காக்கைக் கூட்டில் குயில் ஒன்று
        கவர்ந்து அதனுடை முட்டைகளை
        கோலாகலமாய் குடித்த பின்பு
        குள்ளமாய்த் தன் முட்டைகளை
        காகக் கூட்டில் இட்டதுமே
        கடுகப் பறந்து போனதுவே

        சில பல வாரம் சென்றதுமே
        சிறிய பறவைக் குஞ்சுகளைச்
        சீராய் இரையும் கொடுத்தணைத்து
        சிறப்பாய் வைத்துக் காப்பாற்றி
        வாரீர் என்று வழிகாட்டிக் காகம்
        வளர்ந்த மரத்தைக் காட்டியதே
        
        குஞ்சுகள் பறந்து பறந்து போய்
        கூ கூ என்று கூவினவே
        குயிலும் அவற்றின் குரலினையே
        குணமாய் அறிந்து கொண்டதுவே
        குயிலும் கூவி விளையாடிக்
        கூட்டிக் கொண்டு பறந்ததுவே

        காகக் கூட்டில் வளர்ந்தாலும்
        குஞ்சு குயிலின் குஞ்சென்றால்
        கூவிப் பாடத்தான் முடியும்
        குழைந்து கரைய முடிவதில்லை
        இயற்கை வகுத்த நியதி அது 
        ஏனென்றால் நான் என் சொல்வேன்.

வகைப்படுத்தப்பட்ட பகுதி: சிறுவர் பூங்கா.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: December 3, 2014