அம்மாவுக்கு கனடாவில் நம்பமுடியாத பல விசயங்கள் இருந்தன. அதில் மிகப் பிரதானமானது   வீடுகளில் பூட்டு என்ற பொருளுக்கு வேலை இல்லாதது. அம்மாவின் கொழும்பு வீட்டில் அலமாரிக்கு பூட்டு இருந்தது. தைலாப்பெட்டிக்கு பூட்டு இருந்தது. மேசை லாச்சிக்கு பூட்டு இருந்தது. பெட்டகத்துக்கு பூட்டு. வாசல் கதவுக்கு பூட்டு. கேட்டிலே பெரிய ஆமைப்பூட்டு. இப்படியாக பூட்டு மயம்.

ஆனால் கனடாவில் குளிர்சாதனப் பெட்டிக்குகூட பூட்டு இல்லாதது மன்னிக்க முடியாத குற்றமாக அம்மாவுக்கு பட்டது. எல்லா குளிர்சாதனப் பெட்டிகளும் பூட்டோடு வரும் என்றுதான் அவர் நினைத்தார். கொழும்பில் இருந்தபோது அவர் ஒரு வீட்டுக்கு போயிருக்கிறார். அங்கே வரவேற்பு அறையில் விருந்தாளிகள் உட்கார்ந்து சம்பாசணை செய்யும்போது அவர்களுடைய குளிர்சாதனப் பெட்டியும் கலந்துகொண்டது. அதற்கு அடிக்கடி உயிர் வந்து சத்தம் எழுப்பும். பிறகு மௌனமாகிவிடும். அந்த குளிர்சாதனப் பெட்டியில் அம்மாவுக்கு மிகவும் பிடித்த அம்சம் அதில் தொங்கிய பூட்டுத்தான்.  

விருந்து நடந்து கொண்டிருந்தபோது வீட்டுக்கார அம்மா வந்து சாவிபோட்டு குளிர்சாதனப்பெட்டியை திறந்து வேண்டிய சாமான்களை எடுத்துப்போனது ஆடம்பரமாக இருந்தது. கனடாவில் பார்த்தால் அதற்கு பூட்டு இல்லை. அதை வேறு மறைத்து வைத்திருந்தார்கள். சமையலறையில் குளிர்சாதனப் பெட்டி இருக்கும் விசயம் மற்றவர்களுக்கு எப்படி தெரியும் என்பதுதான் அம்மாவின் பெரிய கவலை.

அடுத்த சங்கதி குளியலறை. அதற்கு பூட்டு இல்லாதது அம்மாவுடைய மூளையின் எல்லைக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. சரி, பூட்டு இல்லாவிட்டால் பரவாயில்லை. கதவையும் சாத்தமுடியாது. கதவை சாத்தினால் அது மெல்ல மெல்ல உயிர் பெற்றதுபோல தானாகவே அசைந்து நகரும். குளித்து முடித்து வெளியே வரும்போது கதவு ஆவென்று திறந்தபடி இருக்கும். கதவுக்கு அவசரமாக ஒரு பூட்டு வாங்கவேண்டும். அல்லது குளிக்காமல் இருக்கவேண்டும்.

என்னிடம் ஒரு வார்த்தை சொல்லாமல் அம்மா நேராக என்னுடைய புத்தகத்தட்டுக்கு போய் சி.சு.செல்லப்பா எழுதிய 'சுதந்திர தாகம்' மூன்று பாகத்தையும் எடுத்து வந்தார். எனக்கு அம்மாவிடம் இருந்த மதிப்பு மூன்று மடங்கு அதிகமாகியது. மூன்று பாகத்தையும் ஒரேயடியாகப் படிக்கப் போகிறாரா என்று நினைத்தேன். அவருடைய நோக்கம் வேறு. அட்டையில் எழுதியிருந்த தலைப்பைக்கூட அவர் பார்க்கவில்லை. குளித்துவிட்டு திரும்பி வரும்போது பெரிய நிம்மதி அவர் முகத்தில் தோன்றியது. புத்தகம் நல்லதா என்று கேட்டேன். 'இந்தப் புத்தகம் தொக்கை காணாது. கதவுக்கு முண்டு கொடுப்பதற்கு இதனிலும் மொத்தமான புத்தகம்    இருக்கிறதா?' என்றார்.

