திடீரென்று நான் அந்தச் செய்தியைச் சொன்னதும் என் மனைவி ஒருகணம் அதிர்ந்து போனாலும், முடிவில் அரைமனத்துடன் சம்மதித்தாள். 

“நீங்க ஊருக்குப் போறதைப்பற்றி எனக்கு எந்தப் பிரச்சனையுமில்ல. ஆனால் ஒரு பிரச்சனையிலயும் மாட்டாமல் போய்வரவேணும். அதுதான் என்ர கவலை” என்றாள் மனைவி. 

மகளுக்கு யூனிவேசிட்டியில் சேரவேண்டிய நாள் நெருங்கிக்கொண்டிருந்தது. சுதனுக்கும் வகுப்புப் பரீட்சைகள் இருந்தன. இந்தக் காரணங்களால் சுமதி பிள்ளைகளுடன் தங்கிவிட்டாள். நான் மட்டும் தனியாக ஸ்ரீலங்காவுக்குப் போவதென்று முடிவானது. 

கட்டுநாயக்காவில் இறங்கி கேரதீவுக் கடல்தாண்டி, யாழ்ப்பாணம் வந்து சேர்வதற்குள் எனக்கு போதும்போதும் என்றாகிவிட்டது. நல்லவேளை நான் நிறைய சாமான்கள் ஒன்றும் கொண்டுவரவில்லை. ஒரே ஒரு டிரவலிங் பாக்குடன் வந்தது ‘செக்கிங் பொயின்ட்டு’களில் தூக்கிக்கொண்டு நடக்க வசதியாக இருந்தது. அப்ப யாழ்ப்பாணம் இயக்கத்தின்ர முழுக்கட்டுப்பாட்டில இருந்தது. கோட்டையில இருந்து ஆமிக்காரன் இடைக்கிடை வெளிக்கிடப் பார்ப்பான். இயக்கம் அடிச்ச உடன அமந்துடுவாங்கள். கடலுக்க நேவியின்ர வாலாட்டல் இருக்கும். மற்றபடி பிரச்சனையில்லை. 

அம்மாவுக்கு ஏலாது…. பேச்சு மூச்சில்லாமல் கிடக்கிறா என்று மகாலிங்க அண்ணன் போனில சொன்னதும் எனக்கு நிம்மதியா அங்க இருக்க ஏலாமல் போச்சுது. அக்காவுக்கும் இப்பத்தான் ‘பைபாஸ் சேர்ஜரி’ நடந்தது. அதுக்குள்ள அவவை ஸ்ரீலங்காவுக்கு போகச் சொல்ல ஏலாது. அதுதான் நான் வெளிக்கிட வேண்டிய கட்டாயம். என்ன தான் நாட்டில பிரச்சனை என்றாலும், திரும்பத் தாய் மண்ணில கால் வைக்கப் போறன் என்பதை நினைக்கும்போது ‘என்ன நடந்தாலும் பரவாயில்லை’ என்று ஒரு தைரியமும்; வரத்தான் செய்தது.

யாழ்ப்பாணத்திலிருந்து பத்துமைல் தொலைவில் இருக்கிறது எங்கள் ஊர். நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்டு யாழ்ப்பாணத்துடன் பண்ணைப் பாலத்தினால் இணைக்கப்பட்டதுதான்  ஒல்லாந்தர்களால் லைடன் தீவு என்று அழைக்கப்பட்ட தீவுக்கூட்டம். அத்தீவின் மத்தியில் மணிமுடியாய் அமைந்திருப்பதுதான் எனது ஊர், வேலணை. அங்கு கோட்டைபோல் விளங்கியது எங்கள்; கல்வீடு. குசினி, சாப்பாட்டறை, முன்னுக்கும் பின்னுக்கும் ரெண்டு விறாந்தையள், நான்கு அறைகள் மாடியிலும் நான்கு அறைகளுடன் பெரிய விறாந்தை என்று மாளிகை மாதிரி பெரிய வீடு. 

ஊரில கல்வீடுகள் என்று ஒன்றிரண்டு இருந்தாலும், எங்கட வீடுதான் பெரிய கல்வீடு. அதுவும் மாடிவீடு. அதாலதான் எங்களை எல்லாரும் ‘பெரியகல்வீட்டுக்காரர்’ எண்டு சொல்லுறவையள்.

பெரியகல்வீடு என்றால், அண்டையயல் ஊரவர்களுக்கே நல்லாத் தெரியும் என்றால் புரியும் அந்த வீட்டின் பெருமை. அப்பா வீடு கட்டின பாதியில மாரடைப்பில போக, அம்மா அந்த வீட்டைக் கட்டி முடிக்கப் பட்டபாடு பெரும்பாடு தான்….!! 

அப்ப நாங்கள் சின்னப் பிள்ளையள். அக்காவின்ர சாமத்திய வீட்டை அந்தக் கல்வீட்டிலதான் நடத்த வேணும் என்டு அம்மா உறுதியோட இருந்தவா. வெறும் அத்திவாரத்தோட இருந்த வீட்டின்ர மிச்ச அலுவல்களுக்காக அம்மா கிளிநொச்சியில கிடந்த தன்ர சீதனக் காணியையும் வித்துத்தான் செலவழிச்சா. அந்தக் காணி உறுதியளுக்காக அம்மா தன்ர மூத்த தமையனோட கொஞ்சம் இழுபறிப்பட்டவா…. 

அந்தக்; காசுகளும் பத்தாமல் போக, வீட்டு அலுவல்கள் பாதியிலயே கிடந்துது. மூன்று, நாலு வரு~மாய்க் கட்டிட வேலையள் இழுபட்டுது. பத்துப் பன்னிரண்டு வயதில அக்காவைப் பார்க்கப் பார்க்க அம்மாவுக்கு பகீர் பகீர் என்றிருக்கும். 

