விடிந்தது முதல் மீண்டும் படுக்கைக்கு
செல்லும் வரை முடிவிலி போல் நீண்டு
செல்லும் வேலைகள் சுமைகள்
அலுக்காமல் சலிக்காமல் அனைத்தும் செய்து 
இரவில்  பல்துலக்கி உடல்கழுவி
படுக்கைக்கு செல்லும் முன் சில
கணங்கள் ஒரு சில கணங்கள்
மட்டுமாவது தலைசாய்க்க உன் 
மடியும் தலை கோத உன் விரல்களும் 
தேடி தவியாய் தவிக்கிறது மனது….

நான் பெற்ற செல்வங்களின் மலர் முகங்களையும்
மழலைச் சொற்களையும் ரசிக்கும் போது
இப்படித்தானே என்னை நீ ரசித்திருப்பாய்
என்றுன்னை நான்  நினைத்துப் பார்க்கிறேன்
அம்மா… நீ அருகிலிருந்த போதினைவிட                                                                                                        எம்மை விட்டகன்று போனதன் பின்பு தான்
உன் நினைவுகள் வேர்பரப்புகிறது எம்முள்
இது தாய்மைக்கே உரித்தான வலிமை..

த்தனை எத்தனை பேர் எத்தனை எத்தனை
கவிதைகள்  எழுதினாலும் எல்லாமே
எல்லா அன்னையர்க்கும் பொருந்திப்
போவது ஒன்றும் விந்தையல்ல…
உலகில் பொதுவானது அனைவர்க்கும்
அறிமுகமானது சர்வ நிச்சியமான தொன்று
உண்டாகில் அது தாயன்பு அன்றி வேறேது
தலை சாய்த்து வணங்குகிறேன் தாயே உன்னை.