அம்மா தங்கியிருந்த மீதி நாட்கள் சுகமாக கழிந்தனவா என்றால் அதுவுமில்லை. ஒரு வீட்டின் வெளிக்கதவுக்கு தாழ்பாள் முக்கியம் என்ற விசயம் அம்மா சொல்லும் வரைக்கும் எனக்கு மறந்துபோனது. எங்கள் கொழும்பு வீட்டுவீதியில் எல்லா வீடுகளுக்கும் தாழ்பாள் இருந்தது. உள்ளுக்கு ஒன்று, வெளியே ஒன்று. இரவு படுக்கப் போகும்போது உள் தாழ்பாளை போடுவோம். வெளியே போகும்போது வெளி தாழ்பாளை இழுத்துப் பூட்டுவோம். நாங்கள் குடும்பமாக பயணம் புறப்படும்போது எனக்கு நடுக்கம் பிடித்துவிடும். கதவை இறுக்கி சாத்தி தாழ்பாள் போட்டு அம்மா ஆமைப்பூட்டை கொழுவி  பூட்டுவார். அந்த ஆமைப்பூட்டு ஒரு தேங்காயளவு பெரியது. அம்மா அதை இழுஇழுவென்று இழுத்துப் பார்த்தபிறகு புறப்படுவார். நாங்களும் தொடருவோம். ஒரு நூறு அடி போனபிறகு ஐயா ஏதோ யோசித்து திரும்பிவருவார். ஆமைப்பூட்டில் தன் முழுப்பாரத்தையும் போட்டு தொங்கிப் பார்ப்பார். அதன் பிறகுதான் எங்கள் பயணம் தொடங்கும். 

அம்மா வெளிக்கதவுக்கு தாழ்பாள் வாங்கிப் பூட்டவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார். தன்னால் இரவுகளில் தூங்கமுடியவில்லை என்றும் கெட்ட கனவுகள் துரத்துகின்றன என்றும் முறைப்பாடு வைத்தார். 'கனடாவில் ஒருவரும் தாழ்பாள் போடுவதில்லை. எங்கள் வீட்டு பாதுகாப்புக்கு அபாயமணி பூட்டியிருக்கிறது. திருடர்கள் வந்தால் இலகுவில் காட்டிக் கொடுத்துவிடும்' என்றேன். 

'அது எப்படி? அபாயமணி எப்போது ஒலிக்கும்? திருடன் உள்ளே வரமுன்னரா அல்லது வந்த பின்னரா?' 'உள்ளே திருடன் நுழைந்த பிறகுதான் அபாயமணி அடிக்கும்' என்றேன். அம்மா 'என்ன பிரயோசனம், திருடன் உள்ளே வராமல் அல்லவா பார்க்கவேண்டும்' என்றார். அதற்கு என்னிடம் பதில் இல்லை. 

அம்மாவுடன் பல கடைகள் ஏறி இறங்கினேன். சிலருக்கு தாழ்பாள் என்றால் என்னவென்றே தெரியவில்லை. அப்படித் தெரிந்தாலும் கதவுகளை பூட்ட பயன்படுத்தும் தாழ்பாள்கள் பற்றி அவர்கள் கேள்விப்பட்டிருக்கவில்லை. கடைசியில் பழைய சாமான்கள் விற்கும் ஒரு கடையில் கடந்துபோன நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு பெரிய தாழ்பாள்களைக் கண்டுபிடித்தோம். அம்மாவுக்கு மெத்தப் பிடித்துப்போனது. அவற்றை பூட்டிய பிறகுதான் அம்மாவுக்கு நிம்மதியாக நித்திரை வந்தது.

ஆனால் என்னுடைய நிம்மதி குலைந்துபோனது. டெலிபோன் மணி அடித்தால் அம்மாவால் சும்மா உட்கார்ந்திருக்கமுடியாது. ஓடி வந்து அதை எடுக்கவேண்டும். கனடாவில் ஒருவரும் டெலிபோனை எடுப்பதில்லை. அது ஒரு அழகுக்காகத்தான் வீட்டில் இருக்கிறது. அது அடிக்கடி மணியடித்து வீட்டைக் கலகலப்பாக்கும். இதை அம்மாவுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியவில்லை. எங்கள் வீடு ஒடுக்கமானது. ஆனால் அதை ஈடுகட்டுவதற்கு நீளமாக நிர்மாணித்திருந்தார்கள். வீட்டின் துவக்கத்தில் இருக்கும் காலநிலையும் வீட்டின் அந்தலையில் இருக்கும் காலநிலையும் வேறு வேறாக இருக்கும். அவ்வளவு நீளம். அம்மாவும் விடுவதில்லை. மணிச்சத்தம் கேட்க ஆரம்பித்ததும் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதுபோல மூச்சைப் பிடித்து ஓடிவந்து தொலைபேசியை தூக்குவார். தூக்கிய வீச்சில் தொலைபேசியின் வாயில் 'ஹா' என்று கத்தி நிறுத்தி மூச்சை ஒருதரம் உள்ளே இழுத்த பிறகு 'லோ' என்று சொல்வார். 