“இவள் குந்துறதுக்கிடையில வீட்டக்கட்டி முடிக்கவேணும்” என்று அடிக்கடி தனக்குள்ள சொல்லிக்கொள்ளுவா. இரவு பகல் பாராமல் தோட்டத்தில கிடந்து கஸ்டப்படுவா. பள்ளிக்கூடம் லீவெண்டால் நானும், அக்காவும் அம்மாவுக்கு உதவியாகத் தோட்டத்துக்கு போவம். மிளகாய் ஆய்வம், உரம் போடுவம், தண்ணி பாய்ச்சுறதுக்குப்  பாத்தி கட்டிவிடுவம்;. இப்பிடி எல்லாவேலைகளையும் நாங்களே செய்வம். அம்மா வயற்காணிகளைக் குத்தகைக்கு விட்டிருந்தா. அதோட அங்க இங்க என்று கடன்பட்டு திரும்ப வீடு கட்டிற வேலையைத் தொடங்கினா. 

கடைசியில மனுசி நினைச்சமாதிரியே அக்காவின்ர சாமத்திய வீட்டை அந்த வீட்டில தான் செய்து முடிச்சா. சாமத்திய வீட்டில விழுந்த காசையும் அம்மா வீட்டுக் கடன் கட்டத்தான் எடுத்தவா. சாமத்திய வீட்டுக்கு வந்த சொந்த பந்தம் எல்லாம் எங்கட வீட்டப் பார்த்து பெருமூச்சுவிட்டவை. எல்லாரும் தலையைத் தூக்கி அண்ணாந்து வீட்டைப் பார்க்கேக்க அம்மாவுக்கு பெருமை ஒரு மட்டில இல்ல. 


யாழ்ப்பாணம் வழமை போல் சுறுசுறுப்பாகத்தான் இருந்தது. நேரம் மதியத்தைத் தொட்டிருந்தது. நெருப்பையள்ளித் தலையில கொட்டின மாதிரி வெயில் சுள்ளெண்டு இருந்துது.  

அங்கயிருந்து பஸ்சில அராலித்துறைக்குப் போய் நான் வேலணைக்கு போய்ச் சேர பயணம் சீயென்று போச்சுது. 

என்ர நல்ல காலம் மகாலிங்க அண்ணரின்ர மகன் ராசன் அந்தப் பக்கம் சைக்கிளில வந்தவன். என்னைக் கண்டுட்டு அவன் யோசிக்க, நான் அவனைப் பார்த்துட்டு நாடியத் தடவ – கொஞ்ச நேரத்தில ராசன் என்னை அடையாளம் கண்டுபிடிச்சுட்டான். அம்மா கனடாவில எடுத்த படங்களக் காட்டியிருப்பாதானே…! 

சைக்கிள் குண்டு குழிகளில் விழுந்தொழும்பியபடி பயணப்பட்டுது. வெய்யில் சாயிற நேரம் வேலணைச் சந்தியைப் போய்ச் சேர்ந்தோம். வேலணை என்று வெள்ளை எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட கருங்கல் மைல்கல் தன்னந்தனியாக நின்றிருந்தது. ஊருக்குள் நுளைவதற்கு முன் சந்தியில் இறங்கி அந்த மண்ணில் கால்பதிக்க வேண்டும் போலிருந்தது. ராசனிடம் ஒருநிமிடம் சைக்கிளை நிற்பாட்டச் சொல்லிவிட்டு, இறங்கி அந்த மண்ணில் சிறிதுதூரம் நடந்தேன். மூச்சுக்காற்றில் மண்வாசனை நிறைந்திருந்தது. நன்றாக மூச்சை இழுத்து உடல் முழுவதும் ஓடவிட்டேன். பல வருடங்களுக்கு முன் அனுபவித்த அந்த சுகத்தை மீண்டும் அனுபவித்தேன். கடந்து போன பதின்ம வயதுகளை மீண்டும் தொட்டு விட்டதுபோல் ஒரு உணர்வு. ஏனோ அந்தச் சுவாசக் காற்றிலும் ஒரு அந்நியத் தன்மையின் நெருடல் என்னுள்….

சந்திக் கடையில் இருவரும் பிளேன் டீ குடித்துவிட்டு பயணத்தைத்; தொடர்ந்தோம். பனைமரங்களும், பூவரசம் மரங்களும் எனது கிராமத்தின் அடையாளங்கள். அவைகளில் பல காணாமல் போயிருந்தன. சில மரங்கள் தலை அறுந்து மூளியாய் நின்றன. கள்ளிமரங்கள் ஆங்காங்கே பற்றையாக வளர்ந்திருந்தன. சில வீடு, வளவுகள் பராமரிப்பார் அற்று ஆடு, மாடுகள் வாசம் செய்யும் இடங்களாக மாறியிருந்தன. வாகனங்கள் அடிக்கடி அப்பாதையால் செல்வதாலோ என்னவோ இலைகளில் எல்லாம் மண்ணிறத்தில் தூசி படர்ந்திருந்தது. 

ராசனுடைய பேச்சுப் பிராக்கில் வீடு வந்ததே தெரியவில்லை. எனது வீட்டை- எனது ஊரை – நான் விளையாடித் திரிந்த தெருக்களை – அடையாளம் காண்பது எனக்கே சிரமமாக இருந்தது. 

ராசன் குரல் கொடுக்க மெல்ல வந்து எட்டிப்பார்த்த அம்மா என்னைக் கண்டதும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை. நாற்பது வயதாகி, இரண்டு குழந்தைகளுக்கு நான் தந்தையானபோதும், என் அம்மாவிற்கு நான் இன்னும் குழந்தைதான். என்னைத்  தன் மார்போடு அணைத்து கண்ணீர் சொரிய, உடல்நடுங்க என் கன்னங்களிலும், உச்சியிலும் முத்தமிட்டாள். அந்த அன்பு மழையிலிருந்து நான் விடுபடச் சற்று நேரமானது. 

“என்ன மருமகள், என்ர பேரப்பிள்ளையள் ஒருத்தரும் வரேல்லையா…..?” என்றபடி கண்களைச் சுழலவிட்டாள். 

“பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடம். அதுகளை விட்டுட்டு வரேலாது. மனுசிக்கும் வேலையில உடன லீவு தரமாட்டாங்கள். அவாவை பிள்ளையளோட விட்டுட்டு நான் மட்டும் வெளிக்கிட்டுட்டன்” என்றேன் அம்மாவை அணைத்தபடி. புறுபுறுத்தபடி என்னிடமிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு விறுவிறுவென்று வீட்டுக்குள் நடந்தாள். 

