தமிழர் மரபுரிமை திருநாள் விழாவில் பேராசிரியர் சண்முகதாஸ்
“உலகின் பல்வேறு நாடுகளில் தமிழ் மக்கள் பரந்து வாழ்ந்தாலும் கனடாவில் மாத்திரம் தமிழினத்துக்கு பெருமை ஏற்படுத்தப் பட்டுள்ளது. தமிழர் திருநாளான தைப் பொங்கல் தினத்தை முன்னிட்டு தை மாதத்தினை தமிழ் மரபுத் திங்களாகப் பிரகடனப் படுத்திய மார்க்கம் மாநகர சபைக்கு நாம் என்றென்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். எனது மாணவனும், கனடாவின் முதலாவது தமிழ் அரசியல் பிரமுகருமான திரு.லோகன் கணபதியின் முயற்சியினால் அது சாத்தியமானதை இட்டு நான் மிகவும் பெருமை அடைகின்றேன்.
அதற்காக தமிழ் மக்களாகிய நாம் மார்க்கம் மேயர் வண பிராங்க் ஸ்காபி ற்றி அவர்களுக்கும், மாநகர சபை உறுப்பினர் திரு.லோகன் கணபதிக்கும் இன்றைய விழாவில் எமது நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்”.
மார்க்கம் மாநகர சபையின் திரையரங்கில் கடந்த ஞாயிறன்று கொண்டாடப்பட்ட தமிழ் மரபுத் திங்கள் விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றிய போது “யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற் கொப்ப கனடா நாடு எல்லோருக்கும் எல்லாவற்றையுயும் வழங்கி வருகின்றது. சிறந்த பண்பையும், கலாச்சாரத்தையும் கொண்ட நமது பாரம்பரிய மரபினை எமது மூதாதையர் எம்மிடம் கையளித்தனர். உலகிலுள்ள கிறேக்கம்;, லத்தீன், ஹீபுரூ, சீனம் போன்ற எட்டு சிறந்த மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும். கட்டிடக் கலையில் கைதேர்ந்த நமது தமிழர்கள் ஆலயங்கள் கட்டுவதில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தனர். ஒவ்வொரு தூண்களிலும் தட்டும் போது வவ்வேறு விதமான ஓசை எழும் விதத்தில் கட்டினார்கள்” எனக் கூறினார்.
பேராசிரியர் சண்முகதாஸ், இந்திய உதவித் தூதுவர் திரு.மிஸ்ரா, மார்க்கம் பிரதேச சபையின் முன் னாள் உறுப்பினரும்,திரு.லோகன் கணபதியின் வலது கரமாக செயற்பட்டவருமான திரு.கோட் லன்டன், பிரதேச சபை உறுப்பினர் திருமதி.நிர்லா ஆம்ஸ்ரோங், தோர்ன் ஹில் எம்.பி. திரு.பி.ஏ.கென்ற், மார்க்கம் மாநகர சபை உறுப்பினர்களான திரு.கென் றோய், திரு.லோகன் கணபதி, ரொறண்டோ மாநகர சபை யின் ஆங்கில கல்விச் சபை உறுப்பினரான திரு.பார்த்தி கந்தவேள் ஆகியோர் மங்கள விளக்கேற்றி விழாவினை ஆரம்பித்து வைத்தனர். கனடா தேசிய கீதத்தை அடுத்து சீடவூட் பாடசாலை மாணவிகள் தமிழ் தேசிய கீதம் பாடினார்கள்.
திரு.ருக்சான் பரா, திருமதி.றேகா சிவா ஆகியோர் நிகழ்ச்சி அறிவிப்பாளர்களாக பணியாற்றினார்கள். முதலில் திருமதி கல்யாணி சுதர்சனின் மாணவிகளின் வாத்திய இசைக் கச்சேரி இடம் பெற்றது. அத னையடுத்து நாட்டிய கலாஷேத்திரா ஆசிரியை தேனுஜாவின் மாணவிகளது நடன நிகழ்ச்சி, நிருத்திய கலா ஷேத்திரா மாணவிகளின் நடன நிகழ்ச்சி, சதங்கை நர்த்தனாலயா மாணவிகளின் நடன நிகழ்ச்சி, மார்க்கம் முதியோர் சங்கத்தினரின் நாடகம், சிலம்பாட்டம் ஆகியனவும் இடம்பெற்றன. கமலினி ஜெயச்சந்திரனின் மாணவிகளின் மயில் நடனம் மிக அழகாக இருந்தது.
