முடியும் என விஞ்ஞானிகள் கூறினாலும், அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளும், அரசாங்கங்களும், தொழிற்சாலை முதலாளிகளும், தனிமனிதர்களும் இதற்கான வழிவகைகளை அமுல் படுத்துவதில் பின் நிற்கின்றனர். 

வளிமண்டலத்தில் உள்ள காபனீரொட்சைட்டின் அளவைக் குறைப்பதன் மூலம் இவ் அழிவுகளக் குறைக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். தொழிற்சாலைகள், மின் உற்பத்தி நிலையங்கள், போக்குவரவு சாதனங்கள் வெளிவிடும் காபனீரொட்சைட் புகையினளவைக் குறைப்பதே முக்கிய வழி என வலியுறுத்துகின்றனர். மின் உற்பத்திக்குப் பாவிக்கும் கரி, போக்குவரவுக்குப் பாவிக்கும் பெற்றோல் போன்ற காபனை அடிப்படையாகக் கொண்ட சேதனப் பொருட்களுக்குப் பதிலாக காபனீரொட்சைட்டைத் தராத வேறு மூலப்பொருட்களைப் இவற்றிற்குப் பாவிக்க வேண்டும்.

உதாரணமாக காற்று, நீர், சூரியன், அணுசக்தி போன்றவற்றிலிருந்து மின் உற்பத்தி செய்யும் போது காபனீரொட்சைட் வெளிவருவதில்லை. மேலும் பெற்றோல், கரி போன்ற சேதனப் பொருட்கள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானவை. இவற்றை கிண்டி எடுத்துப் பாவித்து விரைவில் முடித்து விடலாம். அதன் பின் என்ன செய்வது? ஆனால் காற்று, நீர், சூரியன், அணுசக்தி போன்றவை அள்ள அள்ளக் குறையாத வளங்களாகும். இதனால் இவற்றைப் பாவிக்க முயல்வது புத்திசாலித்தனமாகும்.

ஆனால் ஏற்கனவே கரியைப் பாவித்து மின் உற்பத்தி செய்யும் நாடுகள் அதைக் கைவிட்டு வேறு முறைகளுக்கு மாறுவதற்குப் பெருந்தொகைப் பணத்தை முதலீடு செய்ய வேண்டும். சில நாடுகளில் சூரியன் வருடம் முழுக்க எல்லா நாட்களிலும் வருவதில்லை. பல நாடுகளில் வேகமாக வீசும் காற்றோ நீர்வீழ்ச்சியோ இல்லை. அதை விட இவற்றைப் பாவித்து பெருமளவு மின்சாரம் செய்யும் தொழினுட்பமுமில்லை. மற்றும் போக்குவரவு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் சேதனப் பொருட்களான பெற்றோல்இ டீசலுக்குப் பதிலாக வேறு புகையற்ற தொழினுட்பத்தில் ஓடும் முறைகளைக் கண்டு பிடிப்பதில் பின் நிற்கின்றன. இதற்கான ஆராய்சிக்கோ அல்லது தமது உற்பத்தி முறைகளை மாற்றுவதற்கோ ஏற்படும் பெருஞ்செலவை எண்ணி இவை மௌனம் சாதிக்கின்றன. இவற்றின் காரணமாக தொடர்ந்தும் சேதனப் பொருட்களையே எமது சக்திக்கான ஆதாரமாக பயன்படுத்துகிறோம். இதனால் வெளிவரும் காபனீரொட்சைட் புவியை வெப்பமாக்குகின்றது.

உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து காபனீரொட்சைடைக் குறைப்பதற்கான ஒப்பந்தம் செய்வதற்கு முயலுகின்றன. எனினும் முன்னர் செய்யப்பட்ட கியோத்தோ ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திடவில்லை. உலக வெப்ப உயர்வுப் பிரச்சனை இருக்கிறது என்பதையே இப்போது தான் மிகுந்த தயக்கத்தின் பின் அது ஏற்றுக் கொண்டுள்ளது. தொழிற்சாலைகளையும், கரி மின் உற்பத்தியையும் குறைப்பது தமது முன்னேற்றத்திற்குத் தடங்கல் என்றும், அமெரிக்கா போன்ற பணக்கார நாடுகள் ஒன்றும் செய்யாத போது இப்போது தான் வளரத் தொடங்கியுள்ள நாடுகளான தங்களை மட்டும் காபனீரொட்சைட்டைக் குறைக்குமாறு கேட்பது எவ்வகையில் நியாயம் என்றும் சீனா, இந்தியா போன்ற சில நாடுகள் கூறி வருகின்றன. வளரும் நாடுகளிடம் காவனீரொட்சைட்டைக் குறைக்கும் தொழினுட்பமுமில்லை அன்று அவர்கள் தம்மை மேலும் நியாயப் படுத்துகின்றனர்.

