பதினால் பதிமூன்று?

எண்ணும் எழுத்தும் என எனது பாடசாலை வாழ்வு தொடங்கியது கரம்பொன் சண்முகநாத மகா வித்தியலயத்திலே. அரிவரி, நேர்சரி, பாலர் வகுப்பு என்றெல்லாம் அந்தக் காலத்தில் இருந்ததாக ஞாபகமில்லை. இருந்திருந்தாலும் எனது அம்மா வீட்டில் இருந்ததால் அதற்கெல்லாம் அனுப்பியிருந்திருக்க மாட்டார்கள். நான் வீட்டில் ஆக்கினை கொடுத்தேனோ என்னவோ, என்னை ஐந்து வயதில் பாடசாலையில் சேர்க்க எடுத்த முயற்சி, குறைவயது என்ற காரணத்தால் சரி வரவில்லை.

எனது பாடசாலைக்கனவு பாவம் ஏமாற்றத்துடன் ஒரு வருடம் காத்திருக்க நேர்ந்தது. செய்வதற்கு ஒன்றுமே இல்லாத அந்த வயதில் ஒரு வருடம் என்பது ஒரு யுகம் போல. அந்த யுகம் முடிவடைந்த ஒரு அழகிய நாளில் அம்மா வழி அனுப்பி வைக்க அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு எல்லாரையும், எல்லாவற்றையும் கண் விரியப் புதினமாய் பார்த்துக் கொண்டு, சண்முக நாத மகா வித்தியாலயத்துள் காலடி எடுத்து வைத்தது இன்றும் நேற்று நடந்தது போல. இரண்டாம் வகுப்பில் சேர பாடசாலை என்னை அனுமதித்த போது, ஒரு வருடக் காத்திருத்தலின் ஏமாற்றம் எனது பெற்றோருக்கு மறந்து போனது.


ஓரொண்டொண்டு

எண் என்றதும் எனது நினைவுக்கு வருபவர்கள் எனக்குக் கணக்குப் படிப்பித்த ஆசிரியர்களே. நெடும் பிரித்தல் மறந்து போகுதோ இல்லையோ, மூன்றாம் வகுப்பில் பிலோமினா ரீச்சரிடம் நெடும்பிரித்தலில் பிழை விட்டதற்காக வலது கை மொழியில் அடிமட்டத்தால் அடி வாங்கியது மட்டும் ஒரு போதும் மறக்காது. அடிமட்டம் என்ற பெயர் மாணவரை அடிப்பதால் வந்தது என்றே பல காலமாக எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, அது 'யார், அடி, அங்குல' அளவையாகப் பயன்படுவதால் வந்தது என அறிந்த போது ஏற்பட்டது ஆச்சரியமா அல்லது அதிர்ச்சியா என்பது இப்போது ஞாபகத்திலில்லை.

ஆரம்பக் கல்வியில் வாய்ப்பாடு ஒரு முக்கியமான பங்கினை வகித்தது. காலையில் ஆரம்பநிலை மாணாவர்கள் உள்ள வீடுகளைக்கடந்து வீீதி வழியே செல்லும் போது 'ஓரொண்டு ஒண்டு…' என்று தொடங்கும் நெடிய பாட்டைக் கேட்பதைத் தவிர்க்க முடியாது. பாவம், இந்த வீடுகளில் உள்ள பெரியவர்கள்- இந்தக் கீறல் விழுந்த இசைத்தட்டு ஏற்படுத்தும் எரிச்சலை, எதிர்காலத்தில் மருத்துவராயோ பொறியியலாளராயோ வரப்போகும் தமது பிள்ளைகள் பற்றிய கனவு சமப்படுத்தும்.

