைப் புரிந்து கொள்ளாம ஆறு வருஷமா அவளைக் காதலிச்சாய் பாரு உன்னைச் செருப்பால அடிக்கோணும்" மதனுக்கு அவன் காதுகளையே நம்ப முடியவில்லை மறுமுனையில் போன் கட்டாகியது. அவன் அப்படியே நிறீவரை வைத்து விட்டு ''என் கல்யாணியா பிஞ்சுள்ளம் கொண்ட கல்யாணியா நோ, நோ ஒரு செயலை வைத்து ஆறு வருஷமா பழகின அவளைத் தப்புக் கணக்கு போடக்கூடாது. பின்ன ஏன் அங்கிள் இப்பிடிச் சொல்லோணும்? அவர் திருணம் கூடச் செய்யாம எங்களோடையே இருந்தும் சொத்தெல்லாத்தையும் எனக்கு எழுதிவைச்சு என்மேல உயிரையே வைச்சிருக்கிற அங்கிள் எனக்கு ஏன் பொய் சொல்லோணும்? கேள்விக் கணைகள் மதனின் தலையைத் தளை போட்டன. இல்லையென்றால் ஒவ்வொரு பேர்த் டேக்கும் ஒன்பது மணிக்கு வந்து நிற்பவள். இண்டைக்கு மூன்று மணியாகியும் காணேல்ல. இதுக்கு ஒரு காரணம் இல்லாம இல்லை. கண்ணன் தன்னைக் காதலிச்சவர் ஆனா தான் அவரைச் சகோதரனா நினைக்கிறன் என்றதெல்லாம் பொய். நான் திருமணத்திற்கு திகதி கேட்க அவள் சம்மதம் சொல்லாததற்கு இதுவும் ஒரு காரணமா இரக்கலாம். ஆறு வருஷமாக இவள் என்னைக் காதலிச்சாளா? காதலிச்ச மாதிரி நடித்தாளா?" என்றபடி இருந்தவனை ''கோலிங் பெல்" அழைத்தது. எழும்பி கதவைத் திறந்தவனுக்கு காறி உமிழ வேண்டும் போலிருந்தது. இருந்தாலும் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டான். கல்யாணி கண்ணனுடன் வந்திருந்தாள். எப்படியோ அந்த நாள் கழிந்தது. பெர்த்டே முடிந்து அவள் சென்று விட்டாள். மதனுக்கு மனம் அமைதியடையவில்லை. நாளை எப்படியாவது இது மெய்யா என்று கண்டு பிடிக்க வேணும் என்றபடி படுக்கையில் சாய்ந்தான். மனம் இதை நம்ப மாட்டேன் என்று அடம் பிடித்து வழக்கம் போல ' கல்யாணி கல்யாணி என்று அடித்துக் கொண்டது இதயம். ''சீ அவளைப்பற்றி இவ்வளவு கேட்டும் கூட இதயம் அவளை மறக்க மறுக்கிறதே. அவள் எப்படி என்னை அவள் இதயத்திலிருந்து எடுத்தெறிந்தாள். பெண்கள் மனம் இளகியது என்று பழம் புலவர்கள் சொன்னது பொய்யா? பலவாறு எண்ணியவனாய் றேடியோவை ஓன் பண்ணினான் அதில் ''நெஞ்சமடி நெஞ்சம் அது நெஞ்சமடி நெஞ்சம் அன்று நான் கொடுத்தது…….."" பாடல் வரிகள் அவனுக்குப் பொருத்தமாகப் போய்க் கொண்டிருந்தது அதைக் கேட்டபடியே கண்ணயர்ந்தான் மதன். அவன் உறங்கிப் போனான். அவன் மனம் அவள் பெயரை மீண்டும் மீண்டும் உச்சரித்து. சுவரில் இருந்த அவள் படம் அவனைப் பார்த்துப் பரிதாப்படுவது போலிருந்தது.

