வீதியின் இருமருங்கும் மஞ்சள் நிறச் சருகுகள் நிறைந்து கிடந்தன. பச்சைப் பசேல் என்றிருந்த மரங்கள் எல்லாம் வசந்த காலம் முடிந்து, இலைகளை உதிர்க்கத் தொடங்கியிருந்தன. காற்றின் கரங்கள் எத்திவிளையாட காய்ந்து போன சருகுகள் திக்கிற்கு ஒன்றாய் அலைக்கழிந்து பறந்தன.
பேத்தியின் சாமத்திய வீட்டைச் சிறப்பாக முடித்துக் கொடுத்துவிட்டு, விழாவுக்கு வந்த உறவுக்காரப் பையன் ஒருவனுடன் வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தாள் விசாலாட்சி.
காரில் ஏறியதும் அவள் சந்தோசம் எல்லாம் எங்கோ ஓடி மறைந்தது. மகனைப் பற்றிய பயம் அவளைப் பற்றிக் கொண்டது.
“இன்றைக்கு ஒரு நாள் எங்களோட நிண்டுட்டுப் போகலாம்தானே அம்மா……..”.
சியாமளா எவ்வளவு கெஞ்சியும் கேளாதவள் போல வந்துவிட்டாள் விசாலாட்சி. வேற்று மனுசியைப் போல விழா முடிந்ததும் முடியாததுமாக ஓடிவந்ததை நினைக்க அவளுக்கு வேதனையாக இருந்தது. பிள்ளைகளை நினைக்க அவளுக்கு அதைவிட வேதனையாக இருந்தது.
‘பிள்ளையள் எல்லாம் ஏன் இப்பிடிப் பணம், பணம் என்று அடிபடுகுதுகளோ தெரியாது….?’
சொந்தச் சகோதரியின்ர மகளின்ர சாமத்திய வீட்டுக்கு அவனும் போகாமல், தன்னையும் போக வேண்டாம் என்று சொன்ன மகனை நினைக்கும்போது விசாலாட்சிக்கு மகன் மீது கோபங்கோபமாக வந்தது.
‘அவனுக்கெண்டு உடன்பிறப்பு வேற யாரு இருக்கினம். சரி அவன்தான் உணருகிறான் இல்லையெண்டு பார்த்தால், இவளும் உணர்ந்த பாடாய்த் தெரியயில்லை. அவளும் மல்லுக்கட்டிக்கொண்டு நிற்கிறாள்.’
சியாமளாவும், ரூபனும் குஞ்சும் குருமானுமாய் இருந்தபோதே விசாலாட்சியின் கணவன் நல்லூர்த் தேர் முட்டியடியில் விழுந்த எறிகணையில் தலைசிதறி அந்த இடத்திலேயே இறந்துபோனார். அதற்குப் பிறகு பிள்ளைகளே தன் உலகம் என்று வாழத்தொடங்கினாள் விசாலாட்சி. இருந்த நெல்வயல் காணிகளைக் குத்தகைக்கு விட்டு வரும் சொற்பப் பணத்தில் குடும்பத்தைச் சிக்கனமாக நடத்தினாள்.
ஏழ்மையிலும், க~;டத்திலும் பிள்ளைகள் இருவரும் நல்லமுறையில் வளர்ந்து வந்தனர். ஒருவர்மற்றவரில் விட்டுக்கொடுத்து, ஒருவருக்கொருவர் உயிராய் வளர்ந்தனர். ரூபன் சாதாரணதரப் பரீட்சையை எழுதிவிட்டுக் குடும்பத்தின் பணத்தேவை கருதி நகரில் இருந்த துணிக்கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்து உழைக்கத் தொடங்கிவிட்டான். வயதில் இளையவனானாலும், பொறுப்பை உணர்ந்து அவன் உழைக்கத் தொடங்கியது விசாலாட்சிக்குப் பெருமையாக இருந்தது.