அம்மாவின் உடல் வயதின் முதிர்ச்சியாலும், நோயின் கொடுமையாலும் தளர்ந்திருப்பது தெரிந்தது. நான் கனடாவிலிருந்து வந்து சேர்வதற்குள் அம்மாவின் உடல் எவ்வளவோ தேறியிருந்தது. 

அம்மா திடீரென்று மயங்கி விழுந்தவுடன், மகாலிங்க அண்ணன் தான் ஊர்காவற்றுறை ஆஸ்பத்திரிக்கு அம்மாவைக் கொண்டு போய் இருக்கிறார். அவவுக்கு பிரசர், கொலஸ்ரோல் எல்லாம் கூடிப்போச்சுது என்று டொக்டர் சொல்லியிருக்கிறார். பிறகு யாழ்ப்பாணம் பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போய் கொஞ்சநாள் வைச்சிருந்தவையாம். அவையளும் அம்மாவால கஸ்டப்பட்டு போயிட்டினம். 

தனக்கு வருத்தம் என்றதும்தான் அம்மாவுக்கு பிள்ளையள் பக்கத்தில இல்லையென்ற பயம் வந்திருக்குது. உடன தந்தியடிக்கச் சொல்லி ராசனுக்கு சொல்லியிருக்கிறா. அதுதான் நடந்தது. ஆனா நான் வந்து சேருறத்துக்குள்ள அம்மா பழைய நிலைக்கு வந்திட்டா.
 
அம்மா வளவெல்லாம் கூட்டி துப்பரவா வைச்சிருந்தா. ரோசாக்கன்றுகளும், அக்கா  நட்டுவச்ச குறோட்டன்களும் இன்னும் அப்பிடியே இருந்தன. வீட்டின் சுவரில் அங்கங்கே காரை தெரிந்தாலும் இன்னும் பழைய கம்பீரத்துடன் நிமிர்ந்து நிற்கிறது. என்னையும் அறியாமல் என் கண்கள் பனித்தன. உள்ளே நுளைந்ததும் ஒருவிதமான வெறுமை என்னை வரவேற்றது. 

‘நானும், அக்காவும் இருக்கேக்க எவ்வளவு கலகலப்பாக இருந்த வீடு இது.’ என் கண்கள் ஆவலுடன் நாலாபக்கமும் சுழன்றன. 

“இரப்பு…. பயணக்களைப்பில இருக்கிறாய். பிறகு ஆறுதலா வீட்டைச் சுத்திப்பார்” என்று அம்மா சொல்வதை காதில் வாங்கிக்கொள்ளாமல் சுற்றுமுற்றும் பார்க்கிறேன். அம்மா ராசனிட்ட நல்ல ஊர்ச் சேவல் ஒன்று கொண்டுவரும்படி சொல்லுவது என் காதுகளில்  விழுகிறது.

‘அட என்ர ஒபீஸ்ரூம்….’

மனம் பழைய நினைவுகளில் நிறையக் கால்கள் தானாகவே அந்த அறையை நோக்கி நடந்தன. கதவைத் திறந்து எட்டிப்பார்த்தேன். 

பத்துவருடங்களுக்கு முன் இருந்ததைப் போலவே யன்னல் ஓரமாக நான் படுக்கும் கருங்காலிக்கட்டில்…..

வலது பக்க மூலையில் முதிரை மரத்தில் அம்மா தச்சனிடம் சொல்லிச் செய்விச்ச கதிரையும், மேசையும்…..  

நான் இறுதியாக உயர்கல்வி கற்கும்போது பாவித்த புத்தகம், கொப்பிகளை அம்மா அப்படியே அடுக்கி வைத்திருந்தா. ஒவ்வொருநாளும் தூசுதட்டித் துப்பரவாக வைச்சிருக்கிறா. ஆசையுடன் என் கைகள் அவற்றைத் தடவிப்பார்த்தன. நோட்டுப் புத்தகங்கள் நடுவே என் சிவப்பு அட்டை போட்ட அந்தக் கொப்பியும் கிடந்தது. எடுத்துப் புரட்டிப் பார்த்தேன். ஏதேதோ கவிதைக்கிறுக்கல்கள்….. ஒவ்வொன்றையும் மறுபடியும் வாசித்துப்பார்க்க ஆவல் தூண்டினாலும் அம்மாவின் அழைப்பில் அதை அப்படியே மூடிவைத்தேன். பள்ளிக்கூடக் கவிதைப் போட்டியில் பரிசாகக் கிடைத்த பார்க்கர்பேனை என் கொம்பாசுக்குள் இன்னும் பத்திரமாகவே இருக்கிறது. 

யன்னலைத் திறந்து பார்த்தேன். நான் கனடாவுக்கு வெளிக்கிட முன்னம் நட்டுவைத்த முல்லைக்கொடி பெரிய மரமாகப் படர்ந்திருந்தது. அம்மா அதற்குப் பந்தல்கூட போட்டிருந்தா. காற்றோடு முல்லைப்பூவின் வாசனை அறையை நிறைத்தது. கதியால் வேலிக்கு அங்கால மாமா வீடு தெரிந்தது. மாமாவீட்டுக் கறுத்தக் கொழும்பான் பூவும் பிஞ்சுமாய் தலையசைத்துக்கொண்டிருந்தது. 

பழைய நினைவுகளோடும், அம்மாவின் ஆரவாரமான கவனிப்போடும் நாட்கள் மெல்ல நகர்ந்தன.

நண்பர்கள், உறவினர்கள் என்று தினமும் வீடு ஆரவாரப்பட்டது. 

“இப்பத்தான் வீடு வீடு மாதிரி இருக்குது….” அம்மா பெருமூச்சுடன் அடிக்கடி சொல்லிக்கொண்டா. 

நாட்கள் போவது தெரியாமல் நகர்ந்துகொண்டிருந்தன. விறாந்தையில் காற்றாட அமர்ந்தபடி எல்லோருடனும் பழைய கதைகளை எல்லாம் பேசிக்கொண்டிருந்தது எனக்குள் புது உற்சாகத்தைத் தந்தது. 