இரவும் கடந்து பொழுது புலர்ந்தது மதன் கடுமையான வேலை காரணமாக பதினைந்து நாட்களுக்கு மேல் எங்கும் போகமுடியாமல் போனது. அன்று அவனுக்கு லீவு என்றபடியால் கல்யாணி வீட்டிற்குப் போன் கண்ணினான். அவனது அழைப்புக்கு பதில் தந்தது கல்யாணியின் தாயார்தான். ''என்ன மதன் கேக்கிறன் எண்டு கோவிக்காதைங்க உங்களுக்கு ஏதும் பிரச்சனையா போனும் எடுக்கிறேல்ல வீட்டையும் வாறேல்ல" ''அப்பிடி யொண்டுமில்லை எனக்கு ஒரே பிஸி. நான் இண்டைக்குப் பின்னேரம் வாறன் கல்யாணிட்ட சொல்லங்க என்ன" என்றபடி போனை வைத்தான். தாயும் ''கல்யாணி மதன் போன் பண்ணி பின்னேரம் இங்க வாறேண்டு சென்னார்." பின்னேரம் இங்க வாறேண:ட சொன்னார்" என்றாள். "மதன்" என்றதும் அவளின் முகம் மாறியதைத் தாய் கவனிக்கவில்லை. கல்யாணி அவசரமாக நூமிக்குள் நுழைந்து மேசையை ஒழுங்கு செய்தாள். பின்னேரம் மதன் காரில் வந்திறங்கி வீட்டுக்குள் நுழையவும் ''மதன் கல்யாணியின்ர நூமுக்க இருங்கோ அவா குளிக்கிறா நான் 'ரீ" போட்டிற்று வாறன் என்றபடி அப்பால் சென்றாள். மதன் நூமுக்குள் வந்தான் அங்கே கண்ணன் மேசையில். ஆம் அவனது படம் ஸ்ராண்டில் வைத்து மேசையில் இருந்தது. முதலடி விழுந்தது அவனது இதயத்தில் அடுத்த அடி இதைவிடப் பலமாக இருக்குமென்றறியாது டயறியை எடுத்து விரித்தான் பழைய ஞாபகத்தில் ஒருவரின் டயறியை மற்றவர் பார்ப்பது அநாகரிகமாகத் தோன்றினாலும் அவர்கள் இருவரும் ஒருவராகி விட்டதால் இது அவர்களுக்கு விதி விலக்கு அவன் டயறியை விரிக்கவும் ஏழெட்டுக் கடிதங்கள் கீழே விழுந்தன. ஆனால் அவை அவன் எழுதிய கடிதங்களல்ல. கண்ணன் அவளுக்கு எழுதியவையே அவை. ''சீ இவளா இப்படி அல்லது எல்லாப் பெண்களுமே இப்பித்தானே? இருக்காது ஒரு பெண் இப்படியிருக்கிறாள் என்று எல்லோரையும் அப்படி எண்ணமுடியுமா?" என்றபடி அங்கிருக்கப் பிடிக்காது எழும்பி மீண்டும் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்று விட்டான் ஒரு முடிவுடன். ''ரீ" யுடன் வந்தவள் மதன் அங்கில்லாதது கண்டு திகைத்து நின்றாள். கல்யாணியும் அப்போதான் குளித்து விட்டு வெளியே வந்தாள். ''எங்கயம்மா மதன் போய்ற்றாரா?" ''நான் ரீ போட்டிற்று வாறன் கல்யாணியின்ர றூமில இருங்க எண்டு சொல்லிற்று ரீ போட்டுக் கொண்டு வர ஆளைக் காணேல்லை. என்ன கோபமோ தெரியா. ஒருக்கா வீட்ட ரெலிபோன் அடிச்சுப் பார்ப்பம். என்று கூறவும். ''சரி விடுங்க போனா போகட்டும்" என்றாள் கல்யாணி சட்டென்று தாய்க்கு தன் மகளையே நம்ப முடியவில்லை. இவளென்ன இப்பிடிச் சொல்லுறாள். அவைக்க ஏதாவது பிரச்சனையெண்டா என்னோட மதன் கதைக்கிறதுக்கென்ன எதுக்கும் ஒருக்கா போனெடுத்தப் பார்ப்பம் என்று எண்ணியவளாய் போனை எடுத்துக் கேட்க கோபத்தில் கொட்டித் தள்ளினான் வார்த்தைகளை மதன். அவன் ஒரு வாத்தை கூட அதிர்ந்து பேசியதை அவள் இதுவரை பார்த்ததில்லை இப்படிக் கோபப்பட தன் மகளின் மூடத்தனமான செய்கைதான் காரணமென்றறிருந்து ஒருநாள் கூட கோபம் வராத தன் மகள் மீது முதல் முறையாக கோபம் பொங்கிய படிவந்தது. போனை வைத்துவிட்டு நேரே கல்யாணியின் ரூமுக்குள் நுழைந்தாள். ''கல்யாணி!" அந்தக் குரல் விடே அதிரும்படி கேட்டது கல்யாணி திடுக்கிட்டுப் பார்த்தாள். ஏனம்மா இப்படிக் கத்திறீங்க ''உனக்கு செல்லம் குடுத்து கஷ்டம் தெரியாம வளர்த்தனே அதுக்கு எனக்கு ஆயிரம் செருப்பு வைச்சு அடிச்சாலும் சரிவராது", ''இப்ப என்னம்மா நடந்தது" ''மதன் சொன்னது உண்மையா?" ''எதம்மா?" என்று கல்யாணி தெரியாதது போல் கேட்கவுத் தாய் அவன் சொன்னதையெல்லாம் திருப்பிச் சொல்லி அவளின் பதிரை எதிர்பார்த்தாள் ''ஓம்" ஒற்றைச் சொல்லில் விடை வந்தது.

