அல்லைப்பிட்டி மண்டதீவைச் சேர்ந்த கலாநிதி செ.திருநாவுக்கரசு என்ற தனிமனிதனின் முயற்சியால் 1289 பக்கங்கள் கொண்ட 'தமிழ் வளர்த்த தீவகச் சான்றோர்கள்' என்ற வாழ்க்கை-இலக்கிய-வரலாற்று ஆவண நூலை வெளியிட்டுள்ளார். இந்நூலில் அவர் 109 தீவகச் சான்றோர்கள் பற்றி எழுதியுள்ளார்கள். ஊர்hவற்றுறையிலிருந்து 9 சான்றோர்கள் பற்றியும், மண்டைதீவு அல்லைப்பிட்டியிலிருந்து 13 தமிழ் சான்றோர்கள் பற்றியும், சரவணை பள்ளம்புலத்திலிருந்து 8 தமிழ் சான்றோர்கள் பற்றியும், வேலணையிலிருந்த 17 தமிழ் சான்றோர்கள் பற்றியும்,புங்குடுதீவிலிருந்து 14 தமிழ் சான்றோர்கள் பற்றியும், நயினாதீவிலிருந்து 15 தமிழ் சான்றோர்கள் பற்றியும், நெடுந்தீவிலிருந்து 8 தமிழ் சான்றோர்கள் பற்றியும்,
அவ்வாறே அனலைதீவிலிருந்து 4 தமிழ் சான்றோர்கள் பற்றியும், காரைநகரிலிருந்து 21 தமிழ் சான்றோர்கள் அடங்கலாக 109 தமிழ் வளர்த்த தீவகச் சான்றோர்களைப் பற்றி கட்டுரையில் எழுதியுள்ளார். முத்தாய்ப்பாக யாழ்ப்பாண பூபாலசிங்கம் புத்தகசாலை அதிபர் அமரர் பூபாலசிங்கம் அவர்களைப் பற்றி110வது கட்டுரையில் எழுதியுள்ளார். அமரர் கா.பொ. இரத்தினம் அவர்கள், முதலியார் குலசபாநாதன் அவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியராக தீவகத்திற்கு பெருமை சேர்த்த கரம்பொiன் சோ.தியாகராஜா அவர்களைப் பற்றிய அருமையான வாழ்க்கைக் குறிப்புகள் பற்றியும் ஆவணப்படுத்தி தந்துள்ளார். இது ஈழத்தமிழர்களின் ஓர் வரலாற்று ஆவணமாகக் கருதப்படக்கூடியது…
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியைப் பிறப்பிடப்பிடமாகக் கொண்ட செ.திருநாவுக்கரசு வாழ்வில் மிக எளிமையான நிலையில் இருந்து உயர்ந்தவர்.
ஆரம்பத்தில் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் நடத்துநராகப் பணியை ஆரம்பித்து ஒவ்வொரு படியாக உயர்ந்து ஆசிரியர் சேவையில் இணைந்தார். அங்கும் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராகப் பதவியுயர்ந்தார்.
2001 ஆம் ஆண்டில் இருந்து கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பதவியேற்றுப் பணியாற்றி வருகின்றார்.
கற்றலில் மிகுந்த ஆர்வத்தைக் கொண்டிருக்கும் இவர் கலைமாணி தமிழில் முதுகலைமாணி, கல்வியில் முதுகலைமாணி, தமிழில் கலாநிதி, கல்வி டிப்புளோமா, முகாமைத்துவ டிப்புளோமா முதலிய பல்கலைக்கழகம் சார்ந்த பட்டங்களையும் பண்டிதர், சைவப்புலவர் முதலிய மரபுசார் பட்டங்களையும் பெற்றுள்ளார்.
மாணவர்களுக்குச் சிறந்த முறையில் கற்றுக்கொடுக்கும் இவர் மிக எளிமையான வாழ்க்கையை மேற்கொள்வதன் மூலம் சமூகத்தின் சகல மட்டத்தினரதும் செல்வாக்கைப் பெற்றுத் திகழ்கின்றார்.