moorthyகரம்பனைச் சேர்ந்த நீண்டகால பத்திரிகையாளரும், எழுத்தாளருமான மூர்த்தி செல்லத் துரைக்கு (வீரகேசரி மூர்த்தி) அண்மையில் கனடாவில் கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. 'கனடா பல்வேறின அச்சக, ஊடகவியலாளர் சங்கம்' (National Ethnic Press and Media Council of Canada) நவம்பர் மாத இறுதியில் மார்க்கம் Senaca College ல் மூன்று நாள் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை நடாத்தியது. பல்வேறு நாடுகளையும் சேர்ந்த சுமார் நூற்றி ஐம்பது ஊடகவியலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட கனடா பிரதமர் ஸ்ரீபன் ஹாப்பர் இருபத்தைந்து ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். அவர்களுள் தமிழ் ஊடகத்துறையின் சார்பில் வீரகேசரி மூர்த்தி மாத்திரம் தெரிவு செய்யப்பட்டு பிரதமரிடம் இருந்து சான்றிதழை பெற்றுக் கொண்ட போது பிடிக்கப்பட்ட படத்தினை இங்கே காண்கின்றீர்கள். தனது இருபதாவது வயதில் சிறுகதைகள், கட்டுரைகளை எழுத ஆரம்பித்த மூர்த்தி பின்னர் பன்னிரண்டு ஆண்டு காலம் வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். எண்பதுகளில் கனடாவுக்கு புலம்பெயர்ந்த இவர் தொடர்ந்து பல்வேறு பத்திரிகைகளுக்கு விடயதானங்களை படைத்தளித்து வந்துள்ளார். தற்போது தமிழர் செந்தாமரையின் ஆசிரியக் குழுவில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. இவர் 2001ம் ஆண்டில் 'சுதந்திர மண்' என்ற சிறுகதை தொகுதியினையும் இங்கு வெளியிட்டமை குறிப்பிடத் தக்கது. எமது கிராமத்துக்கே பெருமை தேடித்தந்துள்ள இச்சம்பவத்தினை 'கரம்பொன் நெட்'டில் பிரசுரிப்பதில் நாம் பெருமை அடைகின்றோம்.