குடும்பம் பொருளாதார ரீதியில் கொஞ்சம் தலையெடுக்கத் தொடங்குகிறது என்று விசாலாட்சி எண்ணிக்கொண்டிருந்த தருணத்தில் மீண்டும் யாழ்ப்பாணத்தைப் போர் மேகங்கள் சூழ்ந்துகொண்டன. இளைஞர்களும், யுவதிகளும் ஈழப் போராட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டார்கள். விசாலாட்சியின் மனதில் எங்கே தன் மகனும் மண்மீது கொண்ட பற்றினால் தாய்நாட்டைக் காக்கவென்று புறப்பட்டு விடுவானோ என்ற அச்சம் எழத்தொடங்கியது.
அதன் பின் காரியங்கள் துரிதகதியில் நடந்தேறின. தன் தமையன்மாருடன் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வந்தாள். இவ்வளவு நாளும் தங்களுக்கு சோறுபோட்ட வயல், தோட்டம், காணி என்று எல்லாவற்றையும் விற்று மகனை வெளிநாட்டுக்கு அனுப்பத் தீர்மானித்தாள். அந்தப் பணமும் போதாதென்று அவள் திணறியபோது தன் திருமணத்திற்கு என்று தாய் சேமித்து வைத்திருந்த நகைகளையெல்லாம் எடுத்துக்கொடுத்தாள் சியாமளா. கையிலும், கழுத்திலும் ஒரு நகை இல்லாமல் நின்ற தமக்கையை இயலாமையோடு பார்த்தான் ரூபன். அவன் கண்கள் குளமாகி நின்றன.
“ரூபன், நீ எங்கேயாவது, உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் உயிரோட இருந்தாலே எங்களுக்குப் போதும்” என்று தம்பியிடம் உருகினாள் சியாமளா.
‘ம்…. அந்த அன்பு…. பாசம்….. எல்லாம் இப்ப எங்க போயிற்ருது……..’ விசாலாட்சியின் நெஞ்சுக்குழிக்குள் துயரம் சூழ்ந்து பெருமூச்சாக வெளிப்பட்டது.
விசாலாட்சியின் மூத்த தமையன் தனக்குத் தெரிந்த ஏஜென்சி மூலமாக ரூபனைக் கனடாவுக்குக் களவாக எடுத்துவிடும் ஏற்பாட்டைச் செய்தார். இரண்டு தரம் வழியில் பிடிபட்டு, கடைசியாக இருந்த பெரிய வீட்டையும் விற்று திரும்பவும் ஏஜென்சிக்கு பணம் கட்டினாள் விசாலாட்சி. இலங்கையில் இருந்து புறப்பட்டு மூன்று மாதங்களின் பின் தான் ரூபனிடம் இருந்து நல்ல செய்தி கிடைத்தது. அமெரிக்க எல்லைக்குள் அவன் களவாக நுளைவதற்குப் பட்ட சிரமங்களை எல்லாம் அறிந்தபோது விசாலாட்சி அழுதே விட்டாள்.
வெளிநாடு என்று வந்த பின் சில இளைஞர்கள் குடும்பத்தை மறந்து போய் விடுவார்கள் என்று விசாலாட்சி அறிந்திருந்தாள். ஆனால் ரூபன் அப்படி இருக்கவில்லை. மாதம் இரண்டு முறை தாயையும், சகோதரியையும் நினைத்து கண்ணீரோடு கடிதங்கள் வரும். ஒவ்வொரு கடிதத்தோடும் தேவைக்கு அதிகமாகவே பணத்தையும் அனுப்பிவிடுவான். அதோடு இரண்டு வருடங்கள் மாடாய் உழைத்துத் தாயையும், தமக்கையையும் களவாகக் கனடாவுக்கு எடுத்தும் விட்டான்;.
“என்ன அம்மம்மா அமைதியா இருக்கிறீங்க…?” காரை ஓட்டிவந்த பையன் பேச்சுக்கொடுக்கவும் சுயநினைவுக்கு வந்தாள் விசாலாட்சி.
“ம்……. ஒன்றுமில்லையப்பு….” என்று இழுத்த விசாலாட்சியிடம் அவள் இறங்க வேண்டிய இடத்தை விசாரித்தான் அந்தப் பையன். மீண்டும் மௌனமான விசாலாட்சியை அதற்குப் பின் அவன் குழப்பவில்லை.