ஓங்கியறைந்தாள் கன்னத்தில் ''சீ நான் பெத்த பிள்ளையா நீ?" என்றபடி கோபத்தில் காளிபோல நின்றாள் தாய். தன் தாயா தன்னைக் கை நீட்டியடித்தாள் நம்பவே முடியவில்லை. அவள் அடித்த அடியில் கல்யாணியின் தலை சுவருடன் மோதியது. அவ்வளவதான் அவளுக்கு மயக்கம் வந்து அப்படியே நிலத்தில் சாய்ந்தாள். வாயால் இரத்தம் வழிந்துகொண்டிருந்தது திகில் கொண்டவளாய் தாய் டொக்டருக்கு போன் பண்ணினாள். அதே நேரம் கண்ணனும் வந்துவிட்டான். கண்ணனைக்கான தாய்க்கு கொலை செய்யுமளவிற்கு ஆத்திரம் வந்தது அடக்கிக் கொண்டாள். சிறிது நேரத்தில் டொக்டர் வந்து செக் பண்ணிவிட்டு ''கல்யாணி ஏனம்மா இதுபற்றி வீட்டில் சொல்லவில்லையா என்று அவள் மயக்கம் தெளிந்ததும் கேட்டார். அரை மயக்கத்தில் வே……ண்……டா……ம் டொக்டர் என்றாள். உடனடியாக கொஸ்பிற்றலுக்கு கொண்டு போக வேண்டும் என்று கூறி அவசரமாக கொண்டு சென்றனர். கண்ணன் முகத்தில் கவலையும் பயமும் குடி கொண்டிருந்தது.  டொக்டர் செக் பண்ணிவிட்டு கண்ணனுக்கு விபரத்தைக் கூறினார். கண்ணன் கண்ணில் எட்டிப் பார்த்த கண்ணீரை அடக்கிவிட்டு கல்யாணியைப் பார்த்தான். ''கண்ணன் நான் மதனை பார்க்கவேணும் என்ர மதனை நான் ஒருக்காயெண்டாலும் பார்க்க வேணும். அவரைக் கூட்டிற்று வாங்க"' என்று கெஞ்சினாள். உடனே மதனுக்கு போன் கண்ணி கண்ணன் விபரத்தைச் சொன்னான். ''மதன்  கல்யாணி கொஸ்பிற்றல்ல இருக்கிறா உங்களைப் பார்க்க வேணுமாம் வாங்க பிளீஸ்" ''சீ நாயே போனைவையடா அவள் செத்தாக் கூட அவள் முகத்தில முழிக்க மாட்டன்" வர ஏலாது எண்டு சொல்லு இப்ப போனை முதல் நீ வையடா" என்று கத்தியபடி பொத்தென்று போனை வைத்தான் மதன். கண்ணனுக்கு அந்தநேரத்திலும் கல்யாணிமேல் ஆத்திரம் தான் வந்தது. அவள் கண்ணனைப் பார்த்துக் கேட்டாள் ''என்னவாம் மதன்?"" அவன் வரமாட்டான் எண்டு சொல்லிற்றான். நீங்க செய்த வேலைக்கு அவன் என்ன செய்வான் ''கண்ணன் அம்மா எங்க?" ''வெளியில நிக்கிறா" ''கண்ணன் எனக்கு நல்லாத் தெரியும் இண்டையோட என்ர அத்தியாயம் முடியுது. வீட்டில என்ர மேசையில ஒரு கடிதம் இருக்குது அத எப்பிடியாவது மதனிட்ட குடுங்க. இப்ப அம்மாவைக் கூட்டிற்று வாங்க"' என்றாள். அம்மா வரவும் ''அம்மா நான் உங்களை விட்டிற்றுப் போகப் போகயிறேனம்மா" என்று கூறி அழுதுகதறினாள். ''இல்ல நீ என்ன விடடிற்றுப் போகக்கூடாது போக மாட்டாயம்மா. அழாதையம்மா" என்று