கண் விழி கசிந்த நீரும்
விண் வழி பொழிந்த ஒளியும்
உளியின் வழி பிறந்த ஓசையும்
நாளின் வழி கடந்த காலமும் மீண்டும் புகா
இவையாவும் உறைந்து போகாத உண்மைகள்

சிதைந்து போன பூவும் – தீயினால்
வதைந்து போன மரமும், கொடியும்
புதைந்து பொலிவிழந்து போவதும் – உயிர்
கழைந்து போன உடல் குழைந்து போவதும்
நெகிழ்ந்து போகும் உண்மைகள்

மடிந்து போன கரம்பன் அழகும்
இடிந்து போன கண்ணகிச் சிலையும்
நொடிந்து போன காவலூர் மக்களின் மனமும்
விடிந்து பெய்த இராசயனச் செல் மழையினால்
கடிந்து போன பூமியும்

கொடிந்து வீசிய நச்சு வாயுக்களினால்
வடிந்து போன கால் நடைகளும்
முடிந்த அளவு காவலூரை கருகச் செய்து – சோகத்தில்
படிந்து போக வைத்து ஆண்டுகள் பல ஆகி விட்டன
இவையாவும் பதிந்து போகாத உண்மைகள்

கிளையா போட்டில் விளையாட்டாக
களைக்காமல் கல்யாணப்பாட்டி சிறப்பாக வைத்தாலும்
இழைக்க இழைக்க ஓடி இனிக்க இனிக்க நம்மூரில்
முளைத்த நம் இனத்தவரோடு, கழிப்பது போல் வருமா?
இவையாவும் நமக்குள் எழுந்து கொள்ளும் உண்மைகள்

நாலாம் சடங்கிற்கு நாக்கு ருசிக்க ஆட்டிறைச்சிக் கறி
“ ஒரு கிடாய்க்கு இருபத்தைந்து தேங்காய் கணக்கு”
இது சுந்தரிப் பாட்டியின் ஓங்கிய குரலின் வாதம்
“ இல்லை இல்;லை இருபது தேங்காய் போதும்
இது கந்தரோடை ஆச்சியின் விளக்கம்”

இப்படிச் சடங்கு வீட்டில், சிறு சிறு வாக்கு வாதம்கள்
சண்டைகள் சச்சரவுகள்
முடிவில் ஆட்டிறைச்சிக்கறியின் உருசியில்
உருகிப் போகும் உறவினர்கள்
என்ன இருந்தாலும் உறவுகள்  போல் வருமா?
என்ற பெருமூச்சுடன் வெளியேறல்
இவையாவும் இங்கு உருண்டாலும் வருமா?

புதைந்து போன உடல்கள்
மிதந்து வந்தாலும்
பிரிந்து போன உறவுகள்
அறிந்து கொள்ளும் தூரத்தில் இருந்தாலும்
தொலைந்தவை தொலைந்தவையே!!

வாழ்க்கையும் வசதியும் கூடி அமைந்தாலும்
உடுக்கை இழந்தவன் கை போல் ஆகிவிட்டதே நம் நிலை
புதுப்புது முகவரி முத்தாய்க் கிடைத்தாலும்
மூழ்கிப் போன முகவரிகளை மூழ்கி எடுத்தாலும்;
முத்தாய்க் கிடைக்காது

வீழ்ந்து விட்டோமே விதியின் சதியினால்
அமிழ்ந்து விட்டோமே ஆழ்கடல் அளவு துயரத்தில்
இவையாவும் உமிழ்ந்து சொன்ன உண்மைகள்

மறைத்து மறைத்துச் சொன்னாலும்- நம் கலாச்சாரங்கள்
மறைந்து கொண்டிருப்பது என்னமோ
மறைக்க முடியாத உண்மைகள் ஆவதும்
குறைக்க முடியாமல் தேவைகள்
குமுறிக் கொண்டு சென்றாலும்
உறைந்து போகும் குளிரினால் உணர்வுகள்
விறைத்துப் போவதும்…
அறைந்து சொல்லும் உண்மைகள்

தேசங்கள் பல கடந்து வாசங்கள் யெ;தாலும்
நேசங்களோடு பாசங்களுடன் வாழ்ந்த நம்மூர் போல் வருமா?
இங்கு நம் குழந்தைகள் தினம் தினம்
துணி வாங்கி மணிமணியாய்ப் போட்டாலும்
அங்கு நம் மண்ணில் தீபாவளி பொங்கல் வருஷம் என்று

தினங்களில் மட்டும் வசதிக்கேற்ப
சீத்தை, டெர்லின், வெற்லுக் என்று உடுத்தி
ஏழை பணக்காரன் என்ற பேதமின்றி
கோவிலிலும் குளத்திலும் போட்ட
கும்மாளம் போல் வருமா?

சிவன் கோவில் தேர் என்றால்
சிறு ஊரே கூடி நிற்கும்
முருகனின் சூரன் போர் விழாவிற்கு
முழுக் கரம்பனே ஆரவாரப் படும்
கண்ணகியாள் பொங்கல் என்றால்
காட்டில் ஈச்சங்காய்கள் பூத்துக் குலுங்க
கடற்கரையில் இராவணன் மீசை உருண்டோட
மாட்டு வண்டி கட்டி
காடே கலகலத்துப் போகும்

இது மட்டுமா?
வேட்டைத் திருவிழா வைரவர் மடை வாழை வெட்டு
இப்படி எத்தனை விழாக்களில்….
தும்பு மிட்டாய், குச்சி ஐஸ், கடலை கச்சான்,
அம்மா உருண்டை, அல்வாக்கள்
சக்கரைத்தண்ணி, மோர்த்தண்ணி என்று
மகிழ்ந்து மகிழ்ந்து அனுபவித்த மனசுக்கு
இங்கு எதைச் செய்தாலும்
நினைத்துப் பார்க்கும் அளவிற்கு இருப்பதில்லை

சூரிய ஒளியில் வாசலுக்கு வாசல்
வீரியமாகக் கோலம் போட்டு
கரும்பு நட்டு வெடி வெடித்து
பாரிய பானையில் பாசத்தோடு பொங்கிய பொங்கலும்

நேரங்காலம் இல்லாமல் நான்கு சுவருக்குள்
மின்சார அடுப்பில் ஒரு ஆரவாரமும் இல்லாமல்
ஒரு ஓரமாய் நின்று பொங்கிய
பொங்கலும் ஒன்றாகுமா?
இவையாவும் நாம் அனுபவித்த மனசுக்கு
தெரிந்த உண்மைகள்

மண்ணில் பிறந்து தவழ்ந்த மக்கள் இல்லாததால்
மண்ணில் மணம் இல்லாமல் போனாலும்
அம்மண்ணில் இருந்து மலர்ந்த மரங்களில் இருந்து
கனிந்த கனிகள் நாங்கள்
உதிர்ந்த பழங்கள் மீண்டும் மரம் புகா விடினும்..?

இங்கு இம்மண்ணில் இருந்து எம்மால்
முடிந்து செய்யும் சிறு சிறு உதவிகள்
அங்கு அம்மண்ணில் படிந்து
பல்லோர்க்கு பெரு உதவியாக மாறி நிற்கும்
இவையாவும் மறைந்து போகாத
உண்மைகளாக மாறி நிற்கும்
கடந்து வரும் காலங்களில்..

 -காவலூர் வரதன்