கனகரத்தின சுவாமிகள் வழங்கிய காவி உடைதரிக்கும் முன்னதாக கல்விப்பணி மேற்கொள்ள முற்பட்டார். முதற்கண் தம் சொந்த ஊரில் சைவப் பாடசாலை இல்லாத குறையைப் போக்க அயராது முயன்றார். சுவாமிகளின் இடையறாத முயற்சியின் பயனாக கரம்பனைச் சேர்ந்த திருவாளார் ஆ. சோமசுந்தரம், வே. தம்பிப்பிள்ளை, குருநாதர் பொன்னையா, சீனிமுத்து, முருகுப்பிள்ளை, அம்பலவாணர் ஆகியோரின் துணை கொண்டு ஊரிலே வீடுகள்; தோறும் பிடியரிசிக் குட்டான் கொடுத்து இவ்விதம்; சேர்க்கப் பெற்ற அரிசியின் பணத்துடன் குஞ்சரி அம்மாள் நன்கொடையாக வழங்கிய பத்துப் பரப்புக் கொண்ட குஞ்சரி வளவில் 1917ம் ஆண்டளவில் 'சண்முகநாத வித்தியாசாலை' தொடங்கப்பட்டது.

முதலில் ஓலைக் கொட்டிலாக இருந்த இப்பாடசாலை 1921ம் ஆண்டில் இன்றைய கட்டிட அமைப்பைக் கொண்டதாக அமைந்தது.

ஊர்மக்கள் உவந்தளித்த நன்கொடைகள், பிடியரிசியால் கிடைத்த பணம், மட்டக்களப்பு வணிகவள்ளல் வைத்திலிங்கம் அவர்கள் உதவிய இலுப்பை மரத்தராந்திகள், ஊரவர் கொடுத்துதவிய பனை மரங்கள், தொழிலாளர் பலர் எவ்வித ஊதியம் பெறாது செய்த சேவைகள் யாவும் இப்பணியை நிறைவு செய்ய உதவின.
முருகமூர்த்தி கோவிலுக்கு அண்மையில் இப்பாடசாலை அமைந்ததால் சண்முகநாத வித்தியாசாலை எனப்பெயர் சூட்டப் பெற்றது.

பாடசாலைக் கட்டிடவேலைகள் துரிதகதியில் நடந்த போதிலும் இடையில் திடீரென நின்று விட்டது. சுவாமிகள் மனம்கலங்கி வருந்தித் தமது சற்குருவிடம் சென்று முறையிட்டாராம். 'நீர் நினைக்கிறீர் – நினைப்பைக் கைவிடும் எல்லாம் நடக்கும் என்று கூறியதைக் கேட்டுத் தெளிந்தாராம். இதன் பின்னர் பாடசாலைக் கட்டிட வேலைகள் ஒருவாரத்தில் திடீரெனத் தொடங்கி நடந்து முடிவுற்றது என்பர்.

இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமிகள் சர்வானந்தா இப்பாடசாலையின் அடிக்கல்லை இட்டதோடு கட்டிடவேலைகள் நிறைவுற்றதும் தலைமை தாங்கித் திறந்தும் வைத்தார்கள். இப்பாடசாலைக்கு அரசினர் உதவி கிட்டும் வரை இலவசமாகவே கல்வி கற்பிக்கப்பட்டது. அத்துடன் இப்பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களும் ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் வரை எவ்வித ஊதியமும் பொறாமலே பணிபுரிந்து வந்தார்கள்.

முதலில் இப்பாடசாலையில் பணியாற்றி வந்தர்களுள் கரம்பனைச் சேர்ந்த திரு. ஆ சோமசுந்தரம், திரு. வே. வேலுப்பிள்ளை, கந்தர்மடம் திரு. சின்னையா, அல்லப்பிட்டி இராசையா ஆகியோர் என்பது நன்றியுடன் நினைவு கொள்ளத் தக்கது. சுவாமிகளும் இப்பாடசாலையில் ஓர் ஆசிரியராகக் கடமையாற்றி நிகண்டு, கணிதம், திருமுறைகள் என்பன போதித்து வந்தார்கள்.

கிறித்துவச் சமயத் தாக்கத்தின் காரணமாக நலிந்து போயிருந்த சைவசமயப் பண்பாடுகள் பிடியரிசித் திட்டத்துடன் கரம்பன் ஊரில் மறுமலர்ச்சி பெற்று சைவமக்கள் சைவநெறிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கினர். திருமுறைகள் பாடுதல் ஊரெங்கும் பொலியத் தொடங்கின.

சைவசமயப் பாடசாலைகளில் நவராத்திரி விழாவினை முன்னிட்டுப் பாடசாலை மாணவர்களால் நடைமுறைப் பட்டுவந்த கோலாட்டம், கும்மியடித்தல், ஊஞ்சல், கிளித்தட்டு என்பன சுவாமிகளால் புகுத்தப்பட்டவையாகும். அக்காலத்தில் சமயநெறி முறைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி நல்வழிப்படுத்தும் வகையில் சுவாமியவர்கள் வெளியூர்களிலிருந்து சைவசமயப் பெரியோர்களை அழைத்து சமய விரிவுரைகளை நடத்துவதிலும் முன்னோடியாகத் திகழ்ந்தார்கள். இங்ஙனம் சுவாமியவர்களின் அழைப்பினை ஏற்று விரிவுரைகள் ஆற்றி வந்தோருள் சேர். பொன் இராமநாதன், கல்கத்தா இராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த சுவாமி சர்வானந்தா, சுவாமி விபுலானந்தர், சைவப் பெரியார் சிவபாத சுந்தரனார், இந்து சாதன ஆசிரியர் ம. வே. திருஞானசம்பந்தபிள்ளை, தேசபக்தன் ஆசிரியர் மாசிலா மணிப்பிள்ளை, இந்து சாதன ஆங்கில இதழின் ஆசிரியர் எம். எஸ். இளையதம்பி ஆகியோர் குறிப்பிடத் தக்கோராவர்.

சண்முகநாத வித்தியாசாலை வளர்ச்சியடைந்து சிறந்த கல்விக்கூடமாக விளங்கியது. ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கில் மாணாக்கர் கல்வி பயன் பெற்று வந்தனர். சிறந்த கல்வியாளர்கள் இவ்வித்தியாசாலையை நயம்பட நிர்வகித்து வந்தனர். விடுதிப் பாடசாலையாகவும் துவிபாஷா பாடசாலையாகவும் சிறப்புற்றிருந்தது.
'கல்லார்நெஞ்சில் நில்லான் ஈசன்' என்னும் மகுட வாக்கியத்துடன் நிறைகுடம் குத்துவிளக்குகள், நூல் எழுத்தாணி ஆகியன இணைந்த சித்திரம் இவ்வித்தியாலய மண்டபத்தின் வாயிலினுள் பொறிக்கப்பட்டுள்ளதையும், சுவாமிகளின் திருவுருவ ஓவியம் மண்டபத்தினுள் அலங்கரிப்பதையும் காணலாம்.

ஆண்டுதோறும் ஐப்பசித்திங்கள் அவிட்ட நட்சத்திர நாளின் போது சுவாமிகள் பூரணத்துவம் அடைந்தார் என்பதாhல், இந்நாளையே நிறுவகர் நாளாகவும், பெற்றோர் தினமாகவும் இவ்வித்தியாலயம் கொண்டாடி வருவது குறிப்பிடத்தக்கது.

சுவாமிகளின் திருவடி வாழ்க