அவளின் தலையை தன் மடியில் வைத்தாள். கண்ணன் வீட்டிற்குச் சென்று அவள் சொன்னபடி கடிதத்தை எடுத்துக் கொண்டு மதன் வீட்டிற்கு ஓடினானர். மதனோ அவனை வாசல் படியை மிதிக்க வேண்டாம் என்று கூறி விரட்டியடிக்க கண்ணன் ''எனக்காக வேண்டாம் உன் கல்யாணிக்காக இக்கடிதத்தை படி படித்துவிட்டு நீயே முடிவுசெய்" என்று கூறி கடிதத்தை வீசியெறிந்துவிட்டு கொஸ்பிற்றலுக்கு விரைந்தான்.
மதன் கடிதத்தை பிரிப்போமா அல்லது கிழித்து வீசுவோமா என்று புரியாது தடுமாறி பின்னர் ஒருவாறு என்னதான் இருக்கிறது என்று பார்ப்போமே என்று கடிதத்தை விரித்தான். கல்யாணியின் கை வண்ணம் சித்திரம் போல் ஜொலித்தது.

என் பிரிய மதனுக்கு,
 கண்ணீருடன் கல்யாணி எழுதிக் கொள்வது. ஆறு வருடமாக உங்களை என் உயிரிலும் மேலாகக் காதலித்தேன். நீங்களும் என்மேல் உயிரையே வைத்திருந்தீர்கள். நீங்களும் நானும் கணவன் மனைவியாகி வாழும் பாக்கியம் கிடைக்கும் என ஏக்கத்துடன் காத்திருந்தேன். அப்போதான் எனக்கு அடிக்கடி மயக்கமும் தலைவலியும் உருவாகியது. எங்கே உங்களிடம் கூறினால் துடிதுடித்து விடுவீர்களே என்றுதான் நான் வாயே திறக்கவில்லை கடைசியாக அம்மாவின் ஆக்கினை தாங்கமுடியாமல் டொக்டரிடம் சென்றேன். அவர் நேரே என்னிடமே ''கல்யாணி மனதைத் திடமாக்கிக் கொள்ளுங்கள் உங்களுக்கு வந்திருப்பது சாதாரண நோயல்ல இரத்தப் புற்றுநோய் அதிஷ்டமிருந்தால் நீங்கள் தப்பலாம். இல்லையென்றால் இன்றோ நாளையோ முடிவு நான் சொல்லமுடியாது" என்றார். எனக்கே இதைக்கேட்க நம்ப முடியவில்லை நான் சாகப்போவது எனக்குக் கவலையில்லை எனக்காக என்னை நம்பி வாழும் உங்களையும், அம்மாவையும் நினைத்தப் பார்க்க எனக்கு அழுகை அழுகையாக வந்தது. இந்தச் செய்தியைத் தாங்கும் சக்தி உங்களிடம் இல்லை என்பது எனக்குத் தெரியும். என்னைவிட இளகிய மனம் உங்களது இச் செய்தி கேட்ட மாத்திரத்திலேயே உங்களுக்கு இதயம் நின்றுவிடும். இதைப் போலதான் என் தாய்க்கும் ஆகவே என்னுடன் கண்ணன் தான் வந்தார் அவருக்கும் சொல்லி டொக்டரிடமும் சொன்னேன். தயவு செய்து இதை யாருக்கும் சொல்லவேண்டாம் என்று கூறினேன். கண்ணன் முதலில் மறுத்தாலும் ஒருவாறு பணிய வைத்தேன். தீடீரென நான் இறந்தால் உங்களால் தாங்கமுடியாது ஆதலால் என்னை நேசித்த நீங்கள் என்றும் சந்தோசமாக இருக்க ஒரே வழி நீங்கள் என்னை வெறுக்க வேண்டும் அதற்குதான் கண்ணன்-கல்யாணி