"கனடாவில் யாழ் இந்துவின் 'கலையரசி – 2016 நிகழ்வில் Jonathan Ripley, Harvard பல்கலைக்கழக பேராசிரியர் அவர்கள் தமிழ்மொழியைப் பற்றி நிகழ்த்திய உரை"
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை யாழ் இந்துக்கல்லூரிக் கனடாக் கிளையினரின் வெள்ளி விழாவையொட்டி நடைபெற்ற கலையரசி விழா-2016 Markham Theatre of Performing Arts இல் மண்டபம் நிறைந்த பார்வையாளர்களின் மத்தியில் வெகுசிறப்பாக நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஹார்வேர்ட் பல்கலைக்கழக தென் ஆசிரிய பிரிவு தமிழ் ஆசான் ஜொனதன் டி.ரிப்லி எல்லோரும் வியக்கும் வண்ணம் தமிழில் உரையாற்றினார்.
விழாவின் ஆரம்ப நிகழ்வான மங்கல விளக்கேற்றிலின் பின்னர் தேசிய கீதத்தினை வைஷாலி, மகிலன் ஆகியோர் இசைத்தனர். அதனைத் தொடர்ந்து வரவேற்புரையை திரு.இ.கிருஷ்ணானந்தன் வழங்கினார். தொடர்ந்து சாமகான நுன்கலைக்கழக ஆசிரியர் ஸ்ரீமதி சாருமதி மனோகாந்தனின் மாணவர்களின் வாத்திய பிருந்தத்துடன் ஸ்ரீ அபிராமி நாட்டிய ஆசிரியை ஸ்ரீமதி செல்வி சுரேஸ்வரனின் மாணவிகளின் மல்லாரி வரவேற்பு நடனம் இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீமதி செந்தில்செல்வி சுரேஸ்வரனின் மாணவிகள் பக்திபூர்வமான சிவப்பிரவாக நடனத்தை வழங்கியிருந்தார்கள்.
திரு. மோகன் சுந்தரமோகனின் தலைவருரையை தொடர்ந்து யாழ் இந்துவின் பழைய மாணவனும் தற்போது யாழ்ப்பாணம் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றும் திரு.சண் தயாளன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தொடர்ந்து தமிழகத்திலிருந்து வருகை தந்த ஆன்மீகப் பேச்சாளரும், எழுத்தாளருமான திரு.ப.மணிகண்டன் அவர்களின் சொற்பாழிவினை சபையிலிருந்த அனைவரும் ரசித்து கரவொலி எழுப்பினர்.
இடைவேளையினைத் தொடர்ந்து பொன்னையா விவேகானந்தனின் எழுத்து இயக்கத்தில் உருவான 'இதை இப்ப சொல்லி' எனும் குறும் நாடகம் இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியாக பிரபல தென் இந்தியப் பாடகர்களான வந்தனா ஸ்ரீனிவாசன், கிருஷ்ணா ஐயர் மற்றும் உள்ளூர் கலைஞர்கள் கலந்து கொண்ட "ஷியானாஸ்" இசைக்குழுவினரின் மெல்லிசை விருந்து புதிய, பழைய பாடல்களின் தெரிவுகளில் இடம்பெற்றது. தொடர்ந்து திரு. ரவீந்திரன் கனகரட்ணம் அவர்களின நன்றியுரையுடன் இந்துக்கல்லூரிக் கனடாக் கிளையினரின் வெள்ளிவிழாவையொட்டி நடைபெற்ற கலையரசி விழா இனிதே நிறைவுற்றது.
தலைவர் சி.சுந்தரமோகனின் ஆசிச் செய்தி!
கனடா நாட்டின் யாழ்.இந்துக்கல்லூரிச் சங்கம் இந்த மண்ணில் 25 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.வெள்ளிவிழா ஆண்டாகிய இவ்வருடம் இடம்பெறும் "கலையரசியின்" கலைச்சங்கம் நிகழ்ச்சி மலருக்காக சங்கத்தின் தலைவராக ஆசிச்செய்தி எழுதக் கிடைத்த பெரும் பேறையிட்டு பூரிப்படைகின்றேன்.
