Nandavanam-1aதமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இனிய நந்தவனம் இதழ் தனது மார்ச் மாதம் 2019 ஆண்டு இதழைக் கனடா மலராக வெளியிட்டிருக்கின்றது. கனடிய இலக்கியத்தில் ஈடுபாடு கொண்ட சிலரின் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதை, நேர்காணல், விமர்சனம் போன்ற ஆக்கங்கள் இந்த மலரில் இடம் பெற்றிருக்கின்றன. சர்வதேசம் அறிந்த கனடிய எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் 50 ஆண்டுகள் இலக்கிய சேவையைப் பாராட்டி, அவரைக் கௌரவிக்கும் முகமாக அவரது படத்தை தனது இதழில் அட்டைப்படமாக வெளியிட்டு கௌரவித்திருக்கின்றார் நந்தவனம் ஆசிரியர் திரு. த. சந்திரசேகரன் அவர்கள்.

இதேபோல இலங்கையில் இருந்து வெளிவரும் ஞானம் இதழில் எழுத்தாளர் குரு அரவிந்தன் அவர்களின் படத்தை ஏற்கனவே அட்டைப்படமாகப் பிரசுரித்து அவரைக் கௌரவித்திருந்தார் ஞானம் ஆசிரியர் திரு. ஞானசேகரன் அவர்கள்.

'கனடிய தமிழ் இலக்கிய வானில் ஒளிவீசும் நட்சத்திரங்கள்' என்ற தலைப்பில் சுலோச்சனா அருண் என்பவர் நந்தவனம் இதழில் எழுதிய கட்டுரையில் இருந்து சில பகுதிகளை இங்கே குறிப்பிடுகின்றோம்.

கனடிய தமிழ் படைப்பிலக்கியத்தில் இன்று புகழ் மிக்கவர்களாக இருக்கும் எழுத்தாளர்களில் இருவர் Nandavanam-2aமுக்கியமாக இனங்காணப்பட்டவர்கள். இவர்களில் ஒருவர் மூத்த எழுத்தாளரான அ. முத்துலிங்கம், மற்றவர் அடுத்த தலைமுறை எழுத்தாளரான குரு அரவிந்தன் ஆகும். இலங்கையில் பிறந்து கனடாவில் வாழும் இவர்கள் இருவரும் தங்கள் எழுத்தாற்றலால் இன்று சர்வதேசப்புகழ் பெற்ற எழுத்தாளர்களாக, இலட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்டவர்களாகத் திகழ்கின்றார்கள். இவர்களிடம் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இவர்கள் இருவரும் இலங்கையில் கணக்காளர்களாகப் படித்து வாழ்வாதாரத்திற்காக வெளிநாட்டில் பணிபுரிபவர்கள். இவர்களில் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் தலைவராகவும், எழுத்தாளர் குரு அரவிந்தன் கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவராகவும் இருக்கின்றார்கள். எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அறுபது ஆண்டுகால இலக்கிய சேவையையும், எழுத்தாளர் குரு அரவிந்தன் ஐம்பது ஆண்டுகால இலக்கிய வேவையையும் தமிழ் இலக்கிய உலகில் இதுவரை ஆற்றிப் புகழ் பெற்றிருக்கிறார்கள். தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகமே தேவையில்லாத இவர்கள் இருவரும் ஒருவரைப் பற்றி ஒருவர் அவ்வப்போது குறிப்பிட்டுச் சுவாரஸ்யமாக எழுதிய சில வரிகளை இங்கே தருகின்றேன்:

இதோ எழுத்தாளர் அ. முத்துலிங்கம் பற்றி எழுத்தாளர் குரு அரவிந்தன் இலங்கையில் இருந்து வெளிவரும் ‘தினக்குரல்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையில் இப்படி எழுதியிருந்தார்: ‘சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பாக இருக்கலாம், அமெரிக்காவில் இருந்து கடிதம் ஒன்று எனக்கு வந்திருந்தது. அந்தக் கடிதம்தான் எனக்கும் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் அவர்களுக்குமான இலக்கியத் தொடர்பை எங்களுக்குள் முதலில் ஆரம்பித்து வைத்தது. இந்தத் தொடர்பை ஏற்படுத்தி வைத்த அவருடைய மகள் எழுதிய கடிதத்தை தமிழ் மொழிக்கு மொழி மாற்றித் தருகின்றேன். ‘நீங்கள் தமிழ் மொழிக்கு ஆற்றும் உதவிக்கு நன்றி. எனது தந்தை வெளி நாடுகளில் இருந்ததால், என்னால் எனது தாய் மொழியான தமிழ் மொழியில் பாண்டித்தியம் பெறமுடியவில்லை. அந்தக் குறை எனது மனதில் எப்பொழுதும் இருக்கிறது. எனது மகளுக்கும் அந்தக் குறை இருக்கக் கூடாது என்பதால் அவர் தமிழ் மொழி கற்பதற்குத் தேவையான சரியான சாதனங்களைப் பல இடங்களிலும்  தேடிக் களைத்துப் போனேன். கனடாவில் இருக்கும் அப்பாவின் நண்பர் ஒருவர் மூலம் தங்களின் ‘தமிழ் ஆரம்’ பாடல்கள் அடங்கிய குறுந்தட்டுக் கிடைத்தது. அருகே உள்ள கனடாவில் தயாரிக்கப் பட்டது என்று தெரியாமல், இது போன்ற  பாடல்கள் அடங்கிய குறுந்தட்டிற்காக எங்கோ எல்லாம் நாங்கள் இதுவரை தேடினோம். இப்போதெல்லாம் எனது மகள் தினமும் தாங்கள் தயாரித்த இந்தப் பாடல்களையே கேட்டு மகிழ்ந்து போகிறாள். இசை மூலம் மொழியைப் புகுத்துவதில் தாங்கள் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டுக்குரியது. அதுமட்டுமல்ல, தங்கள் குறிக்கோள் வெற்றியும் அடைந்திருக்கிறது என்பதற்கு, இந்தப் பாடல்களை மிகவும் விருப்போடு கேட்கும் எனது மகளே சாட்சி. மீண்டும் தங்களுக்கும், இந்த முயற்சியில் துணை நிற்றவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.’ 

அந்தக் கடிதம் அமெரிக்காவில் இருந்து வந்திருந்தது. எழுதியது வேறுயாருமல்ல பிரபல ஈழத்து எழுத்தாளர் திரு அ. முத்துலிங்கத்தின் அருமைப் புதல்வி தான் ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். அவருடைய தமிழ் உணர்வைப் பாராட்டி, நன்றி கூறி அந்தக் கடிதத்திற்குப் பதில் அனுப்பியிருந்தேன். எனது நண்பர் டாக்டர் கதிர் துரைசிங்கத்தின் மூலம் அந்தக் குறுந்தட்டு அங்கே சென்றடைந்ததாகப் பின்பு அறிந்தேன். சந்தோஷமிகுதியால் இதைப்பற்றி அதிபர் கனகசபாபதியிடம் குறிப்பிட்டபோது அவர் இன்னுமொரு மகிழ்ச்சியான செய்தியையும் சொன்னார். அதாவது நண்பர் வ. ந. கிரிதரன் ஆசிரியராக இருக்கும் ‘பதிவுகள்’ என்ற இணையத்தளத்தில் ‘தமிழ் ஆரம்’ குறுந்தட்டைப் பற்றி திரு. அ. முத்துலிங்கம் அவர்கள்  எழுதியிருப்பதாகவும் அதை வாசித்துப் பார்க்கும் படியும் குறிப்பிட்டிருந்தார். ‘மூன்று குருட்டு எலி’ என்ற தலைப்பில் அதைப் பற்றி அ. முத்துலிங்கம் அவர்கள் எழுதியிருந்தார். கையிலே வெண்ணெய்யை வைத்துக் கொண்டு உலகமெல்லாம் இப்படியான ஒரு குறுந்தட்டுக்காகத் தாங்கள் தேடியலைந்த கதையை அவர் மிகவும் அருமையாக நகைச்சுவை உணர்வோடு அங்கே குறிப்பிட்டிருந்தார். 

குரு அரவிந்தனின் 25 வருடகால கனடிய இலக்கிய சேவைப் பாராட்டில் திரு. அ. முத்துலிங்கம், எழுத்தாளர் குரு அரவிந்தனின் தமிழ் மழலைப் பாடல்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்ததைப் பாருங்கள்:

 ‘2003ம் ஆண்டு என்று நினைக்கிறேன். தமிழ் மழலைப் பாடல்களைத் தேடி நான் ரொறொன்ரோவில் பல கடைகளில் ஏறி இறங்குகிறேன். இந்தியாவில் எழுத்தாள நண்பர்களுக்கும் எழுதுகிறேன். அங்கேயும் தமிழ் மழலைப் பாடல்கள் இல்லை என்ற விடை கிடைக்கிறது. என்னால் நம்ப முடியவில்லை. ஆங்கிலத்தில் இருக்கும் பல குழந்தைப் பாடல்கள் வன்முறையை தூண்டுபவையாக இருக்கின்றன. ‘மூன்று குருட்டு எலி’ என்ற குழந்தைப் பாடலில் ‘கமக்காரன் மனைவி எலியின் வாலை கத்தியால் வெட்டினாள்’ என்று வருகிறது. என்னை அதுதான் தமிழ் பாடல்களைத் தேடி அலைய வைத்தது. குழந்தைக்கு எலி, பூனை, நாய், யானை, வண்டு எல்லாமே பிடிக்கும். குழந்தை கேட்கிறது ’ஏன் வாலை வெட்டினார்?’ என்று. எப்படி பதில் சொல்வது? அப்பொழுதுதான் தற்செயலாக குரு அரவிந்தனின் மழலைப் பாடல் குறுந்தகடு கையில் கிடைக்கிறது. அழகிய பொருள் பொதிந்த பாடல்கள். இன்னும் அழகான மெட்டுகள். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் அவற்றினால் ஈர்க்கப்பட்டனர். தமிழ் நாட்டின் முக்கிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இந்தக் குறுந்தகடு பற்றி வியந்து எனக்கு எழுதியிருக்கிறார். கடும் உழைப்பின் பின்னால் இந்த மழலைப்பாடலை எழுதிக் குறும்தட்டாக வெளியிட்ட குரு அரவிந்தனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.’

அ. முத்துலிங்கம் அவர்கள் கனடாவிற்கு வந்தபின்தான் அவரை நேரடியாகச் சந்திக்கும் வாய்ப்பு பல தடவைகள் தனக்குக் கிடைத்ததாகவும், சிறுவர்களுக்கான தனது புத்தகங்கள் வெளியிடப்படும் போது, ஒவ்வொரு முறையும் தானே நேரில் வந்து பாராட்டிப் புத்தகங்களைப் பெற்று, பின் அதைப் படித்துவிட்டு அந்தப் புத்தகம் பற்றிய விமர்சனங்களையும் தொலைபேசி மூலம் எடுத்துச் சொல்லுவார் என்றும், கனடிய மண்ணில் தமிழ் மொழி நிலைத்து நிற்க வேண்டும் என்ற அவரது ஆர்வம் பற்றியும் குரு அரவிந்தன் குறிப்பிட்டிருந்தார். 

‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற குரு அரவிந்தனின் நாவல் பற்றிக் ‘கனடா தமிழர் இலக்கியம்’ என்ற நூலில் உள்ள கட்டுரையில் அ. முத்துலிங்கம் குறிப்பிடும் போது, ‘குரு அரவிந்தனின் நாவல் ஒன்றில் வரும் பாத்திரம் சாந்தி. அவள் பள்ளிக்கூடம் சென்று வரும் மாணவி. ஒருநாள் பரீட்சை எழுதிவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது நேரமாகிவிடுகிறது. சிங்கள ராணுவத்தின் காவல் அரணைக் கடந்தபோது அவள் காணாமல் போய்விடுகிறாள். அவளைத் தேடிச் சென்று அவளுடைய தகப்பன் பொறுப்பான ராணுவ அதிகாரியை சந்தித்து தன் மகளைப்பற்றி கேட்கிறார். அவர்களிடம் பதில் இல்லை. திடீரென தகப்பனும் காணாமல் போய்விடுகிறார். இப்படி நாவல் விறுவிறுப்பாகப் போகிறது. ஒரு காலகட்டத்து யாழ்ப்பாண வாழ்கையின் ஒரு கூறு வரலாறாக மாறிவிடுகிறது. நூறு வருடம் கழிந்த நிலையில் ’உறங்குமோ காதல் நெஞ்சம்?’ என்ற இவரது இந்நாவலைப் படிக்கும் ஒருவர் கண் முன்னே போர்க்கால யாழ்ப்பாணமும், மக்களும், அவர்கள் வாழ்வும், வலியும் நிதர்சனமாக விரியும். குரு அரவிந்தனின் புனைவு சரித்திரமாக மாறும் தருணம் அது.’

