நல்லைநகர் நாவலர் (1822-1879)

        நல்லை நகர் நாவலர்
        நலங்கள் பல பெற்றவர்
        சொல்லில் வாக்கு வன்மையில்
        சுடரெனவே விளங்கினார்

        சைவமதம் தமிழ்மொழி
        தழைக்க வேண்டி நாளுமே
        சமய நெறிகள் போற்றினார்
        தமிழில் நூல்கள் இயற்றினார்

ஓடம்

        ஓடுகின்ற ஆற்றினிலே
        ஓடம் போகுது
        ஒரு மனிதன் ஓட்டுகின்றான் 
        ஓட யந்திரம்
        உல்லாசமாய்ப் போகிறார்கள்
        ஓடத்தினுள்ளே
        ஒன்று இரண்டு
        மூன்று நான்கு
        ஐந்து ஆறு பேர்

நிலா

        நிலா நிலா வா வா
        நீயும் நானும் ஆடுவோம்
        ஊஞ்சல் ஏறி ஆடுவோம்
        உயரத் துள்ளி ஓடுவோம்

        நிலா நிலா வா வா 
        நீயும் நானும் ஆடுவோம்
        ஊர்கள் எல்லாம் காணுவோம்
        ஒன்றாய் விளையாடுவோம்

        நிலா நிலா வா வா
        நீயும் நானும் ஆடுவோம்.

மீன்கள்

        தொட்டியிலே தண்ணீர்
        துள்ளுகின்ற மீன்கள்
        பச்சை நிறத் தழைகள்
        பல நிறத்தில் மீன்கள்

        ஓடி ஓடித் திரியும்
        ஒரு சிறிய இடத்தில்
        உண்மையிலே அவைகள்
        ஓட வேண்டும் கடலில்

தேனீ

        தேனீ தேனீ பறந்து வா
        தேனை உண்ண ஓடிவா
        பூவைத் தேடி நீயுமே
        பூங்காவிற்குப் பறந்துவா

        தேனீ தேனீ பறந்து வா
        சிறந்த பூவில் இருந்துவா
        தேனை உண்டு மகிழ்ந்துவா
        சிறகடித்துப் பறந்து வா

பூங்கா

        வசந்த காலப் பூக்கள் 
        வண்ண வண்ணப் பூக்கள்
        சிவப்பு நீலம் மஞ்சள்
        சேர்ந்த நல்ல ஊதா

        வெள்ளை நிறம் யாரும்
        விரும்புகின்ற றோசா
        எல்லாம் காணச் செல்வோம்
        எங்கள் பூங்கா தன்னில்

ஈழத்து வளநாடு

        ஈழத்து வள நாடு
        இனிய நல்ல நாடு
        பாலும் தேனும் நிறைந்த
        பழைய பெரும் நாடு

        தேங்காய் மாங்காய் பலாக்காய்
        தேவைக் கேற்ற பழங்கள்
        வாழை தோடை கமுகு
        வளமாய்க் கொண்ட நாடு    (ஈழ)

கடவுள்

         அம்மா என்றால் அன்னை
        அப்பா என்றால் தந்தை
        தெய்வம் என்றால் கடவுள்
        தேவன் என்றால் கடவுள்

        கடவுள் வாழும் வீடு
        கருணை உள்ள நெஞ்சம்
        கடவுள் நம்மைக் காக்கும்
        கருணை காட்டி வாழ்வோம்