தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது. உடலும் ஆரோக்கியமாக இருக்கும். 

மலச்சிக்கல் உள்ளவர்கள் விளாம்பழம் அல்லது வில்வம்பழத்தின் உட்சதையை எடுத்து சர்க்கரை சேர்த்துண்டு வர மலச்சிக்கல் நீங்கும்.

குழந்தைகளின் உணவில் வல்லாரையை அடிக்கடி சேர்த்து வந்தால் ஞாபகசக்தி விருத்தியாகும்.

இரைப்பை – குடற்புண் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு, மூன்று தடவை வாழைத்தண்டு அல்லது வாழைக்கிழங்கை பருப்புக்கறியாக அல்லது பச்சடியாக, பாற்சொதியாக செய்து சாப்பிட்டு வர குணம் ஏற்படும்.

கிராணிக்கழிச்சல் எனப்படும் நாட்பட்ட வயிற்றோட்டம் உள்ளவர்களும், சாப்பிட்ட பின் வயிற்றாலை போகும் பிரச்சினையுள்ளவர்களும், வாழைத்தண்டுச்சாற்றை ½ கோப்பையளவில் தினம் 2,3 தடவை பருகிவர குணம் காண்பர்.

மூல நோய் உள்ளவர்கள் கருணைக்கிழங்கு அல்லது தாமரைக்கிழங்கை அடிக்கடி கறிசமைத்து உண்டு வரலாம்.

அக்கரம் எனப்படும் வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் அகத்தியிலையை பாற்சொதி செய்து சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளலாம். மாணித்தாக்காளிப்பழம் அல்லது இலையையும் உணவில் சேர்த்துப் பயன் பெறலாம்.

சிறுநீர் எரிச்சலுள்ளவர்கள் வெள்ளரிக்காயைச் சாப்பிடலாம். வெள்ளரிக்காயை பாற்கறியாக அல்லது குழம்பாகச் செய்தும் பயன்படுத்தலாம்.

வெள்ளைபடுதல் (Leucorrhoea) என்னும் நோயால் பாதிக்கப்படும் பெண்கள் நீத்துப்பூசணிக்காயை கறி சமைத்து உண்பதால் நலம் பெறலாம்.

மாதவிடாய்க் காலங்களில் அதிக இரத்தம் வெளியாகும் பெரும்பாடு என்னும் நோயினால் அவதியுறும் பெண்கள் விடத்தில் இலையைப் பிட்டு மாவுடன் சேர்த்து குழைத்துப் பிட்டாக அவித்து உண்டு வருவதால் நலம் பெறலாம்.

சிறுநீரகக் கல்லால் பாதிக்கப்பட்டவர்கள் முள்ளங்கி, சுரைக்காய் என்பவற்றைத் தமது உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஈரப்பலாக்காயை கறி சமைத்து உண்பதால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். ஈரப்பலாக்காயை கறி சமைக்கும்போது வெந்தயம், உள்ளி, முருங்கையிலை என்பவற்றைச் சேர்த்துச் சமைப்பதால் வாய்வு வயிற்றுப்பொருமல் போன்றன ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயுள்ளவர்கள் வாரத்தில் 2,3 தடவை பாகற்காய்ச்சாறு ½ கோப்பை வீதம் காலையில் பருகி வரலாம். பாகற்காய்ச்சாறு குடலில் குளுக்கோசு அகத்துறிஞ்சப்படுவதைக் குறைப்பதுடன் இரத்தத்தில் குளுக்கோசு அதிகரிப்பதையும் கட்டுப்படுத்துகிறது. குடற்கிருமிகளை அழிப்பதிலும் பாகற்காய்ச்சாறு உதவும்.

நீரிழிவு உள்ளவர்கள் சக்கரைகொல்லி எனப்படும் சிறுகுறிஞ்சா இலையை உண்பதாலும் நிவாரணம் பெறலாம். இது இன்சுலின் என்னும் ஓமோன் சுரக்கப்படுவதைத் தூண்டி இரத்தத்தில் குளுக்கோசின் அளவு அதிகரிப்பதைக் கட்டுபடுத்த உதவுகிறது. சிறுகுறிஞ்சா 2,3 இலையைக் காலையில் பச்சையாகச் சப்பிச் சாப்பிடலாம். கறியாக அல்லது வறை செய்தும் உண்ணலாம்.

மழைக்காலம் அல்லது பனிக்காலதில் வரும் தொய்வு, முட்டு நோய்க்கு மந்தாரகாசம் என்று பெயர். இதனால் அவதியுறுபவர்கள் மொசுமாசுக்கை இலையை ரொட்டியாக அல்லது அரையலாகச் செய்து சாப்பிடுவதன் மூலம் நிவாரணம் பெறலாம்.

பெண்கள் பெரும்பாட்டு நோய்க்கு வாழைப்பூவைக் கறிசமைத்தும் உண்ணலாம்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் கொன்றை இலைத்துளிரை வறுத்து அரையல் செய்து உண்ணலாம்.
இருமல், சளியுள்ளவர்கள் தூதுவளை இலையை அரையல் செய்து உண்பதால் பயன் பெறலாம்.

செவ்வரத்தம்பூவைப் பச்சடி செய்து உண்டு வந்தால் சலக்கடுப்பு, கால்வீக்கம் என்பன நீங்கும். உடற்சூடு தணியும்.

இதரை வாழைப்பூவைக் கறி சமைத்து உண்டு வந்தால் கருத்தரிக்கும் வாய்ப்பு ஏற்படும். குழந்தை இல்லாத பெண்கள் தமது உணவில் இதனைச் சேர்த்து வரலாம்.

குழந்தையில்லாத தம்பதியர் செவ்வாழைப்பழத்தைத் தினமும் சாப்பிட்டு வந்தால் குழந்தைப்பேறு ஏற்படவாய்ப்புண்டு.

அத்திப்பிஞ்சை குழம்பாகச் சமைத்து உண்டு வந்தாலும் பெண்கள் பொரும்பாட்டு நோய் நீங்கும்.

பொன்னாங்காணியை நெய்யில் வதக்கிக் கறி சமைத்து உண்டு வந்தால் கண்பார்வை தெளிவுறும். உடல் பலம் பெறும்.

மஞ்சள் கரிசலாங்காணிக் கீரையை கறி சமைத்து உண்டுவந்தால் பித்த சம்பந்தமான நோய் நீங்கும்.

வேப்பம்பூ பச்சடியாக, வடகமாக உண்டு வந்தால் இரத்தத்தில் கொலஸ்ரோலின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: மருத்துவம்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: October 13, 2014