ஜன்னல் வழியே பார்வையை ஓடவிட்ட பத்மாவின் உள்ளம் கனத்தது. வெளியே தெரிந்த வானத்தை வெறித்து நோக்கினாள். அவள் காதுகளையே நம்பமுடியவில்லை. சற்று நேரத்துக்கு முன் அவள் கணவன் மூர்த்தி கூறிய வார்த்தைகள்……. எல்லாம் உண்மை தானா……? இல்லை…… இல்லை….. இந்த மகிழ்ச்சியான ஐந்து வருட திருமண வாழ்க்கைக்குப் பின்னுமா அவருக்கு அப்படிச் சொல்லத் தோன்றியது….! அவர் வார்த்தைகள் உள்ளத்திலிருந்து வந்ததா…..? அல்லது….. அவள். கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.
 ''மம்மி….. ஏன் டடி என்னை Day Care இல விடேல்லை. ஏன் மம்மி டாடா சொல்லேல்லை…… ஏன் மம்மி…… சொல்லுங்கோ மம்மி…. அவள் சட்டையைப் பிடித்து உலுக்கியவாறு சிணுங்கினான் நாலு வயதான ஒரே மகன் ரமேஷ்.

''ரமேஷ்குட்டி அப்பா மறந்திட்டார் போலை….. மம்மி கொண்டு போய் விடுறன்…." சூடாக வழிந்த இருசொட்டுக் கண்ணீரை ரமேஷ் அறியாமல் துடைத்துக் கொண்டாள்.
 ''மம்மி….. டாடி சண்டை போட்டாரா மம்மி…"' டாடா சொல்லாமப் போயிட்டாரே டடி…" அந்தப் பிஞ்சுமனம் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டது.
 ''ஷ்ஷ்ஷ்….. சும்மா இரு ரமேஷ்….." அதட்டியவாறு ரமேசை Day Care க்குக் கூட்டிச் செல்ல ஆயத்தமானாள். கதவைப் பூட்டிக் கொண்டு இறங்கியவள் சற்றுத் துணுக்குற்றாள்.
 ''ஹலோ பத்மா குட்மோனிங்…… ரமேஷ் குட்டி குட்மோர்னிங்". எதிர்வீட்டு ஜன்னல் வழியூடாக உற்சாகத்துடன் கேட்ட குரலில் பத்மாவின் நெஞ்சு துணுக்குற்றது.
கணேஷ்!
''என்ன….. ரமேஷ்குட்டி…. அப்பா கூட்டிப் போகேல்லையோ….
''இல்லை அங்கிள்…. டடி டாட்டா கூடச் சொல்லாமப் போயிட்டார்…."
''பத்மா….. நான் கூட்டிக் கொண்டு போய் விடுறன்…." கணேஷ் ஆவலுடன் கூறினான்.
''கணேஷ்!" தனக்குள் முணு முணுத்தாள் பத்மா.
''வேண்டாம் கணேஷ்…. நான் வீட்டில சும்மா தானே இருக்கிறன்…… உங்களுக்கேன் வீண் சிரமம்……" பத்மா கூறியபடி நடக்க முற்பட்டாள்.
கணேசின் முகம் வாடியது. ''உங்களுக்கேன் வீண் சிரமம்…. பத்மாவா கூறினாள்…. அவனால் நம்ப முடியவில்லை.
''என்ன நடந்தது இவளுக்கு?"" இப்படி முகத்திலை அடிச்சாப்போலை பதில் சொல்ல மாட்டாளே''! கனத்த இதயத்துடன் அவளை நோக்கினான்.
''இனிமேல் கணேசோடை கதை வைச்சுக் கொள்ளாதை. கண்டால் நான் பொல்லாதவன் ஆகிவிடுவன்….. அவையும் வரக்கூடாது. நீயும்….. அவன்ர வீட்டுப் பக்கம் போகக் கூடாது….. இல்லை…. நீ…. அவனோடை…." தன் கணவன் கூறிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் எண்ணியபோது அவள் மனம் கொதித்தது…….
 ''தயவு செய்து என்னுடன் கதைக்க வேண்டாம் வீட்டிற்கு வரவேண்டாம்…. நீ கல்யாணம் ஆகாதவன்….! என்று முகத்தில் அடித்தாற் போல் சொல்லுவதா? எத்தனை வருடப் பழக்கம்….. சின்னஞ் சிறுமியாக அவனுடன் ஓடி ஒழித்து விளையாடியது…… ஒன்றாகப் பாடசாலைக்குப் போனது…… எல்லா நினைவுகளும் அவளை ரம்பமாக அறுத்தது. ஏதோ ஆத்திரத்தில் கணவன் சொல்லி விட்டான் என்பதற்காகத் தூக்கி எறிவதா? அன்பும்…. ஆதரவும் கொண்ட ஒரு மனித  ஜீவன் தானே கணேஷ்.!
