mahadevaஈழத்தில் தமிழும், சைவமும் தழைத்தோங்க ஆன்மீகக் குருபரம்பரையொன்று தொடர்ந்து வந்த வண்ணமே இருக்கிறது. சான்றோர்கள் காலத்துக்குக் காலம் அவதரித்து தமிழ்ப்பணியும், சைவப் பணியும் புரிந்து வந்தமையால் சமய அறிவும், தமிழ் அறிவும் வளர்ச்சி பெற்று வந்துள்ளன. அவ்வழியில் வந்தவர்களுள் ஒருவர் ஊர்காவற்றுறை கரம்பொன் ஊரில் அவதரித்த தவத்திரு மகாதேவா சுவாமிகள் ஆவார்.

பலதரப்பட்ட அறிஞர் பெருமக்களை நல்கிய கரம்பொன் கிராமம் வேதாந்த வித்தகராக, சித்தாந்திகளுக்கும் விளக்கங் கொடுத்துத் தமது வேதாந்தக்கூட்டுக்கள் அணைத்த சமரச ஞானியாக, ஞானத் தாகங் கொண்டவர்களுக்கு அவர்கள் தாகம் தீர்த்த அன்புடை ஆசானாக, அறிவுத் தாகம் கொண்டவர்களுக்கு பயன் தரவல்ல பள்ளிக்கூடங்களை நிறுவிய நிறுவராக, ஆன்ம ஈடேற்றத்துக்கு வழிகாட்டும் ஆன்மீக குருவாக விளங்கிய ஆன்மீக வள்ளல் ஒருவரையும் வழங்கியதால் கரம்பன் மேலும் சிறப்படைகிறது. மகாதேவா சுவாமிகள் பிறந்த மண்ணில் பிறந்தது தாம் செய்த மாதவம் என மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.

கரம்பன் ஊரைச் சேர்ந்த நாராயணப்பிள்ளை இராமநாதன் அன்னபூரணி தம்பதிகளுக்கு மூத்த புதல்வராக 05.09.1874 ஞாயிற்றுகிழமையன்று அடிகளார் அவதரித்தார்கள். பெற்றோர் இவருக்கு இட்டபெயர் வைத்திலிங்கம் என்பதாகும். தம்பையா என்றும் அழைக்கப்பட்டார். இவர் இளமைக் காலத்தில் தெய்வபக்தி மிகுந்தவராகவும், கல்வியில் ஆர்வம் உள்ளவராகவும் திகழ்ந்தார். அக்காலத்தில் கரம்பனில் சைவப் பாடசாலை எதுவும் இருக்கவில்லையாதலால், இவர் சண்முகநாதன் வித்தியாசாலை தற்பொழுது அமைந்திருக்கும் இடத்துக்கு அண்மையில் அமைந்திருந்த பாதிரிமார் பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்தார்கள். பின்னர் ஆங்கிலக் கல்வி கற்பதற்காக வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு பயின்று கொண்டிருந்தபோது சைவநெறியைச் சேர்ந்த மாணவர்களை மதமாற்றம் செய்வதில் பாதிரிமார் முனைப்புக் காட்டியதால் அதைப் பொறுக்க முடியாது அங்கிருந்து வெளியேறினார்.

நாவலர் அவர்களிடம் நேர்முகமாகப் பயின்றவர்களுள் ஒருவர் கரம்பனைச் சேர்ந்த முத்துகுமாரு ஆவார். இவரை முத்துக்குமாரு சட்டம்பியார் என அழைப்பது வழக்கம். இவர் கரம்பன் மேற்கில் திண்ணைப் பள்ளிக்கூடங்களை நடாத்தி வந்தார். சந்தியா வந்தன விதிகளை ஓலைகளில் மாணவர்களுக்கு எழுதிக் கொடுத்தும், சைவ நெறிமுறைகளை முறையாகக் கற்பித்தும், சைவ சமயக் கல்வியி;ல் மாணவர்களை ஊக்குவித்தார்.

