mothers day-1Easwaramma Day

இந்த உலகில் பெற்ற தாய்க்கு இணையாக வேறு யாரும் இல்லை. இதனால்தான் பலர் ஈன்ற தாயை தெய்வமாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். தான் பெற்ற குழந்தைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் அந்த தாய்க்கு இணையாக வேறு யாரை குறிப்பிட முடியும்? இந்த தியாகத்தை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

அன்றைய தினம் அன்னையரை சந்தித்து பரிசு  பொருட்கள் வழங்கி அவர்களை மகிழ்வித்து அவர்களிடம் வாழ்த்துகளும் பெறுகின்றனர். ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ என்ற வரிகள் தாய்மையின்  புனிதத்தையும் பெருமையையும், தியாகத்தையும் அடையாளப்படுத்தும் மிக உன்னத வரிகள். 

தாய்மைக்கு இணையாக இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட நிலையில், ஒரு பெண்ணானவள் மகளாக, சகோதரியாக, தோழியாக, தாரமாக,  தாயாக, பாட்டியாக என பல்வேறு நிலைகளில் வாழ்க்கையில் வலம் வருகிறாள். இப்படி அனுபவங்களின் ஆசானாக எத்தனையோ பாத்திரங்களில்  தன்னை நிலைப்படுத்தி கொண்டு வலம் வந்தாலும் ‘அன்னை’ என்ற பாத்திரம் தான் மிக உன்னத இடத்தை வகிக்கிறது.  அத்தகைய தாயைப்  போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை மேற்கத்திய நாடுகளில் அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

Easwarammaஅந்த வரிசையில் ஒவ்வொரு வருடமும் கனடா ஸ்காபுறோ ஸ்ரீ சத்ய சாயிபாபா மன்றத்தின் சார்பில் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவைப் பெற்றெடுத்த தெய்வீக அன்னையாகிய ஈஸ்வரம்மா அவர்களின் நினைவாக அன்யைர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை 5321 Fich Ave East இல் அமைந்துள்ள Sri Sathya Sai Mandir இல் பக்தி பூர்வமாகக் கொண்டாடப்பட்டது. 

நிகழ்வில் அங்கு பயிலும் மாணவர்களினால் அன்னையின் பெருமையை எடுத்துரைக்கும் வண்ணம் இசை நிகழ்ச்சிகள், நடனங்கள், நாடகங்கள், பேச்சுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வில் ஆன்மீக சொற்பொழிவாற்ற பிரதம விருந்தினராக ஐக்கிய அமெரிக்காவிலிருந்து திருமதி கீதா மோகன்ராம் அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் தனது உரையில் சிறுவயதிலிருந்தே தனக்கும் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவுடனான ஆன்மீக அனுபவங்களை மிக அழகாக எடுத்துக் கூறினார்.

அந்நிகழ்வின் ஒளிபடங்களைக் கீழே காண்கிறீர்கள்.

 

ammaa2“அன்னையைப் போலொரு தெய்வமில்லை” 

அம்மா” மண்ணில் பிறக்கும் எந்தக் குழந்தையும்  முதலில் சொல்லும் வார்த்தை. உடலில் எங்கேனும் வலியெடுத்தால் எம்மையும் மீறி எம் வாய் உச்சரிக்கும் வார்த்தை.

தமிழின் முதலெழுத்தான “அ” கரத்தில் ஆரம்பித்து மெல்லினம் இடையாக “ஆ” எனும் ஓசையில் முடிவுறுவதால் “அம்மா” என்ற சொல்லில் இலகுத்தன்மை, இனிமை, மென்மை, அழகு, அன்பு தொனிக்கிறது.(அ ம் ம் ஆ)

“இறைவன் தன் வேலையை இலகுவாக்க தாயைப்படைத்தான்” என்பது முற்றிலும் உண்மையான முதுமொழியாகும்.

“அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்”  எனும் ஒளவை வாக்குக்கமைய அன்னை தந்தையரே எம் கண்முன்னே நடமாடும் தெய்வங்களாகும்.

“ மாதா பிதா குரு தெய்வம்” எனும் மூத்தோர் வாக்கில் முதலில் நிற்பவர் மாதா.  அன்னைக்கு அடுத்தபடியாகவே தெய்வம் கூட நிலை நிறுத்தப்படுகிறது என்றால் அன்னையின் மேன்மையை என்னவென்று எடுத்துரைப்போம்.

