கரடியை உங்களில் பலரும் மிருகக் காட்சிச் சாலையில் பார்த்திருப்பீர்கள். கறுப்பான, கனமான தோற்றமுள்ள பிராணி அது. அதன் வால் மிகவும் குட்டையாகவே இருக்கும். அதற்கு ஒரு கதையும் இருக்கிறது.

ஒருநாள் நரி ஒன்று, யாரோ பிடித்த மீன்களை திருடி எடுத்துக் கொண்டு வந்தது. அதை ஒரு கரடி கண்டுவிட்டது. நரி அந்த மீன்களை தானே பிடித்து வருவதாகவும், மீன் பிடிப்பது வெகு இலகுவானது என்றும் கரடிக்கு கூறிற்று.

கரடிக்கு எப்படி மீன்பிடிப்பது என்றே தெரியாது. அது தயக்கமாக நரியிடம், 'மீன் எப்படிப் பிடிப்பதென்று எனக்கு சொல்லிக் கொடு' என்று கேட்டது.

'அது ரொம்பவும் சுலபமானது' என்றது நரி.

'அது தான் எப்படி?' என்றது கரடி.

கரடிகளுக்கு அப்போதெல்லாம் நீண்ட வால் இருந்தது.

அந்தக் கரடியின் வாலைப்பார்த்து நரி கூறிற்று.

'நீ ஆற்றங்கரையோரமாகப் போ. உன் வாலை தண்ணீரில் நன்றாகப் படும்படி விடு. அப்போது உன் வாலை மீன்கள் கவ்விக் கொள்ளும். உடனே நீ வாலை இழுத்து அந்த மீன்களை எடுத்துக் கொள்' என்று கூறிற்று நரி.

கரடி தன் வாலை ஆற்றிலே விட்டது. அப்போது சில நண்டுகள் கரடியின் வாலைக் கவ்வி அதன் முக்கால் பகுதி வாலை கடித்து எடுத்து விட்டன.

வலிதாங்காத கரடி 'ஹோ..ஹோ' என்று கத்திற்று. அறுந்த வாலுடன் காட்டுக்குள் ஓடிற்று. அன்றிலிருந்து கரடிகளுக்கு மொட்டை வாலே அமைந்தது. அது மட்டுமல்ல கரடிகள் அதன் பிறகு ஆற்றங்கரைக்குப் போவதுமில்லை. நரிகளைக் கண்டால் அடித்து துவைக்காமல் விடுவதுமில்லை.