‘ஊரில இருக்கேக்க எவ்வளவு பாசமாய்;, நேசமாய் இருந்ததுகள். இங்க வந்து இப்பிடித் தலைகீழா மாறிட்டுதுகளே……’ விசாலாட்சிக்குப் பழையதை எல்லாம் நினைக்க வேதனையாகத் தான் இருந்தது.
சியாமளாவுக்குத் திருமணம் நடந்தது, புது வீடு வாங்கியது, எல்லாரும் ஒன்றாகக் குடித்தனம் நடத்தியது என்று எல்லாமே அவளுக்குக் கனவுபோல இருந்தது. மகன், மகள், மருமகன், பேரப்பிள்ளைகள் என்று விசாலாட்சிக்குப் பொறுப்புகள் கூடியது.
எல்லோருக்கும் சமைத்து, அவர்கள் தேவைகளை நிறைவேற்றி, பேரப்பிள்ளைகளுக்குப் படிப்பில் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்துகொடுத்து, வேலைக்களைப்போடு வரும் பிள்ளைகளுக்குத் தேனீர் தயாரித்துக்கொடுத்து ஆசுவாசப்படுத்துவது எல்லாமே ஆனந்தமாகவே இருந்தது விசாலாட்சிக்கு.
“அம்மம்மா வீடு வந்திட்டுது. இறங்குங்கோ…..” என்று அந்தப் பையன் மறுபடியும் குரல் கொடுக்கவே, தன் சிந்தனைகளில் இருந்து விடுபட்டாள். கார்க்கதவைத் திறந்து அவள் இறங்கும்வரை காத்துநின்ற பையனிடம் நன்றி தெரிவித்துவிட்டு மகனின் வீட்டை நோக்கி நடந்தாள். இளமஞ்சள் வெயில் முன் விறாந்தையைப் பொன்மயமாக்கிக் கொண்டிருந்தது. வெயிலையும் மீறிக்கொண்டு குளிர் காற்று உடலை ஊசிபோல் குத்தியது.
கோலிங் பெல்லை அழுத்திவிட்டுக் காத்திருந்தாள் விசாலாட்சி. மாமியார் உள்ளே வந்ததும் கதவை இழுத்துப் பூட்டி விட்டு உள்ளே நடந்தாள் சீதா. குழந்தை மிதுனுக்கு இப்போது ஒன்றரை வயதாகிறது. அவனை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு கிண்ணத்தில் இருந்த உணவை அவனுக்கு ஊட்டத்தொடங்கினாள் சீதா. மாமியாரை அவள் நிமிர்ந்து கூடப் பார்க்கவில்லை. அவள் முகம் விரைப்பாக இருந்தது. லிவிங் ரூமில் மாட்டியிருந்த சுவர் மணிக்கூடு மூன்று முறை ஒலித்துவிட்டு அமைதியானது.
“ரூபன் வந்திட்டானா பிள்ளை………..” ரகசியக்குரலில் விசாலாட்சி கேட்கவும் மாடிப்படிகளில் இருந்து மகன் இறங்கி வரவும் சரியாக இருந்தது. ஏதோ சொல்ல வாயெடுத்த சீதா கணவனைக் கண்டதும் அப்படியே அடங்கிப்போனாள்.
“என்ன? கொண்டாட்டம் எல்லாம் நல்லா நடந்துதா…….” இளக்காரமாகக் கேட்டுக்கொண்டே இறங்கி வந்தான் ரூபன்.
“வந்ததும் வராததுமாய்த் தொடங்குறான்…..” விசாலாட்சி மனதுக்குள் முணுமுணுத்தாள்.
“எனக்கு இண்;டைக்கு முடிவு தெரியவேணும்? இந்த வீட்டில எனக்குத் தெரியாமல் இன்னும் என்னவெல்லாம் நடக்குது..?” உறுமினான் ரூபன். காலில் இடறிய சின்ன முக்காலியை உதைக்க அது சுவரில் மோதி நின்றது.