கரம்பனில் சைவப்பாடசாலை எதுவும் இல்லாத அக்காலத்தில் சைவசமயத்தையும், தமிழையும் பேணிக்காத்த பெருமை சட்டம்பியாரையே சேரும். இவரின் மாணவர்களால் இவர் 'தமிழ் தந்த குறுமுனி' எனப் போற்றப்பட்டார். சட்டம்பியார் தாம் நடத்தி வந்த பணிக்கு எவ்வித ஊதியத்தையோ, உதவியையோ பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வாழ்ந்த இல்லம் அமைந்திருந்த இடம் இன்றும் 'உவாத்திபுலம்' என வழங்கப்பெற்று உபாத்தியாயர் அவர்களை நினைவுறுத்திக் கொண்டிருக்கிறது. இச்சட்டம்பியாரே இளைஞரான வைத்திலிங்கத்தின் சமய, இலக்கண, இலக்கிய ஆசிரியர் ஆவார். வைத்திலிங்கத்திடம் மலிந்திருந்த நுண்ணறிவினை மதித்தறிந்த சட்டம்பியார் தாம் பல்லாண்டுகளாக அரிதிற் தேடிப் பேணிக் காத்து வைத்திருந்த இலக்கண, இலக்கிய சமய நூல்களை எல்லாம் தமது மாணவராகிய வைத்திலிங்கத்திடமே ஒப்படைத்தார். சிவகுருநாத பீடம் என இன்று அழைக்கப்படும் வேதாந்த மடத்தில் காணப்படும் நூல்களுள் பெரும்பாலானவை சுவாமிகளால் சேகரிக்கப்பட்டவையாகும். அவற்றுள் முத்துக்குமாரு சட்டம்பியார் வழங்கியனவும் அடங்கும். இவருக்கு தம்பியர் இருவரும், தங்கைமார் இருவரும் இருந்தனர். குடும்பத்தில் மூத்தவராக இர் இருந்ததால் குடும்பப் பொறுப்பையுணர்ந்து சிறிது காலம் வணிகத் துறையில் ஈடுபட்டிருந்தார். பின்னர் அக்காலத்தில் மட்டக்களப்பில் பெருவணிகராக விளங்கிய வைத்திலிங்கம் என்பாரிடம் கணக்காளராக சிலகாலம் கடமையாற்றினார். இவரின் அகத்தூய்மை மற்றும் செயல்களைக் கவனித்து பெருவணிகர் இவரை பெருமதிப்புடன் ஆதரித்து வந்தார்.

இக்கால கட்டத்தில்தான் பெருவணிகர் வைத்திலிங்கம் அவர்கள் கீரிமலையில் பெரிய மடம் ஒன்றைக் கட்டுவதற்கு முடிவு செய்து அதைச் செவ்வனே செய்து முடித்துத் தந்தவர் சுவாமிகளே எனத் தேர்ந்து அவரிடமே மடம் கட்டும் பொறுப்பினை ஒப்படைத்தார். இன்று நாம் காணும் வைத்திலிங்கம் மடத்தை அமைக்கும் பணியை ஏற்று அப்பணி புரிந்து கொண்டிருக்கும் நாட்களில் அங்கு வந்து சென்ற பல்வேறு அடியார்களுடனும், கல்வியாளர்களுடனும் கொண்ட தொடர்பு காரணமாக இவரின் ஆன்மீகத் தாகம் அதிகரித்தது. வேதாந்த தத்துவ விசாரணைகளில் நெருங்கிய தொடர்பு கொண்டார். ஞானத்தாகம் கொண்ட இவரது உள்ளம் தகுந்த சற்குருவை நாடியது.

கந்தர்மடத்தில் வாழ்ந்து கொண்டிருந்த மகான் கனகரத்தின சுவாமிகள் தமது மாணவர்களுடனும் தங்களது தத்துவ வேதாந்த விசாரணைகளை நடாத்தும் பொருட்டு கீரிமலக்கு அடிக்கடி வந்து தங்குவதுண்டு. இவரது சீடர்களும் கீரிமலையில் தங்கியிருந்தார்கள். இச்சீடர்களின் உதவியுடன் கனகரத்தின சுவாமிகளின் அரவணைப்பைப் பெற்று அவர்களுடன் கலந்து தாம் பெற்றிருந்த சமய அறிவினை விரிவு படுத்திக் கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். கனகரத்தின சுவாமிகளே இவருக்கு 'மகாதேவா சுவாமிகள்' எனப் பெயர் சூட்டி சந்நியாசம் வழங்கினார்.

கனகரத்தின சுவாமிகள் ஒரு குரு பரம்பரையைச் சேர்ந்தவர். அவர்களுடைய குரு 'சார்சன்' சுவாமிகள் என அழைக்கப்பட்ட சின்னத்தம்பி சுவாமிகள் ஆவார்கள். கனகரத்தின சுவாமிகளின் தொடர்பால் மகாதேவா சுவாமிகள் கந்தர்மடத்தில் தங்கி சற்குருவுடன் சேர்ந்து சமயத்துறையினைப் பரப்பும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