 ''எதுக்காகப் பத்மா மாறினாள்…. ஏன் அப்பிடித் தூக்கி எறிந்த மாதிரிப் பதில் சொன்னாள்…." உள்ளே சென்றவன். சடார் என நாற்காலியில் சாய்ந்தான்.
 ''கணேஷ்…. இப்ப நேரமென்ன? வேலைக்குப் போக வேணுமெல்லே…."" உள்ளே அம்மா கூப்பிடும் குரல் கேட்டது.
 ''வெளிக்கிடவேணும்…'' சோர்வுடன் எழுந்து உள்ளே சென்றான்.
 Day Care பக்கத்திலை தான்…. உடனை ரமேசை விட்டிட்டு வந்திடுவாள்…. ஏன் பத்மா ஒரு மாதிரியாய் இருக்கிறாள் என்று கேக்க வேணும்……" அவள் வரும் வழியைப் பார்த்துக் கொண்டி ருந்தான் கணேஷ். அவன் நினைவுகள் பின்னோக்கிச் செல்கின்றது. அவன் வீட்டுக்கு அருகு வீடு தான் பத்மா வீடு. கணேஷ் தாய்க்கு ஒரே மகன்….. சிறுவயதிலிருந்து பள்ளிக்கூடம் போகும் போது பத்மாவையும் அழைத்துச் செல்வான்….. இருவரும் இணைபிரியாத நண்பர்களாகவே பழகினார்கள். கணேஷ் பல்கலைக் கழகம் சென்று….. பின் கொழும்பில் கை நிறையச் சம்பாதிக்கும் உத்தியோகத்தில் இருந்தான். பத்மா திருமணமாகிக் கனடா சென்று விட்டாள். கணேசும், எப்படியோ கனடா வந்தபோது பத்மாவும் அவள் கணவர் மூர்த்தியும் வீடெடுத்து, சகல உதவிகளையும் செய்தார்கள். மூர்த்தி கலகலப்பாகப் பேசும் சுபாவம் உடையவன். ரமேசும் அங்கிள் அம்மம்மா என அவர்கள் வீட்டிலேயே எந்நேரமும் இருப்பான்…… பத்மா வீட்டிற்கு அருகில் வந்து ஒரு வருடம் ஆகிவிட்டது பத்மாவின் முகம் வாடி அவன் இதுவரை பார்த்தது கிடையாது. பத்மாவிற்கும், மூர்த்திக்கும் அப்படி ஒரு பொருத்தம்.
 பத்மாவின் காலடிச் சத்தம் அவனை உணர்விற்குக் கொண்டு வருகிறது. திரும்பிக் கூடப் பார்க்காமல் சென்றது அவன் உள்ளத்தைச் சுட்டது.
 ''என்ன மனக்கஷ்டம் இவளுக்கு? ஏன் இப்படி நடந்து கொள்கிறாள்?….. உடனே போய் கேட்கவேண்டும்.
''கணேஷ்''…. பத்மாவின் வீடு செல்லப் புறப்பட்டவனை அம்மாவின் கண்டிப்பான குரல் தடுத்து நிறுத்தியது.
 ''இப்ப எங்கை போறாய் தம்பி""….. அம்மாவின் குரலில் தொனித்த கோபம் அவனை நிறுத்தியது. மூர்த்தி இல்லாத நேரங்களில் பத்மா வீட்டிற்கு கணேஷ் போவதில்லை. என்னதான் சிறுவயதுத் தோழி என்றாலும், அவள் கலியாணமானவள் என்று சொல்லி வைத்திருந்தாள். ஆனால்…. இன்று தன் உயிர்த்தோழி மனம் துன்பப்படுகிறாள்…. என்ன நடந்ததென்று விசாரிக்காமல் இருப்பது சரியா…..?
 ''அம்மா…… ஒருக்கா பத்மாவைப் பாத்திட்டு வாறன்…"வேகமாக நடந்து கதவைத் தட்டினான்.
 ''யாரது…?'' கர கரத்த குரலில் கேட்டாள். பத்மா.
''நான் தான்…. கணேஷ்…. கதவைத் திற பத்மா…"
''நீ…. நீ இன்னும் வேலைக்குப் போகேல்லை….?
