womens dayஉடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். தாயாக, மனைவியாக, தங்கையாக, மகளாக என்று நம் உறவின் அனைத்து பகுதியிலும் நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்று கூறப்படுவது இதனால்தான். தோல்விகளை கண்டு துவண்டு விடாது அதனை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றிக்கண்ட பல பெண்கள் நம் மத்தியில் வாழ்கின்றனர். அவ்வாறான பெண்களுக்கு மட்டுமன்றி அனைத்துலக பெண்களுக்கும் இன்றைய நாளில் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் "கரம்பொன் நெட்” மகிழ்ச்சியடைகின்றது.

மகளிர் தினம் தோன்றிய வரலாறு

அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்றது அந்த காலம். ஆனால் கல் உடைக்கும் வேலையில் இருந்து கணினி துறை வரை அனைத்து துறைகளிலும் இன்றைக்கு மைல்கல்லாக மகளிர் விளங்கும் அளவுக்கு சாதனை படைத்து உயர்ந்துள்ளனர் என்றால் மிகையில்லை. இவ்வாறு சாதனை உயரத்தை எட்டி உள்ள மகளிர் சமுதாயத்திற்கு என்று ஒரு நாள் உலகெங்கும் ஒருங்கே கொண்டாடப்படுகிறது என்றால் அது தான் உலக மகளிர் தினம்.

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி அன்று இந்த மகளிர் தினம் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை விடப்படுகிறது.

ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிடலாம். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டுவேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்திருந்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது.

1857-ம் ஆண்டு நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பெண்களுக்கு பணி வாய்ப்பு தரப்பட்டது. பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. இதனால் பெண்கள் மிகுந்த வருத்தம் அடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம், உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள் கிளர்ச்சியில் இறங்கினர். 1857-ம் ஆண்டு மார்ச் மாதம் 8-ந் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன்பிறகு 1907-ம் ஆண்டு சம ஊதியம், சம உரிமை கேட்டு பெண்கள் போராட தொடங்கினர். 1910-ம் ஆண்டு டென்மார்க் நாட்டில், பெண்கள் உரிமை மாநாடு நடந்தது. இதில் உலகின் பல நாடுகளை சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்து கொண்டு, தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர்.

இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்டு தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் மாதம் 8-ந் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.

1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ந் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.

தற்சமயம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 18, 1911. ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் 106 ஆண்டுகள் முடிந்து விட்டன. பிரெஞ்சு புரட்சியின் போதே பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதிதத்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன. அப்போது ஆரம்பித்த இந்தப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன. பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணரத் தொடங்கினர். பெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் ஆகிய சமுதாய போக்குக்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் நடந்தன. இந்த போராட்டங்களின் வெற்றியாய் உதித்ததே சர்வதேச பெண்கள் தினம். 1913 ஆம் வருடம் முதல், மார்ச் 8 சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.