உண்மைச் சம்பவங்களைக் கொண்ட ஒரு வரலாற்றுப் புனைவு எப்படி சரித்திரமாக மாறுகிறது என்பதை எவ்வளவு சிறப்பாக அ. முத்துலிங்கம் எடுத்துச் சொல்லியிருந்தார். பாருங்கள், அவர் மேலும் குரு அரவிந்தனின் படைப்பிலக்கியம் பற்றிக் குறிப்பிடும் போது, ‘நான் சிறுவனாய் வளர்ந்த கிராமத்தில் ஐஸ்கிரீம் அபூர்வமாக எப்போதாவது சாப்பிடக் கிடைக்கும்.  விருந்துகளில் அல்லது திருவிழாக்களில் இதைச் சாப்பிடும் சந்தர்ப்பம் அமையும். கூம்புகளின் மேல் உருண்டையாக மென்சிவப்பு, மஞ்சள் அல்லது பச்சை நிறங்களில் கிடைப்பதை உருகி வழிய வழிய சாப்பிட்டு முடிக்கவேண்டும். இதன் சுவையையும் சுகத்தையும் தாண்டி இது சாப்பிடும்போது ஒர் பதற்றம் இருக்கும். இதைச் சாப்பிட்டால் முடிந்துபோகும். சாப்பிடாமல் விட்டாலும் உருகி அழிந்துவிடும். சுவை இன்பத்தை நீடிக்க முடியாது. அதனால் கிடைக்கும் இன்பத்திலும் பார்க்க அது கொடுக்கும் ஏக்கமும் அவலமுமே கூடுதலாக இருக்கும். எனக்குக் கிடைத்த குரு அரவிந்தனின் புனைவுகளைப் படித்தபோது எனக்கும் இந்த அனுபவம் கிடைத்தது, அதாவது  முடிந்துவிடுமோ என்று அடிக்கடி மீதிப் பக்கங்களை எண்ணிப் பார்க்க என்னைத் தூண்டியது. படித்தால் முடிந்துவிடும், ஆனால் படிக்கவேண்டும் என்ற ஆவல் மனதை நிரப்பியிருக்கும். புனைவுகளில் சுவை முக்கியம். அதனிலும் முக்கியம் அவை வரலாற்றின் ஒரு கூறை பதிந்து அதை அழியவிடாமல் காப்பது. எங்கள் சரித்திரத்தை அவை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். இந்த இரண்டும் குரு அரவிந்தன் படைப்புகளில் நிறைந்து கிடக்கின்றன.’ 

இதோ, அ. முத்துலிங்கம் பற்றி குரு அரவிந்தன் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்:

திரு. அ. முத்துலிங்கம் அவர்களிடம் எனக்குப் பிடித்த விடையம் என்னவென்றால் ஒருவருடைய திறமையைப் பாராட்ட அவர் என்றும் பின் நின்றதில்லை. முக்கியமாக கனடிய இளம் தலைமுறையினரை ஊக்குவிப்பதில் எப்பொழுதும் முன்னிற்பார். என்னுடைய கதைகளோ அல்லது கட்டுரைகளோ தனக்குப் பிடித்ததாக இருந்தால் உடனே தொலைபேசி எடுத்துப் பாராட்டுவார். குறிப்பாக ஆனந்தவிடனில் வெளிவரும் எனது கதைகளை உடனே வாசித்துவிட்டு அதைப் பற்றி பாராட்டுவார். கலைமகள் இதழின் ராமரத்தினம் குறுநாவல் போட்டியில் பரிசு கிடைத்தபோதும் தொலைபேசி மூலம் பாராட்டியிருந்தார். ஈழத்து நெய்தலும் மருதமும் என்ற தொடர் கட்டுரையில் சோமசுந்தரப் புலவர் பற்றிக் கனடா உதயன் பத்திரிகையில் குறிப்பிடும் போது, ‘ஆடிப்பிறப்பிற்கு நாளை விடுதலை’ என்ற பாடல் பற்றியும், ‘கத்தரித் தோட்டத்தில் காவல் புரிகின்ற சேவகா’ என்ற பாடல் பற்றியும் அந்தவாரம் குறிப்பிட்டிருந்தேன். ‘கத்தரித் தோட்டத்தில் காவல் புரிகின்ற சேவகா’ என்ற பாடல் வரிகளுக்கு நான் எமது மண்ணைக் காக்கும் போராளிகளோடு ஒப்பிட்டு எழுதியிருந்தேன். அதை வாசித்துவிட்டு அவர் என்னைப் பாராட்டியது மட்டுமல்ல, ஈழத்துப் புலவர்களின் திறமைகளை நாங்கள்தான் வெளிக்கொண்டு வந்து காட்டவேண்டும் என்ற தனது ஆதங்கத்தையும் அப்போது வெளிப்படுத்தினார். ஈழத்து தமிழ்ச் சான்றோர்கள் பற்றிய கட்டுரைத்தொடரை இப்போது நான் எழுதிக் கொண்டிருப்தற்கு அவரது தூண்டுதலும் ஒரு காரணமாகும்.’