வாய்ப்பாடை இவ்வாறு பாடமாக்குவதில் உள்ள சிரமம் என்னவென்றால், ஆரம்பத்திலிருந்து கேட்டால் சொல்வது எளிது, ஆனால் இடையில் கேட்டால் சற்றுச் சிக்கல். இதில் எங்களை மடக்கவென ஆறாம் வகுப்பில் கனகரத்தினம் மாஸ்டர் காத்திருப்பார். வகுப்பு மாணவர் அவர் முன் வட்டமாக நிற்பர். பிரம்பின் நுனி மாணவரை மின்னல் வேகத்தில் தடவிச் சென்று ஒருவரிடம் நிற்கும். அந்த மாணவன் அல்லது மாணவி தம்மிடம் தான் கேள்வி வரப்போகிறது என்பதை நிதானிக்குமுன் 'பதினால் பதிமூன்று' அல்லது அதை விடக் கடினமான ஒரு வாய்ப்பாட்டுக் கேள்வி இடியாய் இறங்கும். அதே வேகத்தில் பதில் வராவிட்டால் பிரம்பு தான். மூளையோ பதிலைக் கண்டு பிடிப்பதா, பிரம்படியை வாங்கக் கையை நீட்டுவதா என்ற குழப்பத்தில் திணறி, தெரிந்த வாய்ப்பாட்டையும் கோட்டை விடும்.

அடித்துப் படிப்பிப்பது எதிர்மறை விளைவுகளைத் தரும் என்பதற்குக் கல்வியியலாளர்கள் ஆயிரம் ஆதாரங்களைக் காட்டக் கூடும். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் எனது அடிப்படைக் கணித அறிவு பலமாக விழுந்ததற்கும், உயர்கல்வி வரை அது என்னோடு கூட வந்ததற்கும் இனியும் அடி வாங்கக் கூடாது என்ற எண்ணமே காரணமாயிருந்திருக்க வேண்டும்.

இத்தகு கற்கை நெறியினூடு வந்த எமக்கு, கணிப்பொறித் தலைமுறையான இன்றய இரண்டாம் தலைமுறையினருக்கு கணிதம் கற்றுக் கொடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பது அனுபவித்தவர்களுக்குத் தான் புரியும். பத்தாம் வகுப்பிலும் நெடும் பெருக்கல், பிரித்தல், பொ.சி.பெ, பொ.ம.சி. தெரியாத அல்லது பிழை விடுகின்ற இந்தப் பிள்ளைகள், பத்தால் பெருக்குவதற்கும், பிரிப்பதற்கும் கணிப்பொறியை நாடும் போது பிலோமினா ரீச்சரிடத்தும், கனகரத்தின மாஸ்டரிடத்தும் மனதில் சொல்லி அழுவதை விட வேறு என்ன செய்ய முடியும்? பிரம்பு பாவிக்கும் சுதந்திரம் மிகுந்தது அவர்களின் காலம், ஹும்!


பரிசோதனை, அவதானம், முடிவு

ஆறாம் வகுப்பில் வஸ்தியாம்பிள்ளை மாஸ்டரே எமக்கு விஞ்ஞானம் படிப்பித்தார். ஒரு பக்கம் கோடில்லாத பரிசோதனைக்கொப்பிகளில் கோடில்லாப் பக்கத்தில் படமும், கோட்டுப் பக்கத்தில் 'பரிசோதனை, அவதானம், முடிவு' எனச் செய்த பரிசோதனை பற்றிய விளக்கமும் எழுத வேண்டும். ஒரு கையால் வேட்டி காலில் தடுக்கி விடாது சற்றே தூக்கிப் பிடித்த படி மறு கையில் பிரம்புடன் சற்று வளைந்தபடி அவர் வகுப்பை வலம் வரும் போது பரிசோதனை, அவதானம், முடிவு எல்லாம் குழம்பிப் போகும். எனினும் பின்னடியில் மேற்கல்வியில் மட்டுமன்றி, நாளாந்த வாழ்விலும், உதாரணமாக சமையலில், செய்பொருட்களை அல்லது அவற்றின் அளவுகளை மாற்றி மாற்றிப் பரிசோதனை செய்து சுவை பற்றிய அவதானங்களைச் செய்து, எவ்வாறு சமைத்தால் எப்படிப் பட்ட சுவை வரும் (அல்லது வராது) என்ற முடிவுகளை எடுக்கும் போது, வஸ்தியாம்பிள்ளை மாஸ்டருக்கு ஒரு சிறு நன்றி ஒன்று மனதிலிருந்து அனுப்பப்படும்.