எங்கள் குடும்பம் பெரிய குடும்பம் இல்லை. ஆசைக்கொரு பெண். ஆஸ்திக்கொரு ஆண் என்று சொல்வார்களே அது மாதிரி. முதல்ல நான் தான் நாட்டுப் பிரச்சனையால வெளிநாடு என்று வெளிக்கிட்டனான். ‘எங்கயென்டாலும் பிள்ள உயிரோட இருந்தால்காணும்’ என்று அம்மா அழுதழுது என்னை அனுப்பிவைச்சவா. பிறகு அக்காவுக்கு வெளிநாட்டு சம்மந்தம் தான் சரிவந்தது. கனடா என்றதும் கொஞ்சம் நிம்மதி. ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாம் என்று அம்மா சந்தோசப்பட்டவா. ஆனால் அவா மட்டும் கனடாவுக்கு வரமாட்டன் என்று சொல்லிப்போட்டா. அதுக்கு அம்மா சொன்ன காரணங்கள் பல. 

“அப்பா அத்திவாரம் போட்ட கையோட போய்ச்சேர்ந்திட்டார். அவர் துவக்கி வைச்ச இந்த வீட்ட நான் கட்டிமுடிக்கப் பட்டபாடு உங்களுக்கு தெரியாது. எத்தினை பேரிட்ட கடன்பட்டு…. மேசனிட்டயும், தச்சனிட்டயும்; தனியாளா நிண்டு வேலைவாங்கி…. அவங்களுக்கெல்லாம் சமைச்சுப்போட்டு….. எவ்வளவு கஸ்டப்பட்டுக் கட்டின வீடு இது!”

“நான் பிறந்து வளர்ந்த பூமி இது. என்ர தெய்வம் குடியிருந்த கோயில் இது. என்ர பிள்ளையள் பிறந்து, வளர்ந்து உருண்டு விளையாடின மண் இது. இதை விட்டுட்டு நான் எப்பிடி வாறது?”

“கொப்பரோட வாழ்ந்த இந்த வளவையும், ஊரையும் விட்டுட்டு நான் எப்பிடியப்பு வர ஏலும்? ஏதோ என்ர கடைசிக்காலம் மட்டும் இங்கயே இருந்திடுறன். எனக்கு ஒன்டென்றால் நீ வந்து கொள்ளி வைக்கமாட்டியே…..?”
 
நாங்கள் கேட்கும்போதெல்லாம் அம்மா கீறல்விழுந்த ‘ரெக்கோர்ட்’ மாதிரி இதையே திரும்பத்திரும்ப சொல்லுவா. அவவுக்கு அந்த வீட்டை விட்டுட்டு வர மனமில்லை. ஐயா கட்டியாள வேணும் என்று நினைச்ச வீடு அது. வீட்டின்ட ஒவ்வொரு கல்லும் அம்மாவின்ர வியர்வையையும், உழைப்பையும் பற்றிச் சொல்லும். அந்த வீட்டக் கட்டி முடிக்க அம்மா அவ்வளவு கஸ்டப்பட்டவா.

தினமும் ஊரைச் சுற்றிப் பார்க்கப் பால்ய நண்பன் ரமேசுடன் நான் புறப்பட்டு விடுவேன். அவன் வேலணை மத்திய கல்லூரியில் ஆசிரியராக இருக்கிறான். பின்னேரங்களில அவன்ர மோட்டார் சைக்கிளில் வேலணைச் சந்தி வரைக்கும் போவோம். சில நேரங்களில் ஊர்காவற்றுறைப் பக்கம் போவோம். சுடச்சுடப் பிடிச்ச மீன்கள் கொண்டு வருவான்கள். மீன், நண்டு, பெருநண்டு எண்டு வாங்கிக்கொண்டு வருவம். ஒரு நாளைக்கு கூழ், ஒரு நாளைக்கு மீன் புட்டு எணடு அம்மாவின்ர கவனிப்பு வேற…..

சில சமயங்களில் என்ர ஊர் எனக்கே அந்நியமாய் தெரியும். ஊரில் வாழ்;ந்தவையள் அரைவாசிக்கும் மேல வெளிநாட்டுக்கும், சிலர் எங்கே என்று தெரியாமலும் காணாமல் போயிருந்தினம். சில புதிய முகங்கள் என்னைப் பார்த்து “தம்பி ஊருக்குப் புதுசா?” என்று விசாரிக்கும். அவை வேறு தீவுப்பக்கங்களில இருந்து இடம்பெயர்ந்து அங்க குடியேறியவையள்;. 

ரமே~; அடிக்கடி நாங்கள் சின்ன வயதில் விளையாடுற குளத்தங்கரைக்கு கூட்டிப்போவான். அங்க அருகில ஒரு ஆலமரமும் நிக்குது. ஆலமரத்து அருகோட ஒரு பெரிய கல்லுக் கிடக்குது. அந்தக் கல்லில குந்தியிருந்து பழங்கதைகள் பேசுறதே ஒரு ஆனந்தம் தான்.  

“டேய் மச்சான் இந்த இடம் உனக்கு ஞாபகம் இருக்குதா?” ரமே~; கேட்டான். 

“தெரியாமலா….”

ஓடிச்சென்று விழுதுகளைப் பிடித்து ஆடத்தொடங்கினேன். கொஞ்சம் மூச்சுவாங்கியது….

தினமும் பாடசாலை விட்டு வரும்போது நான், ரமே~;, பாபு எல்லாரும் போட்டி போட்டுக்கொண்டு ஓடிவந்து இந்த விழுதுகளைப் பிடிச்சுக்கொண்டு ஊஞ்சல் ஆடுவம். பிறகு கொஞ்சம் வளர, அந்த வழியால போற எங்கட பள்ளிக்கூட பெட்டையளப் பார்த்து பகிடி விட்டுக்கொண்டு அந்தக் கல்லில குந்தியிருப்பம். 

