mainaKoliகுப்பையைக் கிழறிக் கொண்டிருந்த கோழி மர இடுக்கில் இருந்த ஒரு கூட்டைக் கண்டது. அந்தக் கூட்டை எட்டிப் பார்த்தது. அதற்குள் சில முட்டைகள் கிடந்தன. அதைப்பார்த்த கோழிக்கு இரக்கம் உண்டாயிற்று. அந்த முட்டைகளின் மேலே உட்கார்ந்து அவற்றை அடைகாக்கத் தொடங்கிற்று.

இதை மரத்தின் மேலே இருந்த ஒரு மைனாக் குருவி பார்த்துக் கொண்டிருந்தது.

கோழி அடைகாக்கத் தொடங்கியதும் அதன் அருகே பறந்து சென்றது மைனா. உரத்தகுரலில் கோழியிடம் கூறிற்று:

'கோழி அக்கா, இரக்கம் கொள்வது நல்ல குணந்தான். ஆனால் நீ இப்போது பாம்பு முட்டைகளை அடைகாத்துக் கொண்டிருக்கிறாய். இந்த முட்டையில் இருந்து பாம்புக் குஞ்சுகள் வெளியேறினால் அது முதலில் உன்னைத்தான் கொத்திச் சாகடிக்கும்'

இதைக்கேட்ட கோழி அஞ்சி நடுங்கிற்று. தீமை தோன்ற உதவுவதால் தீமையே உண்டாகும் என்று நினைத்தபடியே அக்கோழி, அந்தப் பாம்புக் கூட்டை விட்டு வெளியேறிற்று.