moorthy1“வீரகேசரி மூர்த்தியின் படைப்புக்கள் பிற எழுத்தாளர்களின் படைப்புக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. அவர் வெறும் பொழுது போக்கு கதைகளை எழுதாது சமுதாயச் சீர்திருத்தக் கதைகளை எழுதி வருகின்றார். அவரது இந்த “ஓரினத் தோன்றல்” என்ற சிறுகதைத் தொகுதியில் ஆசிரியரைப் பற்றிய குறிப்பில் திரு.சின்னை யா சிவநேசன் “வாளைக் காட்டிலும் பேனா வலிமை மிக்கது என்பது யாவரும் அறிந்த முதுமொழி. எனினும் அதை நடைமுறையில் கடைப் பிடித்து எழுதி வருபவர் அன்பர் மூர்த்தி” என எழுதி இருப்பது உண்மை தான். இவரது தொகுதியிலுள்ள இருபது கதைகளும் முத்தானவை.  ஒவ்வொரு வரும் இந்நூலை வாங்கிப் படிப்பது அவசியம்”.

கடந்தசனிக்கிழமை மாலை ஸ்காபுறோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெற்ற வீரகேசரி மூர்த்தியின் “ஓரினத் தோன்றல்” நூல் வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கிய கலாநிதி பாலசுந்தரம் அவர்கள் தனது தலைமை உரையில் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடியாகும். எனவே ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னர் எமது சமுதாயத்தினர் இப்புத்தகத்தினை வாசிக்கும் போது முற்காலத்தில் எமது மக்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டு சுரண்டப் பட்டுள்ளனர் என்பதனை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் எனக் கூறினார்.

“கதிர் ஒளி” பத்திரிகையின் பிரதம ஆசிரியர் வண.போள் ராஜபாண்டியன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கனடாவின் முதலாவது தமிழ் எம்.பி.என்ற பெருமைக் குரிய செல்வி றாதிகா சிற்சபைஈசன் உரையாற்றுகையில், “ திரு.வீரகேசரி மூர்த்தியின் புத்தகம் இன்று தான் எனது கைக்கு கிடைத்தது. அதனால்  அதனை வாசிக்க முடியவில்லை. தேர்தல் காலத்தின் போது என்னைப் பேட்டி கண்டு பத்திரிகையில் எழுதுவதற்கு வந்த அவர் பின்னர் தேர்தல் பிரச்சாரம் செய்யும் பணியிலும் ஈடுபட்டார். அதன் மூலம் எனது வெற்றிக்கு அவர் தனது பங்களிப்பினைச் செய்துள்ளார். அவரைப் போலவே இங்குள்ள இளம் சந்ததியினரும் தமிழ் மொழியைக் கற்று எழுத்தாளர்களாக வர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்” என்றார். அவரை வீரகேசரி மூர்த்தியின் சகோதரி திருமதி.செல்வலெட்சுமி இரத்தினம் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மார்க்கம் மாநகர சபையின் முதலாவது தமிழ் உறுப்பினர் என்ற பெருமைக்குரிய திரு.லோகன் கணபதி உரையாற்றிய போது: “ வீரகேசரி மூர்த்தி சிறந்த அனுபவமுள்ள பத்திரிகை யாளர். மார்க்கம் மாநகர சபை நிகிழ்ச்சிகளை செய்தியாக பத்திரிகைகளில் வெளியிட்டு வருவது மாத்திரமல்ல நாம் மேற்கொண்டு வரும் சிரமதானப் பணிகளிலும் ஈடுபட்டு வருபவர். இன்று தனது சிறுகதை தொகுதியினை வெளியிடும் அவருக்கு எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார். அவரை கலாநிதி பாலசுந்தரம் அவர்கள் பொன்னாடை போற்றிக் கௌரவித்தார்.

முன்னாள் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளரும் சிறந்த எழுத்தாளருமான சிந்தனைப் பூக்கள் பத்மநாதன் ஆசிரியர் அறிமுகவுரை நிகழ்த்துகையில், “பொதுவாக எவரும் பத்திரிகை நிருபர்களாகப் பணியாற்றி அதன் பின்னரே உதவி ஆசிரியராகப் பதவி உயர்வு பெறுவது வழக்கம். ஆனால் நண்பர் மூர்த்தி  நேரடியாகவே வீரகேசரி பத்திரிகையில் உதவி ஆசிரியராக இணைந்து செயற்பட்டவர். வண.தனிநாயகம் அடிகள், பிரபல நாட்டிய மேதைகளான ஆனந்த வல்லி சச்சிதானந்தன், ரங்கா விவேகானந்தன், நாடகத் தயாரிப்பாளர் திரு.பாலேந்திரா போன்றோரையும் பேட்டி கண்டு எழுதினார். அத்துடன் ஆழிக்குமரன் ஆனந்தன் மன்னாரிலிருந்து தனுஷ் கோடிக்கு நீந்திச் சென்ற போது இவரும் படகில் கூடச் சென்று அந்நிகழ்ச்சியினையும் கட்டுரையாகத் தொடர்ந்து எழுதினார். கனடா வந்த பின்னரும் கூட அவர் தனது பத்திரிகைப் பணியையும், எழுத்துப் பணியையும் கை விட்டு விடாது தொடர்ந்து வருகின்றார். அவரது பணி பாராட்டுக் குரியது” என்றார்.

விமர்சன உரை நிகழ்த்திய மலையகத்தினைச் சேர்ந்த முன்னாள் ஆசிரிய பயிற்சிக் கல்லூரி விரிவுரையாளரும் “பிறை சூடி” என்ற புனையெரில் விமர்சனங்கள் எழுதுபவருமான திரு. சந்திரசேகரன், “சமூகத்தில் தில்லுமுல்லுகள் செய்து பொது மக்களை ஏமாற்றி வருவபர்களைப் பற்றி வீரகேசரி மூர்த்தி துணிச்சலுடன் தனது கதைகளில் எழுதியுள்ளார். அவர் தனது கதைகளில் எழுதியுள்ள விடயங்கள் யாவும் உண்மையானவை ஆனால் அதனை நளினமான முறையில் எழுதி இருந்திருந்தால் இன்னும் எடுப்பாக இருந்திருக்கும்” என்றார்.

வெளியீட்டுரை நிகழ்த்திய எழுத்தாளரான திருமதி. ராகவி குணத்திடமிருந்து திருமதி செல்வலெட்சுமி இரத்தினம் அவர்கள் முதலாவது பிரதியைப் பெற்றுக் கொண்டார். அவரை வீரகேசரி மூர்த்தி பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார். அத்துடன் அவர் ஏற்புரையும் நிகழ்த்தினார். வீடு விற்பனை முகவரான திருமதி. நிவா சூரியா நன்றியுரை கூறினார்.

-கலாநிதி பாலசுந்தரம்