அன்றைக்கு நானும் ரமே~_ம் அடிவளவில நின்று கதைச்சுக் கொண்டு இருந்தம். அங்க ஒரு கிணறு இருக்குது. அதில தான் நாங்க முந்தி நீச்சல் அடிக்கிறனாங்கள். நான், ராசன், ரமேஸ் எல்லாரும் நல்லா நீந்துவம். 

அப்ப எனக்கு நீந்தத் தெரியாது. ரமே~;, பெரியப்பான்ர முகுந்தன் அண்ணன், ராசன்  எல்லாரும் கிணத்துக்குள்ள நீந்துறதைப் பார்த்துக்கொண்டு நிப்பன். முகுந்தன் அண்ண என்னை ‘நீந்த வா….’ எண்டு கூப்பிடுவார். நான் ‘ஏலாது….’ என்று நின்று பார்த்துக்கொண்டு நிற்பன். ஒருநாள் நான் அப்பிடி பார்த்துக்கொண்டு நிக்கேக்க திடீரென்று பின்னால நின்று முகுந்தன் அண்ண என்னைப் பிடிச்சு கிணத்துக்க தள்ளி விட்டுட்டார். கிணத்துக்குள்ள இரண்டு தரம் அடிவரைக்கும் போய் வந்தன். அதுக்குப் பிறகு என்னைப் பிடிச்சு ஒல்லித் தேங்காய் ஒன்றைத் தந்து அதப் பிடிச்சுக்கொண்டு நிக்கச் சொன்னவர். அதுக்குப் பிறகு எனக்கு பயம் போயிட்டுது. அவர் எனக்கு நீச்சல் பழக்கி விட்டார். இந்தக் கதைகளை நான் ரமேசோட நினைவுபடுத்திக் கதைச்சுக்கொண்டு இருக்கேக்க தான் ஆனந்தி ஓடி வந்தவள். 

“ரவி, உங்கடயம்மா மயக்கம் போட்டு விழுந்துட்டாவாம்…..” ஆனந்தி சொல்லி முடிப்பதற்குள் நான் ஓடத்தொடங்கினேன். எப்பிடி கேட்டைத் திறந்தேன்…. வீட்டுக்குள் வந்தேன் என்றே தெரியவில்லை. அம்மாவை வீட்டு நடுக்கூடத்தில் கிடந்த வாங்கிலில் வளத்தி இருந்தார்கள். ஆர்.எம்பி டொக்டர், பக்கத்து வீட்டு சொர்ணம் அங்கிள், “உங்கட அம்மாவுக்கு சுகர் பிரச்சனை. அதுதான் மயங்கி விழுந்திட்டா. கொஞ்ச நேரத்தில மயக்கம் தெளிஞ்சிரும்” என்று சொல்லியபடி, தலைவாசல் குந்தில் அமர்ந்துகொண்டார். நான் ஆசுவாசமாக மூச்சு விட்டேன். 

விறாந்தையில் சனம் கூடியிருந்தது. அவர்களுக்குள் ஏதோ ஒரு சலசலப்பு…. எல்லோர் பார்வையும் தங்கத்தை ஈட்டியாய் குத்தி நின்றன. தங்கம் கூனிக்குறுகியபடி வாசல் படிகளுக்கு அப்பால் வேலியோரமாய் ஒதுங்கி நின்றாள். நிலமையை ஓரளவு அனுமானித்துக்கொண்ட சொர்ணம் அங்கிள் “அப்ப நான் போட்டு வாறன்..” என்றபடி எழுந்துகொண்டார்.

 “இதுதான் சாட்டென்று கண்டகண்ட சாதியள் எல்லாம் வீட்டுக்க வர வெளிக்கிட்டுதுகள்”
 
“அதுதானே இவள் எப்படி வீட்டுக்குள்ள போவாள். மாமிக்கு ஒன்றென்டால்; நாங்க ஓடிவரமாட்டமா? எங்களுக்கு இல்லாத அக்கறையும், கரிசனையும் இவளுக்கு எப்பிடி வந்துது?” உறவினர்களும், அயலவர்களும் தங்கத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினர். தரையைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் தங்கம்.

“வாசல் படியோட நிண்டதுகள் எல்லாம் சாமியறைக்குள்ள வந்துட்டுதுகள்..”என்று அடிக்குரலில் ஆக்ரோ~மாய் கர்ச்சித்தார் மாமா. பயந்துபோன தங்கம் என்னருகே ஓடிவந்தாள்.

“தம்பி உங்கட அம்மா மா இடிக்கிறதுக்காக ஆள் அனுப்பினவா. அதுதான் வந்தனான். ரெண்டு மூன்று தரம் கூப்பிட்டுப் பார்த்தன். அவவின்ர சத்தத்தையே காணேல்ல. உள்ள இருந்து ஒருமாதிரி அனுங்கிற சத்தம் கேட்டுது. அம்மா ஏலாதவா தானே…. வயதும் போயிட்டுது. அவவுக்கு ஏதோ நடந்துட்டுது போல என்ர உள்மனது சொல்லிச்சுது தம்பி. அதுதான் ஒன்றையும் யோசிக்காமல் உள்ளுக்க போயிட்டன்.”

நடுநடுங்கும் குரலில் பேசினாள் தங்கம். சுற்றி நின்றிருந்தவர்களின் முகங்களில் எந்த மாறுதல்களும் இல்லை.

“நானோ எங்கட ஆக்களோ எந்தக்காலத்திலையும் உங்கட வீடுகளுக்க போனதில்லை. எங்கட வேலையெல்லாம் வாசல்படியோட சரி. ஆபத்து நேரத்தில வீட்டுக்குள்ள வந்து ஒருவாய் தண்ணி குடுத்துட்டன்……” என்றவள் மாமா முறைத்துப் பார்க்கவும் அத்தோடு நிறுத்திக்கொண்டாள்.  

“என்ன இருந்தாலும் நீ வீட்டுக்க போயிருக்கக் கூடாது. எங்கள கூப்பிட்டிருக்கலாம். உங்களை எல்லாம் வளவுக்க விட்டதே தப்பு. எங்களை அண்டிப்பிழைக்கிற உங்களுக்கு இவ்வளவு கொழுப்புக் கூடாது” என்று மாமா சத்தம்போட அவருக்கு ஆதரவாக வேறு சில உறவினர்களும் பேசத் தொடங்கினார்கள். தங்கத்தைச் சமாதானப்படுத்தி அவள் கையில் ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்து அனுப்பி வைத்தேன். 