என்னிடம் ஒரு செல்பேசி உண்டு. நண்பர்கள் என்னுடன் அதிலே உரையாடினார்கள். வீட்டு தொலைபேசி என்ற ஒன்றை நான் பாவிப்பதில்லை. அடித்தால் அதை எடுக்க மாட்டேன். விற்பனைக்காரர்களுக்காகவும், தவறான எண் டயல் பண்ணுகிறவர்களுக்காகவும், நன்கொடை யாசிப்பவர்களுக்காகவும், வேண்டாதவர்களுக்காகவும் அதை பராமரித்தேன். அவர்கள் விடாப்பிடியாக அதில் அழைப்பதுமட்டுமில்லாமல் தகவல்களும் விட்டார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் காலை பத்து மணிக்கு நான் டெலிபோனில் அந்த வாரம் சேர்ந்திருக்கும் தகவல்களை எல்லாம் ஒவ்வொன்றாக செவிமடுத்து பின்னர் அழிப்பேன். அதற்கு எனக்கு அரைமணி நேரம் எடுக்கும். அம்மாவால் அதை தாங்கமுடியவில்லை. தொடர்ந்து வேகமாக ஓடி டெலிபோன் மணி நிற்பதற்கிடையில் அதை கையிலே தூக்குவதை அவர் கடமை என்றே நினைத்தார். எதற்காக இப்படி அடித்துப் பிடித்து ஓடுகிறார் என்று கேட்டேன். 'மகனே, நீ என்னைக் கூப்பிடலாம் அல்லவா? இன்றைக்கு வெந்தயக்குழம்பு வைத்தீர்களா என்று நீ கேட்கக்கூடும் என்று நினைத்தேன்.'

'தொலைபேசி மணி அடித்தால் அதை தொடவேண்டாம்.' 'தொலைபேசி மணி அடித்தால் அதை தொடவேண்டாம்' என்று அம்மாவிடம் திருப்பி திருப்பி சொன்ன நான் கதவு மணி அடித்தால் என்ன செய்யவேண்டும் என்பதை சொல்லித் தரவில்லை. 

ஒருநாள் நான் வெளியே போய்விட்டு திரும்பி வந்தபோது வீட்டில் பெரிய ஆரவாரமும், சிரிப்பு சத்தமும் கேட்டது. நான் தவறான வீட்டுக்கு வந்துவிட்டேனோ என்று வீட்டு நம்பரை சரிபார்த்துக்கொண்டேன். விருந்தினர் அறையில் அம்மாவோடு மூன்று பேர் உட்கார்ந்திருந்தார்கள். அந்த ஆண் சாம்பல் நிற ஆடை அணிந்திருந்தார். மடிப்புகள் கலைந்த கோட்டும், விளிம்புகள் தேய்ந்துபோன கழுத்துப்பட்டியுமாக உட்கார்ந்திருந்த அவருக்கு ஐம்பது வயது மதிக்கலாம். மனைவிபோல தோற்றமளித்த குள்ளமான பெண் சாம்பல் நிற உடையில் தலையிலே சண்டியர்கள் லேஞ்சி கட்டுவதுபோல கட்டியிருந்தார். பெரிய சோபாவை பாதி நிறைத்து ஓர் இளம்பெண் உட்கார்ந்திருந்தாள். இரண்டு பெண்களின் உடைகளும் சாம்பல் கலரில் சாக்குத் துணியில் தைத்ததுபோல வெட்டு இல்லாமல், உருவம் இல்லாமல், சுருக்கு இல்லாமல் கவர்ச்சியே இன்றி காணப்பட்டன.

