சிந்து நதிக்கரை ஓரத்திலே -கி.மு
        சேர்ந்த மூவாயிரம் ஆண்டு முன்னே
        முந்தைப் பழம் பெரும் நாகரீகம் ஒன்று
        முதிர்ந்து வளர்ந்ததாம் கேளுங்கடி

        திராவிடர் என்றோர் இனத்தவர் தாம் -அங்கு
        சேர்ந்து வளர்த்தனர் பண்பாட்டை
        சீரிய வாழ்க்கையைக் கண்டவராம் அவர்
        சிறந்த நகர்களை அமைத்தவராம்

        சிற்பக் கலையில் சிறந்தவராம் – அவர்
        தேவி வழிபாடு கண்டவராம்
        அற்புதமாகவே அமைத்திட்ட சாலைகள்
        அதி நுட்பமானதாம் கேளுங்கடி

        ஹரப்பா மொஹெஞ்சதாரோ என்ற – நகரங்கள்
        காண்பவர் மெச்சிய பொன்னகரம்
        சிந்து நதிமணல் மூடிடவே அவை
        சிதைந்து மறைந்ததாம் மண்ணினுள்ளே

        மண்ணினுள் மூடி மறைந்திட்ட போதிலும் – மக்கள்
        மகிமை மறைந்துமே மாளவில்லை
        இன்னுமவர் தம் பண்பாடெனும் செல்வத்தை
        ஏற்றுக் கொண்டே இன்றும் வாழுகிறார்

வகைப்படுத்தப்பட்ட பகுதி: சிறுவர் பூங்கா.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 3, 2014