“உம்………! என்ன முடிவு தெரிய வேணுமடாப்பா?” சிரித்து மழுப்பியபடி மகனை நெருங்கி அவன் மேவாயைத் தடவிய விசாலத்தின் கையைத் தட்டிவிட்டு விலகினான் ரூபன்;. நான்கு வீடுகள் கேட்குமாப்போல் கத்தினான். அவன் கோபம் வந்தால் எப்போதும் இப்படித்தான்.
“உங்களிட்டச் சொல்லிப் போட்டெல்லோ நான் வெளிக்கிட்டனான்…..! அந்த வீட்டுக்கு போகவேணாம் என்று சொன்னனான் எல்லோ. பிறகு ஆரக்கேட்டு வெளிக்கிட்டனீங்க?….. போனனீங்க அப்பிடியே அங்க மகளோட தங்க வேண்டியது தானே. ஏன் திரும்ப இங்க வந்தனீங்க” படபடவென்று பேசினான் மகன். மகனின் கோபத்தைக் கண்டு சற்றுத் தயங்கிவிட்டு மறுமொழி சொன்னாள் விசாலாட்சி.
“நீ எப்பிடி எனக்கொரு பிள்ளையோ, அதுபோலத்தான், அவளும் என்ர பிள்ளை….”
முணுமுணுத்தாள் விசாலம். குளிருடன் சேர்;ந்து வெளியில் எறித்த வெயிலில் வெளியே போய் வந்தது அவளுக்குத் தலையை லேசாக கிறுகிறுக்க வைத்தது. மருமகளிடம் குளிர்பானம் கொண்டுவரும்படி கேட்க, மிதுனை அவனது இருக்கையில் அமர்த்திவிட்டு எழுந்தாள் சீதா.
“யூசோ….? ஏன் அங்க ஹோல்ல குடிக்க இல்லையோ….? மகள் யூஸ் தரமாட்டன் எண்டுட்டாவோ? இங்க இருந்து இனி பச்சைத் தண்ணி கூட நான் தரமாட்டன். என்ர அனுமதியில்லாமல் நீ எப்பிடி அங்க போவாய்…..?” தலையை மேலும் கீழும் ஆட்டியபடி கேட்டான் மகன்;.
“நான் தூக்கி வளர்த்த பேத்தி, என்ர மூத்த பேத்தி சாமத்தியப் பட்டு நிக்குது. எனக்குப் பார்க்க ஆசையிருக்காதாப்பா. நீ போக வேண்டாம் என்று சொன்னாலும்; எனக்கு மனம் கேட்கயில்ல. நான் வெளிக்கிட்டு போனன். என்ர பேத்தியைப் பார்க்க யாரின்ரயும் அனுமதி எனக்குத் தேவையில்லை?” பதிலுக்குச் சத்தம் போட்டாள் விசாலாட்சி.
“அதுசரி….. அங்க போய் பேத்திக்கு நாலு சோடி காப்புப் போட்டியாமே. எங்கால உனக்குக் காசு….?” என்றபடி தாயின் தோளைக் குலுக்கினான் ரூபன்.
“ஐயோ… என்ன விடடா? தோள் மூட்டுக்க நோகுதடா. விடு….” என்றபடி மகனிடமிருந்து திமிறினாள் விசாலாட்சி. அவளுக்கு இரண்டு தோள்ப்பட்டையும் வலித்தது. மகனின் பிடி சாதாரண பிடியாக இல்லாமல் இரும்புப் பிடியாக இருந்தது. விசாலாட்சிக்கு வேர்த்து விறுவிறுத்தது. இப்பவெல்லாம் அவன் இப்படித்தான்….. கோபம் வந்தால் அவனுக்கு கண்மண் தெரியாது. உடலோடு மனமும் வலித்தது. நிற்கமுடியாமல் சோபாவில் வந்து அமர்ந்துகொண்டாள். கொஞ்சநேரத்திற்கு அவளால் பேசமுடியவில்லை. துயரம் நெஞ்சை அடைத்துக்கொண்டது. மூக்கில் இருந்து நழுவிய கண்ணாடியைக் கழட்டி இமையோரம் துடித்துக்கொண்டிருந்த கண்ணீரைத் தன் சேலைத் தலைப்பால் துடைத்துக்கொண்டாள்.