அறிமுகப் படுத்தும்போது அந்த இளம் பெண் தன் பெயரை சொன்னாள். அவளுடைய பாதங்கள் ஒரு முதலையினுடைய தலைபோல முன்னுக்கு ஒடுங்கிப்போய் இருந்தது எனக்கு விநோதமாக பட்டது. நான் கேட்காமலே தனக்கு 14 வயது நடக்கிறது என்றாள். நான் பார்த்ததிலே ஆக வயதுகூடிய 14 வயதுப்பெண் அவள்தான். கைகள் இரண்டையும் தொடைகளில் வைத்து கண்களை ஒரு கணத்துக்கு கீழே இறக்கி நாடகத்தனமாக மேலே தூக்கினாள். ஒரு விரலால் தோள் மயிரை சுண்டிவிட்டாள். அவளுடைய சாக்குத் துணி உடையை தாண்டி ஒரு கவர்ச்சி அந்த நொடியில் வெளிப்பட்டது. என்னுடைய ரத்தம் உயிர்பெற்று சுழலத் தொடங்கியது. 

அந்த மனிதர் அடிக்கடி இருமலால் குரல்வளையை நிறைத்தார். பேசியபோது நாய் நக்கிக் குடிக்கும்போது ஏற்படுவது போன்ற ஓர் ஒலி அவர் தொண்டையிலே உருவானது. பிரசாரகர்களுக்கு உள்ள எல்லா தகுதிகளும் அவருக்கு இருந்தன. அவர் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து அம்மாவிடம் பேசினார். எங்கள் வீட்டுக்கு எனக்கு அறிவிக்காமல் வந்திருந்த விருந்தினர்களுக்கு அம்மா பாசத்தோடு பணிவிடை செய்தார். மேசையிலே புத்தகங்களும் சஞ்சிகைகளும் துண்டுப் பிரசுரங்களுமாக பரவி வைத்திருந்தது. அந்த மனிதரின் கண்களையே அம்மா உற்று நோக்கிக்கொண்டிருந்தார். அது ஒரு கன்றுக்குட்டி தாய்ப்பசுவை பார்க்கும் பார்வை. 

வீட்டுக்கு விருந்தாளிகளை வரவிடக்கூடாது. அப்படி அவர்கள் தட்டுத்தவறி வந்துவிட்டால் அவர்களை உபசரிப்பதற்கென்று ஒரு வரைமுறை இருக்கிறது. அதில் தவறாமல் இருக்கவே நான் முயன்றேன். அந்த பிரசாரகர் சளசளவென்ற குரலில் ஒரு நீளமான வசனத்தை சொல்வார். பிறகு பரிசோதிப்பதற்காக 'நான் என்ன சொன்னேன்' என்று அம்மாவிடம் வினவுவார். அம்மா, அவர் சொன்னதை மூன்றாம் வகுப்பு மாணவிபோல  திருப்பி அப்படியே ஒப்பிப்பார். வசனத்தின் கடைசி பகுதியில் குரலை அவர் ஏற்றுவதுபோல அம்மாவும் ஏற்றுவார். பிரசாரகருக்கு ஒரு புதிய அடிமை கிடைத்துவிட்டதுபோலவே எனக்கு தோன்றியது. அந்த இளம்பெண் மரத்தரை சப்திக்க அடிக்கடி காலை மாற்றி அமர்ந்தாள். அப்படியே கண்களை ஒருமுறை கீழே இறக்கி மேலே தூக்கலாம் என்று நான் காத்திருந்தேன். என் கோபத்தை அந்த ஒரு காரணத்துக்காக நான் தள்ளிவைத்துக்கொண்டே போனேன். 

அவர்கள் போனதும் நான் அம்மாவைப் பிடித்தேன். 'ரோட்டிலே போற வாற ஆட்களை எல்லாம் வீட்டுக் கதவை திறந்து உள்ளே அழைப்பீர்களா?' என்று கேட்டேன். அம்மாவின் முகம் வாடிவிட்டது. ஒன்றுமே புரியாமல் திகைத்துப்போனார். 'நீ என்ன சொல்லுறாய். போறவாற ஆட்களா? அவர்கள் வெள்ளைக்காரர்கள்' என்றார். அம்மாவின் அசைக்கமுடியாத கருத்துப்படி வெள்ளைக்காரர்கள் என்றால் திருடமாட்டார்கள், பொய்சொல்லமாட்டார்கள். கொலைசெய்யமாட்டார்கள். பெண்களின் உறுப்புகள் எல்லாம் அவர்கள் கண்களுக்கு தட்டையாகவே தெரியும். 

