அல்பிரட் லியோ சவரிமுத்து தம்பையா
இலங்கைத் தமிழ் தொழிலதிபரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
தம்பையா 1903 நவம்பர் 8 அன்று இலங்கையின் வடக்கே ஊர்காவற்துறை, கரம்பொன்என்ற ஊரில் பிலுப்புபிள்ளை தம்பையா, ரோசமுத்து ஆகியோருக்குப் பிறந்தார்.இவரது தந்தை ஊர்காவற்துறையில் கப்பல் சொந்தக்காரராக இருந்தவர்.
ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியிலும், பின்னர் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும் ஆரம்பக் கல்வி கற்று, பின்னர் கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரியிலும், புனித யோசப் கல்லூரியிலும் கல்வி கற்றார். பின்னர் இலண்டன் சென்று சட்டம் பயின்றார்.மானிப்பாயைச் சேர்ந்த அதிகார் செல்லமுத்து என்பவரின் மகள் ராஜேசுவரியை (14 அக்டோபர் 2009) இவர் திருமணம் முடித்தார். இவர்களுக்கு சிவாந்தா, ரவி என இரு ஆண்களும், சுபோதினி, இந்திமதி ரேணுகா என இரு மகள்களும் உள்ளனர்.
அல்பிரட் தம்பையா தனது 21வது அகவையில், கொழும்பில் ஒலிம்பியா திரையரங்கை குத்தகைக்கு எடுத்து தொழில் நடவடிக்கையை ஆரம்பித்தார்.பின்னர் இவர் சிற்றம்பலம் கார்டினருடன் இணைந்து சிலோன் தியேட்டர்சு நிறுவனத்தை ஆரம்பித்தார்.பின்னர் கார்கில்சு, மில்லர்சு ஆகிய வணிக நிறுவனங்களை சிலோன் தியேட்டர்சு நிறுவனம் வாங்கியது. தம்பையா மில்லர்சு நிறுவனத்தின் தலைவராகவும், முகமைத்துவப் பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டார்.1936 ஆம் ஆண்டில் தம்பையா ஹாரி அன்ட் ஜோன் கொஸ்மாசு என்ற நிறுவனத்திடம் இருந்து கார்கோ போட் டிஸ்பாட்ச் கம்பனியை வாங்கினார். இந்நிறுவனம் கொழும்புத் துறைமுகத்தின் பெரும்பாலான வணிக நடவடிக்கைகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது
தம்பையா 1947 ஆம் ஆண்டில் 1வது நாடாளுமன்றத் தேர்தலில் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவுடன் சுயேட்சையாகப் போட்டியிட்டு 322 வாக்குகளால் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார். இவரது வணிக நிறுவனம் அரசு-நிறுவனமான கொழும்பு துறைமுக ஆணையத்துடன் வணிகத் தொடர்பில் உள்ளதால் தம்பையாவின் தேர்வை எதிர்த்து இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஏ. வி. குலசிங்கம் (த.கா.) வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பசநாயக்கா என்பவர் தம்பையாவின் தெரிவு செல்லுபடியாகாது எனத் தீர்ப்பு வழங்கினார். அக்காலத்தைய தேர்தல் விதிகள் மேன்முறையீடு செய்ய அனுமதிக்காததால், அன்றைய டி. எஸ். சேனநாயக்கா அரசு தேர்தல் முறையீடுகளுக்கு மேன்முறையீட்டை அனுமதிக்கும் சட்டமூலத்தை 1948 ஆம் ஆண்டில் அவசர அவசரமாக நிறைவேற்றியது. தம்பையாவின் மேன்முறையீட்டை விசாரித்த மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு தம்பையாவுக்கு சார்பாகத் தீர்ப்பு வழங்கியது.
தம்பையாவின் பதவிக் காலத்தில் வேலணைத் தீவுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருந்தும், புங்குடுதீவில் இருந்தும் தரைவழிப் போக்குவரத்துப் பாதைகள் அமைக்கப்பட்டன.
தம்பையா 1952 இல் 2வது நாடாளுமன்றத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தமிழ்க் காங்கிரஸ் கட்சி 1953 ஆம் ஆண்டில் சேனநாயக்கா அரசில் இருந்து விலகியது. ஆனாலும், தம்பையா ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்து அரசில் தொடர்ந்து இணைந்திருந்தார். 1956 ஆம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்டத்திற்கு அன்றைய அரசு ஆதரவளித்ததைத் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகினார்.
தம்பையா பின்னர் 1956, மார்ச் 1960 நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் வி. ஏ. கந்தையாவிடம் தோற்றார்.
1958 ஆம் ஆண்டு கொழும்பிலும் சுற்றுப் புறத்திலும் தமிழருக்கு எதிராக இடம்பெற்ற கலவரங்களின் போது பாதிப்புற்ற தமிழர்களை பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச் செல்வதற்குத் தமது கப்பல்களைக் கொடுத்துதவினார்.
1958 ஆம் ஆண்டில் கொழும்பு துறைமுகம் தேசிய மயமாக்கப்பட்டதனால் தொழிலில் ஏற்பட்ட பின்னடைவைத் தொடர்ந்து அவர் தனது நிறுவனத்தை கப்பல் முகவர் நிறுவனமாக மாற்றி அமைத்தார். ஹற்றன் தேசிய வங்கியில் பங்குகளை வாங்கினார். கொள்ளுப்பிட்டியில் 1970 ஆம் ஆண்டில் ஹோட்டல் ரேணுகா என்ற பெயரில் உணவு விடுதி ஒன்றை ஆரம்பித்தார். ரேணுகா நிறுவனத்தின் தலைவராக தம்பையாவின் மகள் இந்துமதி ரேணுகா ராசையா இருந்து வருகிறார். தம்பையாவின் பேரன் சமிந்திரா அதன் நிறைவேற்றுப் பணிப்பாளராக உள்ளார்.
நன்றி-விக்கிப்பீடியா