ஆப்பிரிக்காவில் எனக்கு ஏற்பட்ட முதல் ஆச்சரியத்தைப் பற்றி சொல்லலாம் என நினைக்கிறேன். இத்தனை வருடங்கள் கழிந்த பின்னரும் அது நினைவிலிருந்து மறைய மறுக்கிறது. சமீபத்தில் அந்த நினைவு வந்தபோது ஏன் இதை எழுதவில்லை என்று யோசித்தேன். ஒருவரும் நம்பமாட்டார்கள் என்பதால் எழுதாமல் விட்டேனோ தெரியவில்லை. அல்லது 2013ம் ஆண்டு பிறந்த பின்னர் எழுதும் முதல் எழுத்தாக இது இருக்கவேண்டும் என்று விதி தீர்மானித்ததால்  இருக்கலாம். என்னவோ, இப்போது சொல்லலாம் என்று தோன்றுகிறது.

நான் அங்கே சென்ற வருடத்துக்கு சில வருடங்களுக்கு முன்னர்தான் சியரா லியோன் என்ற ஆப்பிரிக்க நாடு பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றிருந்தது. ஆனாலும் எல்லாமே அங்கே ஆங்கிலமயம்தான். ஆங்கிலப் பவுண்டு அங்கே பணமாக இருந்தது. அவர்கள் புதிதாக லியோன் என்ற காசை உருவாக்கியிருந்தார்கள். இரண்டு லியோன் ஒரு பவுண்டு. இந்த லியோனை எடுத்துப்போய் இங்கிலாந்தில் பொருள்கள் வாங்கலாம். ஆங்கிலப் பவுண்டை சியரா லியோனில் பயன்படுத்தலாம். இங்கிலாந்தில் என்னென்ன பொருட்கள் இருந்தனவோ அவையெல்லாம் சியரா லியோனிலும் இருந்தன. சியரா லியோனின் மேல்தட்டு மக்கள் ஆங்கிலேயரைபோலவே பேசினார்கள், பழகினார்கள், உடையணிந்தார்கள். ஓரளவுக்கு மக்கள் சுபிட்சமான வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்றுதான் பட்டது. ஏழ்மை என்பதை வெளிப்படையாக காணமுடியவில்லை. நான் வசித்த கிராமத்தில் மாலையானதும் கேளிக்கையும் பாட்டும் கூத்தும்தான்.

நான் சிலோனை விட்டபோது அங்கே பொற்காலம் என்று கூறலாம் –  அரசியல்வாதிகளுக்கு. இறக்குமதி இல்லை. ஏற்றுமதி குறைந்துவிட்டது. அத்தியாவசியமான பொருட்களுக்கு தட்டுப்பாடு. காலையில் பாண் வாங்குவதற்கு 5 மணிக்கு வரிசையில் போய் நிற்க வேண்டும். பால் என்றால் 4 மணி. வெங்காயம் என்றால் 3 மணிக்கு போனால்தான் சமாளிக்கமுடியும். எங்கள் குழந்தைக்கு பால் மா வாங்குவதற்கு நாங்கள் ஒரு மந்திரியை பிடிக்கவேண்டியிருந்தது. அப்படியான நாங்கள் ஆப்பிரிக்காவுக்கு போய் அங்கேயிருந்த பொருள்களைப் பார்த்ததும் மயங்கிவிட்டதில் ஆச்சரியமில்லை. ஏதோ லண்டனில் இருப்பதுபோலவே இருந்தது. சிலோனில் அப்போதெல்லாம் டெலிவிசன் கிடையாது ஆனால் சியரா லியோனில் இருந்தது. சிலோனில் ஒஸ்டின் யு 30 காரும் மொரிஸ் மைனரும்தான். ஆப்பிரிக்கவில் பென்ஸ் கார்கள் தாராளமாக ஓடின.

