இயற்கைத் துறைமுகமாய் ஈழத்தின் வடபால்
இருந்து புகழூட்டும் ஊறாத்துறை துறைமுகம்
இயற்கைக் காற்றின் விசையால் இழுபட்டோடும்
இதரநாட்டு பாய்மர வத்தைகள் இக்கரையில்
இரவும் பகலுமாய் இறக்கியேற்றி பண்டங்களை
இலங்கு வணிகத்தில் வரலாறு படைத்ததன்று
இன்றது காவலூரென இனியபெயர் ஈட்டியதே!

துறைமுகத் திலிருந் திருமைல் தொலைவில்
தூயமன தினராய் துதித்து மகிழ்ந்திருந்த
நீறணிந்த நெற்றிக் கரம்பனூர் வாசிகளை
நீசமத த்துக்கு மாற்றும் ஒல்லாந்தரின்
முறைப்புக்கு மஞ்சாது முழுமன துடனே
முருகனே எங்கள் முழுமுதற் கடவுளென
முரசறைந்து சைவமதம் காத்தன ரன்றே!

மேலைக் கரம்பன் தென்கரம்பன் வாசிகளுறுதியாய்
வேலைக் கந்தனையே விரும்பிக் கைதொழுதனர்
அலைகட லண்டினோரும் கரம்பன் கிழக்கார் சிலரும்
நிலைமாறி மதம்மாறி நீசரைநம்பி
வலையில் வீழ்ந்த மீன்களாய் வகையாகமாட்டி
வாழ்க்கையின் நன்நெறி சைவத்துக்கு மாறாய்
வந்தாரின் வழிமுறை தன்னைப் பற்றினரே.

ஓமெனும் மதம்காக்க ஒன்றெட்டேழு நாலாமாண்டு
ஓங்கார மாயுதித்த ஒளிமகாதேவா சுவாமிகள்
ஆமென்று சைவர்கள் அடுத்தமத மணுகாதிருக்க
ஆன்மீக சைவப்படிப்பகம் அவசரமாய மைத்திட
அனைத் தகங்களிலும் உமல்கொடுத் தொருபிடி
அரிசி போடுங்கள் அனுதினமும் அதிலேயது
அரிய கல்விக்கூடம் அமைக்க ஆகுமென்றார்.

சேர்ந்த பிடியரிசிதனை பிரதிவாரம் விற்றுச்
சேர்த்த பணத்தில் ஒன்றொன் பதினேழாமாண்டு
குஞ்சரி ஆச்சி குதூகல மாயளித்த காணியில்
மிஞ்சுபுகழ் சண்முகநாத வித்தியா சாலையினை
மேன்மையுற ஓலைக் குடிசையிலே நிறுவினார்
மேதகு சைவக்கல்வி மான்கள் தோன்றினரங்கே
மேதை மகாதேவ சுவாமியின் நினைவுபலித்தது.

மூர்த்தி செல்லத்துரை