nithiyamடாக்டர் செந்தில்மோகன் ஆரம்பித்து வைத்தார்

அண்மையில் இறையடி எய்திய தெல்லிப்பளை மகாஜனா கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு.கனக சபாபதி அவர்களுக்கு அஞ்சலி செலுத்து முகமாக மேற்படி கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினர் அஞ்சலிக் கூட்டம் ஒன்றினை நடாத்தினார்கள். ஸ்காபுறோவிலுள்ள பெரிய சிவன் ஆலய மண்டபத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் பழைய மாணவர் சங்க தலைவர் திரு.ஜெயந்திரன் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் பேராசிரியர்கள், டாக்டர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள், எழுத்தாளர்கள்,கவிஞர்கள் உட்பட பொது மக்களும் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர்.

மேடையில் வைக்கப்பட்டிருந்த அதிபரின் திருவுருவப் படத்துக்கு அவரது பிள்ளைகளும், மைத்துணர் திரு.குருஅரவிந்தனும் மற்றும் அனைவரும் முதலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.

கடமை, கண்ணியம், செயற்திறன் ஆகிய அருங்குணங்களைக் கொண்டவராகத் திகழ்ந்த அதிபர் அவர் களின் பேரும், புகழும் மறைந்து விடாது நிலைத்து நிற்கும் வகையிலும், பிறரை ஊக்குவிக்கும் வகை யிலும் அவரது பெயரில் நம்பிக்கை நிதியம் ஒன்று (ஆநஅழசயைட குரனெ – டீயமெ ழக ஆழவெசநயட) ஆரம்பித்து வைக்கப்பட்டது. தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் பழைய மாணவரும் நீண்ட காலம் அதிபரு டன் நெருங்கிப் பழகியவருமான டாக்டர் செந்தில்மோகன் பெருந் தொகைப் பணத்தினை அன்பளிப்புச் செய்து அதனை ஆரம்பித்து வைத்தார். “மகாஜனாக் கல்லூரியை மதிக்கும் நான் அதிபர் அவர்களை யும் மதிக்கின்றேன். அதனால் அவரது பெயரால் எதையாவது ஆரம்பிக்க வேண்டும் என எண்ணினேன். கல்வி பயிலும் வசதி குறைந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் நம்பிக்கை நிதியமே சரியானது எனக்கண்டு அதனை இன்றைய தினம் ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்” எனக் கூறி தனது அன்பளிப்பினை காசோலையாக பழைய மாணவர் சங்கத் தலைவர் திரு.ஜெயந்திரனிடம் கையளித்தார்.

அதிபர் அவர்களின் மைத்துணரும், பழைய மாணவர் சங்கப் பொருளாளருமான திரு.குரு அரவிந்தன் அஞ்சலி உரை நிகழ்த்திய போது “எனது படிப்பு முதல் திருமணம் வரை அனைத்து விடயங்களையும் பொறுப்பெடுத்து நடாத்தியவர் எனது அத்தான். இங்கு கனடாவுக்கு வந்த பின்னர் என்னை ஆனந்த விகடன் சஞ்சிகைக்கு சிறுகதைகளை அனுப்புமாறு முதலில் ஆலோசனை கூறியவரும் அவர் தான். இங்குள்ள தமிழ் பிள்ளைகளுக்கு தமிழைப் போதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் “ஆரம்” ஒளியிழை நாடாவை வெளியிடும் ஆலோசனையை தெரிவித்தவரும் அவர் தான். அவரது நினைவு எமது உயிர்த்துடிப்பில் என்றென்றும் இணைந்திருக்கும்” எனக் கூறினார்.

பேராசிரியர் சண்முகதாஸ் அவர்கள் உரையாற்றிய போது பின்வருமாறு கூறினார்: “தனது சிறந்த சேவையினால் சாதனையாளராக மாறி வாழ் நாள் அதிபராகத் திகழ்ந்தவர். நான் பேசாப் பொருளை அமரர் கனகசபாபதி அவர்கள் பேசியது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. கனடாவில் நிகழ்ந்த அரங்கேற்றங்கள் பற்றி அவர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார். நான் எழுத தயங்கிய விடயங்களைப் பற்றி அவர் அதில் மிகத் தெளிவாக எழுதி இருந்ததை வாசித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். சிறந்த குணம் வடைத்த அவர் ஒரு வாழ் நாள் சாதனையாளராகத் திகழ்வார்”.

திரு.சாமி அப்பாத்துரை அவர்கள் உரையாற்றிய போது“ஆற்றல்,அறிவு,ஏற்றம், இறக்கம் ஆகியவற்றுக்கு மேலான சக்தி கொண்டவர் அதிபர் கனகசபாபதி அவர்கள். மகாஜனாக் கல்லூரியை மக்கள் கல்லூரி யாக மாற்றினார். நான் ஸ்கந்தவரோதயா கல்லூரியின் பழைய மாணவன். அக்கல்லூரியின் அதிபராக இவர் இருந்த 1950 களில் அதன் புகழ் கொடி கட்டிப் பறந்தது. கல்லூரி நான்கு சுவர்களுக்கு மத்தி யிலல்ல சமுதாயத்துடன் இணைந்து செயலாற்ற வேண்டுமென வலியுறுத்தி வந்தார் அதிபர் கனகச பாபதி அவர்கள்” எனக் கூறினார்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவரும், முன்னாள் வடமாகாண கல்வி அதிகாரியுமான திரு. சிவநாயகமூர்த்தி அரையாற்றிய போது “அதிபர் அவர்கள் சாதாரண அதிபரல்ல, பல வைத்திய கலா நிதிகளை உருவாக்கியவர். எமது சமூகத்துக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்த அவர் இங்கு நடைபெற்ற சகல வைபவங்களிலும் தவறாது கலந்து கொண்டு சொற்பொழிவுகளும் நிகழ்த்தியவர். அவரை நாம் எழுத்தாளர் இணையத்தின் மூலம் “வாழ் நாள் சாதனையாளர்” என்ற விருதினை வழங்கி கௌரவிக்க இருப்பதை தெரிவித்ததும் முதலில் அவர் மறுப்புத் தெரிவித்தார். ஆனால் நீங்கள் அதற்க மிகவும் தகுதி வாய்ந்தவர் ஆனதினால் நீங்கள் மறுப்பின்றி அதனை ஏற்றுக் கொள்ள வேண்டுமென நாம் வலி யுறுத்தியதை அடுத்து அதற்கு இணக்கம் தெரிவித்தார். ஆனால் துர்அதிஷ்ட வசமாக நாம் அதனை நிறைவேற்று முன்னர் அவர் இயற்கை எய்தி விட்டார். அவர் உண்மையிலே காலமாகவில்லை, என்றும் எங்களோடு இணைந்திருந்து செயலாற்றுவார்” எனக் கூறினார்.

பண்டிதர் ம.செ.அலெக்ஸ்சாந்தர் கவிதாஞ்சலி செலுத்தினர். நம்நாடு ஆசிரியர் திரு.இராசலிங்கம் “மாமலை சாய்ந்தது” என்ற தலைப்பிலான கவிதை வாசித்தார். மற்றும் பலரும் அஞ்சலி உரை நிகழ்த் தினார்கள்.
(வீரகேசரி மூர்த்தி)

அஞ்சலி நிகழ்வின் ஒளிப்படங்களில் சில..

 

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: January 15, 2015