மனைவி சிலோனுக்கு ஒரு பார்சல் அனுப்பலாம் என்றார். நான் கொஞ்சம் யோசித்திருக்க வேண்டும். உடனேயே சரி என்றேன். சிலோனில் கிடைக்காத சில பொருட்களை வாங்கி பார்சல் பண்ணிக்கொண்டு அந்தக் கிராமத்தில் இருந்த ஒரேயொரு அஞ்சலகத்துக்கு போனேன். அப்போது அஞ்சலகம் என்ற பெயர்கூடக் கிடையாது. தபால் கந்தோர்தான். ஒரு சின்ன அறை. நீளமான கம்பிகளால் அதை அடைத்திருந்தார்கள். முதல் பார்வைக்கு அது சிறைபோலவே தோற்றமளித்தது. ஒரு மலிவான மேசை மற்றும் நாற்காலி. மேசையிலே சின்னச்சின்ன உடமைகள். நான் போனபோது 50 – 55 வயது மதிக்கக்கூடிய ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர்தான் போஸ்ட் மாஸ்டர், கிளார்க், தபால்காரர் என்பதை ஊகிப்பது அவ்வளவு கடினமானதில்லை. சுருட்டை தலை முடியை ஒட்ட வெட்டியிருந்தார். குதிரைக்கு இருப்பதுபோல சற்று மேலே மடிந்த உதடு. தொளதொளவென்ற நீண்ட ஆடையும் கீழே கால்சட்டையும் அணிந்திருந்தார். கால் சட்டை காலிலும் பார்க்க நீளமாக இருந்ததால் மிச்சத் துணி சுருண்டுபோய் காலடியில் கிடந்தது.

நான் அவர்கள் மொழியில் வணக்கம் சொன்னேன். ஆப்பிரிக்க வணக்க முறை நீண்டு நீண்டு போகும். அவற்றை மனனம் செய்திருந்தேன். அவரும் சொல்ல நானும் சொன்னேன். ஐந்து நிமிடம் ஆனது. உள்ளே ஒரு நாய் படுத்திருந்தது. அதற்கு மேல் ஒரு குழந்தை படுத்து உறங்கியது. நாயும் உறங்கியது. உறங்காமல் காட்சியளித்தது  அவர் ஒருவர்தான். வாயிலே கோலாநட்டை சப்பியபடி நின்றார். சும்மா கிடந்த நாற்காலியில் உட்காரலாம் என்ற யோசனை  அவருக்கு இன்னும் தோன்றவில்லை.  

அவரைப் பற்றி நான் வேலை செய்யும் அலுவலகத்தில் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தேன். அவர் அந்தக் கிராமத்து பணக்காரர். 6 பெண்களைப் பெற்று அவர்களை நல்ல விலைக்கு விற்றிருந்தார். 100 ஆடுகளும் 50க்கு மேலே மாடுகளும் அவரிடம் இருந்தன. அவரைப் பார்க்க இவருடைய மாப்பிள்ளைகள் சிலவேளைகளில் வருவதுண்டு. ‘நீ எந்த மகளை மணமுடித்தாய்?’ அவர் கேட்பார். ‘நாலாவது மகள்?’ ‘எத்தனை ஆடுகள் கொடுத்தாய்?’ அவன் சொல்வான். அதற்குப் பின்னர்தான் அவனுடைய தகுதியை தீர்மானித்து அதற்கு ஏற்றபடி உபசாரம் செய்வார். தபால் கந்தோர் வேலை ஒரு பொழுதுபோக்குப் போலத்தான். ஒருநாளைக்கு என்னைப்போல ஒன்றிரண்டு பேர் வருவார்கள். ஆகவே என்னை அவசரமாக முடித்து அனுப்பிவிட்டு அடுத்தவரைப் கவனிக்கவேண்டும் என்ற கவலை கிடையாது. 
என்ன என்பதுபோல முகத்தினால் கேட்டார். நான் பார்சலைத் தூக்கிக் காட்டினேன். ’எங்கே அனுப்பவேண்டும்?’ என்றார். சிலோன் என்று பதில் கூறினேன். அவர் நம்பாமல் இன்னொருமுறை கேட்டார். மறுபடியும் சிலோன் என்றேன். ஒரு புத்தகத்தை எடுத்து அதில் பல பக்கங்களை இடமிருந்து வலமாகவும் பின்னர் வலமிருந்து இடமாகவும் தட்டிப் பார்த்துவிட்டு இல்லை என்று பிரகடனம் செய்தார். நான் கம்பிகள் வழியாக புத்தகத்தை வாங்கி தேடிப் பார்த்து சிலோன் என்று சின்ன எழுத்தில் எழுதியிருந்ததை கண்டுபிடித்துக்  காட்டினேன். மேலும் என்னுடன் வாதம் செய்ய விரும்பாமல் அப்படி ஒரு நாடு இருக்கிறது என்பதை ஒத்துக்கொண்டார்.