மனித உறவுகளிலேயே உயர்ந்தது தாய்-சேய்-உறவு. எத்தகைய உறவினிலும் ஏதோ ஒரு வித எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் ஒரு தாய்க்கு மட்டுமே தன் சேயிடம் எவ்வித எதிர்பார்புமற்ற அர்ப்பணிப்புடனான அன்பு மிகுந்திருக்கும். ஒரு தாய் தன் வாழ்வையே தன் சேய்க்காக அர்ப்பணிக்கிறாள். பகலிரவாக பசியிருந்து, ஐயிரண்டு திங்கள் மேனிநோகச் சுமந்து, தன் விருப்பு வெறுப்பு மறந்து, தன் சேய்க்காக கசப்பேனும் புசித்து, உயிரையே பிரிக்கும் பிரசவ வலி பொறுத்து, பூமியிலே தன் சேயைப் பெறுகின்ற வேளை, பிறப்பது அங்கே சேய் மட்டுமல்ல… அந்த தாயுமே பிறப்பெடுக்கின்றாள்!.

அத்தோடு முடிவதில்லை அவளது கடன். தன்னையே நம்பி தரணியில் பிறந்த தன் மகவை ஆசையோடு அள்ளி அணைத்து தன் குருதியையே பாலாக்கி ஊட்டும்போது அவள் தன் உயிரை உருக்கும் அன்பையுமே ஊட்டுகின்றாள். கையிலேந்திய பச்சிளங்குழந்தை மெல்ல வளர்ந்து வருகையிலே அன்னை மனம் குளிர்கிறது. தன் செல்ல மகவின் சின்ன விரலசைவும், உதட்டோர பால்மணச் சிரிப்பும், மெல்ல ஒலி எழுப்பும் மழலைச் சொற்களும் அன்னை மனதை பேரின்பமெய்திடச் செய்கின்றன. மெல்ல வாய்திறந்து “அம்மா” என முதல் வார்த்தையை செல்ல மகவு உதிர்க்கையிலே மேனிநோகச் சுமந்த வலியை மறந்தே போகிறாள். தத்தி நடை பயிலும்  சின்னப்பாதங்களில் வலியெடுக்குமே என உள்ளங் கலங்கியே தோளிலல்லிப் போட்டு மார்போடு அணைக்கிறாள். பிஞ்சுக்கை கொண்டு தன் சேய் தன் முகத்தை தடவுகையில்  அந்த ஸ்பரிசத்தில் தான் பிறந்த பேற்றினை பெற்றுவிட்டதாக உணர்கிறாள்.

எட்டி உதைக்கும் சின்னக் கால்களை முத்தமிட்டு மகிழ்கிறாள். முற்நூறு நாள் தவமிருந்து பெற்ற பெரும் பொக்கிசத்தை, அருந்தவமாற்றி, அல்லும் பகலும் கண்விழித்து, தன்னலங்கருதாமல் சேய்நலம் கருத்திற்கோண்டு கண்ணை இமை காப்பதிலும் மேலாக கருத்தொருமித்து காவல் நின்று வளர்க்கின்றாள். அன்னையின்   சிந்தையும், செயலும் தன் சேய்வசமே சுழன்றவண்ணமிருக்கும். பார்த்து பார்த்து சுவையறிந்து உணவு சமைத்து தன் அன்பையும் குழைத்து ஊட்டுகையில் நாளை வளர்ந்து தன் சேய் நல்லதொரு சேயாக நற்பெயரோடும், புகழோடும், சகல பெருமைகயோடும், ஆளுமையோடும் நற்குடிமகனாக சமூகத்தில் வாழவேண்டும் எனும் நோக்கில் நன்னெறிக் கதைகள் பல சொல்லி மனதைப் பண்படுத்துகின்றார். தன் குழந்தைக்கு பசி வந்து விடுமோ எனும் அச்சத்தால் மணிக்கணக்காக நிலாக்காட்டி, கதைகள் பல சொல்லி, பாடல்கள் பாடி அமுதூட்டும் ஆற்றல் அன்னையால் மட்டுமே இயலுமான சாதனையாகும்.

விதவிதமாய் உடையுடுத்து தன் மழலையின் அழகைக்கண்டு வியக்கின்றாள். ஒரு அன்னையின் விழிப்பார்வையிலே உலகிலேயே அதி அழகான விடயம் தன் சேயாக மட்டுமே இருக்கும். “காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பர்” அன்னையின் அன்பிற்கு ஈடு இணையேதுமில்லை. தன் சேய் எத்தகையதானாலும், எந்த நிலையில் வாழ்ந்தாலும், எத்தனை வயதினரானாலும் சாகும் வரை அவள் விழிகளுக்கு தன் சேய் கையில் தவழும் மழலையே.

சிறுபிள்ளை வளர்ந்து பெரியவனாகலாம். பெரிய அந்தஸ்த்து வகிக்கலாம். நாட்டின் தலைவனாகக்கூட இருக்கலாம். மக்களை ஆளும் அரசனேயானாலும் அன்னைக்கு அவனென்றும் நேற்றுப் பிறந்த மழலையாகவே தெரிவாள்.

