Moni-Bara-1 அரங்கேற்ற விழாவில் வி.எஸ்.துரைராஜா புகழாரம்

“ஆய கலைகள் அறுபத்தி நான்கினில் பரதக் கலையும் ஒன்றாகும். தமிழ் மொழியின் வழக் கொழிந்து போயுள்ள ஆபிரிக்க நாட்டில் கூட பரதக் கலை சிறப்பு பெற்றிருக்கிறது. ஆடற் கலையின் நாயகனான சிவபெருமானை வழிபட்டு இக்கலை வளர்க்கப்பட்டு வருகின்றது. உலகெங்கும் மொத்தம் ஏழாயிரத்தி நூற்றி ஐந்து (7105) மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஆறு மொழிகள் மாத்திரம் செம்மொழி என்ற பெருமையினைப் பெற்றுள்ளன. அவற்றுள் தமிழ் மொழியும் ஒன்றாகும்.

எம்மினத்தின் தாலாட்டு மொழியான தமிழ் இல்லாவிட்டால் தமிழர்களாகிய நாமும் இருக்க மாட்டோம். ஒரு மொழி வீட்டு மொழி, பேச்சு மொழி, ஆட்சி மொழியாக இல்லா விட்டால் அது அழிந்து போய்விடும். எனவே அழிந்து போய்விடக் கூடிய நிலையிலுள்ள நமது தாய் மொழியினை பேணி வளர்ப்பதற்கு நாம் பாடு பட வேண்டும். அந்த வகையில் புலம் பெயர் ந்து வாழும் நாடுகளில் நமது பரதக் கலையை பேணி வளர்த்து வரும் பரத நாட்டிய ஆசிரியை களையும், அதனை ஆர்வத்துடன் பயின்று வரும் மாணவிகளையும் நாம் பாராட்ட வேண்டும். பர தக் கலையினை ஆர்வத்துடன் பயின்று இன்று அரங்கேற்றம் காணும் செல்வி மொனிஷா மோகவரோதயறாஜா சிறந்த நட்சத்திரமாகத் திகழ்வார் என்பதில் ஐயமில்லை. அவர் இக்கலையில் சிறந்து விளங்க வேண்டுமென நான் மனதார வாழ்த்துகின்றேன்.” 

ரொறண்டோ மாநகரில் இன்று முன்னணி பரத நாட்டிய ஆசிரியையாகத் திகழும் திருமதி தேனுஜா திருமாறனிடம் கடந்த ஏழாண்டு காலமாக பரத நாட்டியக் கலையினைக் கற்று வந்த செல்வி மொனிஷாவின் பரத நாட்டிய அரங்கேற்ற வைபவத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய உலகத் தமிழ் பண்பாட்டுக் கழகத்தின் அகில உலக தமிழ் கல்விப் பொறுப்பாளரான திரு.வி.எஸ துரைராஜா இவ்வாறு கூறினார். மார்க்கம் சீன கலாச்சார மண்டபத்தில் கடந்த 5ம் திகதி செல்வி மொனிக்காவின் அரங்கேற்றம் நடைபெற்றது.

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய மார்க்கம் மாகர சபை உறுப்பினர் திரு. லோகன் கணபதி உரையாற்றிய போது “பரதக் கலையானது தெய்வீகம், எமது கலை கலாச் சாரங்களுடன் எமது இனத்திற்கு ஏற்பட்டுள்ள அவல நிலையினையும் பாவத்துடன் புலப்படுத்தி வருகின்றது. பரதக் கலையினை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லும் பணியினை பரத நாட்டிய ஆசிரியையான திருமதி தேனுஜா திருமாறன் மேற்கொண்டு வருகின்றார். அதுமாத்திர மல்ல செல்வி மொனிஷாவின் பெற்றோர்களான திரு.திருமதி.மோகவரோதயராஜா தமது புதல்வி மொனிஷாவுக்கு இக்கலையினை ஆர்வத்துடன் பயிற்றுவித்துள்ளார்கள். மொனிஷாவும் திறமை யாகக் கற்று இன்று மேடையிலே தனது திறமையினை புலப்படுத்தி உள்ளார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்கள் எனக் கூறி வாழ்த்துப் பத்திரத்தினையும் கையளித்தார்.

மொனிஷா கல்வி பயின்று வரும் “பாதர் மைக்கல் மெக்கிவ்னி கதலிக் அக்கடமி” யின் அதிபர் திரு.லோ பவோனேசா அவர்கள் உரையாற்றிய போது செல்வி மொனிஷா மிகவும் திறமை வாய் ந்த மாணவி. அவர் சகல பாடங்களிலும் அதிகளவு புள்ளிகளைப் பெற்று முன்னணியில் திகழ்ப வர். அது மாத்திரமன்றி எமது கல்லுரிக்காக பதினாறாயிரம் டொலர் நிதியினையும் திரட்டித் தந்த பெருமைக்குரியவர். அத்துடன் அவர் பரத நாட்டிய கலையையும் கற்று இன்று திறமையாக அரங் கேற்றம் செய்கின்றார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டினை தெரிவித்துக் கொள்கின்றேன்” எனக் கூறினார்.

செல்வி மொனிஷா தாள லயம் ஆகியவற்றுக்கு அமைய துரிதமாக அபிநயித்து ஆடிய ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. அவரது விழி அசைவு, கை அசைவு, முகபாவம் ஆகியன பிரமாதமாக இருந்தன. அதனால் அவர் அடிக்கடி பார்வையாளர்களின் கரகோஷத்தினை பெற்றுக் கொண்டார். அவர் ஒரு சிறந்த நாட்டிய தாரகையாகத் திகழ்வார் என்பதில் ஐயமில்லை.
சங்கீத மேதைகளான திருமதி குலநாயகி விவேகானந்தன், செல்வி அபிராமி விவேகானந்தன் ஆகியோரின் இனிய குரல் வளத்துடன் கூடிய பாடல்களும், புல்லாங்குழல் மேதை திரு.செல்வநாயகம் தயாபரன், மிருதங்க மேதை திரு.றதிரூபன் பரம்சோதி, வயிலின் வித்துவான் திரு.ஏ. ஜெயதேவன் ஆகியோரது பக்க வாத்திய இன்னிசைகளும் பரத நாட்டிய அரங்கேற்றத்துக்கு மெருகூட்டின. அன்றைய மாலைப் பொழுது ஓர் இனிய மாலைப் பொழுதாகக் கழிந்தது.
-வீரகேசரி மூர்த்தி

 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: July 15, 2015