நேரான பாதை

       நேரான பாதையிலே செல்வோம் செல்வோம்
        நிலையாக ஓரிடத்தில் நிற்போம் நிற்போம்
        சீராக யாவையுமே பார்ப்போம் பார்ப்போம்
        சிறப்பான தனிவழியைக் காண்போம் காண்போம்.

பூனைக்குட்டி

        பூனைக்குட்டி பூனைக்குட்டி எங்கு போனாய்
        பொன்னான லண்டன் மாநகரம் போனேன் 
        லண்டன் மாநகரத்தில் எதனைக் கண்டாய்?
        நதி கண்டேன்
        நதிமேலே பாலம் கண்டேன்
        நதிக்கரையில்
        வெஸ்ற்மின்ஸ்ரர் மணியைக் கண்டேன்

பூவழகு

       முல்லை மலர் மொட்டு
        முகிழ்த்து வரும் ரோஜா
        அல்லிமலர் அரும்பு
        அரிய கனகாம்பரம்
        மல்லிகைப் பூவினங்கள்
        மகிழ்வூட்டும் அப்பிள்பூ
        இல்லை எனாதபடி
        இதழ் விரிக்கும் தாமரை

நயாகரா நீர்வீழ்ச்சி

        நயாகரா நீர் வீழ்ச்சி
        நாடுவோர் கண்காட்சி
        வெண்பனி வீழ்வதுபோல்
        வீழ்ந்திடும் நீரலைகள்

        விசிறியே தண்ணீரால்
        விளையாட்டாய் நனைத்துவிடும்
        ஓடத்தில் போவோரங்கே
        ஓடவே முடியாதப்பா

குருவிக் கூண்டு

        கோணற் புளிய மரத்திலொரு
        குருவிக் கூண்டு அதில்
        கொஞ்சக் காலம் வாழ்ந்தனவே
        குருவி இரண்டு

        கூடி வாழக் குஞ்சுகளும்
        கீச்சுக் கீச்சென
        கொஞ்சிக் கொஞ்சிப் பாடினவே
        ஆரவாரமாய்

வண்டி

        அப்பா செய்த வண்டி
        அழகான வண்டி
        சுதா ஓட்டும் வண்டி
        சொகுசான வண்டி

        தம்பி ஓட்டும் வண்டி
        தள்ளி தள்ளி ஓடும்
        தள்ளத் தள்ளத் தானே
        தாவித் தாவி ஓடிடும்

அம்மாவின் அப்பம்

        அம்மா ஒரு நாள் எனக்கு
        அப்பம் இரண்டு தந்தார்
        அருமையான அப்பம்
        அம்மா எனக்கு மூன்று
        அப்பம் வேண்டு மென்றேன்
        அன்புடன் என் அம்மா 
        அப்பம் மூன்று தந்தார்
        'அம்மா நன்றி" என்றேன்

கண்ணான கதிரவன்

        கண்ணான கதிரவனே காவல்புரி நாயகனே
        எம்மீது இரக்கம் வைத்து எல்லா வளமும் தந்திடுவாய்
        காலாகாலத்தி லந்தக் கருமுகிலும் சுமந்து வந்து
        மேலாக எம் வயலுள் விதைத்திட்ட வித்துத் தானும்
        முளையாகி முனைத்து வந்து முதிய பயிர் வளர்ந்திடவே 
        சோனா மாரி பெய்து சுகந் தரவே வையுமப்பா (கண்)

இலங்கை

        இந்திய நாட்டுத் தென் பகுதியிலே – ஓர்
        இன்பத் தீவொன்றினைக் கண்டிடுவோம்
        ஏற்றமுடைய அத்தீவினிலே பலர்
        என்றும் வளத்துடன் வாழ்ந்தனரே

        கன்னலும் செந்நெல்லும் காய்கறியாவுமே -யாரும்
        களிப்புடன் அத்தீவில் பெற்றிடலாம்
        மின்னும் மரகதம் மேலான முத்துக்கள் 
        இன்னும் பல வளம் அங்குண்டு காண்

பிறந்த நாள்


       இன்று எனது பிறந்தநாள்
        எங்கள் வீட்டில் கொண்டாட்டம்
        அம்மா அப்பா யாவரும்
        அநேக பரிசு தந்தனர்

        அக்கா அண்ணா மாமா மாமி
        அன்புப் பாட்டா பாட்டியோடு
        அடுத்த வீட்டு அன்புத் தோழர்
        அநேக வாழ்த்துக் கூறினர்.

எங்கள் வீட்டுத் தோட்டம்

        எங்கள் வீட்டுத் தோட்டம்
        எல்லோருக்கும் நாட்டம்
        இனிய றோசா மலர்கள் 
        எங்கும் நிறைந்த தோட்டம்

        மஞ்சள் சிவப்பு வெள்ளை
        மலர்கள் நிறைந்த தோட்டம்
        மனதில் இன்பம்  ஊட்டி
        மகிழ வைக்கும் தோட்டம்

கடற்கரை

       கடற்கரைக் காற்று வீசுதுபார்
        கடலலை எல்லாம் மோதுது பார்
        கப்பல் கடலில் போகுது பார்
        கலங்கரை விளக்கு மின்னுது பார்

        கடற்கரை மணலின் மீதினிலே
        காற்றுக் கீதம் பாடுது பார்
        கடலின் அலையின் ஓசை தான்
        கல கல மத்தளம் கொட்டுது பார்.

     

சிந்து வெளி நாகரீகம்

        சிந்து நதிக்கரை ஓரத்திலே -கி.மு
        சேர்ந்த மூவாயிரம் ஆண்டு முன்னே
        முந்தைப் பழம் பெரும் நாகரீகம் ஒன்று
        முதிர்ந்து வளர்ந்ததாம் கேளுங்கடி

        திராவிடர் என்றோர் இனத்தவர் தாம் -அங்கு
        சேர்ந்து வளர்த்தனர் பண்பாட்டை
        சீரிய வாழ்க்கையைக் கண்டவராம் அவர்
        சிறந்த நகர்களை அமைத்தவராம்

பழங்கள்

        அப்பிள் பழம் பழுத்திருக்கு
        ஆய்ந்துண்டால் அதிகருசி
        தோடம்பழம் தொங்குதுபார்
        தோலுரித்தால் சுவை சொட்டும்

        முந்திரிகைக் குலைதாங்கும்
        முத்தான பழமினிப்பே
        மாமரத்தில் நிறைந்த கனி
        வளமான சுவைக் கனிதான்

தைப்பொங்கல்

        பொங்கல் விழா தனைத் தமிழர் கொண்டாடுவார்
        புதுப் பானை தனைவைத்துப் பொங்கல் பொங்குவார் 
        பச்சரிசிப் பால்ப் பொங்கல் சர்க்கரைப் பொங்கல்
        பதமாகப் பார்த்தெடுத்துப் பொங்கல் பொங்குவார்

        மங்கலமாய் மனைமுன்னே கோலம் போடுவார்
        மணி விளக்கை ஏற்றி வைத்து ஒளியைக் கூட்டுவார் 
        மாவிலையும் தேங்காயும் மஞ்சளும் வைப்பார்
        மக்கள் உள்ளம் குளிர்விக்கும் கும்பம் ஏற்றுவார்