இந்திய உதவித் தூதுவர் திரு.மிஸ்ரா அவர்கள் உரையாற்றிய போது முதலில் வணக்கம், இனிய பொங்கல் வாழ்த்துக்கள் என தமிழில் கூறி தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றினார். “நான் தமிழ் கலாச்சாரத்தையும், விழாக்களையும் பெரிதும் விரும்புபவன். இலங்கை தமிழர்களாகிய நீங்கள் உங்கள் மொழிக்காகவும், இனத்துக்காகவும் அதிகளவு பாடுபடுகின்றீர்கள். உங்களைப் பார்த்து நாங்களும் படித் துக் கொள்ள வேண்டும் என நான் எமது மக்களுக்கு கூறி வருகின்றேன். அறுவடை திருநாள் தான் பொங்கல் திருநாள். சூரியன் தன்னைத் தானே எரித்துக் கொண்டு எங்களுக்கு ஒளியினை தருகின்றான். அதே போன்று நாமும் எங்களிடையே உள்ள பகையையும், விரோதங்களையும் மறந்து புதிய நட்புறவு டன் பொங்கல் திருநாளை கொண்டாடுகின்றோம். பல்லின மக்கள் வாழும் மார்க்கம் மாநகரில் அனைவரும் நட்புறவுடன் வாழ்ந்து வருவது மகிழ்ச்சிக்குரியதாகும். இத்தகைய சிறந்த விழாவினை ஏற்பாடு செய்தமைக்காக நான் திரு.லோகன் கணபதி அவர்களுக்கு எனது நன்றியையும், பாராட்டினைனயும் தெரிவித்துக் கொள்கின்றேன்”.
திரு.லோகன் கணபதி உரையாற்றிய போது விழாவில் பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்டோரையும் பொது மக்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகக் கூறி இந்த விழாவினை நடாத்துவதற்கு நிதியுதவி வழங்கிய டாக்டர் ஆதிகணபதி சோமசுந்தரம், சி.எம்.ஆர்.வானொலி நிலையத்தினர், ஏ.ரி.என். தொலைக் காட்சி நிறுவனத்தினர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்ததோடு பொன்னாடை போர்த்தி, சான்றிதழும் வழங்கி கௌரவித்தார். அதே போன்று மார்க்கம் மாநகர சபையின் ஊடாக தமிழினத்துக்காக தான் மேற் கொண்டு வந்த பல நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்கிய மார்க்கம் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான திரு.கோட் லான்டனையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இவ் சிறப்புற நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தமைக்காக தனது நிறைவேற்றுச் செயலாளரான திருமதி கௌசல்யா றாஜாவுக்கும் பாராட்டு தெரிவித்தார்.
திரு.கோட் லான்டன் உரையாற்றிய போது “ஈழத் தமிழர்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட அநீதியான நடவடிக்கைகளை கண்டிக்கு முகமாக இங்கு தமிழ் மக்கள் நடாத்திய ஆர்ப்பாட்ட வைபவங்களில் திரு.லோகன் கணபதியுடன் நானும் கலந்து கொண்டமைக்காக என்னை ஆர்.சி.எம்.பியினர் விசாரித்தனர்” எனக் கூறினார்..
கல்விச் சபை உறுப்பினர் திரு.பார்த்தி கந்தவேள் உரையாற்றிய போது “எமது தமிழ் மொழி தான் இனத்தின் மரபினை முழுமைப் படுத்துகின்றது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதற்கொப்ப கனடா நாட்டில் தமிழையும், தமிழ் பாரம்பரியங்களையும் பேணுவதற்கு திரு.லோகன் கணபதி அவர்கள் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றார். நானும் அவருடன் இணைந்து செயற்படுவேன்” எனக் கூறினார்.
தமிழர் மரபுத் திங்கள் விழாவினை பல்வேறு பகுதிகளில் நடாத்துவதற்கான நடவடிக்கைகளை மேற் கொண்டு வரும் திரு. நீதன் சானும் உரையாற்றினார்.
இவ்விழாவில் மார்க்கம் முதியோர் சங்கம், பொக்ஸ் குறூவ் முதியோர் சங்கம், றிச்மன்ட்ஹில் முதியோ ர் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், தமிழ் ஊடகவியலாளர்கள் ஆகியோர் அதிகளவில் கலந்து கொண்டிருந்தனர்.
(வீரகேசரி மூர்த்தி)