நான் முற்றிலும் கோபம் தணிந்த பிறகு ஒரு நாள் இரவு உணவுக்காக மேசையின் முன் அமர்ந்தேன். வழக்கம்போல அம்மா நின்றுகொண்டிருந்தார். அரைமணி நேரத்தில் சமைக்கவேண்டிய உணவுக்கு அம்மா அரைநாள் எடுத்திருப்பார். எவ்வளவு சொன்னாலும் உட்காரமாட்டார். ஒரு அடி தூரத்தில் இருக்கும் உணவை அவர்தான் எடுத்து கோப்பையில் வைப்பார். அதை ரசித்து சாப்பிடும்போது என் முகம் எப்படி போகிறது என்பதை உன்னிப்பாக கவனிப்பதே அவர் வேலை.  

அம்மா மெதுவாக என்னிடம் 'மகனே, உனக்கு  பரவச நிலையை எட்டியவர்களின் கடவுள் பெயர் தெரியுமா?' என்றார். நான் தெரியாது என்று சொன்னேன். 'உலகத்தின் ஆதிக் கடவுள் யாவே. அது ஹீப்ரு வார்த்தை. அந்த மொழியில் உயிரெழுத்து கிடையாது. எல்லாமே மெய்யெழுத்துதான். ஆகவே அந்த வார்த்தையை உச்சரிக்கும்போது நீ எப்படியும் உச்சரிக்கலாம். ஆனால் கடவுளின் உண்மையான பெயர் ஹீப்ரு மொழி தோன்றுவதற்கு முன்னரே தோன்றிவிட்டது. அந்தப் பெயர் தெட்ராகிரம்மட்டன். ஆதிக் கடவுளை ஆராதிப்பவர்கள் இறக்கும்போது நேராக சொர்க்கம் செல்வார்கள். எனக்காக அவர்கள் பிரார்த்தனை செய்வதாக சொல்லியிருக்கிறார்கள்.' 

அந்த வருடம்தான் புளூட்டொ கிரகம் அல்ல என்று அறிவிக்கப்பட்டது. அந்த வருடம்தான் இலங்கை சமாதானப் பேச்சு வார்த்தை ஜெனீவாவில் முறிந்தது. அந்த வருடம்தான் பனிக்காலம் முன்னறிவித்தல் இன்றி கனடாவில் ஒரு மாதம் முந்தி வந்தது. மரங்கள் அவசர அவசரமாக இலைகளைக் கொட்டின. அம்மா தடித்த குளிர் ஆடை அணியாமல் குழம்பு தெறித்து கறைபட்ட மெல்லிய மேலாடை தரித்திருந்தார். அவருடைய உடம்பு மெல்ல நடுங்குவதை அவர் பொருட்படுத்தவில்லை. இரண்டு கைகளையும் கழுத்து எலும்பில் வைத்துக்கொண்டு என் முழங்கால்களைப் பார்த்து தான் திரும்பப் போகவேண்டும் என்று சொன்னார். நான் மறுக்கவில்லை. காரணம் தெட்ராகிரம்மட்டன். அல்லது சமையல். அல்லது பாவாடையாகவும் இருக்கலாம். சமைப்பதை அம்மா அளவுக்கதிகமாக நேசித்தார். அதிகாலை எழும்பி அடுப்பு பற்றவைப்பதுபோல இங்கேயும் செய்ய விரும்பினார். மனிதனுக்கு கிடைத்த 24 மணித்தியாலத்தில் அரைமணிக்குமேல் கனடாவில் யாரும் சமையலுக்கு செலவிடுவதில்லை என்பதை நம்ப மறுத்தார். சமையல் சாமான்களுடைய விலையை உடனுக்குடன் இலங்கை காசில் மாற்றி ஒரு நிமிடம் ஆச்சரியப்படாமல் அவர் கரண்டியை தூக்கியது கிடையாது. அன்றைய சமையலைக் குறிப்பிடும்போது அதன் விலையையும் சேர்த்தே சொல்வார். எட்டாயிரம் ரூபாய் இறைச்சியை வதக்கி இன்றைக்கு கறி வைத்தேன் என்பார். அல்லது எண்ணூறு ரூபாய் கீரையை தாளித்து கடைந்திருக்கிறேன் என்பார்.  