தனி மனிதர்களான நாமும் கூட எமது நுகர்வு, போக்குவரவுப் பழக்க வழக்கங்களை மாற்றுவதன் மூலம் நாம் வெளியேற்றும் காபனீரொட்சைடினளவைக் குறைத்து உதவலாம். பத்து வருடத்துக்கு முன்னைய காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது எமது உடை, மின்பொருட்கள், வீடு திருத்தும் பொருட்கள், ஏனைய நுகர்வுப் பொருட்களின் கொள்வனவு மிகவும் அதிகரித்துள்ளது. இரட்சண்ய சேனையினர் தம்மிடம் வரும் பழைய ஆடைகள், சப்பாத்துகள், தளபாடங்களின் தொகை மிக அதிகரித்துள்ளதால் தம்மால் அவற்றைப் பிரித்து அடுக்கி தேவை உள்ளவர்களுக்கு கொடுக்க முடியாமல் இருக்கிறது எனக் குறைப்படுகின்றனர். தம்மிடம் முன்பு பழைய பொருட்களே வந்தனஇ, ஆனால் இப்போதோ புதுப் பொருட்கள் பிரிக்கப் படாமலே வருகின்றன, ஒரு வேளை பிடிக்காத பரிசில்களோ என அவர்கள் அங்கலாய்க்கின்றனர். எமது நுகர்வுப் பழக்க வழக்கங்களை நாம் குறைத்தலும் மாற்றுதலும் அவசியம். இயன்ற வரை பொருட்களை ஒருமுறை பாவித்ததும் எறிவதைத் தவிர்த்து மீண்டும் மீண்டும் பாவிக்கக் கூடிய பொருட்களையே வாங்க வேண்டும். 

இதை விட எமது போக்குவரவுகளை குறைப்பதும் மாற்றுவதும் முக்கியமாகும். தனி ஒருவர் சிற்றுந்தில் பயணிப்பதற்குப் பதிலாக பலர் சேர்ந்து போதல்இ சிற்றுந்துக்குப் பதிலாகப் பேருந்தைப் பாவித்தல், பெற்றோலில் இயங்கும் சிற்றுந்துக்குப் பதிலாக மின்சாரத்திலியங்கும் சிற்றுந்தைப் பாவித்தல் போன்றவை பயன் தரும். எல்லாவற்றிலும் மேலாக விமானப் பயணத்துக்குப் பதிலாக இயன்ற வரை தரையிலோடும் வாகனங்களைப் பாவிப்பது சிறந்தது. 

மற்ற நாடு ஏதாவது செய்தால் தான் என் நாடும் ஏதாவது செய்யும், அரசு சட்டம் வைத்தால் தான் தனி மனிதராகிய நாமும் ஏதாவது செய்வோம் என்று இருந்தால் சில வேளை காலம் மிகவும் கடந்து விடும். காலம் பிந்தி எடுக்கும் முயற்சிகள் பயனளிக்காது போகக் கூடும். எனவே ஐ.நா. சபையின் காலனிலை ஆய்வுக் குழு தந்துள்ள எச்சரிக்கையைக் கருத்திற் கொண்டு நாடுகளும், அரசாங்கங்களும், தனிமனிதர்களாகிய நாமும் பூமியின் காய்ச்சலைக் குறைக்க எம்மால் இயன்ற நடவடிக்கைகளைச் காலம் தாழ்த்தாது செய்ய வேண்டும். அல்லாவிடின் நாம் இவ்வளவு பாடுபட்டு வளர்க்கும் எமது பிள்ளைகளோ பேரப் பிள்ளைகளோ வாழ உகந்த இடமாக பூமி இருக்க மாட்டாது. 

நோர்வேயிலிருந்து மைத்திரேயி