மகாதேவா சுவாமிகளின் அறிவாற்றலையும், மதிமையையும் நன்கு அறிந்த பிரபல வணிகர் வை.சி.சி. குமாரசாமி அவர்கள் சமய ஆய்வு செய்வதற்கென ஒரு மடம் கட்டுவதற்காக நான்கு பரப்புக் காணியைக் கொடுத்து உதவினார். வேறு சிலரும் காணி கொடுத்து உதவியமையால் 22 பரப்பாக விரிவடைந்தது. சுவாமி அவர்கள் அந்த இடத்தில் 'சிவகுருநாத பீடம்' என்ற பெயருடன் ஒரு வேதாந்த மடத்தை நிறுவி வேதாந்த சாஸ்த்திரங்களை கற்பித்து வந்தார்கள். சுவாமிகள் சாதி பேதம், குலபேதம் கடந்தவர் என்பர். வேதாந்த மடத்தினைக் கட்டி முடிப்பதற்கான முயற்சியில் முன்னேற்பாடான நிதி திரட்டும் பணியில் நிதி திரட்டுபவராகவும், திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு மடத்தினை அமைக்கும் பணியில் தொழிலாளர்களுடன் வேறுபாடு எதுவுமின்றித் தாமும் ஒரு தொழிலாளியாகவும், அதேவேளையில் ஆன்ம ஈடேற்றத்துக்கு வழிகாட்டுகின்ற மதிப்புக்கும், வணக்கத்துக்கும் உரிய நல்லாசிரியராகவும், பிறருக்கு போதனை செய்வதுடன் நில்லாது போதித்தவற்றைத் தாமே முதற்கண் கடைப்பிடித்தொழுகி ஒழுக்கத்துக்கு ஓர் எடுத்துக் காட்டாகவும். அதற்கோர் இருப்பிடமாகவும் விளங்கினார் என்பது வெளிப்படை. இந்நிகழ்ச்சி சுவாமிகளின் நெறி பிறழாக் கடமையுணர்ச்சிக்கும், செயலுக்கும் தகுந்த சான்றாகும்.

சுவாமி மகாதேவா அவர்கள் குருமரபின் பாரம்பரியத்தைப் பேணி வந்தவர்கள் வரிசையில் ஒருவராவர். சுவாமியவர்களின் தோற்றப்பொலிவு, புலமைத்திறன், சொல்வன்மை ஆகியவற்றால் ஈர்த்துப் பெற்ற பலர் அவர்தம் மாணவர் ஆனார்கள். இங்ஙனம் தம்மை அண்டி வந்த மாணவர்களுக்கு வாழ்க்கையின் உண்மையினை உணர்த்திப் போதனை செய்து வழிபடுத்தி வந்தார்கள். அம்மாணவர் பலர் துறவு நிலையில் நின்று சிறந்த தமிழ்ப்பணியும், சமயப்பணியும் ஆற்றி வருகின்றனர். அவர்களுள் இராமலிங்க சுவாமிகளும், வடிவேற் சுவாமிகளும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க இருவராவர். ஞானாச்சாரிய பரம்பரை இன்று வடிவேற் சுவாமிகளால் பேணப்பட்டு வருகிறது.

வேதாந்த மடம் சுவாமிகளின் தலைமையில் ஒழுக்கசீலர்களின் ஒத்துழைப்புடன் பெரிய அமைப்பாக வளர்ச்சி அடைந்தது. இங்ஙனம் வளர்ச்சி அடைந்த வேதாந்த மடம், தமக்குப் பின்னதாகவும் தொடர்ந்து பல்லாண்டு பணியாற்ற வேண்டும் என்ற நன்னோக்கத்துடன் தம் காலத்திலேயே நிலையான வருவாய்க்கு வேண்டிய வழிவகைகளை வகுத்தும், நிதியம் சேமித்தும் வைத்தார்கள். அப்படியான அமைப்பொன்று விளைவேலியிலும், அதைத் தொடர்ந்து வடிவேற் சுவாமிகள் தலைமையில் உருத்திரபுரம் ஜயந்தி நகரிலும் இடம் பெற்றுள்ளன.

பூரணத்துவம்
சிவகுருநாத பீடத்துக்கு தமக்குப் பின்னர் தம் வாரிசாக இராமலிங்க சுவாமிகளை நியமித்து அவரிடம் மடத்தின் பொறுப்புக்களை ஒப்படைத்த பின்னர் இடையறாது இறைவனை தியானித்து வந்த அடிகளார் 13.11.1942 ஞாயிற்றுக் கிழமையன்று பூரணத்துவம் எய்தினார்.

கந்தர்மடம் வேதாந்த மடத்தில் கனகரத்தின சுவாமிகளின் சமாதியும், மகாதேவா சுவாமிகளின் சமாதியும் இருக்கின்றன. அவற்றுக்கு நித்திய பூசையும், பிரார்த்தனைகளும் நடைபெற்று வருகின்றன.