அம்மா திரும்பிப்போய் ஒரு மாதம் ஆகிவிட்டது. எவ்வளவு ஆர்வத்துடன் என்னைப் பார்க்க 10,000 மைல் தூரம் கடந்து வந்தாரோ அந்த ஆர்வம் எல்லாம் வடிந்து குழம்பிப்போய் திரும்பினார். மிகக் கடுமையாக நடந்துகொண்டுவிட்டேனோ என்று சில சமயம் நான் நினைத்ததுண்டு. ஒருநாள் அம்மா பின் தோட்டத்தில் பாவாடை காயப்போட்டதற்கு பக்கத்துவீட்டுக்காரன் முறைப்பாடு செய்து அது பெரிய விவகாரமாகிப் போனது. 'என் வீட்டு தோட்டத்தில், நான் கட்டிய சணல் கயிற்றில், என்னுடைய பாவாடையைதானே காயப்போட்டேன். அவன் தலையில் போட்டேனா?' என்று அம்மா ஒருநாள் முழுக்க அரற்றினார். அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. கண்கள் நனைந்து பளபளத்தன. போவது என்ற தீர்மானம் அன்றே அவர் மனதில் உருவாகியிருக்கவேண்டும். கடைசி துரும்பு என்று சொல்வார்கள், அப்படியும் இருக்கலாம். 

டெலிபோன் அடித்தால் எடுக்கக்கூடாது என்ற விதியும் அம்மாவை பெரிதும் வருத்திவிட்டது. குளிர்பானப் பெட்டியை பூட்டக்கூடாது, கதவுகளை திறக்கக் கூடாது. பாவாடை காயப்போடக்கூடாது. விருந்தினரை உள்ளே அழைக்கக்கூடாது. இப்படியான பல சட்ட திட்டங்களை அம்மாவால் எதிர்கொள்ள முடியவில்லை.

அவர் கடைசியாக விடைபெறும்போது விமான நிலையத்தில் கேட்ட கேள்வி இன்னும் மனதில் நிற்கிறது. 'ஒவ்வொரு ஞாயிறு காலையும் பத்து மணிக்கு  நீ டெலிபோன் தகவல்களை அழிக்கிறாயா?' நான் ஓம் என்றேன். 'மறக்காமல் தகவல்களை கேட்டுவிட்டு செய்' என்றார். ஏன் அப்படிச் சொன்னார் என்பது எனக்கு புரியவில்லை. முத்தமிடும்போது என் முதுகைத் தடவி 'யாவே' உன்னை ஆசீர்வதிக்கட்டும் என்றார். நான் அவர் கன்னத்தை தொட்டேன். என்ன இது ஈரம் என்று கையை பார்த்தபோது அவர் பாதுகாப்பு வலயத்துக்குள் மஞ்சள் கைப்பையுடன் நுழைந்துவிட்டார். ஒரு கணத்துக்கு அந்த மெலிந்துபோன தோள்மூட்டின் ஓரம் தெரிந்தது; பின்னர் மறைந்துபோனது.    

மாலை ஏழு மணி இருக்கும். கதவை யாரோ தட்டினார்கள். இது யார் மணியை அடிக்காமல் கதவை தட்டுவது என்று யோசித்தேன். அந்த நேரத்தில் ஒருவருமே  என் வீட்டுக்கு வருவதில்லை. அவசரப்பட்டு கதவை திறந்தபோது மூன்று பேர் கதவை ஒட்டிக்கொண்டு நின்றார்கள். வேறுயாருமில்லை. எனக்கு முன்பே பரிச்சயமான பிரசாரக்காரர்கள்தான். அவரும், மனைவியும் வயது 14 என்று சொல்லிக்கொண்ட அந்தப் பெண்ணும்தான்.