அம்மா கண்விழித்த போது தங்கத்தைத் தவிர எமது உறவினர்கள் சிலர் அம்மாவைச் சுற்றி நின்றார்கள். தலைமாட்டில் இருந்த நான் அம்மாவின் தலையைத் தடவியபடியே இருந்தேன்.

“என்னம்மா இதெல்லாம்? இதுக்குத்தானே நானும் அக்காவும் எங்களோட வந்திருங்க என்று கூப்பிடுறனாங்கள்” என்று அம்மாவை சற்றுக் கோபத்துடன் கேட்டேன். 

“தம்பி சொல்லுறதும் சரிதான். பிள்ளைகள் ரெண்டும் வெளிநாட்டில இருக்க நீங்க ஏன் இங்க இருந்து கஸ்டப்படுறீங்க?” பக்கத்து வீட்டு ராணியக்கா நியாயம் கதைக்க, 

“எனக்கு ஒண்டும் இல்லை. நான் நல்லாத் தான் இருக்கிறன்.” என்று தன் வருத்தத்தை மறைத்தபடி சிரித்தார் அம்மா. அவவின் பிடிவாதம் அவவுக்கு.

அன்றைய தினத்திற்குப் பிறகு வந்த நாட்கள் விரைவாகவே கடந்து போயின. எனது மூன்று வார விடுமுறை நாட்களும் முடிந்துபோக அம்மாவை விட்டுப் பிரியமுடியாமல் பிரிந்து மீண்டும் கனடா வந்து சேர்ந்தேன்.

கனடா வந்ததும் மீண்டும் வேலைக்குப் போவது, பிள்ளைகளை டியூசன் கிளாசுக்குக் கொண்டுபோவது என்று கனடா வாழ்க்கையோடு என்னை இணைத்துக்கொண்டேன். அவ்வப்போது அம்மாவின் நினைவும், ஊர் ஞாபகங்களும் மனதுள் வந்து எட்டிப்பார்த்துவிட்டுப் போகும். இந்த நிலையில்தான் அந்தச் செய்தி என்னை ஒரு கணம் அதிரவைத்தது. 

நாட்டில் மறுபடியும் சண்டை தொடங்கிவிட்டதாகத் தினந்தினம் புதிய செய்திகள் வந்துகொண்டிருந்தன. இணையத்தளங்களிலும், வானொலி, பத்திரிகைகளில் வரும் செய்திகள் அச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தன. கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, ஊர்காவற்றுறையில் நிலைகொண்டிருந்த இராணுவம் கடற்கரை வழியாகவும், எங்கள் ஊர் பிரதான வீதி வழியாகவும் யாழ்ப்பாணம் நோக்கி முன்னகர்ந்தது என்றும் யாழ்;ப்பாண நுளைவாயிற் பகுதியான பண்ணைப்பாலத்தில் கடும் சண்டை  நடப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டிருந்தன. அம்மாவைப் பற்றி எந்தவொரு செய்தியையும் அறியமுடியாமல் நானும் அக்காவும் பெரிதும் அவதிப்பட்டோம். 

இந்த முன்னகர்வில் பல நூறு மக்கள் இறந்து விட்டதோடு, பல ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து விட்டதாகவும் செய்திகள் தெரிவித்தன. யாழ்ப்பாணத்தில அங்கங்க சனம் அடிக்கடி இடம்பெயர்ந்து இருந்தாலும், தீவுப் பகுதி மக்கள் இடம்பெயர்வது இதுதான் முதல்தடவை. நிறையச் சனம் கடலுக்குள்ளால ரோலர் மூலமாக இந்தியாவுக்கு அகதிகளாகப் போய் விட்டதாகவும்… வழியில் பாக்கு நீரிணையில் ரோலர்கள் கவிழ்ந்து அப்பாவி மக்கள் பலர் நீரில் மூழ்கி இறந்து விட்டதாகவும்…. இப்படி பற்பல செய்திகளும் அவ்வப்போது வந்துகொண்டே இருந்தன. அம்மாவைப் பற்றிய செய்திகளை மட்டும் அறியமுடியவில்லை. 

நாட்கள், வாரங்களாகி மாதங்களாகக் கடந்து சென்றன. யுத்தமும் ஓரளவு இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தது. 

இந்த நிலையில்தான் கொழும்பிலிருந்து மாமா தொலைபேசியில் பேசினார். மாமாவின் குரல் கேட்டதே அம்மாவைக் கண்டுபிடித்துவிட்டதைப் போலச் சந்தோசமாக இருந்தது. மாமா குடும்பம் பிரச்சனைக்குள்ளால யாழ்ப்பாணத்துக்கு வந்து எப்பிடியோ கொழும்புக்கு வந்துசேர்ந்திருந்தார்கள். 

“ஊராத்துறையிலயிருந்து ஒரேயடியாய் n~ல் அடிச்சுக்கொண்டு ஆமிக்காரங்கள் வெளிக்கிட்டுட்டாங்கள். சனமெல்லாம் கையில அம்பிட்டதுகளை எடுத்துக்கொண்டு வெளிக்கிட்டுட்டுதுகள். நாங்களும் வெளிக்கிட்டம். அம்மாவும் சனங்களோட சேர்ந்து வந்திருப்பா என்று தான் நினைச்சம். ஆருக்குத் தம்பி தெரியும்? அந்தப் பதட்டத்தில பள்ளிக்கூடம் வழிய தங்கியிருக்கேக்க அக்காவைப் பற்றி விசாரிச்சனான் ஒரு செய்தியும் கிடைக்க இல்லை.” 

பிறகு மாமா சொன்ன செய்தி எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்தது. 

“அம்மா இறந்திட்டாவாம் என்று அறிஞ்சன் தம்பி…..”

“ஐயோ… அம்மா…!” 