அ. முத்துலிங்கம் தனது வாழ்த்துரையில் குரு அரவிந்தன் பற்றி மேலும் இப்டிக் குறிப்பிடுகின்றார்.

‘குரு அரவிந்தன் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளர். 25 வருடங்களுக்கு மேலாக கனடாவில் எழுதிவருகிறார். நான்கு சிறுகதை தொகுப்புகள், ஆறு நாவல்கள், ஓலிப்புத்தகங்கள், நாடகங்கள், சினிமா கதை, வசனம், சிறுவர் இலக்கியம் என இதுவரை நிறையவே படைத்திருக்கிறார். இலங்கை, இந்தியா, கனடா, ஐரோப்பா நாடுகளில் இவருக்கு அறிமுகம் தேவையில்லை. அவருடைய வாசக வட்டம் உலகளாவியது. தமிழ்நாட்டின் புகழ்பெற்ற வருடாந்த மலர்களில் இவருடைய புனைவுகள் பலதடவை வெளிவந்திருக்கின்றன. புனை கதைகள் பல பிறமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு பாராட்டைப் பெற்றிருக்கின்றன. தமிழர் தகவல் விருது, யுகமாயினி பரிசு, கலைமகள் பரிசு, விகடன் பரிசு, உதயன் பரிசு, சி.டி.ஆர் வானொலி பரிசு, ஜனகன் பிக்சேஸ் விருது, போன்ற பல பரிசுகளையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். ஓர் அரசன் தன் நினைவாக சிலை எழுப்பலாம். ஒரு ஜனாதிபதி தன் பெயரால் நெடுஞ்சாலை அமைக்கலாம். ஒரு நகரபிதா ஒருவர் பெயரால் பூங்கா உண்டாக்கலாம். ஓர் எழுத்தாளர் என்ன செய்வார்? அவர் தன் படைப்புகளை உலகத்துக்கு விட்டுச் செல்வார். எழுத்தாளரருடைய ஆயுளையும் தாண்டி அந்தப் படைப்புகள் நிலைத்து நிற்கும். அவர் பெயரைச் சொல்லும். எழுத்தாளருக்கு அவருடைய எழுத்தைவிட சிறந்த நினைவுச் சின்னம் என்ன இருக்கமுடியும்? கனடாவில் ஆக்க இலக்கியம் படைக்கும் குரு அரவிந்தன் சோர்வடையும் நேரம் இதுவல்ல. இந்த வேகம் குறையாமல் இன்னும் பல வருடங்கள் அவர் தொடர்ந்து எழுத என் வாழ்த்துக்கள்.’ 

Kuru- Muthu-Ramakrishnan-2தமிழ் இலக்கிய உலகில் தங்கள் திறமையால் அரிய பல சாதனைகளைக் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாகப் படைப்பிலக்கியம் படைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர்  அ. முத்துலிங்கம், மற்றும் ஐம்பது ஆண்டுகாலமாகப் படைப்பிலக்கியம் படைத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளர் குரு அரவிந்தன் ஆகியோரது சாதனைகளை நிச்சயமாக நாம் பாராட்டியே ஆகவேண்டும். இவர்கள் பெற்ற பரிசுகளும், விருதுகளும், பாராட்டுகளும் மிகவும் பெறுமதியானவை மட்டுமல்ல, ஈழத்தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பனவாகவும் இருக்கின்றன. எனவே ஆக்க இலக்கியம் படைக்கும் இவர்களை இச் சந்தர்ப்பத்தில் பாராட்டுவது மட்டுமல்ல, இவர்களது இலக்கியப் பணிக்குப் பின்னின்று உழைக்கும் இவர்களது குடும்பத்தினருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் நன்றி கூறி, இவர்களது தமிழ் இலக்கியப்பணி மேலும் பரந்து விரிந்து இன்னும் பல உலக சாதனைகளைப் படைக்க வேண்டும் என்று கனடிய தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் சார்பில் வேண்டிக் கொள்வது மட்டுமல்ல, வாழ்க வளமுடன் என மீண்டும் வாழ்த்துகின்றோம்.

Nandavanam-Kuru-March2019-

வகைப்படுத்தப்பட்ட பகுதி: கட்டுரைகள்.
கடைசியாக இற்றைப்படுத்தப்பட்ட திகதி: March 12, 2019