‘அதுக்கிடேல யாரோ இவனுக்கு வத்தி வைச்சுப்போட்டாங்கள். ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் தானே. என்ர பேத்திக்கு என்ர காசில நான் செய்துபோட்டால் இவனுக்கென்ன?’
தான் இவ்வளவு உலுக்கியும் தாய் பேசாமல் இருக்கவும் ரூபனுக்கு கோபம் உச்சத்துக்கு ஏறியது. வழமைபோல சன்னதம் ஆடத்தொடங்கினான்.
“உன்னையும் மகளையும் கனடாவுக்கு எடுத்து விடுகிறதுக்கு நான் எவ்வளவு க~;டப்பட்டனான் தெரியுமா? இவ்வளவு காலமும் உனக்கு சோறு போடுறது நான்தான். உன்ர பென்சன் காசு முழுக்க எனக்குத்தான் வரவேணும். அந்தக் காசில எனக்குத் தெரியாமல் அதுக்கு இதுக்கு எண்டு வாங்கி மகளுக்கு களவாய்க் குடுத்தனுப்புறது காணாதெண்டு இப்ப ரொக்கமா அள்ளிக் குடுத்துட்டு வந்தனியோ?” தாய்க்கும் மகனுக்கும் இடையே வாக்குவாதம் நீண்டு கொண்டே போனது. சீதா எல்லாவற்றையும் அமைதியாக நின்று பார்த்துக்கொண்டு இருந்தாள்.
கனடா வந்த புதிதில் மூவரும்; ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் தான் இருந்தார்கள். ரூபனைக் கடன்காரர்கள் நெருக்குவதைப் பார்த்துவிட்டுச் சியாமளாவும் ஒரு இடத்தில் வேலைக்குப் போகத் தொடங்கினாள்.
அதற்கிடையில் சியாமளாவின் கலியாணமும் சரிவந்துவிட அதையும் முடித்துவிட்டாள் விசாலாட்சி. கனடா மாப்பிள்ளையே பொருந்திவந்தது வசதியாகப் போனது. மாப்பிள்ளையின்; தாய், சகோதரிகள் எல்லாம் ஸ்ரீலங்காவில் தான் இருந்தார்கள். சியாமளா விரைவிலேயே வீடொன்றை வாங்கிக் கொண்டு தாயையும், தம்பியையும் தன் வீட்டிலேயே தங்க வைத்துக்கொண்டாள். தாயின் பென்சன் பணம் அவளது மோட்கேஜ் செலவுக்கு பெரும் உதவியாக இருந்தது.
இந்த நிலையில்தான் ரூபனுக்குத் திருமணம் நிச்சயமானது. திருமணம் முடித்த சில நாட்களிலேயே ரூபன் தனிக்குடித்தனம் போகத் தீர்மானித்துவிட்டான். எலி வளையானாலும் தனிவளை வேண்டும் என்று விசாலாட்சியும் தடை ஒன்றும் சொல்லவில்லை.
அடுத்தடுத்து இரண்டு பெண் குழந்தைகள் பிறந்ததில் வேலைக்குப் போவதை நிறுத்திக்கொண்டாள் சியாமளா. பிள்ளைகள் வளர அவர்களைத் தாயுடன் விட்டுவிட்டுச் சியாமளா வேலைக்கும் போகத் தொடங்கினாள். பிள்ளைகளை அன்புடன், அக்கறையுடன் பார்த்துக்கொள்ள கூடவே தாய் இருந்தது அவளுக்கு வசதியாக இருந்தது.
“இவ்வளவு நாளும் நீ மகளோட இருந்தது காணும். இனி என்னோட வந்திரு. சீதாவுக்கும் உதவியாக இருக்கும்.” என்று ஒருநாள் மகன் வந்து அழைத்தபோது சந்தோசமாகப் புறப்பட்டாள் விசாலாட்சி. சியாமளாதான் தாயைத் தன்னுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அடம்பிடித்தாள். அதன்பிறகுதான் மெல்ல மெல்ல சகோதரர்களுக்கிடையில் விரிசல் ஏற்பட்டது.