“ஐயோ கடைசியா அம்மாவின்ர முகத்தைக் கூட பார்க்க ஏலாமல் போயிட்டுதே” மாமாவுடன் என் இயலாமையைப் புலம்பித் தீர்த்தேன். 

“ஆமி வந்து போனாப்பிறகு ரெண்டு நாள் கழிச்சு ஊருக்கு திரும்பிப் போன அந்தச் சனங்கள் தான் அவவின்ர உடலை எடுத்து அடக்கம் செய்தவையாம். நாங்கள் அப்பிடியே கொழும்புக்கு வந்து சேர்ந்திட்டம். இப்பத்தான் இந்தத் தகவல் கிடைச்சுது. கொழும்புக்கு வந்திருந்த தங்கத்தின்ர மகன் தான் இதைச் சொன்னவன். ஆனால் வீடு மட்டும் இவ்வளவு அடிபாட்டுக்குள்ளயும் தப்பீட்டுதாம்”  மாமா சொல்லிக்கொண்டு போனார்.

“சரி. சரி” என்றபடி தொடர்பை துண்டித்துக்கொண்டேன்.

“என்ன மனுசர் இவை. துக்கச் செய்தி சொல்லேக்கயும் வீட்டைப் பற்றின கதைதான். இவை மாறமாட்டினம். அம்மாவுக்கு நல்ல தம்பிதான் வந்து வாச்சிருக்கிறார்” என் உதடுகள் முணுமுணுத்தன. 

தொடர்ந்து வந்த இரண்டு நாட்களும் நான் வேலைக்குச் செல்லவில்லை. செய்தியறிந்து உறவினர்கள் துக்கம் விசாரிக்க வந்துகொண்டே இருந்தனர். 

‘கடைசியா சிலோனுக்கு போகேக்க மனுசியையும், பிள்ளையளையும் கூட்டிப் போயிருக்க வேணும். பிழை விட்டுட்டன்’ என்ற கவலை சதா என்னை அரித்துக்கொண்டிருந்தது. காலம் தன் பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது.

அன்று வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியபோது தபால்பெட்டிக்குள் சில கடிதங்கள் நிறைந்திருந்தன. கடிதங்களை எடுத்துக்கொண்டு உள்ளே நுளைந்தேன். சுமதி ‘பேஸ்மன்டில்’ இருந்த ‘மெசினில்’ உடுப்புகளை துவைக்கப் போட்டுக்கொண்டிருந்தாள். உடை மாற்றிக்கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தபடி சாவதானமாக கடிதங்களைப் பிரித்தேன். 

கடனட்டைகளுக்கு பணம் செலுத்தும்படி கோரி வந்த கடிதங்களுக்கு அடியில் ‘எயார் மெயில்’ ஒன்றும் தெரிந்தது. வேலணை என்று முகவரியிடப்பட்டு இருந்தது. யாராக இருக்கும் என்று நினைத்துக்கொண்டே அவசரமாக கடிதத்தைப் பிரித்தேன். தங்கம்தான் கடிதம் எழுதியிருந்தாள். அதில் இருந்த செய்திகள் எனக்கு ஆச்சரியத்தையும். குழப்பத்தையும் ஏற்படுத்தியது. 

அழகான மணிமணியான எழுத்துக்கள். தங்கத்திற்கு எழுதப் படிக்கத்தெரியாது. அவளின்ர பேத்தியைக் கொண்டு எழுதியிருப்பாள் போல. இப்ப அவையெல்லாம் ஊரில படிச்சு நல்ல உத்தியோகம் பார்க்குதுகள். கடிதம் கீழ்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது.


வணக்கம் தம்பி. நான் தங்கம் எழுதுறன்.

உங்கட முகவரியையும், சுகத்தையும் கனடாவில இருக்கிற எங்கட அண்ணன்ர மகன் மூலமாக அறிந்துகொண்டேன். உங்களிற்ற ஒரு உதவி கேட்கிறதுக்காக இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

உங்களுக்கு தெரிந்திருக்கும் ரெண்டு வரு~த்துக்கு முதல் எங்கட பக்கத்துக்கு ஆமி வந்தது. அந்த நேரம் நாங்கள் ஊரை விட்டு இடம்பெயர்ந்து போயிட்டம்.


உங்கட அம்மாவையும் வரச்சொல்லி எவ்வளவோ கேட்டனாங்கள். வரமாட்டன் என்று சொல்லிப்போட்டா. 

உங்கட சொந்தக்காரர் ஒருத்தரும் அம்மாவை கூட்டிக்கொண்டு போகேல்ல. எல்லாரும் தாங்கள் தப்பினால் காணும் என்று ஓடிவிட்டீனம். அவா அந்தப் பக்கம் ஆமி வராதெண்டு நினைச்சிருப்பா போல. அவங்களும் எங்கட ஊருகளில தங்கயில்லை. நேர யாழ்ப்பாணக் கோட்டைக்குத் தான் போனவங்கள். ஆனால் இடையில நடந்த சண்டையில ரெண்டு நாள் இழுத்துட்டுது. அவங்கள் போன அடுத்த நாளே நாங்கள் திரும்ப வந்தனாங்கள். எங்கட வீடுகள் எல்லாம் உடைஞ்சு தரைமட்டமாப் போச்சுது. எல்லாத்தையும் எரிச்சுட்டாங்கள். உங்கட அம்மாவின்ர ஞாபகம் வந்து நான்தான் வீட்டுப் பக்கம் போய் எட்டிப் பார்த்தனான். எல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருப்பியள்.

வீட்டுக்கு கிட்ட போகவே சரியான மணமாக இருந்துது. நாயொண்டு வாசலில செத்து காகங்கள் கொத்திக்கொண்டு கிடந்துது. நான் என்ர சின்னவனைக் கொண்டு அதைக் கிடங்க வெட்டித் தாட்டுப் போட்டன். அதுக்குப் பிறகுதான் வீட்டுக்குள்ள பார்த்தம். அம்மாவின்ர வீடு n~ல் விழுந்து சிவருகள் அங்கங்க ஓட்டையா இருந்துது. கதவு ஓவென்று திறந்து கிடந்தது.  ஏதோ பொல்லாத மணம் வந்தது. வாயையும், மூக்கையும் சீலைத் தலைப்பால பொத்திக்கொண்டு உள்ளுக்குப் போனனான். 