திறந்த பாடசாலை

பாடசாலையின் பிரதான கட்டடமானது முக்கால் சுவரும் மிகுதி கம்பிவலையுமாக வெளிச்சத்தை தடுக்காமல் இருந்தது. ஏனய கட்டடங்களுக்கு அரைச்சுவர் மட்டுமே இருந்தது. கம்பிவலையோ பூட்டோ கிடையாது. ஆடு, மாடுகள் உள்ளே வந்து அழுக்காக்காதிருக்க வாசலுக்கு அரைக் கதவுகள் போடப்பட்டு கொழுக்கி போட்டுப் பூட்டி இருக்கும். வகுப்புகள் மின் வெளிச்சத்தின் துணையில்லாமலே தான் பகல் வேளைகளில் நடந்தன. பூட்டாத வகுப்புகளில் மாலை வேளைகளில் பாடசாலை முடிந்த பின் சிறுவர்கள் ஓடிப்பிடித்தும், மேசை கதிரைகளில் ஏறிக் குதித்தும் விளையாட வசதி இருந்தது.

பிரதம கட்டிடத்தில் மட்டுமே ஒரு பெரிய மணிக்கூடு இருந்தது. அங்கு தான் காலைப் பிரார்த்தனை நடைபெறும். வகுப்புகள் முடிவடைவதைக் குறிக்கும் பாடசாலை மணியும் அந்தக் கட்டிடத்திலிருந்து தான் அடிக்கப் படும். ஏனைய அரைச்சுவர்க் கட்டிடங்களில் வகுப்பைக் கொண்டுள்ள மாணவர்களுக்கு மணி பார்க்க வழி இல்லை. இக்காலத்தைப் போல் மாணவர்கள் மணிக்கூடு கட்டிச் செல்லும் காலமல்ல அக்காலம். அதனால் அரைச்சுவர்த் தூண்களில் பாடசாலை முடியும் போது சூரியன் எங்கு நிற்கிறது என்பதை பென்சிலால் குறித்து வைத்திருப்போம். வகுப்பு அலுப்படிக்கும் போது எப்போதெடா சூரியன் அந்தப் பென்சில் கோட்டை அணுகும் எனக் கண் அடிக்கடி கவனித்துக் கொள்ளும். இதில் உள்ள வசதி என்னவென்றால் நாம் மணி பார்க்கிறோம் என்பது ஆசிரியரின் கவனத்துக்கு வராது. பெரும்பாலான புலம்பெயர் நாடுகளில் போல் பனி, கோடை எனப் பருவ காலங்கள் மாறுவதற்கேற்ப சூரியன் மறையும் நேரம் பெரிய மாறுதல்களுக்கு உள்ளாகாததால், எமது அரைச்சுவர் மணிக்கூடு சிறிய வழுவுடன் எமது தேவையைப் பூர்த்தி செய்தது.


வாற்பேத்தைக் குடிநீர்

சண்முகநாத மகா வித்தியலயத்திலே ஆரம்பக்கல்வி தொடங்குவதற்கு ஒரு முக்கிய காரணம் அது எமது வீட்டிற்கு நேரெதிரே இருந்தமையே. வீட்டிற்கருகில் பாடசாலை என்றதும் முதலில் நினைவுக்கு வருவது எமது மதில் முன் நெடிது வளர்ந்து நின்ற நெல்லி மரம். 'காய்த்த மரத்திற்குத் தான் கல்லெறி விழும்' என்ற முதுமொழியைக் கேட்கும் போதெல்லாம் அந்த நெல்லிமரம் எனது கண் முன் வருவதை இப்போதும் தவிர்க்க முடிவதில்லை. மரத்தில் காய் உள்ள நாட்களில் பாடசாலை தொடங்கு முன், இடை வேளைகளில் அல்லது பாடசாலை முடிந்த பின் வளவுக்குள் போவதை நாம் தவிர்த்துக்கொள்வோம். அம்மா தான் பாவம். உடுப்புக் காயவிட, கன்றுக்குத் தண்ணீர் வைக்க என வளவுக்குள் போக நேரும் போதெல்லாம், தனது தலையைக் காத்துக் கொள்வதற்காக, கல்லெறியும் மாணவர்களுடன் யுத்தம் நடத்துவார்.