    மூவரும் அதே நிறத்தில் அதே உடையை அணிந்திருந்தார்கள். அவர் கையிலே பெண்கள் காவும் பை ஒன்றை வைத்திருந்தார். என் வாய்க்கு கிட்டவந்து 'அம்மா இருக்கிறாரா?' என்றார். திருத்த வேலைகள் முற்றுப் பெறாத அவருடைய பற்கள் பெரிதாக்கப்பட்டு தெரிந்தன. நான் காலை மடித்து கதவுக்கு குறுக்காக வைத்துக்கொண்டு 'அம்மா இலங்கைக்கு போய்விட்டாரே' என்றேன். அப்படியா என்று அதிசயப்பட்டவர் என்னை இன்னும்கூட அதிசயப்படவைக்க நினைத்தோ என்னவோ காலைத்தூக்கி கடவையை கடப்பதுபோல தாண்டி உள்ளே வந்தார். சற்று முன்னர் நான் உட்கார்ந்து குளோப் பேப்பர் படித்த அதே இருக்கையில்  அமர்ந்து என்னையும் அமரலாம் என்பதுபோல பார்த்தார். அவர் மனைவி கையோடு கொண்டுவந்திருந்த புத்தகங்களையும், சஞ்சிகைகளையும், துண்டுப்பிரசுரங்களையும் அமைதியாக மேசை மேல் அடுக்கினார். 14 வயது என்று கூறி அறிமுகமாகிய பெண் அங்கேயிருந்த பெரிய சோபாவை அமுக்கி அமர்ந்தாள். அது ஒரு அடி ஆழம் கீழே புதைந்தது. விருப்பமில்லாத இடத்துக்கு அவளை யாரோ இழுத்து வந்துவிட்டதுபோல முழங்கால்களை ஒட்டவைத்து, தோள்மூட்டுகளை பின்னே தள்ளி. முதலைக் காலை முன்னுக்கு நீட்டி உட்கார்ந்திருந்தாள். 

பிரசாரகர் 'உங்கள் தாயார் பெருந்தன்மையானவர்' என்றார் துடக்க வசனமாக. மற்ற இருவரும் ஆமோதிப்பதுபோல தலையை ஆட்டினார்கள். 

    'அவருக்கு யாவேயைப் பற்றி தெரியும்' என்றார். 
    'அப்படியா?'
    'உங்களுக்கு சொர்க்கம் போக விருப்பம் உண்டா?' அவரிடம் அதிகப்படியாக ஒரு டிக்கட் இருப்பதுபோல என்னைப் பார்த்தார். 
    'நிச்சயமாக.'
    'எப்படிப் போகவேண்டும் என்பது தெரியுமா?'
    'என்ன intersection?' என்று சொன்னால் நான் எப்படியும் கண்டுபிடித்து போய்விடுவேன்.'

அவருடைய முகம் வாசல் கதவை தட்டி உள்ளே நுழைந்தபோது பார்த்த முகம் அல்ல. மாறிவிட்டது. கண்கள் நொடியில் இரவுப் பிராணியின் கண்கள்போல சிவப்பாகிப் பளபளத்தன. மனைவி குனிந்தபடி வதவதவென்று புத்தகங்களையும் இதழ்களையும் துண்டுப்பிரசுரங்களையும் மறுபடியும் அள்ளி பையினுள் அடைத்தார். யாரோ ரகஸ்ய பட்டனை அமுக்கியதுபோல 14 வயது என்று சொல்லிக்கொண்ட பெண் சோபாவில் இருந்து துள்ளி எழும்பி அமுங்கிய இருக்கை பழைய நிலைக்கு வரமுன்னர் அந்த நெடுந்தூரத்தைக் கடந்து வாசல் கதவருகில் போய் நின்றாள். 

அந்த மனிதரின் உடம்பு கீழே கீழே போனது. நாய் கோபம் கூடக்கூட பதிந்துகொண்டே போவது ஞாபகத்துக்கு வந்தது. மூச்சு என் காது கேட்க சத்தமாக வெளிவந்தது. அவர் தன் நிலை இழக்காமல் இருப்பதற்கு பெரும் பிரயத்தனம் செய்தாரென்று நினைக்கிறேன். 'உங்கள் தாயார் அருமையான பண்பு நிறைந்தவர். அவருடைய சொர்க்கத்தை உறுதி செய்வதற்கு நாங்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்வோம்.'

நான் 'கட்டணம் ஏதாவது உண்டா?' என்று கேட்டேன். அவர் டக்கென்று எழுந்து நின்றார். அவருடைய முகத்து சதைகள் தனித் தனியாகத் துள்ளின. உதடுகளை திறக்காமல், என்னைப் பார்க்காமல்,  பற்களினால் விடை சொல்லிவிட்டு வாசலை நோக்கி விரைந்தார். என் வீட்டுக் கதவை திறந்து சொர்க்க வாசலை என் முகத்தில் அறைவதுபோல சத்தத்துடன் சாத்தினார். மூவரும் மறைந்துவிட்டார்கள்.

அம்மா போனபின் முதன்முதலாக உள்கதவு தாழ்பாளை அன்றிரவு தூங்கப் போகமுன் இழுத்து போட்டுக்கொண்டேன்.