பார்சலைக் கேட்டார். அது கம்பிகளுக்குள்ளால் போகத் தயாராகவில்லை. கதவைத் திறந்து வெளியே வந்து பெற்றுக்கொண்டார். தராசுபோல தோன்றிய ஒன்றில் அதை நிறுத்தார். ஏதோ எல்லாம் வித்தைகள் செய்து அதன் எடையை குறித்துக்கொண்டார். பின்னர் நீளமான ஒரு புத்தகத்தை எடுத்து ஆராய்ந்து பலவிதமான கணக்குகளை எழுதி விடையை கண்டுபிடித்துவிட்டு என்னை நிமிர்ந்து பார்த்தார். என் வயிற்றின் உள்ளே குடல் இருப்பது ஞாபகத்துக்கு வந்தது. என் நெஞ்சு படபடப்பு அதிகமாகியது. ’40 லியோன்’ என்று வாய்கூசாமல் சொன்னார். நான் ’என்ன?’ என்று கத்தினேன். நாய் திடீரென்று விழித்து கழுத்தை உயர்த்த குழந்தை உருண்டு கீழே விழுந்தது. பாம்பு தலையை தூக்கிப் பார்ப்பதுபோல ஒரு கணம் பார்த்த பின்னர் நித்திரையை தொடர்ந்தது. 

40 லியோன் என்றால் அது 20 பிரிட்டிஷ் பவுண்டு. புராண கால அரிச்சந்திரன் செய்ததுபோல மனைவியையும் குழந்தையையும் விற்றாலும் அந்தக் காசு தேறாது.  நான் ’இந்தப் பார்சல் உள்ளே இருக்கும் சாமான்களின் விலை 5 லியோன்தான்’ என்றேன் பரிதாபமாக. அதுதான் முதல் சிக்கல். உடனேயே ஏன் அப்படிச் சொன்னேன் என்று வருத்தப்பட வேண்டியிருந்தது. ’பார்சல் உள்ளே என்ன இருக்கிறது?’ என்று கேட்டார். நான் ஒவ்வொன்றாகச் சொன்னேன். அதைச் சொல்லும்போது வெட்கம் என்னைத் தின்றது. அந்த மனிதரின் முகபாவனையில் அவர் மனதில் ஓடுவது அப்படியே தெரிந்தது. இதையெல்லாமுமா ஒரு மனிதர் சிலோனுக்கு, அதுவும் புத்தகத்தில் பெயர் இல்லாத ஒரு நாட்டுக்கு, அனுப்புவார். உண்மையில் நான் அனுப்ப நினைத்த பொருள்கள் அப்படி அத்தியாவசியமானவை அல்ல. சொல்லப்போனால் மனிதகுலம் அவை இல்லாமலே சுபிட்சமாக வாழமுடியும். ’ஊதுகுழல், டொனால்ட் டக், பேசும் பொம்மை.’ ’அது என்ன பேசும் பொம்மை? அதை ஏன் அனுப்புகிறீர்கள்?’ என்றார். ‘நண்பரே, எங்கள் நாட்டில் ஜனநாயக ஆட்சி நடக்கிறது. அங்கே பொம்மைகள் பேசுவதற்கு அனுமதி உண்டு’ என்றேன்.