சீதாவுக்குக் குழந்தை கிடைக்க இருப்பதைக் காரணம் காட்டி மகன் அழைக்கவும் தாயால் மறுக்க முடியவில்லை. மனமின்றித் தாயைப் போக அனுமதித்தாள் சியாமளா. தாய் யாருடன் இருப்பது என்பதில் ஆரம்பித்த சண்டை, பென்சன் பணத்தைப் பகிர்ந்துகொள்வதிலும்; தொடர்ந்தது. மகன் வீடு, மகள் வீடு என்று மாறிமாறி இடம்பெயர்ந்துகொண்டிருந்தாள் விசாலாட்சி. ஒரு தாயின் சந்தோசங்கள், கனவுகள், மனநிம்மதியெல்லாம் சிதைந்து சுக்குநூறாவதை உணராமலேயே அவர்கள் சண்டை போட்டுக்கொண்டனர்.
“அம்மா நீ என்னோட தான் இருக்கிறாய். உன்ர காசு என்னிட்டத்தான் தரவேணும்.” ரூபன் கட்டளையிட்டான்.
“இவ்வளவு காலமும் உன்னையும், அம்மாவையும் நான்தான் வைச்சுப் பாத்தனான். அம்மாவின்ர காசில எனக்கும் உரிமை இருக்குது” என்பாள் சியாமளா.
“உன்னையும் அம்மாவையும் கனடாவுக்கு கொண்டுவந்ததே நான்தான். அதை மறந்திடாத” என்பான் ரூபன்.
“கனடாவுக்கு வர்ரதுக்கு உனக்கு காசென்ன மரத்திலயே காய்ச்சுக் கிடந்தது. என்ர நகைநட்டு எல்லாத்தையும் வித்துத்தானே உன்னை அனுப்பினது. அதை மறந்திட்டியோ?”
“அப்ப அவ்வளவு காலமும் நான் இங்க இருந்து க~;டப்பட்டு உழைக்கேக்க அந்தக் காசு எங்கயிருந்து வந்தது எண்டு நீ நினைச்சியோ?”
“இந்த ஏழெட்டு வருசமா நீயும், அம்மாவும் என்ர வீட்டில தானே இருந்தனீங்கள். நான் வாடகைக்கு விட்டிருந்தாலும் எனக்கு காசு வந்திருக்கும். நானும் தாய், சகோதரங்கள் எண்டு பேசாமல் விட்டுட்டன்” இந்த வாக்குவாதங்கள் பிள்ளைகள் வளரத் தொடங்கியதும்; மனங்கள் முறிந்த நிலையில் ஒருவருக்கொருவர் எதிராளிகளாய்ப் போனார்கள். கொண்டாட்டங்கள், தொடர்புகள் கசந்துபோனது. உறவு துண்டிக்கப்பட்டது.
விசாலாட்சி எங்காவது மகளையும், பேரப்பிள்ளைகளையும் சந்தித்தால் அவ்வளவுதான். ரூபன் கத்தத்தொடங்கிவிடுவான். விசாலாட்சியும் மகனுக்குத் தெரியாமல்; தன் கைச் செலவுக்கென்று வைத்திருக்கும் பணத்தை மகளின் கைகளுக்குள் திணிப்பாள். ஏதோ தன் பணம் பேரப்பிள்ளைகளுக்குப் பயன்படும் என்ற ஒரு சிறு நிம்மதி விசாலாட்சிக்குக் கிடைக்கும். தாயைச் சந்திக்கும்போதெல்லாம் மகளும் குத்திக்காட்டுவாள்.
“உன்னை நம்பி வீட்டை வாங்கிப் போட்டு, இப்ப நான் மோட்கேஜ் கட்ட வழியில்லாமல் அந்தரப்படுறன்” என்பாள் சியாமளா. இரண்டு பிள்ளைகளுக்கும் அவளது பணம்தான் தேவைப்படுகிறது. அவர்களது பிள்ளைகளுக்கு ஒரு மூதாட்டியின் பராமரிப்பும், பாதுகாப்பும் தேவைப்படுகிறது. ஆனால் ஒரு தாயின் அன்பும், பிள்ளைகளுடைய பாராமுகத்தால் ஏற்பட்டிருக்கும் வேதனையும் அவர்கள் கண்களுக்குத் தெரியவே இல்லை.