''போகவேணும்…. ஒரு நிமிஷம் உன்னைப் பாத்திட்டு…. அவன் முடிக்கவில்லை கதவைத் திறந்த பத்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் பொல பொலவெனக் கொட்டியது.
 ''பத்மா…. ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது? பதட்டமாகக் கேட்டான் கணேஷ்.
 ''கணேஷ்…. தயவு செய்து போய்விடு….. என்னை தனியா கொஞ்ச நேரம் இருக்கவிடு''.
 ''பத்மா….. என்ன நடந்தது….''? ஆதங்கத் துடன் கேட்டான் கணேஷ்
''அதையெல்லாம் உன்னெட்டைச் சொல்ல முடியாது…… அது……. அது…… எங்கட குடும்ப விஷயம்….
கணேஷ் திகைப்பும், வருத்தமும் மேலிட பத்மாவை நிமிர்ந்து நோக்கினான்.
 ''ஒகே பத்மா…. ஏதாவது உதவி தேவைப்பட்டா சொல்லு….. நான் மூர்த்தியோடை கதைக்கிறன்'' குரல் தழுதழுக்க கதவை மூடிக் கொண்டு வெளியேறினான் கணேஷ்.
 ''கலியாணம் ஆகாதவன்….'' பத்மாவின் வார்த்தைகள் உள்ளத்தில் முள்ளாகக் குத்தியது. தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவன் ஏன் இன்னும் கலியாணம் செய்ய வில்லை….? பலரும் கேட்ட கேள்வியையே பத்மாவும் கேட்டாள். நேரம் வரட்டும் என்ற பதிலைத் தான் எல்லோரிடமும் சொன்னான். ஆனால்…. அவன் வாழ்க்கையில் அந்த நேரம் வரப்போவதில்லை என்பது அவனுக்கு மட்டுந்தான் தெரியும்…..
 ''என்னப்பா கணேஷ்… பத்மா என்ன சொன்னாள்?'' தாயின் கேள்வியில் துணுக்குற்றான் கணேஷ்.
''இனிமேல் வீட்டுக்கு வரவேண்டாம்…"" என்று சொல்லியிருப்பாளே?
''அம்மா'' திடுக்கிட்டவாறு தாயின் முகத்தை நோக்கினான்.
''அம்மா அவ அப்பிடி ஒண்டும் சொல்லேல்லை சொல்லவும் மாட்டா'' ''உண்மை தானே தம்பி சொல்லியிருப்பான்.'' கேள்வியில் கேலி தொனித்தது.
''சும்மா இருங்கோ…. பத்மா ஒரு நாளும் அப்பிடிச் சொல்லமாட்டாள்''….. தொண்டைக்குள் ஏதோ சிக்கியது போன்ற உணர்வு…. ''ஏன் அம்மாவிடம் பொய் சொல்லவேணும்….'' தனக்குள் நகைத்தான் கணேஷ்.
''சரி சரி…. ஒருநாள் பத்மா வீட்டை வராதை எண்டு சொல்லத்தான் போறாள்…. அப்ப பாரன்…. நீயும் உன்ரை சிநேகிதமும் அம்மா அலுத்துக் கொண்டாள்.
''கணேஷ்…. உனக்கு ஒரு விசயம் சொல்ல வேணும்…. கொஞ்சநாளா மூர்த்தியின்ரை பார்வையே சரியில்லை…. சரியா முகங்கொடுத்தும் பொடியன் கதைக்கிறேல்லை…. நீ… கவனிச்சியோ…. என்னவோ…. உன்ர அப்பாவோடை முப்பது வருஷம் வாழ்ந்தவள் அப்பா நான்….. ஆரோடை கதைச்சாலும்… சந்தேகப்படுறவர் அவர்…..'' ''அம்மா''' முணுமுணுத்தவாறு ஆதங்கத்துடன் தாயை அணைத்துக் கொண்டான்.
 ''கணேஷ் நான் ஆரையும் குறை சொல்லவரேல்லை என்ர மகனைப் பற்றி எனக்கும் தெரியும்…. நீயும் பத்மாவும் சின்ன வயசு நண்பர்கள்….. ஆனா நீயோ கலியாணமாகாதாவன்…. பனை மரத்தடியிலை இருந்து பாலைக் குடிச்சன் எண்டு சொன்னா யாராவது நம்புவாங்களா?….. உங்க ரெண்டு பேரையும் பற்றி மற்றவை பேசுறதை நானும் கவனிச்சுக் கொண்டுதான் வாறன்… அது பத்மா புருஷன் மூர்த்தி காதிலையும் விழுந்திருக்கும்…. கணேஷின் தாய் முடிக்கவில்லை.