தாயன்பு அளப்பரியது. தாயன்பு போன்ற அரண் உலகில்  வேறொன்றுமில்லை. உலகில் ஒருவன் எத்தனை கோடி செல்வம் படைத்தவனாக வாழ்ந்தாலும் தாயன்பு கிடைக்கப் பெறாத வகையில் அவன் பரம ஏழையேயாவான். அதே போல் பட்டினி கிடந்து வாழும் பரதேசி வாழ்வு பெற்றாலும் அன்னை அவனுக்கு அருகிருந்தால் அவனிற்கு இணையான கோடீஸ்வரன் உலகில் வேறொருவரும் இருக்க முடியாது. ஒருவன் சிறுபிள்ளை வயதினிலோ, பெரியவனான பின்போ செய்கின்ற அத்தனை பிழைகளையும் “அறியாமல் செய்தான்” என பொறுத்துப் போவாள் அன்னை. “அன்னையைப் போல் மன்னிக்கும் குணம் இறைவனுக்கும் .இல்;லை” என்பர். பொறுமையில் அவள் பூமாதேவியை மிஞ்சியவள்.

உலக மாந்தர்கள் இனத்தால், மொழியால், மதத்தால், வாழும் பிரதேசங்களால் எங்ஙனம் வேறுபட்டிருப்பினும் உலகிலுள்ள பொதுமையான ஒரே பண்பு கொண்ட ஒற்றை உறவு “அன்னையே” ஆவாள்.கோவிலுக்குச் சென்று கோடி கொடுத்து வணங்கினாலும் பெறாத அருளாசி அன்னையின் காலடியில் கொட்டிக் கிடக்கிறது. அதுவே உயர்ந்த சொர்க்கம். அன்னையின் மனமே தெய்வம் வீற்றிருக்கும் கோவில். அன்னையைத் தொழுபவன் தன் வாழ்வில்  குறைகளேதுமின்றி சிறப்பாக, உயர்வாக வாழ்வான் என்பது திண்ணம். அத்தகைய உயர்நிலையில் தன் மகவு வாழும் நிலை காணுதலே அன்னைக்கு மகவு அளிக்கும் பேரின்ப நிலையாகும். “ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்” என்னும் வள்ளுவன் வாக்கு முற்றிலும் மெய்யானவொன்றாகும்.

எனவே எந்த ஒரு சேயும் தெய்வத்துக்கு நிகரான தன் தாய்க்கு ஆற்றும் மிகப்பெரிய கடன் இறுதிக்கணம் வரை தன் தாயை மகிழ்வித்து மதித்துப் போற்றுதலும், அவளை மகிழ்விக்க சமூகத்தில் நற்பெயரோடு நன்னிலையில் உயர்வுற்று வாழ்ந்து பெருமை சேர்த்தலும், எந்நிலையிலும் தான் தனது தாய்க்கு சிறுசேயே என்றுணர்ந்து ஒழுகுதலேயாகும். இவ்வண்ணம் வாழ்பவனுக்கு தீமைகள் வந்து அணுகாது. நன்மைகள் வந்து சேரும். நன்னிலையில் நானிலம் போற்ற பெருஞ்சிறப்போடு வாழலாம். இது நம் தமிழின முன்னோர்கள் வாழ்ந்து கண்டறிந்த பேருண்மையாகும். அன்னை மறைந்த பின்பு இறுதிக் கடன்கள் என்ற பெயரில் சடங்குகள், சம்பிரதாயங்கள், நினைவு நாட்கள் என விழா எடுத்து, ஊரைக்கூட்டி விமரிசையாகச் செய்வதால் அன்னையின் ஆத்மா சாந்தியெய்துமென்பதில் உண்மையேதுமில்லை. அன்னையை வாழும்போதே மகிழ்விக்க வேண்டும். மதிக்க வேண்டும். மனமார வாய்விட்டுப் பேசிட சில பொழுதுகளையேனும் இவ் அவசர உலகில் அவளுக்காக நாம் ஒதுக்க வேண்டும். இறந்த பின் எதைச் செய்தென்ன? இருக்கும் போது செய்வதையே அன்னை மனமறியும். நடமாடும் தெய்வமான அன்னையை அருகிருக்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். ஆதலால் அவர்களை அன்பொழுக ஆதரித்து  முதுமை நிலையில் அவர்களைச் சேய்களாக்கிப் பார்க்கும் அன்னை மனம் கொண்டவராக பிள்ளைகள் வாழ வேண்டும். அப்பொழுதுதான் அன்னையின் ஆசிகள் என்றென்றும் அவர்களுக்கு இருக்கும்.

அன்னையானவள் மண்ணை விட்டுப் பிரிந்தாலும் தன் பிள்ளைகளின் மனதைவிட்டுப் பிரிவதில்லை. தெய்வமாக வீற்றிருந்து வழிநடத்துவாள் தன் சேய்களை என்றுமே. ஆதலால் தாயைப் போற்றுவோம். தரணி போற்ற தாயன்பு கொண்டு வாழுவோம். தாய்மையை மிஞ்சி ஓர் தெய்வம் உலகில் வேறொன்றுமில்லை.

-அன்புடன் மோகன் குமாரசாமி

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கனடிய நிகழ்வுகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: May 18, 2016