உங்கட அம்மா கழுத்திலயும், வயித்திலயும் சூடுபட்டு இறந்து கிடந்தா. நாத்தம் தாங்க ஏலாமல் இருந்தது. உடம்பு வீங்கி, வெடிச்சு…. எல்லாம் எழுதினால் நீங்கள் வருத்தப்படுவீங்கள்.

ஊருக்குள்ள ஒரு சனமும் இல்ல. உங்கட ஆக்களும் வரேல்லை. பிறகு நான்;தான்  என்ர மகனையும், அவனின்ட சினேகிதப் பெடியளையும் பிடிச்சு, சாட்டி மயானத்தில எல்லாக் காரியத்தையும் நல்ல விதமா செய்து முடிச்சனான்.

மேல இருந்து விமானப் படை குண்டு போட்டதில மாட்டுக்கொட்டகைக்க நிண்ட மாடுகளும், ஒரு ஆடும் செத்து நாறிக்கொண்டு கிடந்துது. எல்லாத்தையும் அடக்கம் செய்து அந்த இடங்களைத் துப்பரவாக்கினது நாங்கதான். 

உங்கட அம்மாவைத் தேடி உங்கட ஆட்கள் ஒருத்தரும் வரேல்லை. எங்களுக்கு வீடு, வாசல் ஒண்டும் இல்லாததால நாங்க உங்கட வீட்டிலதான் இவ்வளவு காலமா இருக்கிறம். அம்மாவின்ர வீட்டை நாங்கள் நல்லாத்தான் வைச்சிருக்கிறம். 

இவ்வளவு காலத்திற்குப் பிறகு உங்கட மாமா வந்து இந்த வீட்ட விட்டு போகச் சொல்லுறார். எங்களுக்கு வேற வீடு இல்ல தம்பி. உங்கட அம்மாவும், நீங்களும் எங்களுக்குச் செய்த உதவிகளை நாங்கள் மறக்க இல்லை. நீங்கள் எங்களுக்கு ஒரு நல்ல முடிவு சொல்லுவீங்கள் என்று நம்புறன். 

இப்படிக்கு,
தங்கம்.

கடிதத்தை வாசித்து முடித்ததும், வேதனையில் என் மனம் கனத்தது. கண்கள் குளமாக அப்படியே அமர்ந்து விட்டேன். அம்மா… வீடு… எங்கட ஊர்… என்று என் நினைவுகள் சுழன்று, சுழன்று இறுதியில் வீட்டில் வந்து நின்றது.

‘போர்…! போர்…!’

‘இந்தப் போரால எல்லாம் நாசமாப் போச்சுது. மனித உயிர் எவ்வளவு மலினமாய்ப் போச்சுது..! இப்ப மிஞ்சியிருக்கிறது அந்த வீடு ஒண்டுதான். அதுக்குத்தான் இப்ப ஆளுக்காள் இழுபறிப்படுகினம். சொந்தக்காரர் எல்லாரும் கொடுக்குக் கட்டிக்கொண்டு வெளிக்கிட்டு இருக்கினம்.’ 

தன்னுடைய வேலைகளை முடித்துக்கொண்டு மேலே வந்தாள் சுமதி. கடிதத்தை அவளிடம் நீட்டினேன். 

வீடு…..!

அம்மாவின்ர கல்வீடு…! இதுதான் இப்ப எல்லாருக்கும் பிரச்சனை!

ரெண்டு நாளைக்கு முதல் மாமாவும் ஃபோனில கதைச்சவர். 

“தம்பி ஊரில இருக்கிற கல்வீட்டை எங்கட பேரில எழுதித் தாங்க. அங்க ஆராரோ எல்லாம் எங்கட ஆக்களின்ர வீடுகளில இருக்கினம். வீடு எங்கட பேரில இருந்தால் பாதுகாப்புத்தானே” 

மாமா சொன்னது ஞாபகம் வந்தது.

போன கிழமை மகாலிங்கம் அண்ணரும் கடிதம் போட்டிருந்தவர். வீட்டை விற்கிறதென்டால் தன்னட்டச் சொல்லச்சொல்லி இருந்தார். அவரும் இப்ப கொழும்பில தான் இருக்கிறார். சனமெல்லாம் இப்ப பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தபடியால் பழையபடி ஊருக்கு கிளம்பியிருக்கினம். அங்க காணியள் எல்லாம் இப்ப நல்ல விலைக்குப் போகுதாம். தீவுப் பக்கத்தில ஹோட்டல்கள் கட்டி விட்டால் நல்லா உழைக்கலாமாம். 

“என்னப்பா செய்யப்போறியள்…?” 

இரவுச் சாப்பாட்டை முடித்து விட்டு என் அறை மேசையில் அமர்ந்திருந்தபோது மனைவி கேட்டாள். அவளிடம் ரெத்தினச் சுருக்கமாக நான் எழுதி வைத்திருந்த கடிதத்தை நீட்டினேன்.

அன்புள்ள மாமாவுக்கு,

அம்மா எங்களையெல்லாம் விட்டுட்டு போயிற்றா. அவவின்ர ஞாபகமா இருக்கிறது அந்தக் கல்வீடு ஒண்டுதான். அதில இப்ப தங்கம் குடும்பம் இருக்கிறதா அறிஞ்சன். அம்மாவின்ர கடைசிக் காரியங்களைச் செய்து அந்த ஆத்மாவுக்கு ஒரு ஆறுதலைக் குடுத்தது தங்கம்தான். தங்கம் குடும்பம் இருக்கும் மட்டும் அந்த வீட்டில இருக்கட்டும். அவையளுக்கு ஒரு கரைச்சலும் குடுக்க வேண்டாம். நான் அவையளுக்கும் இது தொடர்பாக கடிதம் எழுதியிருக்கிறேன். அந்த வீடு தங்கம் குடும்பத்துக்குத்தான். இதுபற்றி மேற்கொண்டு எதுவும் பேச நான் விரும்பவில்லை.

இப்படிக்கு, 
மருமகன்
ரவி.