''அம்மா…'' கண்களில் நீர் மல்க தாயை நோக்கினான்.
''அம்மா… எனக்கு எழுத்து முடிஞ்சு ஒரு மாசங்கூட ஆகேல்லை….. காரணத்தைச் சொல்லாமல் தன்ரை வாழ்க்கையை முடிச்சுப் போட்டுப் போயிட்டுது….. எனக்கு இனியொரு கலியாணந் தேவை இல்லை…. எண்டு எப்பவோ முடிவெடுத்துப் போட்டன்…. பத்மா என்ரை சிறுவயதுத் தோழி…. அவ்வளவுதான்…."" அவன் கண்கள் கலங்கியது.
 ''தம்பி…. உன்ரை மனச்சாட்சி உனக்குப் பெரிசாய் இருக்கலாம்… நீ ஆண்…. பத்மா பெண்…. அதிலும் கலியாணமானவள் அவள் தன்ரை பேரை மட்டுமில்லை, புருஷன்ரை பேரையும் காப்பாத்த வேணும்…. மற்றவை இழிவாப் பேசினா மூர்த்திக்கும் தலைகுனிவு தானே''. அம்மா சொல்வதிலும் அர்த்தம் இருப்பதாக உணர்கிறான்.
 அவன் மனக்கண் முன் கணேஷ் என்று செல்லமாக அழைத்து ஓடி வந்த சிறுமி பத்மா ஒரு கணம் தெரிகிறாள்.
 ''அது எங்கடை குடும்ப விஷயம்''….. மீண்டும் மீண்டும் பத்மா கூறிய வார்த்தைகள் சம்மட்டியால் அடிப்பது போலிருந்தது உள்ளம் ஊமையாக அழுதது.
 தனக்கென நிச்சயிக்கப்பட்டவள் காரணம் சொல்லாமல் இந்த உலகை விட்டு ஓடிய போது அழுதவன். மீண்டும் தன் தோழிக்காக, அவளைப் பிரியப் போவதை எண்ணும் போது….. அதே உணர்வும் அதே வேதனையும்….. கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தோடியது.
 ''அம்மா….. வேலைக்குப் போயிட்டு வாறன்….'' சந்தோஷமாகக் கிளம்பிய மகனை ஆச்சரியத்துடன் நோக்கினாள் கணேசின் அன்னை. இன்று முழுக்க வேலைக்குப் போகாமல் அழுது புலம்புவான் என்றல்லவா எதிர்பார்த்தாள்…?
''ஹலோ… மூர்த்தி..'' தன் முதுகில் தட்டிய கணேசை ஒரு புழுவைப் போலப் பார்த்தான் மூர்த்தி.
''உங்களுக்கு ஒரு குட் நிய+ஸ்….  நானும் அம்மாவும் வன்கூவருக்கு மாறப் போறம்…''
முகத்தில் நிம்மதி பரவ பெருமூச்சு விட்டான் மூர்த்தி.
''அப்படியா வேண்டா வெறுப்பாகக் கேட்டான் மூர்த்தி…..
''ரமேஷ் குட்டி…. அம்மாட்டைச் சொல்லு…."' புறப்பட இருந்தவனை மூர்த்தியின் குரல் தடுத்தது.
''கணேஷ்…. அவளெட்டை நீங்களே சொல்லலாமே….'' அவன் முடிக்கவில்லை.
''மூர்த்தி…. பத்மாவும் நானும் சிறுவயசு முதல் மனசில களங்கமில்லாமல் பழகினம்…. அதிலை இப்பவும் மாறுதல் இல்லை…. பத்மா சந்தோஷமாக இருக்க வேணுமெண்டால்…. நான்… நான் இடம் மாறுறது தான் ஒரே வழி….. நாடு விட்டு நாடு வந்தாலும்…. நாகரீகம் வளர்ந்தாலும்…. சமுதாயம் ஏற்காததை…. மனசிலை வளர்த்து என்ன பிரயோசனம்…. ஆணும், பெண்ணும் நண்பர்களாய் இருக்கிறது…. எங்கடை சமுதாயத்திலை எப்பவும் இருகோடு தான். ஒரு நாளும் இணைய முடியாது மூர்த்தி….! என்று கூறியபடி நடந்து கொண்டிருந்தான் கணேஷ்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: சிறுகதைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: November 6, 2014