கரம்பொன் மக்களுக்குக் கல்வி ஊட்டியதுடன் மட்டும் பாடசாலை நின்றுவிடவில்லை; அது எமது வாழ்வுடன் வேறு பல வழிகளிலும் பின்னிப் பிணைந்திருந்தது. விளையாட்டிடமாயும், குடிநீர் ஊற்றாயும் அது விளங்கியது. அந்தக் காலங்களில் எல்லாம் அதிபரின் அறை, விஞ்ஞான ஆய்வுகூடம், பிரதம கட்டிடம் தவிர வேறு எந்தக் கட்டிடமும் பூட்டப் படுவதில்லை. பாடசாலையைச் சுற்றி வேலி இருந்த போதும், நுழைவாயிற் கதவு பூட்டப் படுவது கிடையாது. இதனால் மாலை வேலைகளில் விளையாடவோ படிக்கவோ விரும்பும் மாணவர்களுக்குப் பாடசாலை ஒரு வரப்பிரசாதமாக இருந்தது.

மேலும் கரம்பொன் மேற்கை அண்டிய பகுதிகளுக்குக் குடிநீர் வழங்கிய அமுத சுரபியாயும் அது திகழ்ந்தது. அங்கு முதலில் ஒரு கிணறும் பின் பாடசாலை விஸ்தரிக்கப் பட்ட பின் இன்னுமிரு கிணறுகளும் என மூன்று நன்நீீர்க் கிணறுகள் இருந்தன. அதில் நெல்லிமரத்தருகே இருந்த கிணற்று நீர் அமிர்தம் மாதிரி இனிக்கும். அதற்கு அந்த நெல்லி மரம் தான் காரணம் என்று கூறப்பட்டது. இது எவ்வளவு உண்மை என்று தெரியாது. அயலிலுள்ள பெரும்பாலான வீடுகளின் கிணறுகள் உவர் நீரைக் கொண்டிருந்ததால், ஊர்ப் பெண்களெல்லாம் அங்கு மாலை வேளைகளில் தண்ணீர் அள்ளும் சாட்டில் வந்து, ஊர்க்கதை பேசி மகிழ்வது வழமை.

பாடசாலை முடிந்த பின்பு நேரத்தைக் கடத்துவதற்கு ஷொப்பிங் மோல்களோ கணனி விளையாட்டுகளோ இல்லாத அந்தக் காலத்தில் நானும் எனது சிறுபிராய நண்பிகளும் பாடசாலை முடிந்த பின் சந்தித்து அளவழாவிப் பொழுது போக்கும் இடமாக அக் கிணற்றடிகள் அமைந்தன. வெளியே போய் விளையாடுவதற்குப் பெண் பிள்ளைகளை அனுமதிக்காத அன்றய பெற்றோர் குடிநீர் அள்ளச் செல்வதற்குப் பெரிய தடைகள் விதித்திருக்கவில்லை.

பிரதம கட்டிடத்திற்குப் பின் இருந்த கிணற்றையே நானும் எனது நண்பிகளும் பயன்படுத்தினோம். மாரிகாலங்களில் பாடசலை வளவுகளில் வெள்ளம் நிற்கும். கிணற்றுக்கு உள்ளும் வெளியும் கிணற்று மதில் உயரத்துக்கு வெள்ளம் வரும். வெள்ளத்தைப் பயன்படுத்தித் தவளைகள் தமது இனம் வளர்க்க முயற்சிக்கும். வெள்ளத்தில் எண்ணமுடியாத அளவுக்கு பெருந்தொகையான வால்பேத்தைகள் (தவளைக் குஞ்சுகள்) மிக வேகமாக நீந்தித் திரியும். அக்காலங்களில் எமது பிரதான மாலை விளையாட்டு வாற்பேத்தைகளைப் பிடித்துக் கிணற்றுக்குள் விடுவது. அதிகமானவற்றைப் பிடித்து விடுபவரே விளையாட்டில் வென்றவராவார். நாம் குடிக்கப் போகும் நீரை அல்லவா இவ்வாறு நாம் பிடித்து விடும் இந்த ஆயிரக்கணக்கான வாற்பேத்தைகளும் வாழ்ந்து அழுக்காக்கப் போகின்றன என்ற வினா எழும் வயது அப்போது இருக்கவில்லை.

