sengai_aaziyaan2ஈழத்துப் பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் என்று அழைக்க்கப்படும் கலாநிதி கந்தையா குணராசா அவர்கள் கடந்த 28 பெப்ரவரி 2016 ஞாயிற்றுக்கிழமை தனது 75வது வயதில் காலமானார்.
1941ஆம் ஆண்டு ஜனவரி 25ம் திகதி யாழ் வண்ணார்பண்ணையில் பிறந்த இவர் யாழ்.இந்து ஆரம்ப பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும் உயர் கல்வியை இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்திலும் கற்றபின் பட்டம் பெற்று நிர்வாக சேவை அதிகாரியாகவும் பணியாற்றியிருந்தார்.

அத்துடன் கிளிநொச்சி அரசாங்க அதிபராகவும் பணியாற்றியிருந் இவர் அரச சேவையிலிருந்து ஓய்வு பெறும் முன்னர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பதிவாளராகவும் பணியாற்றியிருந்தார்.
செங்கை ஆழியான் எனும் புனைபெயரில் எமுத ஆரம்பித்த இவர் ஈழத்து வாசகர்கள் மட்டுமன்றி உலகத் தமிழ் மக்களாலும் நன்கு அறியப்பட்டவர்.

சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், வரலாறு மற்றும் புவியியல் நூல்களையும் எழுதியுள்ள sengai_aaziyaanஇவர், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் பங்களிப்புச் செய்திருந்தார். ஈழநாடு பத்திரிகையில் வெளிவந்த கிடுகு வேலி என்ற இவரது தொடர்கதை வாசகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்ததுடன் இவர் எழுதிய வாடைக்காற்று புதினம் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு தரமான படைப்பு எனப் பலராலும் பாராட்டப்பட்டிருந்தது. நந்திக்கடல், சித்ரா பௌர்ணமி, ஆச்சி பயணம் போகிறாள், முற்றத்து ஒற்றைப் பனை, வாடைக்காற்று, காட்டாறு, இரவின் முடிவு, ஜன்ம பூமி, கந்தவேள் கோட்டம், கடற்கோட்டை, கிடுகு வேலி போன்ற நாவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.

பூதத்தீவுப் புதிர்கள், ஆறுகால்மடம் ஆகிய சிறுவர் புதினங்களையும், ஈழத்துச் சிறுகதை வரலாறு என்ற ஆய்வு நூலையும்  செங்கை ஆழியான் எழுதியுள்ளார். யாழ்ப்பாண அரச பரம்பரை, நல்லை நகர் நூல், மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம், களம் பல கண்ட யாழ் கோட்டை உய்யிட்ட ரல வரலாற்று நூல்களையும் இவர் எழுதி வெளியிட்டார்.

sengai_aaziyaan1

இவர் எழுதிய சிறுகதைகள். மல்லிகைச் சிறுகதைகள்-1, மல்லிகைச் சிறுகதைகள்-2, சுதந்திரன் சிறுகதைகள், மறுமலர்ச்சி சிறுகதைகள், ஈழகேசரி சிறுகதைகள், முனியப்பதாசன் கதைகள், ஆயிரமாயிரம் ஆண்டுகள் போன்ற சிறுகதைத் தொகுப்புகளாகவெளியிடப்பட்டுள்ளன. 

1994ம் ஆண்டு வரலாற்றுத் துயர் நிறைந்த யாழ்ப்பாண இடம்பெயர்வை வைத்து இவர் எழுதிய மரணங்கள் மலிந்த பூமி நாவல் அனறைய நாட்களில் மக்கள் பட்ட அவஸ்தைகளையும், அவலங்களையும் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது மட்டுமல்ல ஒரு வரலாற்று ஆவணமாகவும் அந்த நூல் திகழ்வது குறிப்பிடத்தக்கது. ஈழத்து இலக்கிய உலகில் தனியான இடம் பிடித்த செங்கை ஆழியான் அவர்களது மறைவுக்கு வாசகர்கள் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  
 

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: April 3, 2016