இந்த நேரம் பார்த்து என் அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருத்தர் என்னைப் பார்த்துவிட்டு அவசரமாக ஓடி வந்தார். என்னிடம் ஒன்றுமே பேசாமல் அவர்கள் மொழியில் தபால் அதிகாரியிடம் ஏதோ சொன்னார். அவர் பதில் கூறினார். பிறகு இவர் ஏதோ சொல்ல அவரும் சொன்னார். இப்படியே போனது. நான் ஒருத்தன் அங்கே நிற்பது எல்லோருக்கும் மறந்துபோய்விட்டது. நான் இடைமறித்து ’என்ன பேசினீர்கள்?’ என்று நண்பரிடம் கேட்டேன். அவர் நான் பெரிய அதிகாரி என்றும் பார்த்துச் செய்யச் சொன்னதாகவும் தெரிவித்தார். அதற்கு அவர் என்ன பதில் சொன்னார் என்று கேட்டேன். ’அரசனாய் இருந்தாலும் வாந்தி எடுக்கும்போது குனியத்தானே வேண்டும்’ என்றார். ’சரி சரி. நீங்கள் போங்கள், நான் சமாளிக்கிறேன்’ என்று அவரை அனுப்பிவைத்தேன். 

அவர் போன பின்பு மீதி வாந்தியையும் எடுக்கத் தயாரானேன். ஆனால் அதிகாரி தொடர்ந்து ’தேதி என்ன?’ என்று கேட்டார், ஏதோ அதற்கும் நான்தான் பொறுப்பு என்பதுபோல. சொன்னேன். அவர் குத்தப் போகும் முத்திரையில் சரியான தேதி விழவேண்டும் அல்லவா?. நான் சொன்னதை அவர் நம்பவில்லை. நாள்காட்டியில் தாளைக் கிழித்தார். அது புதன்கிழமையானது. இன்னொரு தாளை கிழித்தார். அது வியாழன் ஆனது. அடுத்த தாளைக் கிழித்ததும் வெள்ளிக்கிழமை வந்தது. சரியான தேதிதான். மறுபடியும் விட்ட இடத்துக்கு திரும்பி ’40 லியோன்’ என்றார். 

’உங்கள் புத்தகத்தில் ஏதோ பிழை உள்ளது. இந்தச் சின்ன பார்சலுக்கு இத்தனை பெரிய காசு கட்டணமாக வராது’ என்றேன். ’இங்கே யார் அதிகாரி?’ குரல் உயர்ந்தது. வாய்க்குள் நுழைந்த பூச்சியை துப்புவதுபோல வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன. பணிவான குரலை வரவழைத்துக்கொண்டு ‘இன்னொருமுறை சரிபார்த்தால் நல்லது’ என்றேன். பலநாள் பாடுபட்டு தயாரித்த, அவருக்கு மட்டுமே புரியும் புத்தகத்தை எடுத்து,  தாளில் ஒரு நம்பரை எழுதிக் காட்டினார். ஒரு சின்னத்தாளில் எழுதப்பட்டுவிட்டதால் அது சரியான கட்டணம். ’இவ்வளவு அதிகப்படியான கட்டணம் உலகில் வேறு எங்குமே கிடையாது’ என்றேன். ’இதுதான் ஆகக் குறைந்த கட்டணம். கடல்மேல் பயணம் செய்து பார்சல் உங்கள் நாட்டுக்கு போகும். மேலும் குறைத்தால் கட்டாது. தபால்துறை நட்டத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது’ என்றார். ’நானும் நட்டத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்’ என்றேன். அவர் கவனிக்கவில்லை. ஒரு கொடுப்புக்குள் இருந்த கோலாநட்டை மற்றப்பக்கம் நாக்கால் தள்ளிக்கொண்டிருந்தார்.  