வளர்ந்த பெண்பிள்ளைகளை ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பாடசாலைகளுக்கு அனுப்பத் துணியாத பெற்றோர் என்னை ஏழாம் வகுப்புடன் சிறிய புஷ்ப மகளிர் பாடசாலைக்கு அனுப்பியதுடன் எனது சண்முகநாத மகாவித்தியாலயத்துடனான மனப்பதிவுகள் முடிவடைந்து போகின்றன.

பாலை விழுந்த கிராமம்

2003இல் நான் ஈழம் சென்றிருந்தபோது, கரம்பொனுக்கும் சென்றிருந்தேன். கரம்பொன்னையும், எமது வீட்டையும், பாடசாலையையும் பார்த்த போது மனதுள் சோகம் வந்து கப்பிக்கொண்டது, ஏதோ ஒரு தெரியாத இடத்துக்கு வந்தாற் போலிருந்தது. எனது அயலில் எனக்குத் தெரிந்தவர் என இரு வயோதிபப் பெண்கள் மட்டுமே இருந்தனர். மற்றவரெல்லோரும் இடம் பெயர்ந்து போவிட்டனர். எமது வீட்டிற்கும் பாடசாலைக்கும் இடையிலிருந்த நெல்லி மட்டுமல்ல, எமது வீட்டைச் சுற்றி நின்ற எல்லா மரங்களும், செடிகளும், அயலட்டத்திலிருந்தவைகளும் காணாமற் போய் ஊர் பாலைவனமாகியிருந்தது. 'ஆறில்லா ஊருக்கு அழகு பாழ்' என்ற பழமொழி,
'மரமில்லா ஊருக்கு அழகு பாழ்' என்பதாக மனதுள் ஓடியது.

ஊரின் பாலைத் தோற்றத்துக்கு நேரெதிராக பாடசாலைக் கட்டடங்கள் புது மை பூசி மினுக்கிக்கொண்டிருந்தன. முன்பு திறந்திருந்த கட்டிடங்கள் எல்லாம் முழு உயரத்துக்கு அடைக்கப் பட்டுப் பூட்டப் பட்டிருந்தன. வாசற் படலையும் கூட. பாடசாலைக்கு ஒரு காவற்காரரும் அமர்த்தப்பட்டிருந்தார். கண்ணாடிக் கதவுடனான ஒரு அறையில் கணனி ஒன்று வைத்துப் பூட்டப் பட்டிருப்பதாயும், அது பழுதாகி விட்டிருப்பதாயும் அவர் கூறினார்.

நெல்லி மரமிழந்த நல்ல தண்ணீர்க் கிணற்றின் தண்ணீர் இப்போதும் இனிக்குமா? பூட்டப் பட்ட எல்லாக் கட்டடங்களிலும் இப்போது மணிக்கூடு வந்திருக்குமா, இல்லாவிடில் சூரியன் புகாத கட்டிடங்களில் மணிபார்க்க வழி ஏது? மாலை வேளைகளில் விளையாட முடியாத பள்ளிக்கூடமும், ஊர்ப்பெண்கள் நல்ல தண்ணீர் அள்ள முடியாத கிணறும், பச்சை மரமற்ற ஊரும் ..! எனது மனக்குருவி செட்டை முறிந்து வீழ்ந்து விட்டிருந்தது.

-நோர்வேயிலிருந்து மைத்திரேயி