“என்ர வீட்டில இருக்கிறதெண்டால் நான் சொல்லுறபடி கேட்டுநட. இல்லையென்றால் அவளோடயே போய் இரு. மகன் இருக்கிறான் என்றதையே மறந்திடு” என்று பொரிந்துதள்ளுவான் ரூபன். இது அடிக்கடி நடக்கும் சண்டைதான்.
இந்த நிலைமையில்தான், சியாமளாவின் மகள் பெரிய பிள்ளையானாள். கோபதாபத்தை எல்லாம் விட்டுவிட்டு சியாமளா தம்பியின்; வீட்டுக்கு வந்து அழைப்பு விடுத்தாள். ரூபனோ அழைப்பிதழை வாங்கிக் கிழித்துக் குப்பைக் கூடையில் போட்;டான். தாயையும் அங்கே போகக்கூடாதென்று உத்தரவு போட்டுவிட்டான்.
அந்த நினைவில் மூழ்கியிருந்த விசாலாட்சியை ரூபனின் குரல் உலுப்பியது.
“சொல்லண என்ன மரம் மாதிரி நிக்கிறாய்? எங்கால அந்தக் காசு. பென்சன் காசை ஒழிச்சு வச்சிருந்து பேத்திக்கு நகை செய்து குடுக்கிறியா. எத்தினை நாளாய் நடக்குது இந்தக் கூத்து………..”
“என்ர காசில என்ர பேத்திக்கு என்னண்டாலும் நான் வாங்கிக் குடுப்பன். அதை நீயேன் கேட்கிறாய்?” சீறினாள் விசாலாட்சி.
“அவளுக்கு வெக்க துக்கமில்லை. இன்னும் வறுகப் பார்க்கிறாள். உன்ர பென்சன் காசு உன்ர மருந்துச் செலவுக்கே காணாது. பிறகு அதில எடுத்து எல்லாருக்கும் தானம் பண்ணினால் உன்ர சாப்பாட்டுச் செலவை யார் பார்க்கிறது?………” மகனின் வார்த்தைகளில் விசாலாட்சிக்கு நெஞ்சு வரண்டு போனது.
‘இவனை வளர்க்க நான் எவ்வளவு க~;டப்பட்டிருப்பன். இப்பிடி ஒருநாளாவது நான் சொல்லிக்காட்டியிருப்பனா? அதுகளைச் சொல்லிக்காட்டத்தான் ஏலுமா?’
“நான் உன்ர ஆம்பிளைப் பிள்ளை. நீ நான் சொல்லுறபடிதான் கேட்கவேணும். இனி அந்த வீட்டுப் படியேறினால் நான் மனிசனாகவே இருக்கமாட்டன்” என்றான் ஆத்திரத்துடன்;.
மகன் காசு காசெண்டு கரிச்சுக்கொட்டுகிறான் என்று மகள் வீட்ட போனால் அங்கேயும் அதே புலம்பல் தான். விசாலாட்சிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. மனம் நிம்மதியில்லாமல் தவித்தது. ஆறுதல் தேடி எங்காவது ஓடிவிடவேண்டும் போல ஒரு எண்ணம் உதித்தது. அதைவிடவும் சாப்பாட்டுச் செலவுக்குக் கணக்குப் பார்க்கும் மகனுடன் இனி இருக்கக் கூடாது என்று தீர்மானித்தாள்.
“உங்களோட இனி இருக்கஏலாது. எல்லாருக்கும் என்ர காசுதான் முக்கியமாகப் படுகுது. ஒருத்தருக்கும் என்னைத் தேவையில்லை. ஒருத்தருக்கும் தாயின்ர அருமை தெரியஇல்லை. நான் சீனியர் கோமுக்கு போறன். அங்கயாவது போய் நிம்மதியாக இருக்கிறன்” என்று மகனுடைய காதுகளில் விழும்படி உரக்கச் சொன்ன விசாலாட்சி, தன்னை மாதம் ஒருமுறை வந்து கவனிக்கும் தாதியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டாள்.
