ஊர்காவல்துறைக்கு அணித்தாய் உள்ள இடம் கரம்பொன். இதன் பழைய பெயர் கரம்பன் என்பதாகும். கல்வியாளர் இதனைத் திருத்திக் கரம்பொன் என எழுதினர். கரம்பொன் என்ற பெயரே இன்று பெரிதும் வழக்கிலுள்ளது.

village1இவ்வூரின் கிழக்கிலும், மேற்கிலும் முருகமூர்த்தி கோவில்கள் உள்ளன. கரம் பன்னிரண்டு உடையான் அருள்பாலிக்கும் இடம் இது என்றும், கரம் + பன்னிரண்டு என்ற சொற்களின் அடியாகவே கரம்பன் என்ற இடப்பெயர் தோன்றியது என்றும் விளக்கம் கூறப்பட்டுள்ளது.

இவ்வூரின் தென்எல்லையில் சுருவில், கிழக்கில் நாரந்தனை, வடபால் ஊர்காவல்துறையும் கடலும் அமைந்துள்ளன. இங்கு கிறிஸ்துராசாகோயில், புனித அன்னம்மாள் கோயில், அன்னை வேளாங்கன்னி கோயில், சின்னமடு மாதாகோயில் ஆகியனவும் உள்ளன.

இதன் குறிச்சிகளாக ஒழுவில், தணுவில், பாலாவி, பாலக்காடு, செருக்கன், தம்பாட்டி, மெலிஞ்சிமுனை, திட்டில், உவாத்திபுலம், அம்பலப்புலம், பருத்தியடைப்பு முதலியன உள்ளன.

காவலூர் பட்டினத்தை அடுத்துள்ள கிராமம் கரம்பொன் கிராமமாகும். மூன்று மைல் நீளமும் இரண்டு மைல் அகலமுமாக ஆறு சதுர மைல் பரப்பளவினையும் ஏறக்குறைய பதினொரு மைல் சுற்றளவினையும் கொண்ட அமைதியான கிராமம். கரம்பொன் கிழக்கு, கரம்பொன் மேற்கு, கரம்பொன் தெற்கு என முப்பிரிவாக பகுக்கப்பட்டிருந்தது.

village2கரம்பொனின் நுழை வாயிலில் கணபதீஸ்வரம் என்றழைக்கப்படும் சிவன் கோவிலும்,கரம்பொன் கிழக்கிலும், மேற்கிலும் இரு முருகமூர்த்தி கோவில்களும், கரம்பொன் மேற்கின் வடமேற்குத் திசையில் பிள்ளையார் கோவிலும், மேற்கெல்லையில் கடற்கரை ஓரத்தில் கண்ணகி அம்மன் கோவிலும், கரம்பொன் மேற்குக்கும் தெற்குக்கும் இடையேயுள்ள தெங்கங் குளத்தினருகே சிறிய ஞானவைரவர் கோவிலும், கரம்பொன் கிழக்கில் காளி கோவிலும், சுருவில் வீதியில் வைரவ கோவிலும் உள்ளன.