யாழ்ப்பாணத்தில் இந்து மாணவர்களுக்கென ஆரம்பிக்கப்பட்ட முதல் ஆங்கிலக் கல்லூரி எனப் பெருமை பெற்ற யாழ் இந்துக் கல்லூரி உலகெங்கிலும் வாழும் பல்லாயிரக்கணக்கான கல்வியாளர்கள், கணக்காளர்கள், மருத்துவர்கள், வர்த்தகர்கள், நிர்வாகிகளை உருவாக்கிய ஓர் உன்னதமான கல்லூரி. புவியெங்கும் பரந்து வாழும் எமது பழைய மாணவர்கள் சங்கங்களை நிறுவி கல்லூரிக்கும், இலங்கை வாழ் தமிழர்களுக்கும் தாம் புலம்பெயர்ந்த நாட்டின் சமூகத்திற்கும் பல்வேறு வகைகளில் தொண்டாற்றி வருகின்றனர்.
கனடா யாழ் இந்துக் கல்லூரிச் சங்கம் இவ்வருடம் ஆரம்பித்த சேவைகளில் மட்டக்களப்பு வாழ் தமிழ் மாணவர்களுக்காண நிதியுதவி முக்கியமானதாகும். 50 மாணவர்களுக்கான மதிய உணவு வழங்கும் திட்டம் அங்கே இடம்பெறுகின்றது. வன்னியில் வறுமைக்கோட்டின் கீழுள்ள 50 மாணவர்களுக்கான கல்வி மற்றும் அன்றாட வாழ்க்கைக்கான உதவித்திட்டம் தொடர்ந்து 6வது வருடமாக இடம்பெறுகின்றது.
கல்லூரியின் விளையாட்டு மைதானத்துக்கான விஸ்தரிப்பிற்கான மேலதிக காணி எமது சங்கத்தினால் வாங்கப்பட்டு நவீன பார்வையாளர் அரங்கு கட்டுவதற்கான அனுமதியும் கோரப்பட்டுள்ளது. கலையரசியின் கலைச்சங்கமம் விழா" இனிதே நடைபெற மனமகிழ்வோடு வாழ்த்துகின்றேன்.
பிரதம விருந்தினர் சண் தயாளன் அவர்களின் வாழ்த்துச் செய்தி!
யாழ் இந்து மைந்தர்கள் அனைவருக்கும் எனது அன்புகலந்த வணக்கம்.
ஆயகலைகள் அனைத்தையும் அள்ளித் தந்த யாழ். இந்துவின் மடியில் தவழ்ந்துஇ நடந்த மைந்தர்கள் புலம்பெயர்ந்த மண்ணிலும் அன்னையின் புகழ்பரப்பி வருவதையிட்டு பெருமகிழ்ச்சி அடைகிறோம். தாங்கள் கல்விபயின்ற கல்லூரியின் உயர்ச்சியிலும், தாய் மண்ணில் அல்லலுறும் சகோதர மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியிலும், அதற்கும் மேலாக புலம்பெயர்ந்து வாழுகின்ற கனடா மண்ணில் அல்லலுற்றவர்களுக்கும், சேவைநிறுவனங்களுக்கும் தாங்கள் ஆற்றிவருகின்ற சேவைகளைக் கண்டு யாம் பெருமையடைகின்றோம்.
நூற்றியிருபைத்தைந்து ஆண்டுகள் கடந்து எமது கல்லூரியின் பெருமையையும், பாரம்பரிய கலை வடிவங்களையும், பண்பாட்டினையும் கலையரசி என்ற நிகழ்வு மூலம் உலகறியச் செய்யும் தங்களது சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துவதோடு அனைவரும் ஒற்றுமையுடன் இக்கடமையைத் தொடரவேண்டும் எனவும் ஆசிகூறுகின்றேன்.
அன்னையின் பாதங்களுக்கு இவ்வாழ்த்துச் செய்தியை சமர்ப்பிப்பதில் பெருமையும் இறுமாப்பும் அடைகின்றேன். கலையரசி 2016 விழா சிறப்புற நடைபெற மீண்டும் எனது வாழ்த்துக்கள்.