காதல் நாடகம் இதற்கு ஒப்புக் கொள்ள கண்ணன் மறுத்துவிட்டார். நான் கெஞ்சி சாகப்போகிற எனது கடைசி ஆசையை நிறை வேற்றும்படி கேட்டதன் பேரில் ஒமென்றார். இப்போ என்னில் உங்களுக்கு அளவுகடந்த வெறுப்பு உருவாகியிருக்கும். நான் இக்கடிதம் எழுதாமல் உண்மையை என்னுடன் சாகடித்திருப்பேன் ஆனால் நீங்கள் என்னில் கொண்ட வெறுப்பை பெண்ணினத்தின் மீது கொண்டு திருமணமே செய்யாது இருந்து விடுவீர்கள் என்றுதான் இப்போ எழுதுகிறேன்.
 மதன், காதல் என்பது இன்பம் துய்ப்பதற்காக மட்டும் இறைவன் உருவாக்கிய ஒரு வழி அல்ல. தான் துன்பமுணர்கின்ற பொழுதும் தன் இணையின் மனம் தினையளவும் துன்பமடையக்கூடாது என்றுதான் உண்மையான காதல் கொண்ட உள்ளம் நினைக்கும் அதே காதலை அந்தப் புனிதமான காதலைத்தான் நான் உங்கள் மீது வைத்திருந்தேன். ஆனால் இப் பொல்லாத நோய் என்னைத் தீண்டியது. நான் ஒரு நில நாட்களுக்குள் இறக்கப் போவது தெரிந்தது உங்களை மணந்து கொள்ளச் சம்மதித்தால் அது சுயநலம். என் சுயநலத்திற்கு என் உயிரிலுமினிய  உங்களைப் பலிகொடுக்க நான் விரும்பவில்லை. அதுதான் இப்படிச் செய்தேன் மதன் பிளீஸ் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இக்கடிதம் என் உயிர் பிரிந்தபின் கூட உங்களுக்கு கிடைக்கலாம் ஆனால் மனதைத் தளர விடாதீர்கள் உங்கள் எழில் முகத்தை நான் கடைசியாக ஒருமுறையாவது பார்க்க வேண்டும் உயிருடன் போராடியபடி உங்களுக்காக் காத்திருக்கும்.
   என்றும் உங்களின் அன்புள்ளம்
    கல்யாணி

 படித்து முடித்தது தான் தாமதம் உடனே காரை எடுத்துக் கொண்டு விரைந்தான் கார் கொஸ்பிற்றலை நோக்கி விரைந்தது ''கல்யாணி நீ என்னை விட்டிற்றுப் போக மாட்டாயம்மா போயிராதயம்மா" என்று புலம்பியபடி ஒவ்வொரு வாட்டாகத் தேடினான். கடைசியில் அந்த வாட்டில் ''ஓ" என்ற அழுகை ஒலி ''கல்யாணி"" ஆஸ்பத்திரியே அதிரிந்தது ஆம் கல்யாணி தன் இதயத்தின் நாயகனைக் இறுதியாககர் கூடக் காணாமல் இறுதி யாத்திரைக:குப் புறப்பட்டிருந்தாள் ''கல்யாணி, கல்யாணி, கல்யாணி"  எந்தமதன் தன் இறப்பால் துன்பமடையக் கூடாது என்று கல்யாணி நினைத்தாளோ அந்த மதன் இன்று சித்தப் பிரமை  பிடித்தவனாய் அவளை உற்றுப் பார்த்த வண்ணம் நின்று கொண்டிருக்கிறான்.

(யாவும் கற்பனை)

வகைப்படுத்தப்பட்ட பகுதி: சிறுகதைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 4, 2014