முதுமை என்பது வாழ்க்கையில் உரிய வயதில் தானாகவும், தவறாமலும் வந்து விடும் ஒரு விடயம். நமக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, ஆண்டொன்று போனால் வயதும் ஒன்று கூடுதல் ஆகவே செய்யும்.
அதுமட்டுமல்ல, இன்றைய இளமையும் நாளைய முதுமையை நோக்கிப் பயணமாகும் படிக்கட்டின் ஆரம்பமே! இதைப் புரிந்து கொண்டு விட்டால் ''அந்தப் பெரிசுக்கு சொன்னால் விளங்காது'' என்று இளையவர்களும், ''நான் சொல்லுவதைக் கேட்கவே மாட்டீர்கள்'' என்று முதியவர்களும் புலம்புவதற்கு இடமேயில்லை.
சில நடைமுறை விஷயங்களை இரு தரப்பாருமே பின் பற்றினால் பிரச்சனைகளைக் குறைக்கலாம்.
இளையோருக்கு:
1. வீட்டில் பெரியவர்கள் ஏதாவது அறிவுரை கூறினால், 'போ பாட்டி! உனக்கு ஒன்றும் தெரியாது' என்று அலட்சியப்படுத்தாமல், 'சரி பாட்டி' என்று பதில் சொல்லுங்கள். மகிழ்ச்சியுடன் அவர்களாகவே ஒதுங்கிக் கொள்வார்கள்.
2. எங்கே வெளியில் போவதானாலும், பெரியவர்களிடம் போய், இன்ன இடத்திற்குப் போகிறேன், போய்விட்டு வருகிறேன் என்று சொல்லி விட்டுச் செல்லுங்கள். இந்தப் பழக்கத்தால் அவர்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
3. அதேபோல் வெளியிலிருந்து திரும்பி வந்தாலும், அவர்களிடம் போய் இரண்டு வார்த்தைகள் பேசுங்கள்.
4. வயதானவர்கள் எங்கேயாவது கோயில், விசேஷம் என்று கிளம்பினால் அவர்களைத் தடுக்காதீர்கள்.
5. வயதானவர்கள் தம் கையில் கொஞ்சம் பணம் வைத்துக் கொண்டு ஏதோ செலவு செய்தால், அதைப் பெரிய குற்றமாக்கிப் பேசிக் காட்டாதீர்கள்.
6. வயதானவர்களுக்கு நோய் வந்து விட்டால், சினக்காமல், அருவருப்பு இல்லாமல், புறுபுறுக்காமல், அவர்களை அன்புடன் கவனித்துக் கொள்ளுங்கள். நாளைக்கு எங்களுக்கும் இந்த நிலை வரலாம்.
7. சின்னப் பிரச்சனைக்கெல்லாம் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடலாமா என்று யோசிக்கத் தொடங்கி விடாதீர்கள்
முதியவர்களுக்கு:
1. சமுதாய மாறுதலை முதலில் புரிந்து கொள்ளுங்கள். எதற்கெடுத்தாலும் 'எங்கள் காலத்திலே' என்று பேசத் தொடங்கி விடாதீர்கள். அதைப் பெரிய அறுவை என்று இளையவர்கள் நினைக்கிறார்கள்.
2. இப்போதைய தேவைகள் பெருகி இருப்பதாலும், வாய்ப்புகள் அதிகமாகி இருப்பதாலும், நிறையப் பெண்கள் பல வழிகளில் உழைக்கத் தொடங்கியுள்ளனர். இதை இடித்துக் காட்டிக் குறை சொல்லாதீர்கள்.
3. வீட்டில் முடிந்தவரை சிறுசிறு வேலைகளை ஏற்றுக் கொண்டு சந்தோஷமாகச் செய்து கொடுங்கள்.
4. எங்கே வெளியே போனாலும் நேரத்திற்கு வீட்டிற்கு வந்து விடுங்கள். வீட்டில் இருப்பவர்களைத் தவிக்க விடாதீர்கள்.
5. பொழுது போகவில்லை என்றால் நீங்களாகவே ஏதாவது ஓரிரு வேலைகளில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
6. எல்லாப் பொறுப்புக்களையும் நீங்களே கையில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்காதீர்கள். பொறுப்புக்களை மற்றவர்களிடம் பாரம் கொடுப்பது (ஹாண்ட் ஓவர்) தான் புத்திசாலித்தனம்.
7. தனக்கு எப்பொழுதுமே மற்றவர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்து கோபப்படவோ, ஏமாற்றமடையவோ, மனவேதனையடையவோ வேண்டாம். அது வெறுப்பைத்தான் வளர்க்கும்.
மொத்தத்தில் இன்றைய பெரியவர்கள் ''நாம் நேற்றைய இளசுகள் தானே'' என்றும் இளையவர்கள் ''எமக்கு முதுமை வெகு தூரத்தில் இல்லை'' என்றும் புரிந்து கொண்டால் என்றும் வாழ்க்கை இனிமைதான்!