தன்னுடைய உடமைகள் என்று சொல்லத்தக்க சில உடுபுடவைகளை பையொன்றினுள் திணித்துக்கொண்டு வெளியே செல்ல ஆயத்தமானாள் விசாலாட்சி. வீட்டுக்;கு முன்பாகத் தாதிப்பெண் தனது காரில் வந்து இறங்கியபோதுதான் நிலமையின் விபரீதம் புரிந்தது ரூபனுக்கு. தாய் உண்மையிலேயே வீட்டை விட்டுப் போகப்போகிறாள் என்பதை உணர்ந்ததும் அவளை அதட்டி, மிரட்டி, கெஞ்சிக் கேட்டுப்பார்த்தான். மருமகள் சீதாவும் எவ்வளவோ மன்றாடினாள்.
“அம்மா எங்கயும் போயிடாதேங்கோ. நான் ஏதோ கோவத்தில கதைச்சுப்போட்டன். நான் ஆத்திரத்தில சொன்னதை ஏன் இவ்வளவு பெரிய பிரச்சனையாக எடுக்குறீங்க…” ரூபன் கேட்டுக்கொண்டு இருக்கும்போதே உள்ளே நுழைந்த தாதிப்பெண் விசாலாட்சியிடமிருந்து அவளுடைய பையை வாங்கிக்கொண்டாள். யாரிடமும், எதுவும் சொல்லாமலேயே தாதியைப் பின்தொடர்ந்தாள்; விசாலாட்சி.
ஏதோ வீறாப்பில் சீனியர் கோமுக்கு வந்துவிட்டாலும் இந்த இரண்டு நாட்களாக விசாலாட்சியால் சரியாக சாப்பிடவோ, தூங்கவோ முடியவில்லை. மக்கள், பேரப்பிள்ளைகளை விட்டு வந்தது துக்கமாக இருந்தது. குறிப்பாக குழந்தை மிதுன் “அப்பம்மா…. அப்பம்மா….’ என்று மழழை மொழியில் அழைத்தபடி தத்தித் தவண்டு வருவான். அவனைத் தூக்கி வைத்துக்கொண்டு கொஞ்ச வேண்டும் போல ஒரு உணர்வு மனதைப் பிசைந்தது. அவளையும் அறியாமல் கன்னங்களில் கண்ணீர் துளிகள் உருண்டன.
பாடசாலை விடுதியில் புதிதாகச் சேர்ந்த மாணவியை ஏனைய மாணவர்கள் தேற்றுவது போல அந்த ஹோமில் இருந்த முதியவர்கள் அவளைத் தேற்றினர்.
“புதுசில இப்பிடித்தான் இருக்கும். போகப்;போக எல்லாம் பழகிப்போயிரும்…..”
“உங்களப் போலத்தான் நாங்களும். எங்களுக்கு மட்டும் பிள்ளை குட்டியள் இல்லையா…? நாங்களும் அதுகளக் க~;டப்பட்டுப் பெத்துவளர்த்தனாங்கள் தான். அதையெல்லாம் எங்க அவையள் யோசிக்கப்போகினம்?”
“காசு காசு என்று பறக்குதுகள்….. அவையளுக்குத் தேவை காசுதானே. இவ்வளவு காலமும் பெத்து வளர்த்த எங்களுக்கு ஒரு ஆறுதல் தர நினைக்கயில்ல அந்தப் பிள்ளையள்”
“என்ரமகன் இங்க பெரிய ரியல்எஸ்டேட்காரன். இந்த ஐயாவின்ர மருமகன் ரெண்டு ரெஸ்ட்டோரன்ட் நடத்துறார். கனடாவில அவையள் பெரிய புள்ளியள். காசுக்காரர். ஆனா பெத்த தாய் தகப்பன் எல்லாம்……”
இந்தப் புலம்பல்களுக்கு நடுவே விசாலாட்சியின் சோகங்களும், வேதனைகளும் புதைந்து கரைந்துபோயின. என்றாவது ஒருநாள் தன்னை அழைத்துச் செல்லத் தன்னுடைய மகனும், மகளும் வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்காகக் காத்திருக்கிறாள் விசாலாட்சி.