’உங்கள் மேலதிகாரியோடு பேசலாமா?’ கொசுக்களை கலைப்பதுபோல கைகளை வீசி என் வார்த்தைகளை கலைத்தார். ’நான்தான் மேலதிகாரி.’ ’சரி, அந்த மேலதிகாரியின் மேலதிகாரியோடு பேசலாமா?’ ’அதுவும் நான்தான்.’ அப்பொழுதுதான் நான் உணர்ந்தேன், சியரா லியோன் தபால் துறையின் சர்வ வல்லமை பொருந்திய அதிபர் முன்னே நான் நின்றுகொண்டிருக்கிறேன் என்பதை. நான் பார்சலை எடுத்துக்கொண்டு வந்த வழியே திரும்பினேன். வீட்டிலே வீரமாகப்போய் பார்சல் அனுப்பமுடியாமல் போனதை சொல்ல முடியாது. ஆகவே பக்கத்து காட்டில் பார்சலை எறிந்துவிடுவது என்று முடிவு செய்தேன். யானையும் நரியும் ஊதுகுழலை ஊத, கொலபஸ் குரங்குகள் நடனமாடட்டும். எப்படியும் பார்சல் சிலோனுக்கு போய்ச் சேரப்போவதில்லை. மனைவியிடம் ஒரு சின்னப் பொய் சொன்னால் சரியாய் போச்சுது. என் நினைப்பை செயலாக்க முன்னர் ஓலமிட்டபடி என்னைத் துரத்திக்கொண்டு போஸ்ட் மாஸ்டர் ஓடிவந்தார். ’இதற்கெல்லாம் கோபித்துக்கொண்டு போகலாமா. வாருங்கள், வாருங்கள்’ என்றார், ஏதோ கல்யாண வீட்டு விருந்துக்கு அழைப்பதுபோல. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. ஊதுகுழலுக்கும், டொனால்ட் டக்கிற்கும், பேசும் பொம்மைக்கும் ஏற்படவிருந்த அபகீர்த்தியிலிருந்து அவை இப்படித்தான் தப்பிக்கொண்டன. 

சின்ன வார்த்தையாக இருந்தாலும் முழு வாயையும் திறந்துதான் போஸ்ட் மாஸ்டர் பேசுவார். அவர் வாயை பார்த்துக்கொண்டிருந்ததில் அவர் சொன்ன விசயத்தை கேட்க தவறிவிட்டேன். ’சரி. பார்சலுக்கு எவ்வளவு தருவீர்கள்?’ என்றார். நான் திடுக்கிட்டுவிட்டேன். ஒரு தானத்தை சொன்னேன். அவர் ஒன்றைச் சொன்னார். நான் ஒன்றைச் சொன்னேன். பருந்து பெரிய வட்டம் போட்டு, சிறிய வட்டம் போட்டு, இன்னும் சின்ன வட்டம் போட்டு இறுதியில் ஒரு புள்ளியில் குவிவதுபோல  படிப்படியாப் பேசி கடைசியில் பேரம் படிந்தது. இருவரும் சம்மதித்த பணத்தை ஜனாதிபதி சியாக்கா ஸ்டீவன்ஸ் படம் போட்ட 50 சத புது நாணயங்களாக கொடுத்தேன். எனக்கு முன்னால் சரியான தபால் தலைகளை பார்சலில் ஒட்டி முத்திரையால் குத்தினார். ’சரி போய் வாருங்கள்’ என்று விடைகொடுத்தார். குழந்தை திடீரென்று எழும்பி உட்கார்ந்து என்னைப் பார்த்து சிரித்தது. நாயும் உடம்பை சிலிர்த்து எழுந்தது. எப்படியோ அவைகளுக்கு அன்றைய வியாபாரம் முடிவுக்கு வந்தது தெரிந்தது. 

நான் வீட்டுக்கு வந்து பார்சலை அனுப்பிவிட்டேன் என்று மனைவியிடம் சொன்னேன். அது போய்ச் சேராது என்பது எனக்கு தெரியும். ஒரு மாதம் கழித்து பார்சல் சிலோனில் கிடைத்துவிட்டதாக கடிதம் வந்தது. நான் அடைந்த ஆச்சரியத்துக்கு அளவே இல்லை.

அதுதான் ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட முதல் ஆச்சரியம். ஆனால் அதற்கு பின்னர் ஏற்பட்ட ஆச்சரியங்களை எல்லாம் கணக்கில் எடுத்து யோசித்துப் பார்த்தபோது அந்த முதல் ஆச்சரியம் பெரிய விசயமில்லை என்றுதான் எனக்கு இப்போது படுகிறது.